14. முண்டகச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

மல் கொண்டு வகுத்தனைய சிகரத் திண் தோள் வாள் அரக்கன்
                          குலத்தோடும் மடிய, முன்னம்,
வில் கொண்டு, சரம் தொடுத்து, புரை இல் கேள்வி
                          விண்ணவர்தம் துயர் தீர்த்த வீர ராமன்,
கல் கொண்ட அகலியைதன் உருவம் மீளக் கவின் கொள்ளக்
                          கொடுத்த திருக் கமல பாதம்
சொல் கொண்டு, துதித்து, எழுந்து துள்ளி, நாளும் தொழுமவரே,
                          எழு பிறவித் துவக்கு அற்றாரே.

1
உரை
   


உரோமச முனி தருமனிடம் வந்து, இந்திரன் விருப்பின்படி
விசயனைப் பற்றிய செய்தி தெரிவித்தல்

இப் பால், வெஞ் சிலை விசயன் துறக்கமீதில் இந்திரன்தன்
                           அருகு இருப்ப, இமையோர் ஊரில்,-
அப் பால், நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி
                           அந்தணர்தம் குழாம் சூழ, அழகு ஆர் மண்ணில்
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும், உயர் வனத்தினிடை,
                           நாளும், ஒருநாள் போல,
தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும், தம்பியரும்,
                           புரிந்தது இனிச் சாற்றுகிற்பாம்:

2
உரை
   


விறல் விசயன்தனைப் பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச,
                        ஒரு தஞ்சம் அற வெம்பி, அம் பொன்
சிறகு இழந்த பறவை என, துணைவரோடும் திறல் வேந்தன்
                        சிந்தனை உற்று இருந்த காலை,
'பொறை, அறிவு, நிறை, தருமம், உடைய வாய்மைப் போர் வேந்தே!
                        அஞ்சல்!' எனப் புகழ்ந்து, வாழ்த்தி,
மறை ஒரு பொன் வடிவுகொடு வந்தது என்ன, மா முனியும்,
                        இமைப்பினிடை வந்துற்றானே.

3
உரை
   

வந்த பெருங் கடவுள் முனி வரவு நோக்கி, வாள் வேந்தும்
                         தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து,
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க, சென்று, எதிர் போய்,
                         வணங்குதலும், சிதைவு இலாத
அந்த முனிவரனும், அவர்க்கு அன்பால், துன்பம் அணுகாத
                         அந்தம் இலா ஆசி கூறி,
புந்தியுடன் அளித்த செழும் புனித கோலப் புலித் தவிசின்
                         இருந்து, அடைவே புகன்றான் எல்லாம்:
4
உரை
   

"வாள் விசயன் புரவிசயன்தன்னை நோக்கி மன்னு தவம்
                         புரிந்ததுவும்; மகிழ்ச்சி கூர்ந்து, அவ்
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால், வேண்டும் விறல்
                         படைகள் அளித்ததுவும்; விபுதர்கோமான்
நாள் விசயம் பெறக் கொடுபோய், உம்பர் ஊரில், நளி மகுடம்
                         புனைந்ததுவும்; நாளும் தன் பொன்
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால்
                         தொலைத்ததுவும்; சூழ்ந்த யாவும்;
5
உரை
   


'"தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற, தனஞ்சயன்
                         அங்கு இருந்ததற்பின், தயங்கும் சோதி
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே
                         வருவதுவும்; மருவு காதல்
உன்னுடைய பெருந் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க'
                         என உம்பர் கோமான் உன்பால்
என்னை விடுத்தனன்; வந்தேன்' என்றான்-எல்லா உலகும்
                         முடிந்திடு நாளும் ஈறு இலாதான்.

6
உரை
   


பாண்டவர் உரோமசன் காட்டிய வழியே உடன் சென்று,
காந்தர்ப்ப மலையில் தங்கியிருத்தல

மா முனிதன் மொழி கேட்டு, புரை இல் கேள்வி மன்னவனும்
                         தம்பியரும் வருத்தம் மாறி,
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி, கடவுள்
                         முனிதன்னொடும் அக் கணத்தின் ஏகி,
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம்
                         எவற்றிலும் போய், நானம் ஆடி,
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ர நீல சயிலத்தின் சுனைகெழு
                         தண் சாரல் சார்ந்தார்.

