01. குருகுலச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

ஆக்குமாறு அயனாம்; முதல் ஆக்கிய உலகம்
காக்குமாறு செங் கண் நிறை கருணைஅம் கடலாம்;
வீக்குமாறு அரனாம்; அவை வீந்த நாள், மீளப்
பூக்கும் மா முதல் எவன்? அவன் பொன் அடி போற்றி!

1
உரை
   


வாழ்த்து

ஏழ் பெருங் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே
சூழ்க! வண் தமிழ் ஓங்குக! தேங்குக, சுருதி!
வீழ்க, பைம் புயல்! விளங்குக, வளம் கெழு மனு நூல்!
வாழ்க, அன்புடை அடியவர் மன்னு மா தவமே!

2
உரை
   


அவையடக்கம்

கன்ன பாகம் மெய் களிப்பது ஓர் அளப்பு இல் தொல் கதை முன்
சொன்ன பாவலன், துகள் அறு சுகன் திருத் தாதை!
அன்ன பாரதம்தன்னை, ஓர் அறிவிலேன் உரைப்பது
என்ன பாவம்! மற்று என்னை இன்று என் சொலாது, உலகே!

3
உரை
   

மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த
எண் இலா நெடுங் காதையை யான் அறிந்து இயம்பல்,
விண்ணில் ஆதவன் விளங்கு நீடு எல்லையை, ஊமன்,
கண் இலாதவன், கேட்டலும் காண்டலும் கடுக்கும்.
4
உரை
   

முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன்-
தன் சொலாகிய மாப் பெருங்காப்பியம்தன்னைத்
தென்சொலால் உரைசெய்தலின், செழுஞ் சுவை இல்லாப்
புன்சொல்ஆயினும், பொறுத்து அருள்புரிவரே, புலவோர்.
5
உரை
   


பாடலுற்ற காரணம்

முன்னும் மா மறை முனிவரும், தேவரும், பிறரும்,
பன்னும் மா மொழிப் பாரதப் பெருமையும் பாரேன்;
மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும்
என்னும் ஆசையால், யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன்.

6
உரை
   


திங்கள் மரபில் சிறந்தோர் கதை

எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதயத்
திங்கள் மா மரபினில் பிறந்து, இசையுடன் சிறந்தோர்,
அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி; அவ் அரசர்-
தங்கள் மாக் கதை, யான் அறி அளவையின், சமைக்கேன்.

7
உரை
   


திங்களின் சிறப்பு

பொருந்த வான் உறை நாள்களை நாள்தொறும் புணர்வோன்,
அருந்த வானவர்க்கு ஆர் அமுது அன்புடன் அளிப்போன்,
திருந்து அ(வ்) வானவர்க்கு அரியவன் செஞ் சடை முடிமேல்
இருந்த வானவன்,-பெருமையை யார்கொலோ, இசைப்பார்?

8
உரை
   

மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி,
மண்டு அலம் பொர வருந்திய பெருந் துயர் மாற,
மண்தலம்தனை நிழல் எனும் மரபினால், தனது
மண்டலம் பொழி அமிழ்தின், மெய் குளிரவே வைத்தோன்;
9
உரை
   

பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு,
உம்பர்-ஆனவர் தானவருடன் கடைந்திடவே,
தம்பம் ஆனதும் அன்றி, அத் தழல் விடம் தணிய,
அம்புராசியின் ஆர் அமுதுடன் அவதரித்தோன்;
10

உரை
   

பத்து இரட்டியில் ஈர்-இரண்டு ஒழிந்த பல் கலையோன்;
மித்திரற்கு அவை கொடுத்து முன், மீளவும் கவர்வோன்;
அத்திரிப் பெயர் அந்தணன் அம்பகம்தனிலும்,
சித்திரக் கனல் முகத்தினும், பிறந்து, ஒளி சிறந்தோன்.

11
உரை
   


புதன் பிறப்பு

அந்தி ஆரண மந்திரத்து, அன்புடன் இவனை
வந்தியாதவர் மண்ணினும் வானினும் இல்லை.
புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால்
தந்து, யாவரும் களிப்புற, இருக்கும் நாள்தன்னில்,

12
உரை
   


மநு மகன் இளை என்னும் மடவரலாதல்

வளை நெடுஞ் சிலைக் கரத்தினன் மநு அருள் மைந்தன்,
உளை எழும் பரித் தேரினன், உறு
விளை அருந் தவ விபினம் உற்று, அம்பிகை விதியால்,
இளை எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப.

13
உரை
   

புதனும் இளையும்

மார காகளம் எழுவது ஓர் மது மலர்க் காவில்,
தாரகாபதி புதல்வன் அத் தையலைக் காணா,
வீர காம பாணங்களின் மெலிவுற, மயங்கி,
தீர காமமும் செவ்வியும் மிகும்படி, திளைத்தான்.
14
உரை
   

புரூரவா தோன்றுதல்

புதனும், அந்த மென் பூவையும், புரூரவாவினைத் தம்
சுதன் எனும்படி தோற்றுவித்தனர். அவன் தோன்றி,
இத நலம் பெறும் அழகினும் திறலினும் இலங்கி,
மதனனும் கலை முருகனும் எனும்படி, வளர்ந்தான்.
15
உரை
   


புரூரவா உருப்பசியை மணத்தல்

பொருப்பினைச் சிறகு அரிந்தவன் புரத்து மங்கையருள்
உருப்பசிப் பெயர் ஒண்டொடி, உருவினின் சிறந்தாள்,
தருப் பொழில் பயில் காலையில், தானவர் காணா,
விருப்பு உறக் கவர்ந்து ஏகினர், அவளுடன் விசும்பில்.

16
உரை
   


கொண்டு போதலும், 'அபயம்!' என்று உருப்பசி கூவ,
அண்டர் யாவரும் அஞ்சினர், அவருடன் அடு போர்.
வண்டு சூழ் குழல் அணங்கை, இம் மதிமகன் மகனும்
கண்டு, தேர் நனி கடவினன், அசுரர் மெய் கலங்க.

17
உரை
   


நிறம் தரும் குழல் அரிவையை நிறுத்தி, வாள் அவுணர்
புறந்தரும்படி புரிந்தபின், புரந்தரன் தூதால்
மறம் தரும் கழல் மன்னவன் மண்மிசை அணைந்து,
சிறந்த அன்பொடு அத் தெரிவையை நலம் பெறச் சேர்ந்தான்.

18
உரை
   

ஆயுவின் பிறப்பு

மாயன் ஊருவின் வந்தருள் அந்த மான் வயிற்றில்
ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான்.
தேயுவும் பல தேவரும் மகிழ, மற்று இவனே
மேய வண் புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன்.
19
உரை
   

ஆயுவின் மகன் நகுடன்

முகுடமும், பெருஞ் சேனையும், தரணியும், முற்றும்
சகுட நீர் எனச் சத மகம் புரி அருந் தவத்தோன்,
நகுடன், நாம வேல் நராதிபன், நாகருக்கு அரசாய்
மகுடம் ஏந்திய குரிசில், ஆயுவின் திரு மைந்தன்.
20

உரை
   

நகுடன் சாபத்தால் நாகமாதல்

புரந்தரன் பதம் பெற்றபின், புலோமசை முயக்கிற்கு
இரந்து, மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி,
வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு,
நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும், அந் நிருபன்.

