பக்கம் எண் :

192சௌப்திக பருவம்

     (இ -ள்.) வினை அகற்றும் - (தன்னைச் சார்ந்தவர்களது)
தீவினைகளைஒழிக்கின்ற, பசு துளவோன் - பசுமை நிறமுடைய திருத்துழாய்
மாலையையுடைய கண்ணபிரான்,- இனி ஊழி வாழ்திர் என - 'இனி
நெடுங்காலம் அரசாண்டு வாழ்வீர்கள்' என்று சொல்லி, அறத்தின்
மைந்தன்தனை - தருமபுத்திரனை, இளைஞர் ஒரு நால்வருடன் - (வீமன்
முதலிய) நான்கு தம்பிமார்களுடனே, இருத்தி - (அஸ்தினாபுரியிலே)
தாபித்து,மீள்வல் என - யான் என் ஊர்க்குச் செல்வேனென்று சொல்லி,-
சாத்தகியும்அலாயுதனும் தன்னை சூழ - சாத்தகியும் பலராமனும்
தன்னையடுத்துவர,-துவரை நகர் திசை நோக்கி மீண்டான் - துவாரகாபுரியின்
எல்லையை நோக்கிமீண்டு வந்தருளினான்;  அவரும் -
அப்பாண்டவர்களும், சீர்த்தி -மிக்கபுகழுடன், கனை கடல் பார் அளித்து -
ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்டபூமியைப் பாதுகாத்து, அறம் நெறியே கருதி-
தருமமார்க்கத்தையே சிந்தித்து,அ நகரின் - அந்த அத்தினாபுரியிலே, வாழ்ந்தார்-; (எ - று.)

     கீழ்96 - ஆங் கவியில் பலராமனும் சாத்தகியும் சென்றமை கூறியவர்
இங்கு 'சாத்தகியு மலாயுதனுந் தன்னைச் சூழ' என்றதனால் மீண்டும்
அவ்விருவரும் தருமனது பட்டாபிஷேகத்தின்பொருட்டு வந்தனரென வுணர்க.
பூமிபாரத்தைத் தொலைத்தமைதோன்ற, 'வினையகற்றும் பசுந்துளவோன்'
என்றார்.  சீர்த்தியென்பது மூன்றாம் வேற்றுமைத்தொகையாய்  'அளித்து'
என்பதனைக் கொள்ளும்.  இனி, பாருக்கு அடைமொழியாக்கி,
பாரந்தீர்ந்ததனாற் புகழ்பெற்ற பூமியெனினுமாம்.

    "மலைதரு திணிதோள் மன்னர் மணிமுடி துகளதாகச், சிலைகடை
குழைத்த பார்த்தன் செழுமணித்தடந்தேர்ப் பாகன், பலர்புகழ் தருமன்
றன்னைப் பகர்பெருந் தாதை சொல்லா, லலர்தலை யவனிகாப்ப வரியணை
யிருத்தி னானால்", "மழைவளஞ்சிறந்தன வளங்கள் மிக்கன, குழைவொடு
பிணிகளுங் குலைந்து சாய்ந்தன, விழைவொடு நல்லறம் வேர்படைத்தன,
தழைபுக ழொடுபுவி தருமன் காக்கவே", "நான்மறையாளர்வாழ்த்த நகுமுடி
யரசர் தாழ, மீனுயர் கொடியோனாதி வெந்திறற் குமர ரெல்லாந், தானையோ
டிறைஞ்சா நிற்பத்தாமரை மலரின் வாழுந், தேனவாந் தெரியல் மார்பன்
திருநகர் சென்று புக்கான்" என்ற பாகவதச்செய்யுள்கள் இங்கு
நோக்கற்பாலன.                                          (250)

பதினெட்டாம்போர்ச்சருக்கம் முற்றிற்று.

------

சௌப்திகபருவம்முற்றுப்பெற்றது.

------

வில்லிபுத்தூரார் பாரதம்முற்றும்.

*****