7
உரை
   


அக் கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி, அங்கு
                         உள்ள அருவி நறும் புனலும் ஆடி,
'தக்க புகழ் விசயன் அருந் தவம் புரிந்த சாரல் இது' என்று,
                         தவ முனிவன் சாற்ற,
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி, விசயனைக் கண்டனர்
                         போல விரும்பிக் கண்டு,
தொக்க முனி கணத்தொடும் போய், தசாங்கன் என்னும்
                தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார்.

8
உரை
   

அங்கு உள்ள தபோதனர்தம் பாதம் போற்றி, அவர் உரைத்த
                          ஆசியும் பெற்று, அப் பால் ஏகி,
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும், யாறும், எப் புனலும்,
                          தப்பாமல் இனிதின் ஆடி;
வங்கம் எறி கடல் கடைந்து, வானோர்க்கு எல்லாம் மருந்து
                          விருந்து அருளிய மந்தரமும் காட்டி;
கங்கை நதி குதி பாயும் சிகரச் சாரல் காந்தர்ப்பம் எனும்
                          வரையும காட்டினானே.
9
உரை
   

அந்த உயர் கிரியின் நெடுஞ் சாரல்தோறும் அருந் தவம் செய்
                          முனிவரரை அடைவே காட்டி,
'இந்த வனம்தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர்-ஐம்பது
                          யோசனை என்று எடுத்துக் காட்டி,
கந்தன் என எக் கலையும் வல்ல ஞானக் கடவுள் முனி
                          விசாலயன் ஆலயமும் காட்டி,
'உந்து நெறிச் செங்கோலாய்! இதனில் ஓர் ஆண்டு இருத்தி'
                          என, உரோமசனும் உரைத்திட்டானே.
10
உரை
   


அங்கே இருக்கும் காலத்தில், பொற்றாமரை மலர்
ஒன்று திரௌபதியின் முன் வீழ, அதனை
நோக்கி அவள் சிந்தித்தல்

அம் முனிவன் மொழிப்படியே, வரம்பு இல் கேள்வி அறன்
                       மகனும், தம்பியரும், அரிவையோடும்,
எம் முகமும் தம் முகமா, இலையும் காயும் இனிய கனியுடன்
                       அருந்தி, இருக்கும் நாளில்,
மைம் முகில் வாகனன் கனக முடிமேல் அம் பொன் வனச
                       மலர் ஒன்று தழல்-மயில் முன் வீழ,
செம்மலரைச் செங் கண் மலர்தன்னால் நோக்கி, செய்ய
                       மலர்க் கரத்து ஏந்தி, சிந்தித்தாளே:

11
உரை
   


'இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ?
                       இரவி திருக் கரத்தில் வைகும்
அந்த மலரோ? அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும்
                       அணி மலரோ? அவனிதன்னில்
எந்த மலரும் கருக, கமழாநின்றது, எங்கு எங்கும் இதன்
                       மணமே!' என்று போற்றி,
கந்தவகன் மைந்தனுக்கு, கனலோன் நல்கும் கனங்குழை
                       சென்று, உவகையுடன் காட்டி, சொல்வாள்:

12
உரை
   


திரௌபதி அம் மலரை வீமனுக்குக் காட்டி, 'இதை ஒத்த
மலர் கொணரவேண்டும்' என்ன, அவன் உரோமசமுனிவனிடம்
மலரைப் பற்றிக் கேட்டு அறிதல்

'இம் மலருக்கு ஒரு மலரும் அவனிதன்னில் எதிர் இல்லை!'
                       என்று, இதழ் ஆயிரத்தின் மிக்க
அம் மலரைக் கைம்மலரில் கொடுத்து, 'ஈது ஒக்கும் அணிமலர்
                       நீ எனக்கு அருள வேண்டும்' என்ன,
செம் மலையின் திகழ் சிகரத் திண் தோள் வீமன் தெய்வ
                       முனி புங்கவன்தன் திருத் தாள் போற்றி,
மென் மலரைத் திருமுன்பு வைத்து நின்று, வினவினான்;
                       அவனும் எதிர் விளம்புவானே:

13
உரை
   

'என் பலவும் யாம் உரைப்பது, இந்தப் பூவின் 
                  இயல்பினையும், பெருமையையும்? இயக்கர்தங்கள்
மன் பதியில் உளது; அன்றி, வரம்பு இலாத வான் உலகில் உளது;
                  என்னின், மற்றும் உண்டோ?
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ? மாயன் உம்பர் பதி
                  புகுந்து, ஒரு பைந்தோகைக்கு ஈந்த
பின்பு, இதனைக் கண்டு அறிவார் இல்லை' என்று பேசினான்-
                  யாவரொடும் பேச்சு இலாதான்.
14
உரை
   


வீமன் மலர் கொணர அளகைக்குத் தனியே செல்லுதல்

'இயக்கர் பதிதனில் உளது' என்று இசைத்த மாற்றம்
                      இன்புறக் கேட்டு, ஒருகாலும் ஈறு இலாத
வயக் கொடு வெஞ் சராசனமும், வன் போர் வாகை மறத்
                      தண்டும், கரத்து ஏந்தி, 'மடந்தை! நெஞ்சில்
துயக்கம் அற, இக் கணத்தில் தெய்வ போக சுரபி மலர்
                      அளித்திடுவன்' என்று சொல்லி,
சயக் கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி-மைந்தனும்,
                      இமைப்பில் தனிச் சென்றானே.

15
உரை
   


வீமன் வேகத்துடன் காஞ்சனவனம் கடந்து,
கதலி வனத்தைக் காணுதல்

கைக் காற்றும், தொடைக் காற்றும், மூச்சுக் காற்றும், கனக
                      மணி வரை போலக் கவின்கொள் சோதி
மெய்க் காற்றும், பரந்து எழுந்து, வனத்தில் உள்ள வெற்பும்
                      நெடுந் தரு அனைத்தும் ஒடிந்து வீழ,
எக் காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என, சென்றான்-
                      இன வளைகள் எண் இல் கோடி
செய்க் காற்றும் செழுந் தரளம் நிலவு வீச, சேதாம்பல்
                      பகல் மலரும் செல்வ நாடன்.

16
உரை
   

இலங்கை நகர் தன்னில் விறல் இராம தூதன் இகல் அரக்கன்
                      சோலை எலாம் இறுத்தவாபோல்,
நிலம் குலுங்க, வரை குலுங்க, வனத்தில் உள்ள நெடுந்
                      தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி,
விலங்கினொடு புள் இனமும் உடையத் தாக்கி, மெய்ந் நடுங்கி,
                      தடுமாறி, வெம்பி உள்ளம்
கலங்கி விழ, கனம் அதிர்வ போல ஆர்த்து, காஞ்சனப் பேர்
                      எழில் வனமும் கடந்திட்டானே.
17
உரை
   


அவ் வனத்தை இகந்து, அனந்த காதம் ஏகி, அங்கு இடைவிட்டு,
                      உத்தரத்தின் அப்பால் ஏகி,
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும்
                      பேர் திசையின் விளக்கும் வீரன்,
மை வனப்பினுடன் படியும் சினைக் கை வாச மலர்ப் பொழிலின்
                      ஒரு மருங்கே, மத்த மாவின்
கை வனப்பும், தழை செவியும், மருப்பும், சேரக் கவின்
                      
அளிக்கும் குலைக் கதலிக் காடு கண்டான்

18
உரை
   


கதலி வனத்து எதிர்ந்த காவலரது ஆவி போக்கி, வீமன்
சிங்கநாதம் செய்ய, யாவும் கலக்கமுறுதல்

அக் கதலி வனம்தனக்குக் காவல் ஆய அடல் அரக்கர்
                      அநேகருடன் அடு போர் செய்து,
மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி, வெகுண்டவர்தம்
                      ஆவியையும் விண்ணில் ஏற்றி,
திக்கு அதலம் முதலாம் எவ் உலகும் ஏங்க,
                      சிங்கநாதமும் செய்தான்; செய்த காலை,
உக்க, தலைமணி உரக ராசற்கு; என்றால், உம்பர் படும்
                      துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ?