21
உரை
   


நகுடன் மகன் யயாதி

மற்று அவன் திரு மைந்தன், வில் மைந்தினால் உயர்ந்த
கொற்றவன், திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன்,
முற்ற வன் பகை முகம் கெட முகம்தொறும் திசையில்
செற்றவன், பெருஞ் செற்றம் இல் குணங்களில் சிறந்தோன்,

22
உரை
   


யயாதி சுக்கிராசாரியரின் மகள் தேவயானையை
மணந்து, இரு குமரரைத் தருதல்

'யயாதி' என்று கொண்டு, இவனையே எவரினும் சிறக்க
வியாதனும் புகழ்ந்து உரைத்தது. மற்று இவன், மேல்நாள்,
புயாசலங்களுக்கு இசையவே, புகரவன் புதல்வி
குயாசலம் தழீஇ, இருவர் வெங் குமரரை அளித்தான்.

23
உரை
   

யயாதியும் சன்மிட்டையும்

அன்ன காலையில், இவள்தனது ஆர் உயிர்த் துணையாய்,
முன் இசைந்த பேர் இசைவினால், ஏவலின் முயல்வாள்,
நல் நலம் திகழ் கவிதனக்கு உரைகெழு நண்பாம்
மன்னவன் தரு மடவரல், இவனுழை வந்தாள்.
24
உரை
   

ஆழி மன்னன், அவ் அணங்கினை அணங்கு எனக் கண்டு,
பாழி வன் புயம் வலம் துடித்து, உடல் உறப் பரிந்து,
வாழி தன் மனை மடவரல் அறிவுறாவண்ணம்,
யாழினோர் பெரும் புணர்ச்சியின் இதயம் ஒத்து இசைந்தான்.
25
உரை
   


சன்மிட்டை பூருவைப் பெறுதல்

சாரும் அன்பினின், கற்பினின், சிறந்த சன்மிட்டை,
சேரும் மைந்தினும், உயர்வினும், தேசினும், சிறந்து,
'மேரு' என்றிட, மேதினி யாவையும் தரிப்பான்,
பூரு என்று ஒரு புண்ணியப் புதல்வனைப் பயந்தாள்.

26
உரை
   

தேவயானை சினம்

மருவு இளங் கொடி அனைய மென் மருங்குலாள், பின்னும்
இருவர் மைந்தரைப் பயந்தனள். இறை மனை காணா,
'உரு விளங்கிய உலகுடை நிருபனுக்கு இவள்மேல்
திருவுளம்கொல்?' என்று அழன்று, தன் தாதை இல் சென்றாள்.
27
உரை
   


சுக்கிரன் சாபத்தால் யயாதி முதுமை அடைதல்

சென்று, தாதையைப் பணிந்து, இது செப்பலும், சின வேல்
வென்றி மன்னனை விருத்தன் ஆம்வகை அவன் விதித்தான்.
அன்றுதொட்டு இவன் ஐம் முதல் பிணியினால் அழுங்கி,
'இன்று நூறு' என, நரை முதிர் யாக்கையோடு இருந்தான்.
28
உரை
   

பூரு தந்தைக்குத் தன் இளமையை ஈதல்

அந்த மன்னவன் மைந்தரை அழைத்து, 'எனக்கு உசனார்
தந்த மூப்பை நீர் கொண்மின், நும் இளமை தந்து' என்ன,
மைந்தர் யாவரும் மறுத்திட, பூரு, மற்று அவன்தன்
இந்த மூப்பினைக் கவர்ந்து, தன் இளமையும் ஈந்தான்.
29
உரை
   

யயாதி பூருவுக்கு இளமையும் அரசும் அளித்தல்

விந்தை, பூமகள், முதலிய மடந்தையர் விரும்ப,
முந்தை மா மணம் யாவையும் பல பகல் முற்றி,
சிந்தை ஆதரம் தணிந்தபின், சிந்தனை இன்றி,
தந்தை, மீளவும் இளமை தன் தனயனுக்கு அளித்தான்.
30
உரை
   


இடியும் மாறுகொள் நெடு மொழி யயாதி, அன்று இவற்கே
முடியும், மாலையும், முத்த வெண் கவிகையும், முரசும்,
படியும், யாவையும் வழங்கி, 'எம் பனி மதி மரபிற்கு
அடியும் நீ, இனி' என மகிழ்ந்து, அளியுடன் அளித்தான்.

31
உரை
   


பரதன் தோற்றமும் ஏற்றமும்

விரதம் மிஞ்சிய வேள்வியால் கேள்வியால் மிக்கான்,
சுரத மங்கையர் முலைக் குவடு அணை வரைத் தோளான்,
பரதன் என்று ஒரு பார்த்திவன், பரதமும் இசையும்
சரதம் இன்புற, அக் குலம்தனில் அவதரித்தான்.

32
உரை
   


சுர சமூகமும் சுராரிகள் சமூகமும் சூழ,
விரசு பூசலின் வாசவன் நடுங்கி, வெந்நிடு நாள்,
அரசர் யாவரும் அறுமுகக் கடவுள் என்று அயிர்ப்ப,
புரசை நாகம் முன் கடவினன், நாகமும் புரந்தோன்.

33
உரை
   

அத்தியின் பிறப்பும், அத்தினாபுரி அமைப்பும்

'முக் குலத்தினும் மதிக் குலம் முதன்மை பெற்றது' என்று,
எக் குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச,
மைக் குலத்தினில் புட்கலாவர்த்தமாம் எனவே,
அக் குலத்தினில் அத்தி என்பவன் அவதரித்தான்.
34
உரை
   

கொண்டல்வாகனும் குபேரனும் நிகர் எனக் குறித்து,
புண்டரீகன் முன் படைத்த அப் புரவலன் அமைத்தது,
எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும்,
அண்டர் தானமும், உவமை கூர் அத்தினாபுரியே.
35
உரை
   

[மீனம் ஆகிய விண்ணவன், விநதை முன் பயந்த
யானமீது எழுந்தருளி வந்து, இரு பதம் வழங்க,
கான நாள் மலர்க் கயத்திடைக் கயமும், வெங் கராமும்,
ஆன மானவர் இருவரும் அக் குலத்தவரே.]
36
உரை
   

குருவும் குருகுலமும்

பொரு பெரும் படைத் தொழில் வயப் புரவி, தேர், மதமா,
மருவ அருந் தொழில் மன்னர் நீதியின் தொழில், வளம் கூர்
சுருதியின் தொழில், முதலிய தொழில் அனைத்தினுக்கும்
குரு எனும் புகழ்க் குருவும், அக் குலத்தில் அங்குரித்தான்.
37
உரை
   

வரு குலத்தவர் எவரையும், வரிசையால், இன்றும்
குருகுலத்தவர் எனும்படி, பேர் இசை கொண்டான்;
இரு குலத்தினும், மாசு அறு தேசினால், இவனுக்கு
ஒரு குலத்தினும் உரைப்பதற்கு உவமை வேறு உண்டோ?
38
உரை
   

சந்தனு வருகை

அந்த நல் மரபினில், அமுத வெண் திரைச்
சிந்துவின்மிசை வரு திங்கள் ஆம் என,
சந்தனு எனும் பெயர்த் தரணி காவலன்
வந்தனன்; அவன் செயல் வகுத்துக் கூறுவாம்:
39
உரை
   

சந்தனு கங்கையைக் காணுதல்

'வேனிலான் இவன்' என, விளங்கு காலையில்,
கானக வேட்டை போய் இளைத்த காவலன்,
ஆன மென் குளிர் புனல் ஆசையால், மணித்
தூ நிறக் கங்கையாள் சூழல் எய்தினான்.


40
உரை
   

மரு வரும் குழல், விழி, வதனம், வார் குழை,
இரு தனம், தோள், கழுத்து, இதழொடு இன் நகை,
புருவம், வண் புறவடி, பொற்ப, பாவையர்
உருவு கொண்டனள், தனது உடைமை தோன்றவே.

