மருவுஎன்பது, மரு என விகாரப்பட்டது, தானை - இங்கே, ஆயுதம். இதுமுதற் பதின்மூன்று கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும் மற்றநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்; இவற்றில், நான்கு ஆறாஞ்சீர்கள் தேமாச்சீர்களாகவே நிற்கும். (33) 34.-கர்ணன் புத்திரர்மூவரும் நகுலனோடு பொருது இறத்தல். தேரவன்மைந்தன்மைந்தர்சித்திரசேனனேனைச் சூரியவன்மன்சித்ரகீர்த்திமுச்சுடரோடொப்பார் வீரரில்வீரனானவெம்பரிநகுலனோடும் போரில்வந்தெதிர்ந்துதாதைபோயுழிப்போயினாரே. |
(இ -ள்.) முச் சுடரோடு ஒப்பார் - (சூரியன் சந்திரன் அக்கினி யென்னும்) மூன்று சோதிகளோடு ஒப்பவர்களான, தேரவன் மைந்தன் மைந்தர்- சிறந்த தேரையுடைய சூரியனது மகனான கர்ணனது புத்திரர்களாகிய,சித்திரசேனன் ஏனை சூரியவன்மன் சித்ரகீர்த்தி - சித்திரசேனனும் மற்றைச்சூரியவன்மன் சித்ரகீர்த்தியென்பவரும் ஆகிய மூன்றுபேரும்,- போரில் வந்து-,வீரரில் வீரன் ஆன வெம்பரி நகுலனோடும் - வீரர்களுட் சிறந்த வீரனானவெவ்விய குதிரைத்தொழிலில் வல்ல நகுலனுடனே, எதிர்ந்து - எதிர்த்து,தாதை போயுழி போயினார் - தங்கள்தந்தையான கர்ணன் சென்ற விடத்துக்குச்சென்றார்கள்; (எ - று.)
முந்தினநாளில் தந்தை யிறந்தாற்போல மறுநாளில் நகுலனாற் கொல்லப்பட்டு மைந்தரும் இறந்து வீரசுவர்க்கஞ் சேர்ந்தன ரென்பதாம். மைந்தர் மரணமடைந்தார்களென்ற பொருளை 'தாதைபோயுழிப் போயினார்' என வேறொருவகையாற் கூறினதனால், பிறிதினவிற்சியணி. போயுழி - போய வுழியென்பதன் தொகுத்தல். ஒற்றைத்தனியாழியையும் ஏழுகுதிரைகளையு முடையதாய் நாள்தோறும் தவறாமல் உலகமுழுவதையுஞ் சுற்றிவருகிற வலியபெரிய சிறந்த தேருடைமையால், சூரியன் 'தேரவன்' எனப்பட்டான்; அன்றி, 'தேரவன்மைந்தன்' என்பதற்கு - திருதராட்டிரனது தேர்ப்பாகனான அதிரதனென்பவன் எடுத்து வளர்த்தமகனான கர்ணனென்றும் பொருள்கொள்ளலாம். கர்ணபுத்திரர் மூவருள் சித்திரசேனன் பிரதானனென்பதுதோன்ற, இடையில் 'ஏனை' என்ற சொற்கொடுத்துப் பிரித்துக்கூறினார்; கீழ் 9-ஆம்கவியிலும் "தினகரன்கோமைந்தன்மைந்தன் இருவோரொடுஞ் சேனையைக் கொண்டுற" என இவ்வேறுபாடு தோன்றக் கூறியது காண்க. முறையே முச்சுடரை உவமைகூறியதில் முதற்சுடரான சூரியன் இவனுக்கு உண்மையாக அமைகிற உயர்வையும் கருதுக. நகுலன் குதிரையேறிப்பொருகையில் யாவரையும் வெல்லும் மகாவீரனாதலால் 'வீரரில் வீரனான வெம்பரி நகுலன்' என்றார், முச்சுடருவமை - ஒளிமிகுதிக்கும், பகையிருளழித்தற்குமென்க. 'சுடரோடொப்பார்' - ஒப்புப்பொருள் மூன்றனுருபுக்கு வந்தது, வேற்றுமைமயக்கம். (34) |