02. சம்பவச் சருக்கம்

வீடுமனிடம் தாய் சத்தியவதி தேவர நீதியில்
கொழுந்தியர்க்கு மகவு அளிக்கக் கூறல்

இறந்த மைந்தனுக்கு உரிய, தென்புலத்தவர் யாவரும்
                                      களி கூர,
சிறந்த நான்மறை விதியினால், உலகியல் செய்தபின்,
                                      செழுந் திங்கள்
மறைந்த யாமினி நிகர் எனக் குருகுல மன் மயக்குறும்
                                      எல்லை,
அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை, மற்று
                                      இது சொன்னாள்;

1
உரை
   


'மைந்த! கேட்டி: நின் துணைவன் வான் அடைந்தபின்,
                                  'மதி முதல்' எனத் தக்க
இந்த மா மரபு, அரும் பனிப்பகைச் சிரத்து எழிலிஒத்தது
                                       மன்னோ!
முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை
                                       நீ உணர்கிற்றி;
எந்த நீர்மையின் உய்வது? என்று அறிகிலேன்; இடரினுக்கு
                                       இருப்பு ஆனேன்.

2
உரை
   


'ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மகப்
                                   பெற, நின்னால்
வேண்டுமால்; இது, தாயர் சொல் புரிதலின் விரதமும்
                                   கெடாது' என்ன,
மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து,
                                   இரு செவி பொத்தி,
'மீண்டு மா நதி வயின்மிசைப் புரியின், என் விரதமும்
                                   தபும்' என்றான்.

3
உரை
   

'முனிவரால் மகப் பேறு அடைதலே முறை' என வீடுமன் உரைத்தல்

'மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி,
                                   அவர் தம்தம்
பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர்
                                   மகவு என்பர்;
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை'
                                   என்று இரு கையால்
தொழுது, சொன்னபின், மனம் தெளிந்து, அன்னையும்
                                   தோன்றலுக்கு உரைசெய்வாள்:
4
உரை
   

சத்தியவதி தனக்குப் பிறந்த முதற் புதல்வன்
வியாதனைக் குறித்துக் கூறுதல்

'பருதி தந்த மா நதி மருங்கு, ஒரு பகல், பராசரன்
                                   மகப்பேறு
கருதி வந்து, கண்டு, என்னையும் எனது மெய்க் கமழ்
                                   புலவையும் மாற்றி,
சுருதி வாய்மையின் யோசனைப் பரப்பு எழு சுகந்தமும்
                                   எனக்கு ஈந்து,
'வருதி நீ' எனப் பனியினால் மறைத்து, ஒரு வண் துறைக்
                                   குறை சேர்ந்தான்.
5
உரை
   


'முரண் நிறைந்த மெய்க் கேள்வியோன் அருளினால்
                                   முஞ்சியும், புரிநூலும்,
இரணியம் செழுங் கொழுந்து விட்டனவென இலங்கு
                                   வேணியும், தானும்,
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன
                                   முனி அப்போது
அரணியின் புறத்து அனல் என, என்வயின் அவதரித்தனன்
                                   அம்மா!

6
உரை
   


'சென்னியால் எனை வணங்கி, 'யாதொரு பகல் சிந்தி;
                                   நீ சிந்திக்கும்
முன், யான் அருகு உறுவல்' என்று உரைசெய, முனிமகன்;
                                   முனி, 'மீளக்
கன்னி ஆக' என விதித்து, உடன் கரந்தனன்; கையறு
                                   கனிட்டன்தன்
பன்னியானவரிடத்தினில் அவன் வரின், பலித்திடும் நினைவு
                                   அன்றே,

7
உரை
   


வீடுமன் ஒருப்பட, சத்தியவதி வியாதனைச்
சிந்தித்து, வரச் செய்தல்

'எனக்கு, மைந்த! கேள்: நினைவு இது; உன் துணைவன் என்
                                   ஏவலும் மறான்; இவ்வாறு
உனக்கு நெஞ்சு உற வருங்கொலோ அறிகிலேன்; உண்மை
                                   நீ உரை' என்ன,
'மனக்கு இசைந்தது' என்று, அவன் வியந்து ஏகலும், வழு
                                   அற மனம் செய்ய,
கனக் கருங்குழல் மகிழ்வுற, முதல் பெறு காதல் மைந்தனும்
                                   வந்தான்.

8
உரை
   

வந்த வியாதனிடம், 'குருகுலத்திற்கு
மகவு அருள்' என, அவனும் இசைதல்

தொழுது, நெற்றியில் விபூதியால் அன்னைதன் துணை
                                   அடித் துகள் நீக்கி,
விழுதுடைத் தனி ஆல் என இருந்த தொல் வியாதனை
                                   முகம் நோக்கி,
'பழுது பட்டது, இக் குருகுலம்; மீள நின் பார்வையால்,
                                   கடல் ஞாலம்
முழுதும் உய்த்திடும் மகவு அருள்' என, பெரு முனியும்
                                   அக் குறை நேர்ந்தான்.
9
உரை
   

அம்பிகையும் அம்பாலிகையும் மகப் பெறுதல்

அழைத்த மா மகன், அப்பொழுது, 'அவருழை அணுகுவம்'
                                   எனப் போக,
தழைத்த நெஞ்சினள், அனந்தரம், இழந்த பொன்-தாலி
                                   மாதரைத் தேற்றி,
உழைத்த துன்பமும், முன் உளோர் பலர் உலகியற்கையும்,
                                   உறக் காட்டி,
இழைத்த பாவையின் இருந்தவர்க்கு அந் நினைவு
                                   இசையுமாறு இசைவித்தாள்.
10
உரை
   


கனையும் நீடு இருள், அணைமிசை, இருவரும் கணவனை மறவாது
நினையும் நெஞ்சினர், பயின்றுழி, புல்மணம் நிறைந்து, ஒளி
                                              குறைந்து ஒல்கப்
புனையும் மெய்யொடும், பொழுதொடும், புரி தவன் போதலும்,
                                              மிக அஞ்சி,
அனைய காலையில், அம்பிகை மலர்ந்திலள், அம்பகம் ஒருக்காலும்.

11
உரை
   


பராசரன் தரு முனி நினைவொடு கருப் பதித்து, மீளவும் சென்று,
நிராசை நெஞ்சினன், 'அவசரத்து அவளிடை நிகழ்ந்த
                                  மெய்க் குறிதன்னால்,
கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று, ஓர்
இராச குஞ்சரம் பிறந்திடும்; விழிப்புலன் இல்லை மற்று
                                  அதற்கு' என்றான்.