41
உரை
   

கங்கையின் வெள்ளம்மேல் கருத்து மாறி, இம்
மங்கைதன் பேர் ஒளி வனப்பின் வெள்ளமே,
தங்கிய சோகமும் தாபமும் கெட,
பங்கய விழிகளால் பருகினான் அரோ.
42
உரை
   


சந்தனுவின் ஐயம்

'வையகமடந்தைகொல்! வரைமடந்தைகொல்!
செய்ய பங்கயமலர்த் திருமடந்தைகொல்!
துய்ய வண் கலைவிதச் சொல்மடந்தைகொல்!
ஐயமுற்றனன், 'இவள் ஆர்கொல்!' என்னவே.
43
உரை
   

தெளிந்து போற்றுதல்

'கண் இமைத்து, இரு நிலம் காலும் தோய்தலால்,
பெண் இவள் மானுடப் பிறப்பினாள்' என
எண்ணம் உற்று, அவள் அருகு எய்தி, 'யாவர் செய்
புண்ணியம் நீ? எனப் புகழ்ந்து போற்றினான்.
44
உரை
   

கங்கை துயரம் நீங்குதல்

போற்றிய குரிசில் மெய் புளகம் எய்தவே,
ஏற்றிய விழியினள், இளகு நெஞ்சினள்,
'சாற்றிய மலர் அயன் சாபம் இவ் வழித்
தோற்றியது' என, உறு துயரம் நீங்கினாள்.
45
உரை
   

சந்தனு அன்பு கூர்ந்து அவள் எண்ணம் வினாதல்

பொங்கிய மதர் விழிப் புரிவும், ஆதரம்
தங்கிய முகிழ் முலைத் தடமும், நோக்கியே,
'இங்கித முறைமை நன்று` என்று, வேந்தனும்,
அங்கு இதமுடன் அவட்கு அன்பு கூரவே,
46
உரை
   

'கன்னியேயாம் எனில், கடி கொள் பான்மையை;
என்னின் மற்று உயர்ந்தவர் இல்லை, மண்ணின்மேல்;
உன் நினைவு உரை' என உசாவினான் -- இகல்
மின் இலை வடி கொள் வேல் வேந்தர் வேந்தனே.
47
உரை
   

கங்கையின் நிபந்தனை

நாணினளாம் என, நதிமடந்தையும்,
பூண் உறு முலைமுகம் பொருந்த நோக்கினள்,
சேண் உறு தனது மெய்த் தேசுபோல் நகை
வாள் நிலவு எழ, சில வாய்மை கூறுவாள்
48
உரை
   

'இரிந்து மெய்ந் நடுங்கிட, யாது யாது நான்
புரிந்தது, பொறுத்தியேல், புணர்வல் உன் புயம்;
பரிந்து எனை மறுத்தியேல், பரிவொடு அன்று உனைப்
பிரிந்து அகன்றிடுவன், இப் பிறப்பு மாற்றியே.
49
உரை
   

'மெய் தரு விதியினேன் விரதம் மற்று இவை
எய்த அரிது ஒருவரால்; எய்த வல்லையேல்,
கைதருக!' என, பெருங் காதலாளனும்,
'உய்வு அரிது!' என இசைந்து உடன்படுத்தினான்.
50
உரை
   


'எனது உயிர், அரசு, வாழ்வு, என்ப யாவையும்
நினது; நின் ஏவலின் நிற்பன் யான்' என,
வனிதையை மருட்டினான் -மன்றல் எண்ணியே,
தனதனும் நிகர் இலாத் தன மகீபனே.

51
உரை
   

அரு மறை முறையினால், அங்கி சான்று என,
திருமணம் புரிந்து, உளம் திகழ வைகினான்-
'இரதியும் மதனனும் அல்லது இல்லை, மற்று
ஒருவரும் உவமை' என்று, உலகு கூறவே.
52
உரை
   


மைந்தனைப் பெற்றுக் கங்கையில் எறிதல்

மருவுறச் சில பகல் மணந்து, 'மான்விழி
கரு உயிர்த்தனள்' எனக் களி கொள் காலையில்,
பருவம் உற்று, அன்புடன் பயந்த மைந்தனைப்
பொரு புனல் புதைத்தனள், புவனம் காணவே.
53
உரை
   

கண்டு உளம் வெருவி, முன் கதித்த வாசகம்
கொண்டு உரையெடுத்திலன், கொண்ட காதலான்;
ஒண்டொடியுடன் மணந்து உருகி வைகினன்,
பண்டையின் எழு மடி பரிவு கூரவே.
54
உரை
   

பின்னும் ஆறு குழந்தைகளை ஆற்றில் எறிதல்

பின்னரும் அறுவரை, பெற்ற தாய், மனம்
முன்னரின் மும் மடி முரண்டு மாய்க்கவே,
மன்னவன் அவற்றினும் வாய் திறந்திலன்,
நல் நகர்ச் சனம் எலாம் நடுநடுங்கவே.
55
உரை
   

கங்கையின் செயல் குறித்து மங்கையர் அழுதல்

'வழு அறு குருகுல மன்னன் மைந்தர் ஓர்
எழுவரை முருக்கினள், ஈன்ற தாய்!' என,
பழுது அறு மகப் பல பயந்த மங்கையர்
அழுதனர், கண் புனல் ஆறு பாயவே.
56
உரை
   

கங்கை எட்டாம் முறை கருக்கொள்ளல்

கங்கை என்று உலகு எலாம் கைதொழத் தகும்
மங்கை, அங்கு அனந்தரம், வயிறு வாய்த்துழி,
வெங் கய கட கரி வேந்தன் மா மனப்
பங்கயம் துறந்தது, பழைய இன்பமே.


57
உரை
   
சந்தனு மைந்தனை எடுத்துக்கொண்டு
கங்கையை வேண்டல்

'மதலையைப் பயந்தனள், மடந்தை' என்றலும்,
கதுமெனச் சென்று, தாய் கைப்படாவகை
இதம் உறப் பரிவுடன் எடுத்து, மற்று அவள்
பதயுகத் தாமரை பணிந்து, பேசுவான்:

58
உரை
   

'நிறுத்துக, மரபினை நிலைபெறும்படி!
வெறுத்து எனை முனியினும், வேண்டுமால் இது;
'மறுத்தனன் யான்' என மனம் செயாது, இனிப்
பொறுத்து அருள்புரிக, இப் புதல்வன்தன்னையே!'
59
உரை
   

கங்கை சந்தனுவைக் கண்டித்தல்

என்று பற்பல மொழி இவன் இயம்பவே,
'நன்று நன்று, அவனிப! நவின்ற வாசகம்!
இன்று நின்று இரங்கினை; எழுவர் மைந்தரைக்
கொன்ற அன்று என் செய்தாய்? கொடியை!' என்னவே,


60
உரை
   

சந்தனு கங்கையின் வரலாறு வினாதல்

அரசனும் உணர்ந்து, 'நீ யார்கொல்? பாலரைத்
திரை செறி புனலிடைச் செற்றது என்கொலாம்?
உரைசெயவேண்டும்' என்று உரைப்ப, வஞ்சியும்
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள்:

61
உரை
   

கங்கை தன் சாப வரலாறு கூறல்

'வால் முக மதியமும், புதிய மாலிகைக்
கான் முக இதழியும், கமழும் கங்கையாள்
தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை
நான்முகன் பேர் அவை நண்ணினாள்அரோ.
62
உரை
   


'இருங் கலை இமையவர், எதிர் இறைஞ்சுவாள்
மருங்கு, அலை மதியினை மதிக்குமாறுபோல்,
அருங் கலை அயல் உற அதிர்ந்து வீசினான்,
பொருங் கலை எனும் இகல் புரவி வீரனே.
63
உரை
   

'திருத் தகும் அவயவம் திகழ்ந்து தோன்றவே,
கருத்துடன் அவைக்கணோர் கண் புதைக்கவும்,
மருத்தினை மனனுற மகிழ்ந்து, காதல் கூர்
உருத் தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான்.
64
உரை
   

