பக்கம் எண் :

108பாரதம்சல்லிய பருவம்

தன்னுடையபெரிய கையினால், கொன்றான் - கொன்றிட்டான்; (ஆதலால்),
வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ - (இவனை யொழிய)
வேறொருவர் உன்னுடன் (இப்பொழுது) போர்செய்தற்கு உரியரோ?
[அல்லரென்றபடி]; விளம்புவதோ - இதைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?
(எ - று.) ஆல் - அசை.

    முதலடியிற் கூறியது, துரியோதனன் வீமனுக்கு நஞ்சூட்டியதும்,
அவனைக் கயிறுகளாற் கட்டிக்கங்கையிலெறிந்ததும், கழுவேற்றத்
தொடங்கியதும் முதலியவற்றையென்க.  'எண்ணில் எண்ணொணாது'
என்பதற்கு - கணக்கினால் அளவிட முடியாதென்றும், மனத்தில்
நினைத்தற்குங்கூடாதபடி மிகக் கொடியதென்றும் பொருள் கொள்ளலாம். 
ஒணாது -ஒன்றாது என்பதன் மரூஉ.  புகுதும் என்ற பெயரெச்சத்தில்,
து-சாரியை.உரையா - உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.   (142)

143.வில்லாலும்வாளாலும்வேலாலும்பரிநெடுந்தேர்வேழத்தாலும்,
தொல்லாண்மைதவறாமற்செருமலைந்தோர்சான்றாகச்சூழ்ந்து
                                       நிற்பப்,
புல்லாரைப்புறங்காணும்போர்வேலோயிருவருநீர்பொருது
                                      நும்மில்,
வல்லார்கள்வென்றிபுனைந்தவனிதலம்பெறுமிதுவேவழக்கு
                                    மென்றான்.

     (இ -ள்.) புல்லாரை - பகைவர்களை, புறம் காணும் - வென்று
முதுகுகாணவல்ல, போர்வேலோய் - போர்த்தொழிற்குரிய வேல்
வல்லமையுடையவனே! வில்லாலும்-வில்லைக்கொண்டும், வாளாலும் -
வாளைக்கொண்டும், வேலாலும் - வேலைக்கொண்டும், பரி நெடு தேர்
வேழத்தாலும் -குதிரையும் பெரியதேரும் யானையும் என்னும்
இவற்றைக்கொண்டும், தொல்ஆண்மை தவறாமல் - தொன்று தொட்டுவருகிற
(தமது) பராக்கிரமந் தவறாமல்,செரு மலைந்தோர் - போர்செய்த வீரர்கள்,
சான்று ஆக-சாட்சியாக, சூழ்ந்துநிற்ப-சுற்றி நிற்க, நீர் இருவரும் - நீங்கள்
இரண்டுபேரும், பொருது -போர்செய்து, நும்மில் வல்லார்கள்
வென்றிபுனைந்து - உங்களுள் வல்லவர்கள்வெற்றியை யடைந்து,
அவனிதலம் பெறும் - பூமியைப் பெற்றுக்கொள்ளுதலாகிய, இதுவே -
இச்செயலே, வழக்கும் - நீதியுமாம், என்றான் -என்று (கண்ணன்) கூறினான்;
(எ - று.)

    இன்னார் வெல்பவரென்பது துணியலாகாதென்னுங் கருத்துப்பட
'வல்லார்கள் வென்றிபுனைந்து' எனப் பன்மையாக் கூறினான்.  முதலடி -
அறுவகைத் தானையையுங் கூறியது, 'நீர் இருவரும்' என்றது,
முன்னிலைப்படர்க்கை வழுவமைதி; 'நீரிருவிரும்' என்பது வழாநிலையாம்.
துரியோதனனுக்குப் போரில் உற்சாகத்தை மூட்டும் பொருட்டு 'புல்லாரைப்
புறங்காணும் போர்வேலோய்' என்றும், 'இருவருநீர் பொருது
நும்மில்வல்லார்கள் வென்றிபுனைந்து அவனிதலம் பெறுமிது' என்றுங்
கூறியருளினான்;  'பொருது வென்றிபுனைந்து அவனிதலம் பெறு மிதுவே
வழக்கும்' - இது வரையில் நீ வல்லடி வழக்காய் அரசுமுழுவதுங் கைப்பற்றி
யாண்டு வந்தது அநீதி என்றபடி.                              (143)