12
உரை
   


மீளவும், தலைப்புதல்வனை நோக்கியே, மிக மகிழ்வு உறா அன்னை,
'தூள வண் சடைத் தோன்றல்! அம்பாலிகை சுதன் ஒருவனை நல்க;
நாள பங்கயப் பதி என, மதி என நலம் திகழ் கவிகைக் கீழ்
ஆள அம் புவி அவன் என நினைந்து, இனி அளிக்க'
                                  என்று, அருள்செய்தாள்.

13
உரை
   

கிளைத்திடும் துகிர்க் கொடி நிகர் சடையவன் கேட்டு, நுண்
                                    இடையேபோல்
இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும்,
                                    இவனைக் கண்டு,
உளைத்திடும் கருத்துடன் வெரீஇ, வரு பயன் ஒன்றையும் நினையாது,
                                   விளைத்திடும் கரு
விளையும் முன், மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள்.
14
உரை
   

அருந் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி, அக் கணத்து ஏகி,
இருந்தவாறு தன் அன்னையோடு இனிது உரைத்து, இமையவன்
                                   எனச் சென்றான்-
'பெருந் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன், பெற்ற
முருந்த வாணகை மருட்சியால், விளர்த்திடும் முழுவதும்
                                   உடல்' என்றே.
15
உரை
   


குருடனாகப் பிறந்த திருதராட்டிரனையும்,
உடல் விளர்த்துப் பிறந்த பாண்டுவையும்
சத்தியவதி காணுதல்

வேதபுங்கவன் அகன்றுழி, வலியுடை விழி இல்
                                   மைந்தனும், யாரும்
பாதபங்கயம் தொழத் தகும் திறலுடைப் பாண்டு
                                   என்பவன் தானும்,
பூதலம் பெருங் களிப்புற, குருகுலம் பொற்புற, பொழுது உற்றுச்
சாதர் ஆயினர்; அவ் இரு மகவையும் சத்தியவதி கண்டாள்.

16
உரை
   


உவகை அற்ற சத்தியவதி மீண்டும் வியாதனை
அழைத்து மகவு அருளவேண்டுதலும், அம்பிகையிடம்
வியாதன் செல்ல, அவள் தனது தோழியை அனுப்புதலும்

காணலும் பெரிது உவகை அற்று, 'இன்னமும் கருதுதும்'
                                   என எண்ண,
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும், சிந்தனை
                                   உறச் சொல்ல,
நாண் நலம் திகழ் அம்பிகையிடத்து இவன் நண்ணலும்,
                                   அவள் அஞ்சி,
பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியைப் பூ அணை
                                   அணைவித்தாள்.
17
உரை
   


விதுரன் பிறத்தல்

வந்த காலையில் மனம் கலந்து, அநங்க நூல் மரபின்
                                    மெய் உறத் தோய்ந்து,
சந்தனாகருப் பரிமளத் தன தடம் தயங்கு மார்பினில்
                                   மூழ்க,
இந்திராதிபர் போகம் உற்று இசைதலும், இன்பம் முற்றிய
                                   பின்னர்,
அந்தணாளன் அவ் இரவிடை மீள வந்து, அன்னையோடு
                                    உரைசெய்வான்:
18
உரை
   

'அம்பிகைக்கொடி தோழியை விடுத்தனள்; அவள் புரி
                                       தவம்தன்னால்,
உம்பரில் பெறு வரத்தினால், தருமன் வந்து உதித்திடும்
                                      பதம் பெற்றாள்;
வெம் படைத் தொழில் விதுரன் என்று அவன் பெயர்; மேல்
                                      இனி மகவு ஆசை
எம் புணர்ப்பினான் ஒழிக!' என, வன நெறி ஏகினன், விடை
                                      கொண்டே.
19
உரை
   

மூன்று புதல்வர்களும் கலை பல பயில்தல்

மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இம் மைந்தனும்,
                                      முதல் பெற்ற
இருவரும், குருகுலப் பெருங் கிரிமிசை இலங்கு
                                     முக் குவடு என்ன,
பொரு அருந் திறல் படைகளும், களிறு தேர் புரவியும்,
                                     புவி வேந்தர்
வெருவரும்படி பல கலைவிதங்களும், வீடுமனிடம் கற்றார்.
20
உரை
   


திருதராட்டிரனுக்கு வீடுமன் முடி சூட்டுதல்

ஆன திக்கு இரு-நாலும் வந்து அடி தொழ, அம்பிகை
                                       மகன்தன்னை,
வான்நதித் திருமகன், ஒரு தினத்தினில் மங்கல
                                       முடி சூட்டி,
'பால் நிறத் திறல் பாண்டுவே சேனையின் பதி;
                                       முழு மதி மிக்க
கான் நிறத் தொடை விதுரனே அமைச்சன், இக் காவலற்கு'
                                       என வைத்தான்.

21
உரை
   


காந்தாரியைத் திருதராட்டிரன் மணத்தல்

நதிஅளித்தவன் ஏவலின், தூதர் போய் நயந்து, உடன்,
                                    'காந்தார
பதி அளித்த மெய்க் கன்னியைத் தருக, பூபதிக்கு' என,
                                    மணம் நேர்ந்தார்;
'மதி அளித்த தொல் குலத்தவன், விழி இலா மகன்'
                                    எனத் தமர் சொல்ல,
'விதி அளித்தது' என்று, உளம் மகிழ்ந்தனள், வடமீன்
                                    எனத் தகும் கற்பாள்.

22
உரை
   


'இமைத்த கண் இணை மலர்ந்து, இனி நோக்கிலேன் யான்
                                     ஒருவரை' என்று,
சமைத்த பட்டம் ஒன்றினில் பொதி பெதும்பையைத் தந்தையும்,
                                     தனையோரும்,
அமைத்து, அருங் குல முனிவரும், மறை முறை அருங் கடி
                                     விளைத்திட்டார்;
சுமைத் தராபதி மதி, இவள் உரோகிணி என்னவே
                                     தொழத் தக்காள்.

23
உரை
   

குந்தியின் சரிதை சூரன் மகளாகிய இவள்
குந்திபோசர் இல்லத்தில் வளர்தல்

'புந்தியால் அருங் கலைமகள், பொற்பினால் பூந் திரு, புனை
                      கற்பால் அந்திவாய் அருந்ததி,
பெரும் பொறையினால் அவனிமான், நிகர்' என்ன,
குந்திபோசர் இல், சூரன் என்பவன் மகள் குருகுலம்
                                    தழைத்து ஓங்க,
வந்து, யாவரும் 'பிரதை' என்று அடி தொழ, மதி என
                                    வளர்கின்றாள்.
24
உரை
   

குந்தி துருவாசருக்குத் தொண்டு செய்து, மந்திரம் பெறுதல்

அந்த மாது இள மட மயில் என விளையாடும்
                                   எல்லையில், என்றும்
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அவ் வழி
                                   வந்தான்;
வந்த மா தவன் அடி பணிந்து, 'இவனை நீ வழிபடுக!'
                                   என, தந்தை,
இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள்.
25
உரை
   


கழங்கு கந்துகம் அம்மனை ஆடலும், கனக மென்
                                      கொடி ஊசல்,
வழங்கு தண் புனல், ஆடலும், துறை வரி வண்டல்
                                      ஆடலும், மாறி
முழங்கு சங்கினம் தவழ்தரு பனி நிலா முன்றிலும்,
                                      செய்குன்றும்,
தழங்கு செஞ் சுரும்பு எழு மலர்ச் சோலையும், தனித்தனி
                                      மறந்திட்டாள்.