'நோக்கிய வருணனை, நுவலும் நான்மறை
ஆக்கிய முனி உருத்து அழன்று, 'பார்மகள்
பாக்கியம் என்ன உற்பவிக்க, நீ!' என,
தாக்கிய உரும் எனச் சபித்த காலையே,
65
உரை
   

' 'கோனிடம் நினைவொடு குறுகி, நீயும், நல்
மானிட மடந்தையாய், மணந்து மீள்க!' என,
வானிடை நதியையும், வழுவினால், அவள்-
தான் இடர் உறும்வகை, தந்தை ஏவினான்.
66
உரை
   

கங்கை வழியிடை வசுக்களைக் கண்டமை

' 'பாரினும் நமக்கு ஒரு பதம் உண்டு' என்று, அவள்
ஈரம் உற்று இழிதரும் எல்லை, வானகத்து
ஓர் இடை, உடன்விழும் உற்கைபோல், முக
வார் ஒளி மழுங்கினர் வசுக்கள் தோன்றினார்.
67
உரை
   

' 'என்னை இங்கு இழிந்த ஆறு, எங்கள் மா நதி
அன்னை?' என்று, அவள் அடி, அவர் வணங்கலும்,
தன்னை அங்கு அயன் இடு சாபம் கூறினாள்.
பின்னை, அங்கு அவரும் தம் பெற்றி பேசுவார்:
68
உரை
   

வசுக்களின் சாப வரலாறு்

'உற்று உறை எங்களுள் ஒருவன், தன் மனைப்
பொற்றொடிக்கு அழிந்து, அவள் புன்மை வாய்மையால்,
சற்றும் மெய் உணர்வு அறத் தகாது ஒன்று எண்ணினான்;
மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம்.
69
உரை
   

'தூநகை மொழிப்படி சோரர் ஆகியே,
வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் மனைத்
தேனுவை, இரவினில் சென்று, கைக்கொளா,
மீன் நெறி கரந்தென, மீள ஏகினோம்.
70

உரை
   

' 'பசுக் கவர்ந்தனர்' என, பயிலும் மா தவ
முசுக் குலம் அனைய மெய்ம் முனிவர் கூறலும்,
'சிசுக்களின் அறிவு இலாச் சிந்தை செய்தவர்,
வசுக்கள்' என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான்.

71
உரை
   

"உம் பதம் இழந்து, நீர் உததி மண் உளோர்-
தம் பதம் பெறுக!" எனச் சாபம் கூறலும்,
"எம் பதம் பெறுவது என்று, இனி?" எனா, அவன்
செம் பதம் எமது பூஞ் சென்னி ஏந்தினேம்.
72
உரை
   


'அன்புடை முனி முனிவு ஆறி, 'மானுடப்
புன் பிறப்பு எழுவரும் புரிந்து மீளுதிர்;
மின் புரை தெரிவை சொல் விழைந்த நீ, அவண்
இன்பம் அற்று, அநேக நாள் இருத்தி' என்னவே,

73
உரை
   

"விண் வரு செல்வமும், விழைவும், மேன்மையும்,
எண்மரும் இழந்தனம்; என்செய்வேம்!" என,
மண் வரு தையலை வணங்க, தையலும்,
பண் வரு மொழி சில பகர்ந்து, தேற்றினாள்:
74
உரை
   

கங்கை வசுக்களைத் தேற்றினமை

வலத்து உயர் தடம் புய வருணனும் குரு-
குலத்தினில் அயன் வரம்கொண்டு தோன்றுமால்;
நலத்துடன் அவன் மனை நண்ணும் எல்லையில்,
நிலத்திடை என்வயின் நீரும் தோன்றுவீர்.
75
உரை
   

' 'அஞ்சன்மின்; உம்மை நான் அவனி தோயும் முன்
எஞ்ச வீட்டிடுவன்; இவ் இறைவன்தன்னையும்
நெஞ்சு உறத் தந்தைபால் நிறுத்தி, நானும் அவ்
வஞ்சகப் பிறப்பினை மாற்றுவேன்' என்றாள்.
76
உரை
   

வசுக்கள் கங்கையை வணங்கினமை

'நால்-இரு வசுக்களும் நதிமடந்தை சொல்-
பால் இரு செவிப்பட, படாத நல் தவம்
சால் இரு நிலத்து இழி தாயை, அன்புடன்,
கால் இரு கரத்தினால் கசிந்து, போற்றினார். .
77
உரை
   

வருணனும் கங்கையும் மண்ணில் தோன்றினமை

'சதைய மீன் கடவுளும், சசிகுலத்து நல்
விதை என மேதினிமீது தோன்றினான்;
துதை அளி செறி குழல் தோகை ஆயினாள்,
இதையம் உற்று உயர் நதி என்னும் மின்னுமே.
78
உரை
   

கங்கையின் வயிற்றில் வசுக்கள் பிறந்தமை

'தவம் உறக் குட திசைத் தலைவன் தாரமாம்
அவள் வயிற்று உதித்தனர், அந்த எண்மரும்;
உவகையின், பெரும! நீ உணர்ந்துகொள்க!' என,
இவள் திருக் கணவனும் இன்ன கூறுவான்:
79
உரை
   

எட்டாம் மகன் தன்மை

'அறப் பயன் என்னுமாறு, அறிவு இலா எமைப்
பிறப்பு உணர்த்தினை, மகப்பேறு செய்து நீ;
இறப்பவர் எழுவரோடு ஏகலா உயர்
சிறப்புடை இனையவன் செய்வது என்?' என்றான்.
80
உரை
   


'முக் குலத்து அரசினும் முதன்மையால் உயர்
இக் குலத்து, இவன் அலாது இல்லை மா மகார்;
அக் குலத் தவ முனி அருளினால், இவன்
மெய்க் குலத் தந்தையாம் விழைவும் இல்' என்றாள்.

81
உரை
   

மன்னவன் விருப்பம்

மன்னவர் தொழு கழல் மன்னன், 'மைந்தனோடு
இன்னமும் ஒருவனை இனிது அளித்து, நாம்
பன்னக நெடு முடிப் பார் களிக்கவே,
பொன்னகர் இருவரும் போதும்' என்னவே,
82
உரை
   


கங்கையின் அறிவுரை

'போய் இருந்து என் பயன்? போகம் பல்வகை-
ஆய் இருந்தன எலாம் அருந்தி, இன்னமும்
மா இருந் தரணியில் மன்னு சில் பகல்
நீ இருந்து, அரசியல் நிறுத்தி, மீளுவாய்.
83
உரை
   

பெற்ற மகனோடு கங்கை பிரிந்து செல்லுதல்

'இப் புதல்வனும் இனி என்னொடு ஏகியே,
மெய்ப் படு காளையாம் பதத்து, மீள நின்
கைப்படுத்துவல்' என, கணவனைத் தழீஇ,
அப் பெரும் புதல்வனோடு அவளும் ஏகினாள்.
84
உரை
   

காவலன் வருந்தி வைகுதல்

அன்று தொட்டு இவனும் அகன்ற பூங்கொடியை அழகுற எழுதி
                                  முன் வைத்தும்,
ஒன்றுபட்டு உவமைப் பொருள்களால் கண்டும், உரைத்தவை
                                  எடுத்து எடுத்து உரைத்தும்,
மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர்
                                  வதனமும் நோக்கான்,
'என்று இனிக் கிடைப்பது?' என்று உளம் வருந்தி, எண்ணும் நாள்
                                  எல்லை ஆண்டு இருந்தான்.
85
உரை
   

சந்தனு கங்கைக் கரையை அடைதல்

பின் ஒரு தினத்தில், அமைச்சரும், பிறரும், பெரும் படைத்
                                  தலைவரும், சூழ;
முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன்
                                  முயன்று போய், முற்றி;
மின் ஒரு வடிவு கொண்டெனச் சிறந்த மெல்லியல், மீண்டு
                                  உறை மறையும்
தன் ஒரு மதலை, ஆக்கமும் கருதி; சானவித் தடங் கரை
                                  அடைந்தான்.
86
உரை
   

