(இ -ள்.) பாதி மெய் - பாதிவடிவம் [இடப்பக்கம்], நீலம் ஆகிய - நீலநிறமடைந்துள்ள, பவளம் பருப்பதம் - பவளமயமான மலை போன்ற சிவபிரான், விருப்புடன் அளித்த - அன்போடு தந்தருளிய, ஏதி - ஆயுதத்தை,பெற்று - பெற்றுக்கொண்டு, (அசுவத்தாமன்), உவகையுடன் - மகிழ்ச்சியுடனே,இமைப்பு அளவின் - ஒருமாத்திரைப்பொழுதிலே, இருந்த அ வீரரும் தானும் -தன்வரவை எதிர்பார்த்து இருந்த அந்த வீரர்களான கிருபனும் கிருதவர்மாவும்தானுமாக, வீதி கொள் பாடி வீடு உற - நெடுந்தெருக்களைக்கொண்டபடைவீட்டை மீண்டும்சேர, - பூதம் - (அங்குக் காவலாய் நின்ற) பூதம்,மீளவந்து அடர்த்து - மறுபடிவந்து போர் செய்து, இவன் கரத்தில் ஆதிநல்கிய வெம் படையினால் அஞ்சி - இவன் கையில் தலைவனான சிவபிரான்கொடுத்துள்ள கொடிய ஆயுதத்தைக் கண்டு அதனாற் பயந்து, ஆவிகொண்டுஓடியது - அரிதில் உயிர்பிழைத்து ஓடிப்போயிற்று; (எ - று.) - அன்றே-ஈற்றசை. சிவபிரானது அர்த்தநாரீசுவரவடிவத்திற் பார்வதீரூபமான இடப்பக்கம் நீலநிறமாயிருக்க, சிவரூபமான வலப்பக்கம்மாத்திரமே தனக்குரிய செந்நிறத்தோடு இருத்தலாலும், கம்பீரமான தோற்றமும்பற்றி, 'பாதிமெய் நீலமாகிய பவளப்பருப்பதம்' என்றார்; சிவபிரானை 'பருப்பதம்' என்றது - உவமவாகுபெயர். சிவபிரான் பூதநாதனாதலால், அவன் படைக்கலத்துக்குப் பூதம் அஞ்சிற்று; இத்தன்மையை 'ஆதி' என்ற சொல்லின் குறிப்பினாற் புலப்படுத்தினார். ஓடிச்செல்லாமல் உறுதிகொண்டு முன்னே நின்று பொருதால்,உயிர் அழிந்திடும்; அங்ஙனமன்றி உயிர்தப்பியோடிய தன்மை விளங்க,'ஆவிகொண்டோடியது' என்றது. (212) 9.-அசுவத்தாமன்படைவீட்டினுள் திட்டத்துய்மனைத் தலைதுணித்தல். பருவரலகற்றியிருவர்வீரரையும்பாசறைவாயிலினிறுத்தி மருவருங்கமலமாலையான்கடப்பமாலையானெனமனங்களித்துப் பொருவருமுனைக்குக்குரிசிலாயெல்லாப்போரினும்புறமிடா தடர்த்த துருபதன்மதலைவரிசிலைத்திட்டத்துய்மனைமணித்தலை துணித்தான். |
(இ -ள்.) பருவரல் அகற்றி - (பூதத்தின் தடையினாலாகிய துன்பத்தை (இவ்வாறு) நீக்கி,- இருவர் வீரரையும் - (கிருபன் கிருதன் என்ற) இரண்டு வீரர்களையும், பாசறை வாயிலில் நிறுத்தி - அப்படைவீட்டின் வாயிலிலே நிற்கவைத்து,- மரு வரும் கமல மாலையான் - வாசனை பொருந்திய தாமரைமலர்மாலையையுடைய அசுவத்தாமன், கடப்பம் மாலையான் என - கடப்பம்பூமாலையையுடைய முருகக்கடவுள்போல, மனம் களித்து - மனத்தில் உற்சாகங்கொண்டு, (படைவீட்டினுள்ளே தான் சென்று),- பொருவருமுனைக்கு குரிசில் ஆய் - எதிர்த்துப் போர்செய்து வந்த பகைவர் சேனைக்குத் தலைவனாய், எல்லாப் போரினும் புறம் இடாது அடர்த்த-பதினெட்டு நாட்போர்களிலும் முதுகுகொடாமல் நெருக்கிப்போர் செய்துவந்த, துருபதன் மதலை - துருபதராசனது குமாரனாகிய, |