26
உரை
   

தொழுது, தாளினைச் செய்ய பஞ்சு எழுதினும், தோளினைச்
                                        செழுந் தொய்யில்
எழுதினும், பொறா இளமையள், முதுக்குறைந்து, யாது
                                        யாது உரைசெய்தான்,
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன்
                                        மகிழ்வு எய்த,
பழுது இல் அன்புடன் இயற்றினள், ஒன்றுபோல் பன்னிரு
                                        மதி சேர.
27
உரை
   


பிரதைதன்னை அத் தபோநிதி, 'வருக!' என, பெரிது
                                    உவந்து, 'எனது ஏவல்
அரிது எனாது நீ இயற்றினை; நெடுங் கடல் அவனிமேல்
                                       யார் வல்லார்?
தெரிவை, கேள்!' எனச் செவிப்படுத்து, ஒரு மறை, 'தேவரில்
                                       யார் யாரைக்
கருதி, நீ வர அழைத்தனை, அவர் அவர் கணத்து நின்
                                       கரம் சேர்வார்;
28
உரை
   

'தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர்; தவப் பயன்
                                எனப்பெற்ற இம் மறைப் பயன்
இம்மையில் உனக்கு வந்து எய்தியது' எனக் கூறி,
அம் முனிப் பெருங் கடவுளும் தபோவனம் அடைந்தனன்;
                                      அவளும் தன்
செம் மனத்தொடு பயின்று, அரமகள் என, செல்வ மா மனை
                                      சேர்ந்தாள்.
29
உரை
   

மந்திர பலத்தைக் குந்தி பரீட்சித்தல்

ததையும் வண்டு இமிர் கருங் குழற் கன்னி அத் தனி மறைப்
                                   பயன் காண்பான்,
சுதை நிலா எழு மாளிகைத் தலத்திடை, தூ நிலா எழு முன்றில்,
இதைய மா மலர் களிக்க நின்று, அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி,
உதைய பானுவும், மலர்மிசை அளி என, ஒரு கணந்தனில் வந்தான்.
30
உரை
   

சூரியன் வரவும், குந்தியின் அச்சமும்

செம் பொன் ஆடையும், கவச குண்டலங்களும், திகழ்
                                      மணி முடி, ஆரம்,
பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும், பவள
                                     மேனியும், ஆகி,
வம்பு அறாத மெய்ப் பதுமினி என, செழு மறை நுவல் மடப் பாவை
அம்புயானனம் மலர்வுறக் கரங்களால் அணைத்தனன், அழகு எய்த.
31
உரை
   


'கன்னி, கன்னி; என் கை தொடேல்; மடந்தையர் கற்பு நீ அறிகிற்றி!'
என்ன மெய் குலைந்து, அலமர, நாணினாள்; இதயமும் வேறு ஆகி
அன்ன மென்னடை அஞ்சினள் அரற்றலும், அருகு உறான்,
                                      விடப்போய் நின்று,
'உன்னி என்னை நீ அழைத்தது என்பெற?' என உருத்தனன்,
                                      உரைசெய்வான்:

32
உரை
   

சூரியன் இதவுரை கூறி, குந்தியை அணைதல்

'உருக் கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது, ஒளித்து
                                      நான் வரவே, நீ
வெருக் கொளா எனை மறுத்தனை; உனக்கு முன் மெய்ம் மறை
                                      உரைசெய்த
குருக்கள் என்படான்? என்படாது அரிவை நின் குலம்?' என,
                                      கொடித் திண் தேர்
அருக்கன் மெய்யினும் மனம் மிகக் கொதித்தனன், ஆயிரம்
                                      மடங்காக,
33
உரை
   

'உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ; உடன்படும்
                                     உணர்வால். 'நல்
வினை அளித்தது' என்று அணைதியேல், இன்பமும்
                                    விழைவுறும்படி துய்த்தி;
எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு
                                    இகல் மைந்தன்-
தனை அளித்தி; மற்று என்னினும் இரு நிலம் தாள்
                                    தொழத் தக்கோனே.'
34
உரை
   

ஆயிரம் கரத்து அதிபதி புகழ்ந்து, நூறு ஆயிரம் முகமாகப்
போய் இரந்து, இவை உரைத்தபின், மதர் விழிப் புரிவும்
                                      மூரலும்நல்கி,
வேய் இருந் தடந் தோள் இடம் துடித்திட, மெல்லியல்,
                                     'மதன் வேதப்
பாயிரம்கொல்!' என்று ஐயுற, அவனொடும் பனி மலர்
                                    அணை சேர்ந்தாள்.
35
உரை
   

தினகரன் சுடர் வடிவமும் அமிர்து எழு திங்களின் வடிவாக,
தன தடம் திருமார்பு உறத் தழீஇயபின், தையல் தன்
                                     நினைவு எய்த,
மனம் மகிழ்ந்ததும், வந்ததும், மணந்ததும், வரம் கொடுத்ததும்,
                                        எல்லாம்
கனவு எனும்படி, கரந்தனன் பெருந்தகை; கன்னியும்
                                     கருக் கொண்டாள்.
36
உரை
   

பெற்ற மகனைக் குந்தி பெட்டியில்
பொதிந்து கங்கையில் விடுதல்

அந்தி ஆர் அழல் எனப் பரிதியின் ஒளி அடைந்த பின்,
                                      அணி மாடக்
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட
                                      கொள்கையள் ஆகி,
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன
                                      தரத் தக்க,
மைந்தனானவன் ஒருவனைப் பயந்தனள், மாசு இலா
                                     மணி என்ன.
37
உரை
   

சூரன் மா மகள், சூரனது அருளினால், துலங்கு
                                     கன்னிகை ஆகி,
வார மா மணிக் கவச குண்டலத்துடன் வரும் மகன்
                                     முகம் நோக்கி,
பார மா மரபினில் பிறந்தவர் மொழிப் பழுதினுக்கு
                                     அழுது, அஞ்சி,
பூர மா நதி, பேடகத்திடை நனி பொதிந்து, ஒழுக்கினள்
                                     மன்னோ.
38
உரை
   