பண்டு, தான் அவளை எதிர்ப்படும் கனகப் பைங் கொடிப் பந்தர்
                                  வான் நிழலும்,
வண்டு அறா நறைப் பூஞ்சோலையும், தடமும், மருங்கு அலை
                                  மலய மாருதமும்
புண்டரீகமும் செங் காவியும் கமழும் புளினமும், புள் இன
                                  மென் துறையும்,
கண்டு, 'காரிகையை இம்மையில் இன்னும் காண்குமோ!' என,
                                  மனம் கசிந்தான்.
87
உரை
   

சந்தனு தேவவிரதனைக் கண்டு வியத்தல்

பிரிந்த நாள் எண்ணி, பகீரதிப் பெருக்கைப் பேதுறும் குறிப்பொடு
                                  நோக்கி,
கரிந்த பாதவம்போல் நின்ற அப் பொழுதில், கால் பொரக் குனித்த
                                  கார்முகமும்,
தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும், சிலம்பு எனத் திரண்ட
                                  தோள் இணையும்,
விரிந்த நூல் மார்பும், ஆகி முன் நடந்தான், விழி களித்திட,
                                  ஒரு வீரன்.
88
உரை
   

வியந்திட வரும் அக் குரிசிலை, 'இவனே விடையவன் குமரன்!'
                                  என்று அயிர்க்கும்;
'வயந்தனில் உலவும் மதன்கொலோ!' என்னும்; 'வாசவன் மதலை!'
                                  என்று எண்ணும்;
'உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும்
                                   உலகின்மேல்!' என்னும்;
பயந்த தன் வடிவின் படி எனத் திகழும் பான்மையை நினைந்திலன்,
                                  பயந்தோன்!
89
உரை
   

மகன் கணையால் மன்னன் மயங்கி வீழ்தல்

தந்தை என்று இவனை உணர்கிலா மதியால், சராசனம் தழுவுற
                                  வளைத்து,
மைந்தனும், ஒரு போர் மோகனக் கணையால் மறையுடன் மார்பு
                                  உற எழுதி,
இந்திர தனுவோடு இந்திரன் எழிலி- இடை மறைந்தனன் என,
                                  புடையே
சிந்திய திவலைச் சிந்துவின் மறைந்தான்; அரசனும் மகிதலம்
                                  சேர்ந்தான்.
90

உரை
   

கங்கை காவலனைத் தெளிவித்தல்

காதலன் அயர்வும், திருமகன் புனலில் கரந்ததும், கண்டு,
                                  உளம் உருகி,
மேதகு வடிவு கொண்டு, மற்று அந்த வெஞ் சிலை
                                  விநோதனும் தானும்,
ஓத வெண்திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர்க் கொடி என ஓடி,
தூதுளங்கனிவாய் மலர்ந்து, இனிது அழைத்து, சூடகச் செங் கையால்
                                  எடுத்தாள்.

91
உரை
   

மகனை மன்னனிடம் கொடுத்துக் கங்கை மறைதல்

வாடிய தருவில் மழை பொழிவதுபோல் மடவரல் கருணைநீர் பொழிய,
கூடிய உணர்வோடு எழுந்த காவலனைக் கொங்கை மார்புறத்
                                  தழீஇக்கொண்டு,
'நாடிய கருமம் வாய்த்தது!' என்று உவகை நலம் பெற, தந்தை
                                  பைங் கழற் கால்
சூடிய மகவைக் கைக் கொடுத்து, இவளும் தோன்றலோடு இவை
                                  இவை சொன்னாள்:
92
உரை
   


'வேந்த! கேள்: இவன் உன் மதலையே; தேவ விரதன் என்று
                                  இவன் பெயர்; பல்லோர்
ஆய்ந்த நூல் வெள்ளம் கடந்தனன் கரை கண்டு, அருந்ததிபதி
                                  திருவருளால்; பூந் துழாய்
மாலைப் போர் மழுப் படையோன் பொன்னடி பொலிவுற வணங்கி,
ஏந்து நீள் சிலையும், பல கணை மறையும், ஏனைய படைகளும்,
                                   பயின்றான்.

93
உரை
   

'மகப் பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும், வாழ்வும்,
                                  மெய் வலியும்,
மிகப் பெறும் தவம் நீ புரிந்தனை; நின்னை வேறு இனி வெல்ல
                                  வல்லவர் ஆர்?
உகப்புற இவனோடு அவனி ஆளுக!' என்று, ஓர் அடிக்கு ஓர்
                                  அடி புரிந்து,
தகப் பெறு மயிலும், தலைவன்மேல் உள்ளம் தகைவுற, தடம்
                                  புனல் புகுந்தாள்.
94
உரை
   

சந்தனு மைந்தனோடு நகரடைதல்

மனைவியைக் கண்டு மீளவும் பிரிந்த வருத்தம், மெய்த்
                                  திருத்தகு கேள்வித்
தனையனைக் கண்ட மகிழ்ச்சியால், அருக்கன்-தன் எதிர்
                                   இருள் எனத் தணப்ப,
நினைவினில் சிறந்த தேர்மிசை, புதனும் நிறை கலை
                                   மதியுமே நிகர்ப்ப,
புனை மணிக் கழலான் அவனொடும் தனது புரம் எதிர்
                                   கைதொழ, புகுந்தான்.
95
உரை
   

சந்தனு ஒரு நாள் வேட்டைக்குச் செல்லல்

தானும் அம் மகனும் தரியலர் வணங்கத் தங்கு நல் நாளில்
                                   அங்கு ஒரு நாள்,
தேன் உறும் தொடையல் இளவரசனைத் தன் திகழ்
                                   அரியாசனத்து இருத்தி,
கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால், காற்று எனக்
                                   கூற்று என நடந்து,
பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன்,
                                   விறல் படையோன்.
96
உரை
   

சந்தனு சத்தியவதியைக் கண்டு காதல் கொள்ளல்

பாசறை முழுதும் ஒரு பெருங் கடவுள் பரிமளம் ஒல்லெனப் பரப்ப,
யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல்
                                  உயிர்ப்பு எதிர் ஓடி,
தாசர்தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை, தரணிபர்க்கு
                                  எல்லாம்
ஈசனும், உருகிக் கண்டு, உளம் களியா, 'இலங்கிழை! யார்கொல் நீ?'
                                  என்றான்.
97
உரை
   

நிருபனது உரை கேட்டு, அஞ்சினள், ஒதுங்கி நின்று, கை நினைவு
                                  உறக் குவியா,
'இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல், எந்தை ஏவலின்'
                                  என்று,
உரைசெயும் அளவில், வேட்கையால் உள்ளம் உருகி, மெய்ம்
                                  மெலிந்து, ஒளி கருகி,
அரிவையை அளித்தோன் பக்கம் -அது அடைந்தான்; அவனும்
                                   வந்து, அடிமலர் பணிந்தான்.
98
உரை
   

பாகன் பரதர் தலைவனிடம் மன்னன் கருத்து உரைத்தல்

பாகனை அரசன் குறிப்பினால் ஏவ, பாகனும் பரதவர் பதியை
ஓகையோடு இருத்தி, 'நின்னுழை வதுவை உலகுடை நாயகன் நயந்தான்;
தோகை செய் தவமோ, நின் பெருந் தவமோ, தொல் குலத்தவர்
                                  புரி தவமோ,
ஆகும் இவ் வாழ்வு!' என்று உரைத்தனன். அவனும் ஆகுமாறு
                                   அவனுடன் உரைப்பான்;
99
உரை
   

பரதர் தலைவன் மறுமொழி்

'பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல மகள்
                                   குயம் பொருந்தல்,
மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும்! மேல் இனி இவை
                                   புகன்று என்கொல்?
பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன்;
                                   இவள் பயந்த
சீருடை மகன் மற்று என் செய்வான்? இசைமின், செய்கைதான்
                                   திருவுளம் குறித்தே'
100
உரை
   

சந்தனு வருத்தத்தோடு மீளல்

என்ன முன் இறைஞ்சி, இவன் மொழி கொடுஞ் சொல் இறையவன்
                                  கேட்டலும், இரண்டு
கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து, இதயம் கருகி, வேறு
                                  ஒன்றையும் கழறான்,
'முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது!' என்று
                                  ஆகுலம்முற்றி, அன்னமும்
குயிலும் பயிலும் நீள் படப்பை அத்தினாபுரியை மீண்டு
                                  அடைந்தான்.

