பாகலமென்பது யானைநோயின்பெயரென்று தமிழ்நிகண்டுபிங்கலந்தைகளால் தெரிகிறது. அந்நோயின் வகைகளையும், அவற்றில் பரிகாரமில்லாத கூடபாகலமென்னுங் கொடியபகுப்பின் தன்மையையும் அடியில் வருமாறு அறிக:- உருத்திரமூர்த்தியின் கோபத்தினின்று உண்டான ஜ்வரம் யானையிடத்திற் காணும்பொழுது அதற்குப் பாகலமென்று பெயர்; இப்பெயர்-பாகஞ்செய்வது [வேவிப்பது] என்னும் பொருளுடையது; இது-சுத்த பாகலம், பாலபாகலம், பக்வலபாகலம், ம்ருதுக்ஹரபாகலம், குக்குடபாகலம், ஏகாங்கக்ரஹபாகலம், ப்ரஸு ப்தபாகலம் கூடபாகலம், புண்டரீக பாகலம் மகாபாகலம் எனப் பத்துவகைத்து; இது- பொருந்தாதவையும் அளவுக்குவிஞ்சினவையுமாகிய உணவின்வகைகளாலாவது, மிக்கசுமையைச்சமத்தல் கடத்தற்கரியதைக்கடத்தல் என்னுமிவற்றாலாவது, உள்ளிருக்கும் வாயு கெடுதல்பற்றி, உளதாவது; கூடம்-விரைவிற்கொல்லுதல்; இந்நோய், தொடக்கத்திலேயே யானையைக் கொல்லுதலால், கூடபாகமெலனப்படும்; கூடம்-கபடம்: அதனால் [வெளித்தெரியாமலே] கொல்லும் பாகலம். கூடபாகலம் என்றும்; கூடம்-வலை; அது மிருகங்களைப்பிடித்துக்கொல்லுதல்போல யானையைப் பற்றிக்கொல்லுவது கூடபாகலம் என்றும்; கூடம்- கூட்டம்; வாதம் பித்தம் சிலேஷ்மம் என்னும் மூன்றின் தோஷங்களுஞ் சேர்ந்து உண்டாக்கின பாகலம் கூடபாகலம் என்றுங் காரணங் கூறுவர்; இந்நோய் வந்தமாத்திரத்தில் கை கால் கண் காது வால் என்னும் உறுப்புக்கள் தம்பித்து இடிவிழுந்தாற்போல யானை கீழ் விழுந்து இறந்துவிடும்: மிக விரைவில் இறந்துவிழுந்திடுதலால் இதன்குறிகளை அறிதல் அரிது; கட்டுத்தறியிற் கட்டியிருக்கையிலும், நீர்பருகுகையிலும், கதிபயிலுகையிலும், நீராடுகையிலும் வழிநடக்கையிலும், மற்றுஞ் சிலசமயங்களிலும் இந்நோய் திடுக்கென நேரிடும். இந்நோயால் இறந்துபட்ட யானையைச் சிற்றறிவினர் இலக்கணமின்மையால் விஷந்தீண்டியதென்பர்; மற்றுஞ்சில பேதையர் பொய்யறிவாற் பேய்பிடித்ததென்பர்: அவற்றிற்கு அறிகுறியும் சிகிச்சையும் உண்டு; இதற்கோ அவையில்லை, இது, பாலகாப்யமென்னும் வடமொழி யானை வைத்தியநூலிற் கண்டது. (இன்னும் இதைப்பற்றி எழுதத்தக்கவற்றை விரிவஞ்சி விடுத்தனம்.) அந்நூலில் 'பாம்பும் நெருப்பும் இடியும் போலக்கொடிய இந்நோய்க்கு எப்பொழுதும் அஞ்சவேண்டும்' என்று கூறியுள்ளதற்கு ஏற்ப, இங்கே 'பயந் தரு' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. இது ஆச்சரியகரமானநோயென்றதற்கு, 'கோடி' என்ற அடைமொழி கொடுத்தார்; இதுவரையிற் கூறியதனால், கூடபாகலந்தணிந்து மெல்லக்கயந் தெளிவுற்றதுஎன்றது, இல்பொருளுவமையாம். இதனால், அருச்சுனனது மூர்ச்சை மரணத்தோடு ஒத்திருந்ததெனப் புலப்படும். கயம்=கஜம். பி-ம்: மாற்றிப். கோடிகூடப்பாகலம், கொடியகூடப்பாகலம். (297)
*மாலதீமாதவமென்னும் வடமொழிநாடகத்தில், 'அதிதீவிரமான கூடபாகலமென்னும் த்ரிதோஷஸந்நிபாதஜ்வரம் விரைவில் யானையைக் கொல்லுதல்போல, தடையில்லாத மன்மதன் சுகுமார சரீரமுடைய மாதவனை மிகவருத்துகிறான்' எனக் கூறியுள்ளது. |