கன்னனைச் சூதபுங்கவன் கண்டு எடுத்து, வளர்த்தல்

குஞ்சரத்து இளங் கன்று என, சாப வெங் கோளரி என,
                                      பைம் பொன்
பஞ்சரத்திடை வரு திரு மதலையைப் பகீரதி எனும்
                                      அன்னை,
அம் சரத் திரைக் கரங்களால் எடுத்து எடுத்து, அசையவே
                                      தாலாட்டி,
வெஞ் சரச் சிலைச் சூதநாயகன் பதி மேவுவித்தனள்
                                     அன்றே.
39
உரை
   

கோடு அகப்பட வரும் புனல் விழைவினால், குளிர் துறை
                                      மருங்கு உற்றோர்,
பேடகத்திடை ஒழுகிய தினபதி பெருங் குமரனைக் கண்டு,
சூடகக் கை அம்புய மலர் இராதையும், சூத புங்கவன்தானும்,
ஆடகக் குலம் அடைந்தது ஒத்து, அரும் பெறல் ஆதரத்தொடு
                                     கொண்டார்.
40
உரை
   
பரசுராமனிடம் கன்னன் கல்வி பெற்றுத் திகழ்தல்

அதிரதன் திருமனையினில் விழைவுடன் அரும்பிய பனிக் கற்றை
மதி எனும்படி வளர்ந்து, திண் திறல் புனை மழுவுடை வர ராமன்
பதயுகம் தொமூஉ, வரி சிலை முதலிய பல படைகளும் கற்று,
'கதிரவன் தரு கன்னன்' என்று, உலகு எலாம் கைதொழும்
                                   கவின் பெற்றான்.
41
உரை
   

குந்தியின் சுயம்வரம்

கன்னற் பயந்த கதிர் வெம் முலைக் கன்னிதன்னை
முன்னர்ப் பயந்தோன் முகவோலை உவகையோடு
மன்னர்க்கு எழுத, 'மடப் பாவை வரிக்கும்' என்று,
செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார்.
42
உரை
   


பாண்டுவுக்குக் குந்தி மாலையிடுதல்

உருவம் சிறந்து, பல கோளும் உதிக்குமேனும்,
மருவும் குமுதம் மதி கண்டு மலருமாபோல்,
பருவம் செய் பைம் பொன் கொடி அன்னவள் பாண்டு என்னும்
நிருபன்தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள்.
43
உரை
   

மத்திர ராசன் கொடுக்க, அவன் புதல்வி
மாத்திரியையும் பாண்டு மணத்தல்

தானே உவந்து, தனித் தார் புனை தையல், வென்றி
ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர்,
'யானே தருவன்' என, மத்திர ராசன் நல்க,
மானே அனைய விழியாளை வதுவைசெய்தான்.
44
உரை
   

இருமனைவியருடன் பாண்டு இமயமலைப் பக்கம்
கானில் விளையாடச் செல்லுதல்

எண் உற்ற சூரன், இகல் மத்திர ராசன், என்ன
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும்
கண் உற்ற கானில் விளையாடல் கருதி, அம் பொன்
விண் உற்ற சாரல் இமயப் புறம் மேவினானே.
45
உரை
   

பாண்டு வேட்டையாடி இளைப்பாறுதல்

கானத்தில் உள்ள கலைமான்இனம், காட்சி ஆமா,
ஏனத் திரள், வெம் புலி, எண்குடன், யாளி, சிங்கம்,
தானப் பகடு, முதலாய சனங்கள் எல்லாம்
மானச் சரத்தால் கொலைசெய்தனன், வாகை வில்லான்.
46
உரை
   

மெய்யில் தெறித்த குருதித் துளி மேருவில்லி
சையத்து அலர்ந்த கமழ் குங்குமத் தாது மான,
கையில் சிலையோடு உலவும் கழல் காளை கேதம்,
பையத் தணித்தான், இமநாக பவனன் என்பான்.
47
உரை
   

மான் உருக்கொண்டு போகம் துய்த்த
முனிவன்மேல் பாண்டு அம்பு எய்து,
சாபம் பெறுதல்

பொன் அம் கழலான் எதிர், அவ் இடை, போகம் வேட்டு,
மன்னும் கலையும் பிணைமானும் மகிழ்ச்சி கூர,
மின்னும் கணையால் இவன் எய்திட வீழ்ந்த போதில்,
முன் நின்றது, அந்த உயிர், வந்து ஒர் முனிவன் ஆகி,
48
உரை
   

'நாரிக்கு ஒரு கூறு அரனார், முதல், நல்க, எய்த
வேரிக் கணையால் மிக நொந்துழி, வேடம் மாறி,
பூரித்த காமநலம் எய்து பொழுது, நின் கைச்
சோரிக் கணையால் அறையுண்டு உயிர் சோர்ந்து வீழ்ந்தேன்.
49
உரை
   

'என் போல இன்பத்திடை நீயும் இறத்தி!' என்னா,
அன்போடு இறந்தான், முதல் கிந்தமன் ஆன பேரோன்;
தன்போல் மகிழ்நனுடனே செந்தழலின் எய்தி,
பின் போயினள், மென் பிணை ஆன அப் பேதைதானும்.
50
உரை
   

மனைவியருடன் பாண்டு தபோவனம் சென்று, தவம் செய்தல்

நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின், நெஞ்சின் வேறு ஓர்
இனைவு அற்று, 'நன்மை இதுவே இனி' என்று தேறி,
மனை வைத்த காதல் மடவாருடன், மன்றல் வேந்தன்,
முனை வைத்த வாய்மை முனிக் கானம் முயன்று சேர்ந்தான்.

51
உரை
   

பாண்டுவின் தவ நிலை

காண்டற்கு அரிய மணிப் பைம் பொற் கலனொடு, ஆடை,
வேண்டற்கு அரிய விடயங்களின் வேடம் மாற்றி,
தீண்டற்கு அரிய திருமேனியன், தேவராலும்
பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான்.
52
உரை
   


உற்றுப் புறத்துப் பகை ஆடி உடன்ற எல்லாம்
செற்று, புவியில் தனி ஆழி செலுத்து நீரான்,
பற்று அற்ற யோகப் படையால், உட்பகைகள் ஆறும்
முற்றத் துறந்து, பெரு ஞான முதல்வன் ஆனான்.
53
உரை
   

ஆரக் குழம்பில் அளைந்து, ஆரம் அணிந்து, விம்மும்
பாரக் குசங்கள் பல தைவரும் பான்மை நீங்கி,
நாரக் கமல கர சோதி நகங்கள், மீள,
ஈரக் குசங்கள் கிழிக்கும் தொழிற்கு ஏற்றவாலோ!
54
உரை
   

