பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்133

யாகவும்,அஃது இரட்டி கொண்டது ஓரடியாகவும் நின்ற கழிநெடிலடி
நான்குகொண்ட சந்தக்கட்டளைக்கலிப்பாக்கள்.  கீழ்வந்த 166 - ஆம் கவி
முதலியன, இங்ஙனமே நிரையசை முதலதாய் அரையடிக்கு ஒற்றொழித்து
எழுத்துப்பன்னிரண்டு பெற்று வந்தனவாயினும் முதலில்
மாச்சீர்பெற்றுவாராமையால்கட்டளைக் கலிப்பாவாகக் கொள்ளப்படாமல்
எண்சீராசிரிய விருத்தமாகக்கொள்ளப்பட்டன வென்க.

     தானதந்தன தானன தானன தான தந்தன தானன தானன-என்பது,
அவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்.                                (178)

179.-அந்தஉக்கிரயுத்தத்தால் உலகத்திலுண்டான குழப்பம்.

மேவுசிங்கவியாளவிலோதனர்வீசுகின்றகதாரவமேலிட
வாவுவெம்பரியாதவனுந்தடுமாறிநின்றனன்வானவர்தானவர்
நாவடங்கினர்மாமுனிவோரொடுநாகரஞ்சினர்நான்முகனாதிய
மூவருஞ்செயலேதெனநாடினர்மோழைகொண்டது மூடியகோளமே.

     (இ -ள்.) மேவு - பொருந்திய, சிங்க வியாள விலோதனர் -
சிங்கத்தின்வடிவத்தையும் பாம்பின்வடிவத்தையும் முறையே எழுதிய
கொடியையுடையவீமனும் துரியோதனனும், வீசுகின்ற - வீசித்தாக்குகிற,
கதா-கதாயுதங்களின்,ரவம் - ஓசை, மேல்இட - அதிகப்படுதலால்,-வாவு
வெம்பரி ஆதவனும் -தாவிச்செல்கிற வெவ்விய தேர்க்குதிரைகள் பூண்ட
சூரியனும், தடுமாறிநின்றனன் - தடுமாற்றமடைந்து நின்றான்; வானவர்
தானவர் - தேவர்களும்அசுரர்களும், நா அடங்கினர் - பேச்சு
ஒடுங்கினார்கள்; மா முனிவோரொடு -சிறந்த முனிவர்களும், நாகர் -
பாதாளலோகத்தவரும், அஞ்சினர் -பயப்பட்டார்கள்; நான்முகன் ஆகிய
மூவரும் - பிரமன் முதலியதிரிமூர்த்திகளும், செயல் ஏது என நாடினர் -
செய்தற்குரியது யாதென்றுஆலோசித்தார்கள்; மூடிய கோளம் -
(உலகத்தைக்) கவிந்துமூடியுள்ளஅண்டகோளம்,  மோழை  கொண்டது - 
(ஒருபுறத்தில்) வெடிப்பையடைந்தது; (எ - று.)

    தாநவர் - தநுவின்மக்கள்.  நான்முகன் - நான்குதிசையையும்
நோக்கியநான்குமுகமுடையவன்.  மூவர் - பிரமவிஷ்ணுருத்திரர், செயல்
இதற்குப்பரிகாரமாகச் செய்யுந்தொழில்.  இனி, செயல் ஏது என நாடினர் -
இங்ஙனம்குழப்பமுண்டாதற்குக் காரணமானசெய்கை யாதென்று
நோக்குவாராயினர்எனினுமாம்.  மோழைகொண்டது - உடைந்தது என்றபடி. 
முனிவர் -முனிவோர் என, ஈற்றயல் அகரம் ஓகாரமாயிற்று.  இது,
உயர்வுநவிற்சியணி.                                    (179)

180.-துரியோதனனைக்கொல்லும் வகை யாதென்று
அருச்சுனன் கண்ணனை வினாவல்.

தார்வலம்புரியானொடுபோரழிதாழ்வுகண்டனன்வீமனை
                                     வாசிகொள்
தேர்விடுந்திருமாலடிநீண்முடிசேரநின்றுரையாடினன்மாருதி
நேர்தளர்ந்தனன்யாதுகொலோசெயனீமொழிந்தருள்
                                  வாயெனவானவர்
ஊர்புரந்தவனோதமுராரியுமோதினன்பரிவோடவனோடிவை.