9. காண்டவ தகனச் சருக்கம்

தம் எதிரே வேதியர் வடிவில் வந்த அக்கினிதேவனைக்
கண்ணனும் அருச்சுனனும் உபசரித்தலும்,
அக்கினிதேவனது வேண்டுகோளும்

இனிய பால் முகந்து ஒழுக்கும் ஆகுதி என இலங்கு முப்புரி நூலும்,
தனது வெஞ் சிகைக் கொழுந்து எனப் புறத்தினில் தாழ்ந்த
                                செஞ் சடைக் காடும்,
புனித வெண் புகை மருங்கு சுற்றியதெனப் புனைந்த
                               ஆடையும், ஆகி,
மனித வேதியர் வடிவுகொண்டு, அவர் எதிர், வன்னி
                                வானவன் வந்தான்.

1
உரை
   


வந்த அந்தணன் வரவு கண்டு, இருவரும் வந்து, எதிர்
                                வணங்கி, தம்
சிந்தை அன்பொடு, வேதிகை எனத் திகழ் செம்பொனின்
                                தவிசு ஏற்ற,
அந்தணாளனும், குழிந்த பொற் கண்ணினன், அவி மணம்
                                கமழ் வாயன்,
'உந்து வெம் பசி பெரிது; வல்லே எனக்கு ஓதனம்
                                இடுக!' என்றான்.

2
உரை
   


'உண்டற்கு உரிய உணவு அளிப்போம்' என்று இருவரும்
உவகையோடு உரைக்க, அக்கினி தேவன்
தான் விரும்பும்உணவுபற்றி எடுத்துரைத்தல்

கரிய மேனியர் இருவரும், 'செய்ய பொற் காய மா முனி! உண்டற்கு
உரிய போனகம் இடுதும், இக் கணத்து' என, உவகையோடு
                                உரைசெய்தார்;-
அரியஆயினும், வழங்குதற்கு ஏற்றன அல்லஆயினும்,
                                தம்மின்
பெரியஆயினும், அதிதிகள் கேட்டன மறுப்பரோ,
                                பெரியோரே?

3
உரை
   


'அளித்தும்' என்ற சொல் தன் செவிப் படுதலும்
                                பெற்றனன்போல் ஆகி,
'ஒளித்து வந்தனன்; இரு பிறப்பினன் அலேன்;
                                உதாசனன் என் நாமம்;
களித்து வண்டு இமிர் தொடையலீர்! எனக்கு உணாக்
                                காண்டவம் எனும் கானம்;-
குளித்து அருந்துதற்கு இடம் கொடான்-அவ் வனம் கொண்டல்
                                வாகனன் காவல்.

4
உரை
   


'மிடைந்த நால் வகை மகீருகங்களும், நெடு
                                வெற்புஇனங்களும் துன்றி,
அடைந்த தானவர், அரக்கர், பேர் உரகருக்கு
                                ஆலயங்களும் ஆகி,
குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல்
                                கொடு விலங்கினம் மிக்கு,
கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ்
                                கானனம் அது கண்டீர்!

5
உரை
   


'புகுந்து யான் முகம் வைக்கின், ஏழ் புயலையும்
                                ஏவி, அப் புருகூதன்
தொகும் தராதல இறுதிபோல் நெடும் புனல் சொரிந்து
                                அவித்திடும் என்னை;
முகுந்தன் ஆநிரை புரந்தவாறென ஒரு முனைபட
                                விலக்கின் பின்,
மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும்; வேண்டுவது
                                இது' என்றான்.

6
உரை
   


'உன் இச்சைப்படி கொள்க!' என்ற அருச்சுனனுக்குக்
கண்ணன் அருளால் வில் முதலியவற்றை
அக்கினிதேவன் கொடுத்தல்

என்ற போதில், 'உன் இச்சையின்படி உணா ஈந்தனம்,
                                இமைப் போழ்தில்;
சென்று கொள்க!' எனத் தனஞ்சயன் கூறலும், சிந்தை
                                கூர் மகிழ்வு எய்தி,
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால், வடிக்
                                கணை மாளாமல்
துன்று தூணியும், சாபமும், இரதமும், சுவேத
                                வாசியும், ஈந்தான்.