நாமக் கலவி நலம் கூர நயந்து, நாளும்
காமக் கனலை வளர்க்கின்ற கருத்து மாற்றி,
தாமக் குழலார் இருவோரொடு தானும் ஒன்றி,
ஓமக் கனலே வளர்த்தான், உணர்வு உண்மை கண்டான்.
55
உரை
   

இவ்வாறு அரிய தவம் நாள்தொறும் ஏறும் எல்லை,
கை வாள் ஒழிந்து, சமித்து ஏந்திய காவல் மன்னன்,
மை வாள் நெடுங் கண் வர சூரன் மகளை நோக்கி,
செவ் வாய் மலர்வான், புவிமேல் உறை தெய்வம் அன்னான்:
56
உரை
   

பாண்டு குந்திக்கு மகப் பேற்றின் சிறப்பை எடுத்துரைத்தல்

'பூந் தார் வியாதமுனி தாள் இணை போற்றி, அன்பு
கூர்ந்து, ஆர்வம் முற்றி, அவன்பால் வரம் கோடல் எய்தி,
காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று,
வேந்து ஆதரிக்கத் தரித்தாள், வடமீனொடு ஒப்பாள்.
57
உரை
   


'கல்லா மழலைக் கனி ஊறல் கலந்து கொஞ்சும்
சொல்லால் உருக்கி, அழுது ஓடி, தொடர்ந்து பற்றி,
மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர்
இல்லாதவர்க்கு, மனைவாழ்வின் இனிமை என் ஆம்?

58
உரை
   

'மெய், தானம், வண்மை, விரதம், தழல் வேள்வி, நாளும்
செய்தாலும், ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார்;
மை தாழ் தடங் கண் மகவின் முகம் மன்னு பார்வை
எய்தாது ஒழியின், பெறும் இன்பம் இவணும் இல்லை.
59
உரை
   

'புத்திரப் பேற்றை நீ உண்டாக்கி அருள்' என்ற
பாண்டுவின் கூற்றைக் குந்தி மறுத்து மொழிதல்

'மென் பாலகரைப் பயவாதவர், மெய்ம்மையாகத்
தென்பாலவர்தம் பசித்தீ நனி தீர்க்கமாட்டார்;
என்பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன்;
நின்பால் அருள் உண்டுஎனின் உய்வன், நெடுங் கண் நல்லாய்!
60
உரை
   


'இல்வாழ்பவர்க்கு மடவார் அலது யாவர், இன்ப
நல் வாழ்வு, தேசு, புகழ், யாவும் நடத்துகிற்பார்?
தொல் வானவரின், மறையோரின், துறக்க பூமி
செல்வார் பெறும் பேறு இனி நீ அருள்செய்தி' என்றான்.

61
உரை
   

பொற்பாவை, கேள்வன் மொழி கேட்டலும், பொன்ற நாணி,
'சொற்பால அல்லாப் பழி கூர் உரை சொல்வது என்னே?
வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ,
இற்பாலவர்க்குப் பிறர்மேல் மனம் ஏற்பது?' என்றாள்.
62
உரை
   

பின்னும் பாண்டு வற்புறுத்த, குந்தி
தான் கன்னிகையாய் இருந்தபோது பெற்ற
மந்திரத்தைப் பற்றி உரைத்தல்

பின்னும் பலகால் வருட்டி, பிறர் பெற்றி காட்டி,
மன்னன் புகல, மட மாது மறுக்கமாட்டாள்,
கன்னன் பிறந்தது ஒழிய, செழுங் கன்னி ஆகி,
முன்னம் பெறு மா மறை மேன்மை மொழிந்திட்டாளே.
63
உரை
   

பாண்டு உடன்பட, குந்தி தருமராசன் அருளால்
உதிட்டிரனைப் பெறுதல்

மரு மாலை வல்லி உரை கேட்டு, மகிழ்ச்சி கூரும்
பெரு மா தவத்தோன் பணித்து ஏவிய பின்னர், முன்னர்த்
தருமாதிபனைக் கருத்தால் மடத் தையல் உன்னி,
அரு மா மறையால் அழைத்தாள்; மற்று அவனும் வந்தான்.
64
உரை
   

வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி, மன்னு கேள்வற்
சிந்தித்த சிந்தையினளாய், மலர்ச் சேக்கை சேர்ந்து,
குந்தித் தெரிவை, நிறை மா மதிக் கூட்டம் உற்ற
அந்தித் தெரிவை நிகர் என்ன, அழகின் மிக்காள்.
65
உரை
   

சிவம் உற, முகூர்த்தம், வாரம், தினம், திதி, கரணம், யோகம்,
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில்,
'அவனியை ஒரு கோல் ஓச்சி ஆளும்' என்று, அறிவின் மிக்க
தவ நெறி முனிவர் கூற, பிறந்தனன், தருமன் மைந்தன்.
66
உரை
   

உதிட்டிரன் பிறந்தகாலை, உலகினில் உயர்ந்தோர் யாரும்,
வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும், வான் உளோரும்,
நிதிப் பயன் பெற்றார் போல நேயமோடு உவகை கூர்ந்தார்;
மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே!
67
உரை
   

மைந்தன் முகம் நோக்கிப் பாண்டு மகிழ்தல்

தண் பிறை எழுச்சி கண்ட சலநிதி எனவே, மைந்தன்
பண்புடை வதனம் நோக்கி, பார்த்திவன் பாண்டு என்பான்,
கண் பனி துளிப்ப, நெஞ்சம் கனிந்து இனிது உருக, மேனி
வண் புளகு அரும்ப, மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான்.
68
உரை
   

உதிட்டிரன் பிறந்த செய்தி அறிந்த காந்தாரி
பொறாமையுற்று, கல்லால் தன் வயிற்றில்
மோத, அவள் கொண்ட கருச் சிதைதல்

'அற்றனள் துயரம் எல்லாம்; அருந் தவப் பயனால், மைந்தற்
பெற்றனள், குந்தி' என்னும் பேர் உரை கேட்ட அன்றே,
உற்றனள் பொறாமை; கல்லால் உதரம் உள் குழம்புமாறு
செற்றனள், தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள்.
69
உரை
   

மை அறு சுபலன் கன்னி வயினிடைக் கருப்பம், சேர,
பையொடு குருதி பொங்கப் பார்மிசை விழுந்ததாக,
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர் வான் என்ன, சென்று,
மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான்.
70
உரை
   



வியாதன் வந்து, சிதைந்த கருவை நூறு கூறாக்கி
நூறு தாழியில் இட்டு, எஞ்சிய தசையையும்
ஒரு தாழியில் வைத்து, 'உரு நிரம்பும் வரை
கையால் தொடாதே' என்று அருளிப் போதல்