101
உரை
   

தேவ விரதன் நிகழ்ந்தமை அறிதல்

கங்கையாளிடத்தில் ஆதரம் மெலிந்த காலையில், களிந்தவெற்பு
                                  அளித்த
மங்கையாம் என்ன நின்ற பூங்கொடிமேல் வைத்த பேர்
                                  ஆதரம் மலிய,
பங்கயானனம்தான் முறை முறை குறையும் பால்மதி என
                                  அழகு அழிந்த
சங்கையால், மைந்தன் வினவலும், நிகழ்ந்த தன்மையைச் சாரதி
                                  புகன்றான்.
102
உரை
   


விரதம் கூறி வீடுமன் எனும் பெயர் பெறுதல்

கேட்ட அக் கணத்தில், கடற் புறத்து அரசைக் கேண்மையோடு
                                  அடைந்து, இளவரசும்,
'பாட்டன் நீ எனக்கு; பெற்ற தாய்தானும் பகீரதி அல்லள்;
                                  நின் மகளே;
நாட்டம் இன்று உனக்கு யாது? அது நிலை; இந்த ஞாலமும்
                                  எம்பியர் ஞாலம்;
நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய், நீதி கூர்
                                  நிருபனுக்கு' என்றான்.
103
உரை
   

'விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்மின்: மெய் உயிர் வீடும்
                                  அன்று அளவும்,
சரதம் முற்றிய மெய்த் தாதுவும் மூலத் தழலுடன் மீது எழும்
                                  தகைத்தே;
'இரதம் முற்றிய சொல் மகப் பெறாதவருக்கு இல்லை' என்று
                                  இயம்பும் நல் கதியும்
சுரதம் முற்றிய என் தந்தைதன் பொருட்டால் பெறுவல்' என்று,
                                  இன்னதும் சொன்னான்.
104
உரை
   

இவன் மொழி நயந்து கேட்டுழி, அவையின் இருந்த தொல்
                                  மனிதரே அன்றி,
தவ முனிவரரும், தேவரும், ககனம் தங்கும் மா மங்கையர் பலரும்,
உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் உரைசெய்து, ஒளி கெழு
                                  பூமழை பொழிந்தார்-
அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள்
                                  நிலை அறிந்தே.
105
உரை
   

மெய்ம் மகிழ் கடவுள் பூமழையுடனே வீடுமன் எனும்
                                  பெயர் எய்தி,
கைம் மகிழ் வரி வில் தாசபூபதியும், கன்னிகை காளியும்,
                                  தானும்,
மொய்ம் மணம் கமழும் மன்றல் வேனிலின்வாய், முனிவரும்
                                  கிளைஞரும் சூழ,
செய்ம் மகிழ் பழனக் குருநிலம் உடையான் திருமனை விரைவுடன்
                                   சேர்ந்தான்.
106
உரை
   

சந்தனு மகனைப் பாராட்டி வரம் அளித்தல்

பரிமள வடிவப் பாவையை அரசன் -பாலள் என்று ஒருபுடை நிறுத்தி,
இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுறத் தழுவி,
தரு மணம் கமழும் சென்னிமேல் வதனம் தாழ்ந்து, மோந்து, உருகி,
                                  'முன் தந்தைக்கு
உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன்'
                                  என்று உரைத்தான
107
உரை
   

'தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்குச் சத மடங்கு
                                   உதவினை; உனக்கு
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம்
                                   செய்திலேன் உதவ;
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணிச் செல்லும்
                                   அன்று அல்லது, உன் உயிர்மேல்
முந்துறக் காலன் வரப்பெறான்' என்றே முடிவு இலா ஒரு
                                   வரம் மொழிந்தான்.
108
உரை
   

பரதவர் தலைவன் மகளின் வரலாறு கூறல்

அம் புவி அரசன் மாமனும், அரசன் அடி பணிந்து,
                                   அவயவத்து அழகால்
உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி, ஒடுங்கினன்,
                                   வாய் புதைத்து, உரைத்தான்:
'எம் பெருமான்! நீ கேட்டருள்: உனக்கே இசைந்த மெய்த்
                                   தவம் புரி இவளை,
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி, வலைஞர்
                                   மா மகள் எனக் கருதேல்.
109
உரை
   

'வாசவன் அளித்த விமானமீது ஒருவன், வசு எனும்
                                   சேதி மா மரபோன்,
கேசரன் எனப் போம் விசும்பிடை, மனையாள் கிரிகையை
                                   நினைந்து, உடல் கெழுமி,
நேசமொடு இதயம் உருகும் அக் கணத்தில், நினைவு அற
                                   விழுந்த வீரியம், மெய்த்
தேசவன் அளித்த நதியிடைத் தரளத் திரள் எனச் சிந்தியது,
                                   ஒருபால்.
110
உரை
   


ஒரு முனி முனிவால், அரமகள் ஒருத்தி, மீனமாய்
                                   உற்பவித்து உழல்வாள்,
இரை என அதனை விழுங்கும்முன் கருக் கொண்டு, ஈன்
                                   முதிர் காலையில், அதனைப்
பரதவர் வலையின் அகப்படுத்து, அரிய, பாலகன் ஒருவனும்
                                   இவளும்,
இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார், யமுனையும் யமனும்
                                   நேர் எனவே.

111
உரை
   

'மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உறக் காட்டலும்,
                                   மகனை,
'மீனவன்' எனப் பேர் கொடுத்தனன், கொண்டு, மெல்லியல்
                                   இவளை மீண்டு அளித்தான்;
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால்
                                   இனிமையின் வளர்த்தேன்;
கான மென் குயில்போல் வந்து, மீளவும், தன் காவலர்
                                   குலத்திடைக் கலந்தாள்.'
112
உரை
   


சந்தனு சத்தியவதியை மணந்து வாழ்தல்

என்று கூறி விடுத்தனன்; ஏந்தலும்,
அன்று அவைக்கண் அவன் மொழி கேட்டு, உவந்து,
'இன்று நல் தினம்' என்று, இளந் தோகையை
மன்றல் எய்தினன், மா நிலம் வாழ்த்தவே.
113
உரை
   

காளி வந்து, கலந்தனள்; கங்கை வேய்த்
தோளியும் புயம் தோய்ந்தனள் முன்னமே;-
வாளி வெம் பரி மா நெடுந் தேருடை
மீளிதானும் விடையவன் ஆதலால்.
114
உரை
   

கங்கையின் கரைக் கண்ணுறு காரிகை
கொங்கை இன்பம் குலைந்தபின், மற்று அவள்
எங்கை என்ன யமுனையின்பால் வரும்
மங்கை இன்பம் மகிழ்ந்தனன், மன்னனே.
115
உரை
   

வீடுமன் கழல் வேந்தர் வணங்கிட,
நாடும் நல் நெறி நாளும் நடத்திட,
நீடு மன்னனும் நேரிழைமேல், மலர்த்
தோடு மன்னு சுரும்பு என வீழவே,
116
உரை
   