7
உரை
   


அருச்சுனன் போர்க்கோலம் பூண்டு, தேர் ஏறி,
நாண் ஒலிசெய்தல்

ஈந்த வானரப் பதாகை நட்டு, ஈர்-இரண்டு இவுளியும்
                                உடன் பூட்டி,
ஆய்ந்த வன் தொழில் பாகனும் அருணனில்
                                அழகுறும்படி தூண்ட,
காய்ந்த சாயக நாழிகை கட்டி, அக் காண்டிவம்
                                கரத்து ஏந்தி,
வேய்ந்த மாமணிக் கவசமும் அருக்கனில் அழகுற
                                மேற்கொண்டான்.

8
உரை
   


நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு, அணி திகழ் நெடும்
                                புயம் பூரித்து,
சிஞ்சினீமுகம் தெறித்தனன்; தெறித்தலும், தெறித்த
                                பேர் ஒலி, கானின்
விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க, உள் வெருவுற,
                                உகாந்தத்து
மஞ்சின் நீடு உரும் ஒலி எனப் பரந்தது, வான்
                                முகடுற மன்னோ!

9
உரை
   


அக்கினி காண்டவ வனத்தில் பற்றி, அதை
வளைத்துக் கொள்ளுதல்

ஆழிவாய் ஒரு வடவையின் முகத்திடை
                                அவதரித்தனன் என்ன,
ஊழிவாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு
                                உடன்று எழுந்தனன் என்ன,
'வாழி, வாழி!' என்று அருச்சுனன் கரத்தையும் வார்
                                சிலையையும் வாழ்த்தி,
பாழி மேனியை வளர்த்தனன், பாவகன்; பவனனும்
                                பாங்கானான்.

10
உரை
   


மூள மூள, வெம் பசியொடும் சினத்தொடும் முடுகி,
                                வெய்துற ஓடி,
வாளமாக ஒர் பவள மால் வரை நெடு வாரியை
                                வளைந்தென்ன,
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்தனை,
                                அண்ட
கோளமீது எழ வளைந்தனன், வரை படி கொண்டலும்
                                குடர் தீய.

11
உரை
   


புகையும் அனலும் மண்டி மேலே எழுந்து ஓங்கிய தோற்றம்

ஆன ஆகுலம்தன்னொடு தப்புதற்கு அணிபடப்
                                பறந்து ஓங்கும்
தூ நிறத்தன கபோதம் ஒத்தன, இடை இடை
                                எழும் சுடர்த் தூமம்;
கான மேதியும், கரடியும், ஏனமும், கட கரிக்
                                குலம்தாமும்,
வானில் ஏறுவ போன்றன, நிரை நிரை வளர்தரு
                                கருந் தூமம்.

12
உரை
   


வரைத் தடம்தொறும் கதுவிய கடுங் கனல் மண்டலின்,
                                அகல் வானில்
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல
                                வெண் நிறத் தூமம்,
தரைத் தலத்தினின்று அண்டகோளகை உறச் சதமகன்
                                தடஞ் சாபம்,
உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து, அழகுற
                                ஓடுகின்றது போலும்.