சஞ்சலமான கோசத் தசையினைத் தாழிதோறும்
எஞ்சல ஆக நூறு கூறு செய்து, இழுதில் ஏற்றி,
நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அக் குறையும் சேர்த்தி,
'அம் சில் வார் குழலி ஆக!' என்று ஆங்கு ஒரு கடத்தில்
                                               வைத்தான்.
71
உரை
   

கரு உறு தாயை நோக்கி, 'கையறும் என்று, கன்றி
வெருவுறல், கற்பின் மிக்காய்! வேறு செய் தசைகள் யாவும்
உரு உற நிரம்பி, தாமே உற்பவிப்பளவும், கையால்
மருவுறல்; வழுவுறாது, என் வரம்' என, வரதன் போனான்.
72
உரை
   


காந்தாரி கருக் கலங்களைப் பரிவுடன் பாதுகாத்தல்

காம்பு என நிறத்த தோளாள், கரு வயிற்று இருப்பது ஒப்ப,
தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களைச் சேமமாக
ஆம் பரிவுடனே ஆற்றி, ஈற்று அளை அடைந்து வைகும்
பாம்பு எனப் பருவம் நோக்கி, இருந்தனள், பழுது இலாதாள்.
73
உரை
   

குந்தி வீமனைப் பெறுதல்

ஈண்டு உறு நிகழ்ச்சி கேட்டே, யாதவன் மகளை நோக்கி,
பாண்டுமன் இரந்து பல்கால் பணித்தலும், பவனன்தன்னை
மீண்டும் அம் மறையால் உன்னி, அழைத்தனள்; விரைவின் ஓடி,
ஆண்டு வந்து, அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான்.
74
உரை
   

நெஞ்சு உற மணந்து, மீள நெடுங் கலைவாகன் ஏக,
செஞ் சுடர் உச்சி எய்திச் சிறந்தது ஓர் முகூர்த்தம்தன்னில்,
அஞ்சனை அளித்த பொன்- தோள் அனுமனே உவமை என்ன,
வெஞ் சின வீமன்தன்னைப் பயந்தனள், விரதம் மிக்காள்.
75
உரை
   

தண் பரிமளம் மென் சாயல் தந்தையும், திசைகள்தோறும்
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச,
நண்புடை அனலன்தானும், நலம் மிகு நண்பு தோன்ற,
பண்பு உற வலம் வந்து ஓங்கி, பரிவுடன் விளக்கம் செய்தான்.
76
உரை
   

வீமன் தோன்றியதற்கு முன் நாளில்
துரியோதனன் தோன்றுதல்

அன்ன நாள் அனிலன் மைந்தன் பிறந்தனனாக, அற்றை
முன்னை நாள் அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தம்தன்னில்,
'இன்ன நாள் உருவம் முற்றி, எழில் பெறும்' என்று, முன்னோன்
சொன்ன நாள் வழுவுறாமல், சுயோதனன் தோன்றினானே.
77
உரை
   

வாரியின் அதிர்ந்து விம்மும் மங்கல முழவம் மேன்மேல்
ஓரியின் குரலால் ஓதை ஒடுங்கின; இடங்கள்தோறும்
பாரிய குலத்தோர் கண்ணின் உவகை நீர் பனிக்கும் முன்னே,
சோரி அந்தரத்தினின்றும் சொரிந்தது, சோனை மேகம்.
78
உரை
   

துரியோதனன் தம்பியரும், தங்கை துச்சளையும் தோன்றுதல்

கோள்களின் நிலையால் தீமை கொண்டன முகூர்த்தம்தன்னில்,
தேள்களின் கொடிய மற்றைச் சிறுவரும் சேர, ஓர் ஓர்
நாள்களில் பிறந்த பின்னர், நங்கையும் ஒருத்தி வந்தாள்,
தோள்களின் கழையை வென்ற துச்சளை என்னும் பேராள்.
79
உரை
   

காந்தாரியின் பெரு மகிழ்ச்சி

பின்னிய புதல்வராலும், பிறந்த மென் புதல்வியாலும்,
துன்னிய மகிழ்நனாலும், துலங்கிய சுபலன் பாவை
தன் நிகர் பரிதியாலும், சத இதழாலும், செம் பொன்
கன்னிகையாலும், சோதி கலந்த செங் கமலம் போன்றாள்.
80
உரை
   


பங்குனி உத்தரத்தில் குந்தி விசயனைப் பெறுதல்

பால்மொழிக் குந்தி மீண்டும் பாண்டுவின் ஏவல் பெற்று,
வான் மொழி மறையால் உன்னி, வானவர்க்கு அரசை நோக்க,
மேல் மொழிவது மற்று என்கொல்? விடுவனோ? விரைவின் வந்து, அத்
தேன்மொழித் தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்கச் சேர்ந்தான்.
81
உரை
   

எங்கும் நல் நிமித்தம் செல்ல, இரு நிலம் மகிழ்ச்சி கூர,
பங்குனி, நிறைந்த திங்கள் ஆதபன் பயிலும் நாளில்,
வெங் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான்; வென்றிப்
பங்குனன் என்னும் நாமம் பகுதியால் படைத்திட்டானே.
82
உரை
   


கற்பக மலர்கள் சிந்திக் கடவுளர் கணங்கள் ஆட,
வெற்பக முனிவர் ஈண்டி மங்கல வேதம் பாட,
பொற்பு அக முழவு விம்ம, புரி வளை முழங்கி ஆர்ப்ப,
'நற் பகல் இது!' என்று எல்லா உலகமும் நயந்த அன்றே.

83
உரை
   

பாண்டுவின் கட்டளைப்படி குந்தி மந்திரத்தை
மாத்திரிக்கு உரைத்தலும், மாத்திரி நகுல
சகாதேவர்களைப் பெறுதலும்

இறைவனும் மகிழ்ந்து, பின்னும் யாதவிக்கு உரைப்ப, அந்த
மறையினை முறையின் பெற்ற மத்திர ராசன் கன்னி,
'குறைவு அற இருவர் வேண்டும், குமரர்' என்று உன்னி நின்றாள்;
நிறையுடை இரவி மைந்தர் இருவரும் நினைவின் வந்தார்.
84
உரை
   

மரு வரும் குழலி ஆயும் மறையினால், வரிசை பெற்ற
இருவரும் ஒருவர் போல இன்புற மணந்த போதில்,
பருவரல் யாதும் இல்லாப் பாலகர் இருவர் சேரக்
கரு விளைந்து உதித்தார்; யாரும் கண் எனக் காணும் நீரார்.
85
உரை
   

ஐந்து மைந்தரால் பாண்டு அகம் மிக மகிழ்தல்

சசி குல நகுலன் என்றும், தம்பி சாதேவன் என்றும்,
விசயனோடு எண்ணும் வீமன், மேதகு தருமன் என்றும்,
அசைவு அறு சிங்க சாபம் அனையவர் ஐவராலும்,
வசை அறு தவத்தின் மிக்கான், மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான்.
86
உரை
   