சத்தியவதி மைந்தர் இருவரைப் பெறுதல

அன்ன நாளில், அருக்கனும் திங்களும்
என்ன, மைந்தர் இருவரை ஈன்றனள்,
மன்னன் ஆவி வடிவு கொண்டன்ன மெய்க்
கன்னபூரம் கலந்த செங் கண்ணியே.
117
உரை
   

சித்திராங்கதன், செப்பு நலனுடை
மெய்த்த சீர்த்தி விசித்திரவீரியன்,
இத் திறத்தர் இருவரும், தம்முனால்
ஒத்த கல்வியர் ஆயினர், உண்மையே.
118
உரை
   

சந்தனுவுக்குப் பின் சித்திராங்கதன் அரசனாதல்

மதி நெடுங் குல மன்னனை நண்பினால்,
விதி, அனந்தரம், விண்ணுலகு ஏற்றினான்;
நதியின் மைந்தனும், 'நம் புவிக்கு எம்பியே
அதிபன்' என்று, அரியாசனத்து ஏற்றினான்.
119
உரை
   

சித்திராங்கதன் கந்தருவனால் கொலையுண்டு இறத்தல்

'எங்கள் நாமம் இவன் கவர்ந்தான்' என,
கங்குல் வந்து ஒரு கந்தருவாதிபன்,
தொங்கல் மா முடி சூடிய வேந்தனை
அம் கையால் மலைந்து, ஆர் உயிர் கொள்ளவே,
120
உரை
   


விசித்திரவீரியன் முடி சூடிப் புவி ஆளுதல

'எம் முன் அன்றி இறந்தனன்' என்று, தாய்
விம்மு நெஞ்சின் மிகு துனி மாறவே,
தெம் முன் வல்ல விசித்திரவீரனைத்
தம்முன் மீளத் தனி முடி சூட்டினான்.

121
உரை
   

சிற்பொருள் பரமான பொருட்கு எதிர்
உற்பவிக்கும் உபாயம்-அது என்னவே,
வில் படைத் திறல் வீடுமன் வாய்மையால்,
பொற்பு உற, புவி பூபதி ஆளும் நாள்,
122
உரை
   


காசி மன்னன் மகளிர் சுயம்வரம்

காசி மன்னவன், 'கன்னியர் மூவரும்
தேசின் மிக்கவர்ச் சேர்வர்' என்று ஆள் விட,
மாசு இல் தொல் குல மன்னவர் ஈண்டினார்,
மூசி வண்டுஇனம் மொய்ப்பது போலவே.
123
உரை
   

காசி மன்னன் மகளிர் சுயம்வரம்

'வரித்த மன்னர் மறம் கெட, வன்பினால்
திரித்தும் எம்பியைச் சேர்த்துவல், யான்' எனா,
தரித்த வில்லொடும், தன் இளவேந்தொடும்,
விரித்த வெண்குடை வீடுமன் ஏகினான்.
124
உரை
   

அரவ மா நதி அன்னையும், தன் மகன்
வரவு அறிந்து, வழி இளைப்பு ஆற்றினாள்,-
பரவி வந்து, பனி மலர்த் தென்றலை
விரவு நுண் துளி மீது எறி ஊதையால்.
125
உரை
   

கஞ்ச வாவி கலை மதி கண்டென,
நெஞ்சு அழிந்து நிருபர் குழாம் தொழ,
வெஞ் சராசன வீரனும் தம்பியும்,
மஞ்சம் ஏறி, மணித் தவிசு ஏறினார்.
126
உரை
   

அது கண்டு, அரச குமாரர்கள் மன வாட்டமுறுதல்

'குருத்தலம்தனில் கூறிய வஞ்சினம்,
ஒருத்தர் அன்று, அறிவார் உலகோர் பலர்;
விருத்தன் வந்தனன்; மேல் இனி ஏது இவன்
கருத்து?' எனா, மனம் காளையர் கன்றினார்.ய.
127
உரை
   

மாலையுடன் நெருங்கிய கன்னியர் வீடுமனது நிலை கண்டு ஐயுறுதல்

இருந்த மன்னர், 'இவர் இவர்' என்று, உளம்
பொருந்த, மற்று அவர் பொற்புடைத் தேசு எலாம்
திருந்த நின்று, செவிலியர் கூறவே,
முருந்த வாள் நகை மூவரும் தோன்றினார்.

128
உரை
   
'கையில் மாலை இவற்கு' எனக் கன்னியர்
வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர்,
வைய மன்னன் வய நிலை நோக்கியே,
ஐயம் உற்றனர், அன்புறு காதலார்.
129
உரை
   

வீடுமன் மகளிரைக் கவர்ந்துகொண்டு செல்லுதல்

ஏனை வேந்தர் எதிர், இவரைப் பெருந்
தானை சூழ் மணிச் சந்தனத்து ஏற்றியே,
சோனை மா மதம் சோரும் கட தட
யானை என்ன இளவலொடு ஏகினான்.
130
உரை
   


எதிர்ந்த மன்னரை ஓட்டி, வீடுமன் தன் நகரை அடைதல

'முறையினால் அன்றி, மொய்ம்பின் கவர்வது எக்
குறையினால்?' என, கோக்குலம் கூடி வந்து,
இறைவனோடு எதிர் ஏற்ற வில் வீரரை,
பிறைமுகக் கணையால் பிளந்து, ஓட்டினான்.

131
உரை
   

முந்துறப் பெறும் மூவரொடு, ஆடு அமர்
விந்தைதன்னையும் வேந்தர் கொடுத்தலால்,
சந்தனுப் பெயர்த் தார் முடி மன்னவன்
மைந்தர் தங்கள் வள நகர் மன்னினார்.
132
உரை
   


அம்பை விரும்பியபடி அவளைச்
சாலுவனிடத்திற்கு வீடுமன் அனுப்புதல்

சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
'எமர்களுக்கு இஃது இயற்கை அன்று' என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான்.
133
உரை
   

அம்பிகையையும் அம்பாலிகையையும்
விசித்திரவீரியன் மணத்தல்

'அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பதி
எம்பியே, எழிலால்!' என்று, இசைவுற,
தம்பிதன்னைத் தனஞ்சயன்தன் எதிர்
வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான்.
134
உரை
   

சாலுவன் புறக்கணிக்கவே, அம்பை
வீடுமனிடம் வந்து மணம் வேண்ட,
அவன் மறுத்துவிடுதல்

சென்ற அம்பையைத் தீ மதிச் சாலுவன்,
'வென்று, தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன்'
என்று இகப்ப, இவனுழை மீளவும்,
மன்றல் வேண்டினள், மன்றல் அம் கோதையாள்.
135
உரை
   

கங்கை மைந்தன், கடிமணம், காதல் கூர்
மங்கைதன்னை மறுத்தபின், மங்கையும்
செங் கண் நீர் எழ, சிந்தை செந் தீ எழ,
சங்கையோடு தன் தாதையை நண்ணினாள்.
136
உரை
   

அம்பை தன் தந்தையைச் சார்ந்து உற்றது
உரைக்க, அவன் தூதுவரை ஏவி வேண்டவும்,
வீடுமன் மணம் மறுத்தல்

தாதை தாளினில் விழுந்து, சந்தனுவின் மைந்தன் இன்னல்
                                   உரை தந்ததும்,
கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த
                                   கோமகன் மறுத்ததும்,
பேதை கூற, மனம் நொந்து, இரங்கியவன், மிக்க
                                   நண்பினொடு பின்னையும்,
தூதை ஏவி, மணம் உற்று இரந்தனன், விசும்பு உலாவு
                                   நதி சுதனையே.
137
உரை
   

போன தூதுவர் வணங்கி, இம் மொழி புகன்ற போது,
                            மொழி பொய்யுறா, மீனகேதனனை
வென்று, தன் கொடிய விரதமே புரியும் வீடுமன்,
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல்
                                   வன்பொடு மறுத்தலால்,
ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை
                                   தந்தைதனது அருளினால்,
138
உரை
   