13
உரை
   

கருதி, 'ஆயிர கோடி வெம் புயங்கம் இக் கானிடை
                                உள' என்று,
பருதி சூழ்வர வெருவு பல் குவடுடைப் பருப்பதங்களின்
                                சாரல்,
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அறத் துணித்த
                                வாய்தொறும் பொங்கிக்
குருதி பாய்வன போன்றன, கொளுந்திய கொழுந் தழற்
                                கொழுந்து அம்மா!
14
உரை
   


கோத்திரங்களின் கவானிடைக் கதுமெனக் கொளுந்தி
                                உற்று எரிகின்ற
தீத் திறங்கள், செங் காந்தளும், அசோகமும்,
                                செங் குறிஞ்சியும், சேரப்
பூத்த ஒத்தன; அன்றியும், குலிக நீர் பொழி
                                அருவியும் போன்ற;
பார்த்த கண்கள் விட்டு ஏகலா வகை நிறம் பரந்த
                                தாதுவும் போன்ற.

15
உரை
   


தளைத்த பாதவத் தலைதொறும் பற்றின சருகு
                                உதிர்த்து, இளவேனில்
கிளைத்து, மீளவும் பொறி அளி எழ வளர்
                                கிசலயங்களும் போன்ற;
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன
                                தீப சலமும் போன்ற;--
வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின்
                                சிகா வர்க்கம்.

16
உரை
   


தழைத்த பேர் ஒளித் திவாகரன் கரங்கள் போய்த் தடவி,
                                அவ் அடவிக்கண்
பிழைத்த கார் இருட் பிழம்பினை வளைந்து, உடன் பிடித்து,
                                எரிப்பன போலும்-
முழைத்த வான் புழை ஒரு கரத்து, இரு பணை, மும் மதப்
                                பெரு நால் வாய்,
மழைத்த குஞ்சர முகம்தொறும் புக்கு, உடன் மயங்கிய
                                பொறி மாலை.

17
உரை
   


வனத்தில் வாழும் பல பிராணிகள் எரியால் அழிதல்

அரி எனும் பெயர் பொறாமையின்போல் விரைந்து அழல்
                                கொழுந்து உளை பற்ற,
கிரி முழைஞ்சுகள்தொறும் பதைத்து ஓடின, கேசரிக்
                                குலம் எல்லாம்;
விரி உரோம வாலதிகளில் பற்றலின், விளிவுடைச்
                                சவரங்கள்
எரிகொள் சோக வெங் கனலினால் நின்று நின்று
                                இறந்தன, சலியாமல்.

18
உரை
   

எப் புறத்தினும் புகுந்து தீச் சூழ்தலின், ஏகுதற்கு
தப்புதல் கருத்து அழிந்து, பேர் இரலையோடு
                                உழைஇனம் தடுமாற,
மெய்ப் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி,
                                விரைந்து ஓடி
அப் புறத்து வீழ் பொறிகள், அவ்வவற்றினை அலங்கரித்தன
                                அன்றே.
19
உரை
   

காழுடைப் புறக் கழைகளின் துளைதொறும் கால்
                                பரந்து இசைக்கின்ற
ஏழ் இசைக்கு உளம் உருகி, மெய் புளகு எழ,
                                இரைகொளும் அகணங்கள்,
தாழ் அழற் சுடர் சுடச் சுட, வெடித்து எழு சடுல
                                ஓசையின் மாய்ந்த;
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்தம்
                                குலம் போன்ற.
20
உரை
   


அனைய போதில், அவ் விபின சாலங்களின்
                                ஆர் தருக்களின் நீண்ட
சினைகள்தோறும் வாழ் சிகாவல கலாபமேல்
                                செறிதரு தீச் சோதி,
பனையின் நீள் உடல் பணிகளை அலகினால் பற்றலின்
                                படர் பந்திப்
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்தெனப் பொலிந்து
                                இலங்கின மாதோ.

21
உரை
   


'ஆசுகன்தனோடு அடவியை வளைத்தனன், ஆசுசுக்கணி;
                                மேன்மேல்
வீசுகின்றன புலிங்க சாலமும்; புகல் வேறு எமக்கு
                                இலது' என்று
பாசிளங் கிளி, பூவைகள், வெருவி மெய் பதைத்து,
                                உளம் தடுமாறிப்
பேசுகின்ற சொல் கேட்டலும், நடுங்கின, பிற பறவைகள்
                                எல்லாம்.

