வேறு. 114.-அசுவத்தாமன்முதலியோர் அந்த நீர்நிலையை அடைதல். வேதியன் வாய்மை கேட்டவேதியன் மகனு மற்றை ஓதிய கிருப னாதி யுள்ளவர்தாமு மெய்தி மாதுய கற்று மற்றவாய்மைகேட் டங்கு ஞான ஊதியம் பெற்றா லென்னவொடுங்கிய வோடை கண்டார். |
(இ -ள்.) வேதியன் வாய்மை கேட்ட - வேதப்பொருள் வல்லவனான சஞ்சயமுனிவனது வார்த்தையைக் கேட்ட, வேதியன் மகனும் - வேதம் வல்ல துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனும், மற்றை ஓதிய கிருபன் ஆதிஉள்ளவர்தாமும் - (முன் சொல்லப்பட்ட) கிருபன் முதலாக மற்றும் உள்ளவர்களும், எய்தி - சென்றுசேர்ந்து, அங்கு - அவ்விடத்தில், மா துயர் அகற்றும் வாய்மை கேட்டு ஞானம் ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கியஓடை கண்டார் - மிக்க துன்பத்தை நீக்கும்படியான உபதேசத்தைக் கேட்டு (அதனால்) ஞானலாபத்தைப் பெற்றாற்போல ஒடுங்கியிருந்த தடாகத்தைப் பார்த்தார்கள்; (எ - று.)-மூன்றாமடியில், மற்று, அ - அசைகள். துரியோதனன் ஜலஸ்தம்பஞ் செய்திருத்தலால் அப்பொய்கை நீர் அசையப்பெறாமல் அடங்கியிருந்த தன்மைக்கு, நல்லஉபதேசமொழிகளைச் சிறந்த ஆசிரியர்பக்கல்கேட்டு அதனால் தத்துவஞானம் உண்டாகப்பெற்றவர் மனமும் பொறியு மொடுங்கியிருக்குந்தன்மையை உவமைகூறினார். அவ்வோடை யொடுங்கிய நிலைமை அடுத்தகவியில் விவரிக்கப்படும். உவமையணி. இதுமுதற் பதினேழு கவிகள் - இச்சருக்கத்தின் முப்பத்து மூன்றாங் கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். (114) 115.-அங்கு ஜலஸ்தம்பத்தால்ஆகிய நிலையை அவர்கள் காணல். புள்ளியலரவங்காணார்பொருதெளிதரங்கங்காணார் துள்ளியமீனங்காணார்சூழ்வருமனிலங்காணார் ஒள்ளியமலர்களெல்லாமுறங்குதலன்றிமன்றல் வள்ளியதோடுதோறுமதுநுகர்வண்டுங்காணார். |
(இ -ள்.) (அசுவத்தாமன் முதலியோர் அக்குளத்தில்), புள்இயல் அரவம்- நீர்ப்பறவைகளாலாகும் ஓசையை, காணார் - காணாதவரானார்கள்: பொருதுஎறி தரங்கம் - (ஒன்றோடொன்று) மோதி வீசுகிற அலைகளை, காணார்-;துள்ளிய மீனம்-துள்ளுகிறமீன்களை, காணார்-; சூழ்வரும் அனிலம் - சுற்றிவீசுகிற காற்றை, காணார்-; ஒள்ளிய மலர்கள் எல்லாம் - ஒளியையுடையநீர்ப்பூக்கள்யாவும், உறங்குதல் அன்றி - குவிந்து கிடத்தலேயல்லாமல், மன்றல்வள்ளிய தோடு தோறும் - |