தந்தையின் உரைப்படி அம்பை, உதவி
வேண்டிப் பரசுராமனைச் சார்தல்

'வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன
                                   சொல் மறுக்கினும்,
பரசுராமன் அருள் மொழி மறான்; அவனது இரு
                                   பதத்திடை பணிந்து நீ
உரைசெய்தால், அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி
                                   வந்து, நினை உவகையால்
விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து,
                                   மீளவும் விளம்புமேல்,
139
உரை
   
                               

'பின்னை எண்ணிய பெருந் தவம் புரிதி' என்று
                                   கூறிய பிதாவையும்,
அன்னைதன்னையும், வணங்கி, நீடு சது-ரந்தயானமிசை
                                   அம்புயப்
பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள், இரு புறத்து
                                   மாதர் பலர் பொலிவுடன்
தன்னை வந்து புடைசூழ, ஏகி, யம-தங்கி மைந்தன்
                                  நகர் சாரவே,
140
உரை
   


'காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி' என்று
                                   கடை காவலோர்,
வாச நாறு துளவோனுடன் புகல, 'வருக!' என்றபின்,
                                   மடந்தை போய்,
ஆசினால் உரைவகுத்து, முன்செயல் அனைத்தும், அண்ணல்
                                   அடி தொழுது, பின்
பேசினாள்; அவனும், 'யாம் முடிக்குவம் இது' என்று
                                   மெய்ம்மையொடு பேசினான்.

141
உரை
   

பரசுராமன் அவளது குறை முடிக்க உடன்பட்டு,
அவளுடன் வீடுமனிடம் வந்து, அவளை
மணம்புரியுமாறு உரைத்தல்

வரதன், வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற
                                   மலைந்த கோன்,
இரதமீது அவளுடன் கணப் பொழுதின் ஏறி, ஐ-இரு
                                   தினத்தினில்,
விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின்
                              மேவலும், சரதமாக எதிர்கொண்டு,
அவன் சிரம் இவன் பதத்தினிடை சாத்தினான்.
142
உரை
   


தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனியத்
                                   தவிசில் வைத்து, 'நீ
எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா!'
                                   என, இருந்தபின்,
'கனக்கும் வெண் தரள வட முலைப் பெரிய கரிய
                                   கண்ணி இவள், காதலால்
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக!' என உவகையோடு
                                   அவன் உரைக்கவே,

143
உரை
   

வீடுமன் தன் விரதத்தைக் கூறி, மணம் மறுத்தல

'இன் சொலால் அவனி கொண்ட எந்தை, முதல், இன்ப
                                   மன்றல் இனிது எய்த, நான்
வன் சொலால், 'இரத மணம் உறேன்' என மனத்தினால்
                                   விரதம் மன்னினேன்;
'நின் சொல் யாவரும் மறார்' எனக் கருதி, நீ உரைப்பினும்,
                                   நிகழ்ந்த இப்
புன் சொலானது, இனி மா தவத்தின் மிகு புனித! என்
                                   செவி பொறுக்குமோ?
144
உரை
   

'களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முக
                                   வினோத! கேள்:
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை
                                   அன்றி இலை, உண்மையே;
வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர்
                                   பொருட்டினால்,
விளம்பும் இந்த மொழி ஒழிக! என்தன் உயிர் வேண்டும்
                                   என்னினும் வழங்குவேன்.'
145
உரை
   

வெகுளி பொங்கப் பரசுராமன் போருக்கு
எழவே, வீடுமனும் எதிர் பொருது
அவனை வெல்லுதல்

மறுத்து இவன் புகல, வீரியன் புயம் ஒர் ஆயிரம்
                                   துணிசெய் மழுவினான்,
வெறுத்து, அனந்தரம், எழுந்திருந்து, கரை அழியும் வேலை
                                   நிகர் வெகுளியன்,
கறுத்த நெஞ்சினன், வெளுத்த மேனியன், உறச் சிவந்த
                                   இரு கண்ணினன்,
பொறுத்த வில்லினன், விரைந்து, தேர்மிசை புகுந்தனன், பெரிது
                                   போர் செய்வான்.
146
உரை
   

வெருவுடன் தொழுது, கங்கை மைந்தன் அடி வீழவும்,
                                   சினம் மிகுத்தலால்,
'உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி, நான்
                                   நரகம் உறுவதின்,
குருவுடன் பொருது மடிதல் நன்று' என நினைந்து, தாலம்
                                   உயர் கொடியினன்,
செரு உடன்றிடுதல் உன்னி, ஏறினன், அமைந்து நின்றது
                                   ஒரு தேரின்மேல்.
147
உரை
   

அவ் இராமனும், மறுத்த மன்னவனும், ஐ-இரண்டு
                                   தினம், இகலுடன்,
வெவ் இராவும் ஒழியாது, வெஞ் சமர் விளைத்த
                                   காலை, அடல் வீடுமன்
கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து, முன்
                                   தளர்வு கண்ட போர்
அவ் இராமன் நிகர் என்னுமாறு, இவனை அஞ்சி நின்று,
                                   எதிர் அடர்க்கவே,
148
உரை
   

ஓடி, மீள, மழு மேவு பாணி தனது ஊர் புகுந்தனன்;
                                   உவந்து, பல்
கோடி பேர் அரசர் துதி எடுக்க, நதி-குமரனும் தன்
                                   நகர் குறுகினான்.
நாடி, மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும்
                                   இடை நவ்வியும்,
வாடி வாடி, 'இனி அமையும்' என்று, தவ வனம்
                                   அடைந்தனள், மடங்கியே.
149
உரை
   

'வீடுமனை வெல்லும் சூரன் ஆவேன்' என்னும்
உறுதியுடன் அம்பை தவம் இயற்றுதல்

'வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன்
                                   என, வீடுமன்
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன்
                                   ஆகுவன் யான்' எனா,
வம்பை மோது முலை, வம்பை வீசு குழல், வம்பை மன்னும்
                                   எழில், வரி கொள் கூர்
அம்பை மானும் விழி, அம்பை என்பவளும் அரிய
                                   மா தவம் இயற்றினாள்.
150
உரை
   


தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி, ஒரு தாளில் வைத்து,
                                   அமை சமைத்த பொன்
தோள் இரண்டினையும் மீது எடுத்து, நனி தொழுது, இயக்கி
                                   துணை அடியிலே
வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி, நிறை வாவி நீரினிடை,
                                   வான் உளோர்
நாள் இரண்டு-அதனொடு ஐ-இரண்டும் ஒரு நாள்
                                   எனும்படி நடக்கவே,

151
உரை
   

இயக்கியின் அருளால் அம்பை சிகண்டியாதல்

முயல் இலா மதி முகத்தினாள், ஒருவர் முயல் அருந் தவம்                                    முயன்ற பின்,
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி
                                   இயக்கிதனது அருளினால்,
மயில் அனாள் தனது வடிவு அகற்றி, இகல் யாகசேனனது
                                   வயினிடைச்
செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி
                                   ஆயினள் சிறக்கவே!
152
உரை
   


விசித்திரவீரியன் விண்ணுலகு அடைதல்

மணி முடிக்கு உரிய நிருபனும், கடி கொள் மாதர்தங்களை
                                   மகிழ்ச்சியால்
அணி பெறத் தழுவி, இன்ப வேலையின் அழுந்தி, நாள்
                                   பல கழிந்தபின்,
பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து, 'வாழ்வு
                                   இனி நணித்து' என,
பணி முடிப் புவி இரங்க, வைகி, ஒரு பற்று இலாத
                                   நெறி பற்றினான்.
153
உரை