இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் -பதினோராம்போர்ச்சருக்கத்து முதற்கவி போன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். (284) 147.- ஸ்ரீக்ருஷ்ணன் அபிமன்யுமரணத்தை நினைந்து இந்திரனை நினைத்தல். போனதுவருவதெல்லாம்புரையறவுணருகிற்கு மானதிர்கனகத்திண்அடர்வலவனாமதுரைமன்னன் றேனதிர்கடுக்கைமாலையிடுசெயத்திரதன்றன்னா லானதுங்குறித்துவானோரரசையுங்குறிக்கலுற்றான் |
(இ-ள்.) போனது வருவது எல்லாம் - நடந்ததும் நடப்பதுமாகிய செய்கைகளெல்லாவற்றையும், புரை அற-குற்றமில்லாமல், உணருகிற்கும்-அறியவல்ல, மான் அதிர் கனகம் திண் தேர் வலவன் ஆம்- குதிரைகள் பூட்டிய ஆராவாரிக்கிற பொன்மயமான வலிய (அருச்சுனனது) தேரைச் செலுத்துகிற பாகனாகிய, மதுரைமன்னன் வடமதுரைநகரத்து அரசானா கண்ணபிரான், (அப்போது), தேன் அதிர் கடுக்கை மாலை இடு செயத்திரதன் தன்னால் ஆனதும்உம் குறித்து - வண்டுகள் ஆரவாரிக்கிற கொன்றைப்பூமாலையைப் போகட்ட சயத்திரதனா லாகிய செய்கையையும் [அபிமந்யு மரணத்தையும்] திருவுள்ளத்தில் அறிந்து, வானோர் அரசைஉம் குறிக்கல் உற்றான் - தேவாரசனான இந்திரனையும் நினைத்தான்; இந்திரனை நினைத்தது, இவன்மகனானா அருச்சுனனுக்குப்புத்திர சோகத்தால் பிராணபாயமுண்டாகாதபடிதடுக்க உபாயஞ்செய்தற்கு என்பது, மேல்விளங்கும். போனது வருவது எல்லாம் - ஒருமைப்பபன்மைமயக்கம்: முக்காலத்துவரலாற்றுள், முன்பு நடந்தவற்றையும் இனி நடப்பவற்றையும் அறிதலாகிய அருமையான தன்மையைக் கூறவே, அப்பொழுது நடக்கின்றவற்றை அறிதலாகிய எளியதன்மை தானே பெறப்படும். உணர்ச்சிக்குக் குறைவு- சந்தேகவிபரீதங்கள். மது என்னும் அரசனால் சீர்திருத்தி ஆளப்பட்டதனாலும், கண்ணுக்கு இனியதாயிருத்தலாலும், மதுரா என்று பெயர்; அது ஈறுதிரிந்தது. இது, முத்திதரும் நகரம் ஏழனுள் ஒன்று; மற்றவை-அயோத்தி, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்பன. (285) 148.-நான்குகவிகள்-மனத்துவந்தஇந்திரனை 'உன்மைந்தனைக் காவாய்' என்ன, அவன் முனிவனாகி ஊழாலிறந்தமைந்தனோடுஇறப்பேனென்று நடிக்க, ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனைக்கொண்டு தடுத்தலைக் கூறும் மதித்தலுமனத்திற்றோன்றும்வலாரியைக்குறிப்பினாலுன் கதித்தடந்திண்டேர்மைந்தனுயிரைநீகாத்தியென்னத் துதித்தவன்றொழுதுமாயச்சூழ்ச்சியான்முனியுமாகி விதித்தலைப்பட்டகாதற்சுதனுடன்விழுவனென்றான். |
(இ-ள்.) மதித்தலும்-(கண்ணபிரான்)கருதியவளவிலே, மனத்தில் தோன்றும்- அவன்மனத்தில்வந்து காணப்பட்ட வலாரியை- இந்திரனை(ப்பார்த்து), (கண்ணன்), குறிப்பினால் - இங்கிதத்தால், |