19
உரை
   

வரை கலங்க, வனம் கலங்க, கலங்குறாத மண் கலங்க,
                      விண் கலங்க, மகர முந்நீர்த்
திரை கலங்க, திசை கலங்க, ஈறு இலாத செகம் கலங்க,
                      உகம் கலங்க, சிந்தை தூயோர்
உரை கலங்க, உளம் கலங்க, துளங்கி மெய்யில் ஊன் கலங்க,
                      விலங்கொடு புள்இனங்கள் யாவும்
நிரை கலங்க, உலகின் உயிர் படைத்ததம்மில் நிலை
                      கலங்காதன உண்டோ, நிகழ்த்தின் அம்மா!
20
உரை
   


சிங்கநாதம் கேட்ட அனுமன் வீமன் செல்லும் வழியில்
முந்தச் சென்று இருத்தல்

அந்த ஓதை, அப் பொழிலிடைத் தவம் புரிந்தருளும்
மந்தராசலம் அனைய தோள் மாருதி கேட்டு,
விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய்,
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி,

21
உரை
   


வெற்பு இரண்டினில் வேலை முன் கடந்த தாள் நீட்டி,
பொற் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி,
அற்ப வாழ்வுடை அரக்கன் மா நகர் அழல் ஊட்டும்
சிற்ப வாலதி திசை எலாம் சென்று நின்று ஓங்க,

22
உரை
   


எம்பிரான்தனக்கு ஒழிய மற்று யாவர்க்கும் தெரியாச்
செம் பொன் மா மணிக் குண்டலம் இரு புறம் திகழ,
விம்ப மால் வரைமீது ஒரு மேருவே ஒக்கும்
அம் பொன் மால் வரை இருந்தென இருந்தனன், அனுமான்.

23
உரை
   


அனுமனைக் கண்டு வீமன் திகைத்து நிற்க, அனுமன்,
'நீ யார்?' என்ன, வீமனும் மாறாக அங்ஙனமே வினாவுதல்

குகைத் தடங் கிரி அனைய தோள் கொட்டி, ஆர்த்து, உரப்பி,
நகைத்து, நாகமும் நாகமும் நடுங்கிட நடந்து,
மிகைத்த வாள் அரிபோல் வரும் வீமன்,-முன் கண்டு,
திகைத்து நின்றனன்-மறமையும் திறமையும் உடையான்.

24
உரை
   

'அண்டர், தானவர், அரக்கரும், அணுகுறா வனத்தில்
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட, ஆர்த்து,
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா?' என்றான்-
சண்ட வாயுவின் தனயனை, மற்று அவன் தமையன்.
25
உரை
   


தம்முன் ஆகிய வானரம் சாற்றிய உரை கேட்டு,
'எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார் கொல்?'
                 என்று இசைத்தான்-
தெம் முன் ஆயினும், செவ்வி மென் போக மா மகளிர்-
தம் முன் ஆயினும், நாத் தவறா அடல் வீமன்.

26
உரை
   


'வல்லையேல் என் வாலைக் கடந்து போ' என அனுமன் கூற,
'அனுமன் வால் அன்றி, ஒரு குரங்கின் வாலைக்
கடப்பது அரிதோ?' என வீமன் கூறுதல

'துன்னும் வெஞ் சிலை வலிகொலோ? தோள் இணை வலியோ?
என்னை, 'நீ, புகல், ஆர் அடா!' என்பது இங்கு எவனோ?
உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா!
மன்னும் வால்தனைக் கடந்து போ, வல்லையேல்' என்றான்.

27
உரை
   


உரம் கொள் வீமன் அம் மாருதி உரைத்த சொல் கேளா,
'வரம் கொள் வார் சிலை இராகவன் மாப் பெருந் தூதன்,
தரங்க வாரிதி தாவும் என் தம்முன், வால் அன்றி,
குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரியதோ? கூறாய்!''