22
உரை
   


நெஞ்சில் ஈரமும் நீதியும் குடி புகா நிருதர்
                                சென்னியில் வன்னி,
குஞ்சி நீடுற வளர்வபோல், அசைந்து செங் கொழுந்து
                                விட்டன, மேன்மேல்;
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு
                                உறத் தீட்டும்
பஞ்சி போன்றன, அவர் அவர் பத யுகம் பற்றிய
                                சிகை வன்னி.

23
உரை
   

முப்புரங்களை முக்கணன் முனிந்த நாள், மூவர் அம்
                                முழுத் தீயில்
தப்பினார் உளர்; காண்டவ அடவி வாழ் தானவர்
                                யார் உய்ந்தார்?
பைப் புறத்து அணி மணி ஒளி பரந்தெனப் பல்
                                தலைகளில் பற்றி
வெப்பு உறுத்தலின், உரகரும் தங்கள் வாய் விடங்கள்
                                கொன்றென வீழ்ந்தார்.
24
உரை
   


காண்டவம் தீப்பற்றியது உணர்ந்த இந்திரன் அங்கு
வந்து, கண்ணனும் அருச்சுனனும் எரிக்கு உதவியாய்
நிற்றலைப் பார்த்தல

புகை படப் படக் கரிந்தன, பொறியினால் பொறி
                                எழுந்தன, வானின்
மிகை படைத்த அச் சுரபதி ஆயிரம் விழிகளும்,
                                கணப் போதில்;
தகைவு அறக் கழை முதலிய தருக்களின் சடுல
                                ஆரவம் மிஞ்சி,
திகை அனைத்தினும் பரத்தலின், செவிகளும்
                                செவிடு பட்டன, சேர.

25
உரை
   


விரதம் மேற்கொண்டு செம் பொன் மால் வரையை விரி
                                சுடர் சூழ்வருவதுபோல்,
இரதம் மேற் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில்
                                பன் முறை தேர்ந்து,
சரதம் மேற்கொண்டு சரிப்பதும், தனது தாவகம்
                                பாவகன் புகுந்து
பரதம் மேற்கொண்டு நடிப்பதும், கருதிப் பார்த்தனன்,
                                பாகசாதனனே.

26
உரை
   


முந்தி வார் சிலைக் கைப் பற்குனன் தொடுத்த முரணுடை
                                மூரி வெங் கணைகள்
உந்தி, வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின்,
                                உடைந்து,
சிந்தி மீது எழுந்த மணிகளும், அனலின் சிகைகளில்
                                தெறித்து எழு பொறியும்,
இந்திராலயத்திற்கு ஏற்றிய தீபம் என்ன நின்று
                                இலங்கின, எங்கும்.

27
உரை
   


தக்ககனைக் குறித்துக் கவன்ற இந்திரன், தீயை அவிக்க
மேகங்களை ஏவி, தானும் சேனையுடன் போருக்குப் புறப்படுதல்

'தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனியச் சிலைக் கை
                                வெள் ஊர்தி
ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன்
                                போலும்!' என்று அஞ்சி,
வானவர் நடுங்க,-வானவர்க்கு அரசு ஆம் வலாரியும்
                                மனன் உறத் தளர்ந்து,
'கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும்'
                                எனக் கரைந்தான்.