ஐவரும் வளர்ந்த வகை

தாதியர் மருங்கும், தந்தை தட மணி மார்பும், பெற்ற
பேதையர் கரமும், நீங்காப் பெற்றியின் வளர்ந்த பின்னர்,
போதகம், மடங்கல், புல்வாய், புலி, முதல் விலங்கொடு ஓடி,
வேதியர் முன்றில்தோறும் விழை விளையாடல் உற்றார்.
87
உரை
   

செய் தவ முனிவர்தம்மால் சிகையுடன் புரிநூல் சாத்தி,
கைதவம் இன்றி எண்-எண் கலைக் கடல் கரையும் கண்டு,
மெய் தவம் விளங்க, வேழவில்லியும் விழைந்து நோக்க,
மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் வனப்பின் மிக்கார்.
88
உரை
   

மார்பினும் அகன்ற, கல்வி; வனப்பினும் நிறைந்த, சீர்த்தி;
போர் வரு தெரியல் மாலைப் புயத்தினும் உயர்ந்த, கொற்றம்;
சீர் தரு வாய்மை மிக்க, கண்ணினும்; செங் கை வண்மை
பார் வளம் சுரக்கும் செல்வப் பரப்பினும் பரந்த அன்றே.
89
உரை
   

வசந்த காலத்தின் வருகையும் எழிலும்

ஆரமும், ஆரச் சேறும், அரும் பனிநீரும், பூவும்,
ஈர வெண் மதி நிலாவும், இதம் பெறு தென்றற் காலும்,
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம்,
மாரனை மகுடம் சூட்ட, வந்தது, வசந்தகாலம்.
90
உரை
   


விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற, வண்டு
புதுமையின் முரன்று மொய்ப்ப, புது மணம் பரந்து உலாவ,
கதுமெனத் தலை நடுங்க, கால் தடுமாறிற்று அம்மா!-
மது அயர்ந்தவரில் யாவர், மண்ணின்மேல் மயக்குறாதார்?

91
உரை
   

பைந் தடந் தாளால் முன்னம் பருகிய புனலை, மீளச்
செந் தழல் ஆக்கி, அம் தண் சினைதொறும் காட்டும் சீரால்,
முந்திய அசோகு, சூதம், முதலிய தருக்கள் எல்லாம்,
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ!
92
உரை
   


பரந்து எழு சூத புட்ப பராகம், நல் இராகம் மிஞ்ச,
முரண்படு சிலை வேள் விட்ட மோகனச் சுண்ணம் போன்ற!
புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக, தொட்ட
அருந் தழல் கணைகள் போல அலர்ந்தன, அசோக சாலம்!

93
உரை
   

வசந்த இன்பத்தில் ஈடுபட்ட பாண்டு,
சாபத்தை மறந்து, மாத்திரியுடன் கூடி, மாள்தல்

வேனிலின் விளைவினாலும், வேனிலான் விழவினாலும்,
மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினாலும்,
தான் நலம் உறுதல் எண்ணி, சாபமும் மறந்து, மற்று அப்
பானல் அம் கண்ணாளோடும் பாண்டுவும் பரிவு கூர்ந்தான்.
94
உரை
   

அருந் தளிர் நயந்து நல்கி, அலகுடன் அலகு சேரப்
பொருந்தும் முன் அவசம் ஆகி, போகம் மென் குயிலும் பேடும்
இருந்து மெய் உருகும் காவில், இரதியும் மதனும் என்ன,
வருந்திய காதலோடும் மாதவிப் பந்தர் சேர்ந்தார்.
95
உரை
   

பஞ்சின் மெல் அடியினாளும் கணவனும், பழங் கணோட்டம்
நெஞ்சினை நலிய, மேன்மேல் நேயம் உற்று உருகி, ஆங்கண்,
'எஞ்சிய காலம் எல்லாம் என்செய்தேம்!' என்று என்று எண்ணி,
வெஞ் சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே.
96
உரை
   

பூ இயல் அமளி பொங்க, புணர் முலை புளகம் ஏற,
மேவிய கலவி இன்பம் மெய் உறு மகிழ்ச்சி முற்றி,
காவி அம் கண்ணி, கேள்வன் கமழ் வரை மார்பின், அன்போடு,
ஓவியம் எனவே, உள்ளம் உருகினள், அயர்ந்து வீழ்ந்தாள்.
97
உரை
   

அரும்பிய விழியும், தொண்டை அமுது உறு பவள வாயும்,
விரும்பிய சுரத போகம் மேவரு குறிப்பும், ஆகி,
பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன் போல, மன்றல்
சுரும்புஇனம் இரங்கி ஆர்ப்ப, தோன்றலும் சோர்ந்து வீழ்ந்தான்.
98
உரை
   

கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால்,
எஞ்சினன் நராதிபதி; ஈது என வியப்போ?
அஞ்சுதரு தீ வினையின் ஆர் அமுதும் நஞ்சு ஆம்;
நஞ்சும் அமுது ஆம், உரிய நல் வினையின் மாதோ!
99
உரை
   

மாத்திரி அரற்றிய ஒலி கேட்டு, குந்தி குமாரர்களோடு வருதல்

சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா,
மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள்,
முத்திரை உணர்ந்திலள், 'முயக்கம் உறும் இன்ப
நித்திரைகொலாம்!' என நினைந்து, அருகு இருந்தாள்.
100
உரை
   


'செயிர்த்தவரை ஆவி கவர் தீ உமிழும் வேலான்
உயிர்த்திலன், விழித்திலன், உணர்ந்தும் இலன்' என்னா,
அயிர்த்தனள்; அழைத்தனள் அரற்றினள்; இரங்கா,
வயிர்த்தனள், நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள்.