28
உரை
   


அனுமன், 'மனிதனைச் சுமந்த அனுமனை என்னுடன்
ஒப்புக் கூறலாமோ?' என்ன, வீமன் இராகவ
அனுமர்களின் பெருமையைக் கூறுதல்

என்று தன் திருத் துணைவன் நின்று இசைத்தது கேட்டு,
'நன்று, நன்று! நீ நவின்றது நன்று!' என நகையா,
'துன்று வார் சிலை மனிதனைச் சுமந்து, தோள் வருந்தும்
புன் தொழில் சிறு குரங்கையோ, என்னொடும் புகல்வாய்?'

29
உரை
   

குரக்கு நாயகன் அவ் உரை கூறலும், கேட்டு,
தரைக்கு நாயகன் தடம் புயம் குலுங்கிட நகையா,
'அரக்கர் நாயகன் ஊர் அழல் ஊட்டி, இவ் அகிலம்
புரக்கும் நாயகன்தன்னையோ, இழித்து நீ புகல்வாய்!'
30
உரை
   


'யார்?' என அனுமன் மீண்டும் வினாவ, வீமன்
தன்னை இன்னான் என அறிவித்தல்

பின்னும், வார் சிலை இராகவன் பெருமையும், அனுமான்
மன்னு தோள் இணை வலிமையும், மாருதி சாற்ற,
அன்ன போழ்தினில், அகம் மகிழ்ந்து, அருளுடன் நோக்கி,
'என்ன காரியம் வந்தது, இங்கு? யார் கொல் நீ?' என்றான்.

31
உரை
   


தாம மாருதி உரைத்த சொல் தம்பியும் கேட்டு,
'நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும
நாம நாயகற்கு இளையவன், நரனுக்கு மூத்தோன்,
வீமன், வாயுவின் புதல்வன் யான்' என்றனன், விறலோன்.

32
உரை
   


'இராகவன் சீர்த்தியை யார் சொல அறிந்தாய்? என்ன,
'பரத்துவாசன் சொலக் கேட்டேன்' என்று
வீமன் விடை பகர்தல்

அன்ன வாசகம் அவன் உரைத்தலும், இகல் அனுமான்,
கன்ன பாகமும் சிந்தையும் முந்துறக் களித்து,
'மின்னு வார் சிலை இராகவன் மெய்ப் பெருஞ் சீர்த்தி
சொன்னவாறு நன்று! உனக்கு இது ஆர் சொற்றவர்?' என்றான்.

33
உரை
   

'வரத்தினால் அரு மறையினால் வார் சிலை பயிற்றும்
பரத்துவாசன் முன் பகர்தரக் கேட்டனன், பலகால்,
திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி' என்றான்-
உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன்.

34
உரை
   


அனுமன் தன்னைப் பற்றிய உண்மையை வெளியிட,
வீமன் அவன் திருவடிகளில் வணங்குதல்

குந்தி கான்முளை கூறிய வாசகம் கேட்டு,
புந்தியால் உயர் அஞ்சனை புதல்வனும் புகல்வான்:
'சிந்து சீகரச் சிந்து முன் கடந்து, செந் தீயால்
உந்து வாள் வலி நிருதர் ஊர் ஒருங்கு சுட்டவனும்,

35
உரை
   


'அந்த வார் சிலை இராமனுக்கு அடிமையாய், என்றும்
சிந்தையால் அவன் திருப் பதம் சிந்தைசெய்பவனும்,
உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவனும்,
இந்த வாழ்வுடை அனுமனே' என்றனன்-இகலோன்.

36
உரை
   


என்ற வாசகம் இரு செவிக்கு அமுது எனக் கேட்டு,
துன்று நெஞ்சினில் உவகையன், துதித்தனன், துள்ளி,
'என்றும் யாம் முயல் தவப் பயன் இருந்தவா!' என்னா,
சென்று, இறைஞ்சினன், திரைக் கடல் கடந்த சேவடிமேல்.

37
உரை
   


தம்பியை அனுமன் தழுவி, அவன் தனியாக வனம் வந்தது
பற்றி வினவ, வீமன் மலரின்பொருட்டு வந்தமை கூறுதல்

தம்பியைத் துணைத் தாழ் தடக் கைகளால் எடுத்து,
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து,
'பம்பு செந் தழற் கானிடைப் பதமலர் சிவப்ப,
எம்பி! நீ தனி நடந்தவாறு என்கொல்?' என்று இசைத்தான்.