28
உரை
   

பரந்து எழு புகையால் தம் தம வடிவம் பண்டையின்
                                பதின் மடங்கு ஆகச்
சுரந்திடும் புயல்கள் அனைத்தையும், 'நெடு நீர் சொரிந்து,
                                அவித்திடுக!' எனச் சொல்லி,
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல்போல் நின்ற
                                வானவரையும் ஏவி,
புரந்தரன்தானும் ஈர்-இரு மருப்புப் பொருப்பின் வெம்
                                பிடர்மிசைப் புகுந்தான்.
29
உரை
   


மேகங்கள் கிளர்ந்து எழுந்து மழை பொழியவும்,
அனல் அவியாது மிகுதல்

ஏ அக விருத்தச் செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண்
                                முறுக்கி விட்டென்ன,
சேவக இமையோர் எண் திசா முகத்தும் செஞ் சுடர்
                                வாள் விதிர்த்தென்ன,
பாவகன் பகு வாய் நா விதிர்த்தென்ன, பரந்த
                                அப் பாவகற்கு உணவு ஆம்
தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த,
                                சலதர சஞ்சலா சாலம்.

30
உரை
   


ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும், எடுத்த வில் தெறித்த
                                நாண் ஒலியும்,
சூறிய இமையோர் பெரு நகை ஒலியும், துந்துபிக்
                                குழாம் அதிர் ஒலியும்,
கூறிய அனலன் சடுல வல் ஒலியும், குறை பட,
                                திசைதொறும் மிகுந்த-
ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை
                                முகிலின்வாய் ஒலியே.

31
உரை
   


'தூமமும் எமது; பவனனும் எமது தோழன்;
                                அத் தோயமும் எமதே;
யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும்; ஈர்-இரு
                                பொருள்களும் பிரிந்தால்,
மா முகில் எனும் பேர் எங்குளது? அடர்த்து, வாசவன்
                                என் செயும், எம்மை?
ஆம் முறை அறிதும்' என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன்,
                                வெகுண்டு அழலோன்.

32
உரை
   


'மூண்ட வெங் கனலை உருமின் வெங் கனலால் முருக்கி,
                              எம் கால் கையால் நெருக்கி,
ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின்
                                கணங்களால் அவித்து,
பாண்டவன் பகழி தொடுக்கினும், கண்ணன் பருப்பதம்
                                எடுக்கினும், எங்கள்
காண்டவம் புரத்தும்' என்று கொண்டு இழிந்து பொழிந்தன,
                                கணம் படு கனங்கள்.

33
உரை
   

காலைவாய் அருக்கன் பனி நுகர்ந்தென்ன, கட்டு
                                அறக் காண்டவம் என்னும்
பாலைவாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின்,
                                பைம் புனல் வேட்டோன்,
வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம்
                                படப் பொழிந்த தாரைகளால்,
தாலு ஏழினையும் நனைத்தனன்; நனைத்தும், தணிந்ததோ,
                                தன் பெருந் தாகம்?
34
உரை
   


பு'எக் கடல்களினும் இனிப் பசை இலது' என்று, ஏழ்-இரு
                                புவனமும் நடுங்க,
தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை
                                அம் சுருவையால், முகந்து
மைக் கடல் வெளுக்கக் கறுத்த மெய்ம் மகவான் வழங்கிய
                                ஆகுதி அனைத்தும்,
நெய்க் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி, நீடு வான்
                                முகடு உற நிமிர்ந்தான்.

35
உரை
   


மழையைத் தடுக்க, அருச்சுனன் அம்பினால்
சரக்கூடம் அமைத்தல்

தொழு தகு விசயன், தாலு ஏழ் உடையோன் சுடர் முடி
                                நனைந்திடுவதன் முன்,
எழு முகில்இனமும் பொழிதரு மாரி யாவையும்
                                ஏவினால் விலக்கி,
முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற
                                முறை முறை அடுக்கி,
குழுமு வெங் கணையால் கனல்-கடவுளுக்குக் கொற்ற வான்
                                கவிகையும் கொடுத்தான்.

36
உரை
   


ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார்
                                உமிழ்ந்திடு நெடு நீர்
தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனித்
                                திவலையும் பொசியாமல்,
வீழ்தரும் அருவி, பாவகன்தனக்கு விசயன் அன்று அளித்த
                                பொன்-குடைக்குச்
சூழ்தர நிரைத்துத் தூக்கிய முத்தின் சுடர் மணித் தொடையல்
                                போன்றனவே.