101
உரை
   

புந்தி இலள், மன்றல் பெறு, பூவை குரல் கேளா,
'முந்திய கடும் பழி முடிந்ததுகொல்!' என்னா,
குந்தியும் விரைந்து தன குமரரொடு புக்காள்,
அந்தி அரவிந்தம் என அணி குலை முகத்தாள்.
102
உரை
   


நிகழ்ந்தது உணர்ந்து, குந்தி அழுது அரற்றுதல்

உற்றதும், அருங் கொழுநன் உயிர் உறும் நலத்தால்
இற்றதும், உணர்ந்து, இவள் இரங்கி அழும் எல்லை,
குற்றம் அகலும்படி குணங்களை நிறுத்தும்
நல் தவர் புகுந்து, உருகி, நைந்து, உளம் நெகிழ்ந்தார்.
103
உரை
   

பாண்டுவுக்கு ஈமக்கடன் செய்தலும், மாத்திரி கணவனுடன்
தீப்பாய்தலும்

அழு குரல் விலக்கியபின், ஐம் மகவையும் கொண்டு,
எழு கடல் நிலத்து அரசை ஈம விதி செய்ய,
புழுகு கமழ் மைக் குழலி, பொற்புடை முகத்தாள்,
முழுகினள் அனற்புனலில், மொய்ம்பனை விடாதாள்.
104
உரை
   

தங்கை அவள், வான் உலகு தலைவனுடன் எய்தி,
கங்கை வனம் மூழ்கி, உயர் கற்பவனம் வைக,-
பங்கய நெடுந் துறை படிந்து, தன் மகாரால்,
மங்கை இவளும், கடன் முடித்தனள், வனத்தே.
105
உரை
   

சதசிருங்க முனிவர் குந்தியையும் புதல்வர்களையும் அத்தினாபுரியில் சேர்த்தல்

காசிபன் முதல் கடவுள் வேதியர் கருத்தால்,
ஆசி பெறும் அப் புதல்வர் ஐவரொடும் அன்றே,
ஏசு இல் பிரதைக் கொடியை இறை நகரின் உய்த்தார்-
தேசிகரின் முன் தொழுதகும் சதசிருங்கர்.
106
உரை
   

வணங்கிய புதல்வர்களைத் திருதராட்டிரன்
எடுத்து அணைத்து மகிழ்தல்

இறந்த துணைவற்கு உளம் இரங்கும் நிலமன்னன்
சிறந்த சரணத்தில் விழு சிறுவரை எடுத்து,
புறம் தழுவி, அப்பொழுது புண்ணிய நலத்தால்,
பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான்.
107
உரை
   

வீடுமன், விதுரன், முதலியோர் துன்பமும்
உவகையும் கொள்ளுதல்

வியன் நதிமகன், சிலை வல் விதுரன், முதல் உள்ளோர்,
பயனுடை விசும்பு பயில் பாண்டுவை நினைந்தும்,
சயம் நிலைபெறும் தகைய தனயரை உகந்தும்,
நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார்.
108
உரை
   

ஐவரும் நூற்றுவரும் ஓர் இடத்தில் வளர்தல்

அனுச நிருபன் புதல்வர் ஐவரும், மகீபன்
தனயர் ஒரு நூற்றுவரும், அன்பினொடு தழுவி,
கனகுலம் முகந்து பெய் கருங் கயம் நெருங்கும்
வனசமலரும் குமுதமலரும் என வளர்வார்.
109
உரை
   

வசுதேவன் முதலியோர் அத்தினாபுரிக்கு வருதல்

இன்னணம் வளரும்காலை, எறி கடல் உடுத்த அல்குல்,
மின் எனும் மருங்குல், கொங்கை வெற்புடை, வேய் கொள்
                                              மென் தோள்,
பொன் எனும் நிறத்தினோடும் பொற்பு அழி ஆகுலத்தாள்-
தன் எணம் முடிப்பான் வந்த தலைவனைத் தந்த கோமான்,
110
உரை
   


குந்திபோசன்தன் தெய்வக் குலத்துளோர்களும், அநேக
இந்திரர் அவனிதன்னில் எய்தினர் ஆகும் என்ன,
கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும்,
அந்தம் இல் சுவர்க்கம் அன்ன, அத்தினாபுரி வந்து உற்றார்.

111
உரை
   

கண்ணன் முதலியோர் குந்தியைக் கண்டு, பூமியை ஆளும் முறையையும் கருதுதல்

வெண் நிற மதியம் அன்ன விடலையும், கரிய மேக
வண்ணனும், வள்ளல்தன்னைத் திரு வயிற்று உதித்த மாதும்,
எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி, எல்லாப்
புண்ணிய நலமும் எண்ணி, பூமி ஆள் முறையும் கோத்தார்.
112
உரை
   


தருமபுத்திரனை நோக்கி, கண்ணன் கூறுதல்

எம்பிரான், ஆதிமூலம், இந்திரன் முதலோர்க்கு எல்லாம்
தம்பிரான், பாண்டு ஈன்ற தருமதேவதையை நோக்கி,
'அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்தும் நாமே,
இம்பர் நோய் அகற்றி, எல்லா எண்ணமும் முடித்தும்' என்றான்.
113
உரை
   

திருதராட்டிரன் முதலியோர் வந்தவரோடு அளவளாவுதல்

முகுரவானனனும், வேத்து முனிவனும், மனம், சொல், காயம்,
பகிர்வு இலா விதுரன்தானும், பாந்தள் ஏறு உயர்த்த கோவும்,
நிகர் இலாத் துணைவர்தாமும், நீரொடு நீர் சேர்ந்தென்ன,
தகைவு இலா அன்பினோடும் தழுவினர் கெழுமினாரே.
114
உரை
   

வீடுமன் முதலியோர் வந்தவர்களுக்கு விருந்துசெய்தல்

தன் பதி வந்தோர்தம்மை, தாதைதன் தாதை ஆன
முன்புடைக் கங்கை மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம்,
அன்பொடு கண்டு கண்டு, கண் களித்து, ஆர்வம் மிஞ்சி,
மன்பதை மகிழ்ச்சி கூர, வரம்பு இலா விருந்து செய்தார்.
115
உரை
   

வீடுமன் முதலியோர் வந்தவர்க்கு
முகமன் கூறி, விடைகொடுத்து அனுப்புதல்

'நூற்றுவர், ஐவர், என்னும் நுதியுடைச் சமர வை வேல்
கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடுங் கடும்
                                     போரில் ஆற்றார்;
ஆற்றுவரேனும், உங்கள் உதவி உண்டு; அருளும் உண்டு;
தோற்றமும் உண்டு; நுங்கள் சுமை, இவர் சுமையும்' என்றார்.
116
உரை
   

இனிமையின் பலவும் மாற்றம் யாவர்க்கும் யாவும் சொல்லி,
தினகரன்-தொழுத பின்னர், தேர், பரி கரிகள்தோறும்
மனன் உறத் தக்க செல்வம் வகைதொறும் வழங்கி, அன்றே
தனதனைப் போல்வார்தம்மைத் தம் பதி அடைவித்தாரே.
117
உரை
   

எயில் நலம் புனை கோபுர மா புரத்து, எழுது மாளிகைதோறும்,
வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில், விலாசம்
                                       உற்றிடும் நாளில்,
பயினன் மேல் வரு கல் எனச் செறிந்த மெய்ப் பவனன்
                                       மைந்தனும் ஒத்தான்,
வயினதேயனை; காத்திரவேயரை, மன்னன் மைந்தரும் ஒத்தார்.
118
உரை