38
உரை
   


'தாயத்தாரும் வல் வஞ்சனைச் சகுனியும் கூடி,
மாயத்தால், ஒரு கவறுகொண்டு, எங்கள் மண்கொண்டு,
நேயத்தால், நெடுங் கானகம் நேர்ந்தனர்' என்றான்-
சீயத்தால் அரசு இழந்திடும் சிம்புள் ஏறு அனையான்.

39
உரை
   

'திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லெனச் செல்ல,
சுகந்த புட்பம் ஒன்று யாம் உறை வனத்தினில் தோன்ற,
தகைந்த அப் புது மலர்தனைத் தழல்-மகள் காணா,
'அகைந்த இத் துணை மலர் எனக்கு அருளுதி' என்றாள்.
40
உரை
   


'ஆதலால் இவண் யானும் இன்று அணுகினன்' என்று,
நீதியால் உயர் தம்முனை நெடுந்தகை போற்ற,
கோது இலாத அக் குரிசிலும் குமரனை நோக்கி,
'தீது இலாய்! இது கேட்க!' எனச் செப்புவன் மாதோ:

41
உரை
   


மலர் இருக்கும் இடத்தையும், பெறுதற்குரிய வீமனது
தகுதியையும் அனுமன் உரைத்தல

'அரு நிதிக் கிழவன்தனது அளகை மா நகரில்,
மரு மிகுத்த நீள் மஞ்சன வாவியின் கரையில்,
தரு மலர்ப் பெருஞ் சோலையில் தங்கும், அம் மலர்; சென்று,
உரிமை உற்று, அது கோடல், மற்று உம்பர்க்கும் அரிதால்.

42
உரை
   


'ஈறு இலா இகல் அரக்கரோடு இயக்கர்தம் காவல்-
கூறும் வாசகம் பொய்ப்பவர், கூர் தவம் முயலும்
பேறு இலாதவர், பேர் அருள் இலாதவர், பிறிதும்
ஆறு இலாதவர் தமக்கும்,-அங்கு அணுகுதல் அரிதால்.

43
உரை
   


'அறிவும், வாய்மையும், தூய்மையும், அன்பும், இன் அருளும்,
பொறையும், ஞானமும், கல்வியும், புரி பெருந் தவமும்,
நெறியும், மானமும், வீரமும், நின்ன; ஆதலினால்
பெற, உனக்கு அரிது ஆயது ஏது?' என்றனன், பெரியோன்.

44
உரை
   


உற்ற துணைகள், 'எனக்கு வாய்த்துள்ளமையால்,
யாவர் காவல் புரியினும் மலரைக்
கவர்வேன்' என வீமன் உரைத்தல்

முன்னவன் புகல் உறுதி கூர் மொழி எலாம் கேட்டு,
பின்னவன் தொழுது, இவை இவை பேசினன் பின்னும்:
'மன்னர் மன்னவன் அறம் உண்டு; மறம் உண்டு; வழக்கே
உன்னின், உன் அருள் உண்டு; திண் தோள் உரம் உண்டால்;

45
உரை
   


'தேவர் காக்கினும், தெயித்தியர் காக்கினும், சிறந்த
மூவர் காக்கினும், முறை முறை மொழிந்த மூஉலகில்
யாவர் காக்கினும், இக் கணத்து இயக்கர் ஊர் எய்தி,
காவின்மேல் பயில் கடி மலர் கவருவேன்' என்றான்.

46
உரை
   


'வேண்டும் வரம் கேள்' என்ற அனுமனிடம், 'பாரதப்போரில்
விசயனது தேர்க் கொடியில் நீர் உவந்து
ஆடவேண்டும்' என வீமன் வேண்டுதல்

ஆண்டு, அவன் புகல் உறுதியும் ஆண்மையும் கேட்டு,
நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி,
பாண்டவன்தனைப் பண்புறப் பரிவினால் நோக்கி,
'வேண்டும் நல் வரம் வேண்டுக, ஈண்டை நீ!' என்றான்.