37
உரை
   


மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள், இந்திரன்
                                மதலை வாளிகளால்
கண்ட கூடத்திற்கு அமைத்த செம் பவளக் காண் தகு
                                தூண் திரள் காட்ட,
அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த
                                பல் ஆயிர கோடி
சண்ட தூணங்கள் போன்றன, பரந்து தனித்தனி
                                முகில் பொழி தாரை.

38
உரை
   


தக்ககன் மனைவியை அம்பு எய்து அருச்சுனன்
வீழ்த்தலும், அவனது மகவை இந்திரன் காத்தலும்

தக்ககன்தன்னைக் கூயினர் தேடி, சாயக மண்டபம் சுற்றி,
மிக்க விண்ணவர்கள் திரிதர, அவன்தன் மெல்லியல்,
                                மகவையும் விழுங்கி,
அக் கணம்தன்னில் அந்தரத்து எழலும், விழ்த்தினான்,
                                அம்பினால் துணித்துச்
செக் கனல் உருவச் சென்னியை-உரகர் கன்னியைத்
                                திருமணம் செய்தான்.

39
உரை
   


மருவு அயில் சதகோடியின் இறை, ஐராவதத்தின் மும்
                                மதத்தினால் நனைத்து,
கரு வயிற்று எழிலித் தாரையால், வருணக் கடவுள்தன்
                                கணைகளால், அவித்து,
செருவயின் புரள ஒதுக்கி, அத் தோழன் சிறுவனைச் சென்று
                                எடுத்து அணைத்தான்;
ஒருவயின் பிறந்தோன் ஆதலின், மகவானுடன் உடன்றிலன்,
                                உதாசனனே.

40
உரை
   


அன்னை வாயொடு தன் வாலதி துணியுண்டு அலமரும்
                                அச்சுவசேனன்-
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி, அத் தனஞ்சயன்,
                                தனது வெங் கணையால்,
முன்னை வானவரை முனை முகந்தன்னில் முதுகிட
                                முதுகிட முருக்கி,
பின்னை வாரிதங்கள் ஏழையும் பொருது, பின்னிடப்
                                பின்னிடப் பிளந்தான்.

41
உரை
   


தப்பிய தக்ககன் புதல்வனான அச்சுவசேனன்
கன்னனை அடுத்து அம்பாக இருத்தல்

தீர மால் பொருது வீடு கண்டதன் பின், செக்கர் மெய்த்
                                தக்ககன் பயந்த
பார மாசுணம், 'அவ் விசயனுக்கு யாவர் பகை?' எனப்
                                பலரையும் வினவி,
'சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு' எனத்
                                தொழுது போய் எய்தி,
வீர மா முனை வெம் பகழி ஆகியது; எம் மேதினியினும்
                                பெரு வார்த்தை.

42
உரை
   


தக்ககனைக் காணாமையால் இந்திரன் வெகுண்டு பொர,
ஏனைய தேவர்களும் உடன் வந்து பொருதல்

தோழன் மா மகனைக் கண்டபின், தனது தோழனை
                                ஒருவயின் காணான்,
வேழ மா முகத்தில் கைத் தலம் புடைத்தான், விழிகள்
                                ஆயிரங்களும் சிவந்தான்;
யாழ மாதிரத்தின் எதிர்ஒலி எழுமாறு எயிற்று இள நிலவு
                                எழ நகைத்தான்;
தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன்
                            பெருந் தனயனை முனிந்தான்.

