வீறு கெட்டிருப தங்கொடுவி ரைந்துசெல மீளவிட்டனன்மு னெண்டிசையும் வென்றவனே. |
(இ-ள்.) எண்திசைஉம் முன் வென்றவன் - எட்டுத்திக்கிலுள்ளாரையும் முன்பு சயித்தவனான அருச்சுனன்,- பெரும் பகழி - சிறந்த அம்புகளை, ஆறு பத்து அறுபதும், இருபது - இருபதும், ஐம்பது ஆக - ஐம்பதுமாக, விட்டு - செலுத்தி, (அவற்றால் துரியோதனனது), வரி வில் சிலைஉம் - கட்டமைந்த வலிய வில்லையும், வெம் பரிஉம் - கொடிய குதிரைகளையும், பை தலை ஏறு நெடுந் துவசம்உம் - படத்தையுடைய தலையையுடைய பாம்பின் வடிவம் ஏறியிருக்கப்பெற்ற பெரிய கொடியையும், புதிய ஏழு தட்டு இரதம்உம் - ஏழுதட்டுக்களையுடையபுதுமையான தேரையும், துணிசெய்து - துண்டுபடுத்தி,- அங்கு - அப்பொழுது, அருகு - அவனருகிலே, சீறுதற்கு வரு- (தன்னோடு) கோபித்துப் பொருதற்கு வந்த, திண் குருவின் மைந்தனொடு - வலிய துரோணாசாரியனுக்குப் புத்திரனான அசுவத்தாமனும், தேர் அருக்கன் மகன் உம்-(சிறந்த) தேரையுடைய சூரியனுக்குப் புத்திரனான கர்ணனும், சகுனியும்-, பலர் உம் - மற்றும் பல அரசர்களும், வீறு கெட்டு - பராக்கிரமமழிந்து, இருபதம் கொடு விரைந்து செல- (தேரழிந்ததனால் தங்கள்) இரண்டு கால்களைக் கொண்டே வேகமாக ஓடிப்போம்படி, மீள - மறுபடியும், விட்டனன்- (அவர்கள்மேல் அம்புகளைச்) செலுத்தினான்; ( எ -று.) அருச்சுனன் துரியோதனனது கவசத்தைப்பிளந்து வலியழித்ததனைக் கீழ்க்கவியிற் கூறி, இக்கவியில் அவனது வில் குதிரை கொடி தேர்களை அழித்து அவனுக்குத் துணைவராய்வந்த பலரையும் வென்று துரத்தினமையைக் கூறினார்.இப்பாட்டில், துரியோதனனது வில் முதலியவற்றைத் துணித்ததாகக் கூறினது,கீழ்ப்பாட்டிற் சொன்னபடி அவன் புறங்கொடுத்தோடுதற்கு முன்பு நிகழ்ந்த செய்கையை அநுவாதத்தாற் கூறியதாம்: அன்றி, வில் முதலியவற்றை அருச்சுனன் துணித்தவுடனே துரியோதனன் மீண்டானென்ற செய்கையை முறையிலுயர் வுநவிற்சியணி பட 'முன்பு துரியோதனன் திருகினன் ; பின்பு வில் முதலியவற்றை அருச்சுனன் துணிசெய்தனன்' என்று கூறினாரு மாம். பொருதலென்ற காரியத்தை, சீறுதல் என்ற காரணத்தினாற் குறித்தது, உபசாரவழக்கு. (488) வேறு. 92.- மூன்றுகவிகள் - பலரும் அருச்சுனன்முன் அழிதலைக் கூறும். வேர்த்தெதிர் விசயன் வென்றக ளத்தி லார்த்தெதிர் வந்தா ரார்கொல்பி ழைத்தார் ஏத்திய பதினெண் பூமியி னெண்ணும் பார்த்திவர் பற்பல் லாயிரர் பட்டார். |
|