சல்லியன்,இன்று - இன்றைக்கு, நின்மேல் அன்றி - உன்மேலல்லாமல், வேறு ஒருவர்மேல், செல்லான் - (போர்செய்தற்குச்) செல்லான்: இருவருமே - நீங்கள் இரண்டு பேருமே, முனைந்து முனைந்து - மிகவும் உக்கிரங்கொண்டு, இரவி கடல் விழும் அளவும் - சூரியன் மேல்கடலில்விழுந்து அஸ்தமிக்கும்வரையிலும், இகல் செய்தாலும் - போர்செய்தாலும், உமக்கு - உங்களுக்கு, ஒருவர் ஒருவரை வேறல் ஒண்ணாது - ஒருவர் மற்றொருத்தரை வெல்லுதல் முடியாது, என்றும் உரைசெய்தான் - என்றுங் கூறினான், (கண்ணன்); (எ - று.) உன்னாலும்தனியே சல்லியனை யெதிர்த்துப் பொருது வெல்லமுடியாதென்பது, இதன் உட்கோள். வரை யென்னுங் கணுவின் பெயர்,அதனையுடைய மூங்கிலுக்குச் சினையாகுபெயரும், அது பின்பு மூங்கில்விளையும் மலைக்குத் தானியாகுபெயரு மாதலால், இருமடியாகுபெயர். தோளுக்கு மலையுவமை, பருமைக்கும், ஆயுதங்களால் அழித்தற்கு அரிய வலிமைக்கு மென்க. முதலடி - உவமையணி. அவநி என்ற சொல் - காக்கப்படுதற்குரிய தென்று காரணப்பொருள்படும். வெரு வரு - வெரு வா என்ற இரண்டுபகுதிகளுஞ் சேர்ந்து ஒருசொல் தன்மைப்பட்ட வெருவா என்பதன் விகாரம். இருவிர் என முன்னிலையாக் கூறவேண்டுமிடத்து இருவர்எனப்படர்க்கையாக் கூறினது - இடவழுவமைதி. சூரியனாதியோரது உதயஅஸ்தமனங்களைக் கீழ்க்கடலினின்று எழுந்து மேல்கடலில் மூழ்குவதாகக்கூறுதல், கவிமரபு. வேறல் - தொழிற்பெயர்; வெல் - பகுதி. ஒண்ணாது=ஒன்றாது; மரூஉ. அமைந்து - எச்சத்திரிபு. முனைந்து முனைந்து - அடுக்கு, மிகுதிப்பொருளது. (18) 19. | பார்த்தனொருவனுஞ் சென்றுபரித்தாமாவுடன்மலையப் படைஞரோடு, மாத்திரி மைந்தரி லிளையோன் சௌபலனைவெல்லவிகன் மாவலோனும், மூத்தவன் மைந்தரை வெல்ல முனைப்பவனன் மைந்தனோடு மூண்டுவெம்போர், கோத்தருமமத்திரத்தார்கோவையுயிர் கவர்தியெனக் கூறியிட்டான். |
(இ -ள்.) கோ தரும - தருமராசனே! பார்த்தன் ஒருவனும் சென்று - அருச்சுனனொருத்தன் மாத்திரம் தனியேபோய், பரித்தாமாவுடன் மலைய - அசுவத்தாமாவுடன் போர்செய்ய,- மாத்திரி மைந்தரில் இளையோன் - மாத்திரியின் புத்திரரிருவருள் இளையவனான சகதேவன், படைஞரோடும் - சேனைவீரர்களுடனே (சென்று), சௌபலனை வெல்ல - சகுனியைச்சயிக்க, இகல் மாவலோனும் - வலியகுதிரைத்தொழிலிலே வல்லவனான நகுலனும், மூத்தவன் மைந்தரை வெல்ல - (உங்கள்) தமையனான கர்ணனது புத்திரர்களைச் சயிக்க,-(நீ), முனை பவனன் மைந்தனோடு - போர்வன்மையுடைய வாயுகுமாரனான வீமனுடனே, (சென்று), வெம்போர் மூண்டு - கொடிய யுத்தத்தை முயன்று செய்து, மத்திரத்தார் கோவை - மத்திரநாட்டார்க்கு அரசனான சல்லியனை, உயிர் கவர்தி - கொல்வாய், என-என்று, கூறியிட்டான் - (கண்ணன்) சொல்லிமுடித்தான்; (எ - று.) |