43
உரை
   

மேக சாலங்கள் இளைத்ததும், திளைத்து மேலிடு
                                விண்ணவர் அணிந்த
யூக சாலங்கள் உடைந்ததும், கண்டான், உருத்து எழுந்து
                                உள்ளமும் கொதித்தான்,
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின்
                                விரைந்து எடுத்தான்,
பாகசாதனனும்; ஏனைய திசையின் பாலரும் பகடு
                                மேற்கொண்டார்.
44
உரை
   


தேவரும், கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய்
                                நின்ற முப்பத்து
மூவரும், தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்து
                                வந்து அணிந்தார்;
யாவரும் புவனத்து, 'இன்றுகொல் உகத்தின் இறுதி!'
                                என்று இரங்கினர் நடுங்க,
மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு
                                போர் விளைத்தார்.

45
உரை
   


துவாதசாதித்தர் முதலியோர் அருச்சுனனுக்குத் தோற்று ஓடுதல்

பச்சை வாசிகளும் செய்யன ஆக, பாகரும்
                                பதங்களே அன்றித்
தச்ச வாளிகளால் கரங்களும் இழந்து, தனிப்
                                பெருந் திகிரியும் தகர,
உச்ச மா மகத்தில் பண்டு ஓடிந்து ஒடியாது ஒழிந்தன
                                பற்களும் ஒடிய,
அச்சமே துணையா, அருக்கனும் ஒழிந்த அருக்கர்
                                பன்னொருவரும் அகன்றார்.

46
உரை
   


மாறு பட்டுழி அப் பற்குனன் கணையால் மழுக்களும்
                                சூலமும் உடைய,
நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய, நெடுங் கொடி
                                ஊர்தி ஏறுகளும்,
ஏறுபட்டு அழிய, சடையில் வார் நதியால் ஏறிய
                                தூளி வான் நெறியும்
சேறு பட்டிடுமாறு ஓடினார் மீள, பதினொரு திறல்
                                உருத்திரரும்.

47
உரை
   


எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய்
                                வயிற்றில் உற்பவித்த
புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும், தங்கள் புய வலிமையின்
                                பொருதிடுவார்
நண்ணிய அமரில், விசயன் வெங் கணையால் நாப் புலர்ந்து,
                                உள்ளமும் நடுங்கி,
அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால், நிற்பரோ,
                                ஆயுள்வேதியரே?

48
உரை
   


அருண வெங் கனலோன் கனலொடு கலந்தான்; ஆசுகன்
                                அவற்கு நண்பு ஆனான்;
கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே
                                கவலை உற்றனனால்;
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான்; மதியும்,
                                அம் மதி முடித்தவனும்,
இருள் நிற அரக்கன்தானும், 'இங்கு இவரோடு எங்ஙனம்
                           பொருதும்!' என்று இளைத்தார்.

49
உரை
   


அருச்சுனன் அம்புகளால் மேகங்கள் சிதறி வெளிறி மீளுதல்

சொல் மழை பொழிந்து, நாள்தொறும், தனது தோள்வலி
                                துதிக்கும் நாவலர்க்குப்
பொன் மழை பொழியும் கொங்கர் பூபதிதன் பொற் பதம்
                                பொருந்தலர் போல,
கல் மழை பொழியும் காள மா முகிலும், கடவுளர்த்
                                துரந்தவன் கரத்தில்
வில் மழை பொழிய, கற்களும் துகளாய், மேனியும்
                                வெளிறி, மீண்டனவே.

50
உரை
   


இந்திரனோடு அருச்சுனன் கடுமையாகப் போர் செய்கையில்,
ஆகாயவாணி எழுதல்

மாயவன்தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அத்
                                தந்தையை மதியான்,
தூய வெங் கணையால் அவன் இடித் துவசம் துணித்து, அமர்
                                தொடங்கும் அவ் அளவில்,
காயம் எங்கணும் நின்று ஒலி எழப் பரந்து, காயம் இல்
                                கடவுள், அக் கடவுள்-
நாயகன்தனக்குப் பரிவுடன் நவை தீர் நல்லுரை
                                நவின்றதை அன்றே:

51
உரை
   


'தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன்,
                                குரு நிலம் சார்ந்தான்;
குமரனும், நும்மால் உய்ந்தனன்; தூமக் கொடியனும்
                                கொண்டலுக்கு அவியான்;
நமர்களில் இருவர், நரனும் நாரணனும்; நமக்கும் இங்கு
                                இவர் சிறிது இளையார்;
அமரினை ஒழிமின், அமரினை ஒழிமின், அமரரும்
                                அமரர் நாதனுமே!'

52
உரை
   


ஆகாசவாணி கேட்ட இந்திரன் போரைத் துறந்து துறக்கம் போதல்

என்றுகொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில்,
                                இரவி முன் இருள்போல்
துன்று தன் சேனைச் சுர கணம் சூழச் சுரபதி துறக்கம்அது
                                அடைந்தான்;
வென்று வெங் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள்
                                சங்கமும் குறித்தான்;
அன்று செந்திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை
                                கண்டு அதிசயித்தனனே.

53
உரை
   


தேவர், முனிவர், முதலியோர் அருச்சுனனைப் புகழ்தல்

வட மதுரையினும் தென் மதுரையினும் மதிகுல நிருபர்
                                கன்னியரைக்
கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுறக்
                                கண்ட வானவரும்,
'புடவியில் ஒருவரொடும் இனிப் பூசல் பொரேன்!' எனப்
                                போன வாசவனும்,
முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும், முடிவு
                                அறப் புகழ்ந்தார்.

54
உரை
   


அக்கினியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள்

மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை
                                இருந்த மா மயனை
ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும், வெருவி, 'அருச்சுனா,
                                அபயம்!' என்று அரற்ற,
தேசுடைத் திகிரிச் செங் கண் மால் கருணை
                                செய்தனன்-தீவினை உறினும்,
பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின், யார்கொலோ
                                பிழைத்திடாதவரே?

55
உரை
   


அழைத்து அடல் விசயன்தனை, 'துணை செய்க!' என்று
                              ஆறு-பத்து யோசனை ஆகித்
தழைத்த அவ் வனத்தை, கனத்தை வென்கண்டு,
                                தழலவன் நுகர்ந்திடுகாலை,
பிழைத்தவர், மயனும், தக்ககன் மகவும், பெருந் தவன்
                                ஒருவன் முன் கருப்பம்
இழைத்த நுண் சிறகர்க் கருநிறக் குரீஇயின் இனங்களும்,
                                அன்றி, வேறு இலரால்.

56
உரை
   


அக்கினிதேவன் கண்ணனையும் அருச்சுனனையும் வாழ்த்தித்
துறக்கம் செல்ல, அவ் இருவரும் இந்திரப்பிரத்தம் சேர்தல்

என் பிற புகல்வது?-ஈர்-எழு புவனம் எம்பிரான்
                                அருந்தியது என்ன,
தன் பசி தணியக் காண்டவ வனத்தில் சராசரம்
                                உள்ளவை அனைத்தும்
வன்புடன் அருந்தி, உதரமும் குளிர்ந்தான்; வன்னி, தன்
                                வடிவமும் குளிர்ந்தான்;
அன்புடை இருவர்க்கு ஆசியும் புகன்றான்; அசைந்து போய்த்
                                துறக்கமும் அடைந்தான்.

57
உரை
   


அமரரை முதுகு கண்ட காவலரும் அவர்அவர்
                                ஆண்மைகள் உரைசெய்து,
அமரில் அன்று எடுத்த பல் பெருங் கொடியால் அலங்கரித்து
                                அமைத்த தம் தேர்மேல்,
தமருடன் துணைவர் நால்வரும், நகரச் சனங்களும்,
                                மகிழ்ந்து எதிர்கொள்ள,
தமர மும் முரசும் முழங்க, வெண் சங்கம் தழங்க, வந்து,
                                அணி நகர் சார்ந்தார்.

58
உரை