47
உரை
   


'நெடிய கானகம் நீங்கி, யாம் நெறியின் நேரலரைக்
கடிய வெஞ் செருப் புரி பெருங் குருதி வெங் களத்தில்,
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து, அருச்சுனன் தடந் தேர்க்
கொடியின்மீது நின்று, உவந்து, கூத்து ஆடுதிர்' என்றான்.

48
உரை
   


அனுமன் வரம் கொடுக்க, பின்னும், வீமன் அனுமனிடம்,
'இலங்கையில் தீ இட்ட நாளில் கொண்ட
பெரு வடிவைக் காட்டுக!' என வேண்டுதல்

நீட்டும் அவ் வரம் அவனுக்கு நேர்ந்தனன், அனுமான்;
மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன், வீமன்;
'ஈட்டும் மா நிதி இலங்கை தீ இட்ட நாள், இசைந்த
மோட்டு உருத்தனைக் காட்டுக!' என்று இறைஞ்சினன்,
                முதல்வன்.

49
உரை
   


அனுமன் தன் பெரு வடிவைக் காட்டுதலும், அதனைத்
தன் கண்ணால் முற்றும் காண முடியாது, அவ்
உருவைச் சுருக்கிக்கொள்ள வீமன் வேண்டுதலும

என்று, அடல் வீமன் இசைத்திடும் முன்னம்,
ஒன்றி, இவ் ஏழ் உலகங்களும் ஒன்றாம்
மன்று உள தார் புனை வாமனனைப்போல்,
நின்று நிமிர்ந்தனன், நித்தமும் உள்ளான்.

50
உரை
   


படியினது எல்லை, பதத்தினது எல்லை;
மடியினது எல்லை, அவ் வானினது எல்லை;
அடியினது எல்லை, அளப்பரிது; என்றால்,
முடியினது எல்லை மொழிந்திடல் ஆமோ?

51
உரை
   


அந்தரம் எங்கும் அடக்கிய மெய்யில்
சுந்தர வாலதி சுற்றிய தோற்றம்,
முந்திய நீள் உடல் வாசுகி, முன் நாள்,
மந்தர வெற்பை வளைத்தது மானும்.

52
உரை
   


நீள் அகல் வானம் நெருங்க, மருங்கே
தோள் புறம் வாலதி சூழ்தர நிற்போன்,
நாளொடு, தாரகை, ஞாயிறு, முதலாம்
கோள் அணி சூழ்வரு குன்றமும் ஒத்தான்.

53
உரை
   


இவ் வகை முன்னம் இலங்கை எரித்தான்
பை வரு நாகர் பணம் சுழிய, திண்
மெய்வகை கொண்டது கண்டு, வியந்தார்-
மை வகை சேர் அகல் வானவர் எல்லாம்.

54
உரை
   


மேல் அளவாது, விளங்கிய சொல் மெய்ந்
நூல் அளவாகிய நுண் அறிவோர்போல்,
மால் அளவு அன்றி வணங்குதல் இல்லான்
கால் அளவு அல்லது, கண்டிலன்,-வீமன்.

55
உரை
   


அருக்கனின் மும் மடி ஆர் ஒளி வீசும்
உருக் கிளர் மேனியை ஊடுற நோக்கா,
வெருக்கொடு, தாள்மிசை வீழ்ந்தனன், 'மீண்டும்
சுருக்குக!' என்று, துதித்தனன்,-வீமன்.

56
உரை
   


அனுமன் பெரு வடிவைச் சுருக்கிக்கொள்ள, வீமன்
அவனை வணங்கிப் பிழை பொறுக்க வேண்டுதல்

அந்தமும் ஆதியும் அற்றவருக்கு அம்
செந்தமிழ் செய்து திரட்டினரைப்போல்,
அந்தர வானும் அகண்டமும் ஒன்றா
உந்திய மேனி ஒடுக்கினன் அம்மா!

57
உரை
   


இந்திரசாலம் இயற்றினரைப்போல்,
மைந்தொடு தொல்லையில் வடிவு கொள் பொழுதத்து,
'அந்தம் இலாய்! அடியேன் பிழை எல்லாம்
புந்தி உறாது, பொறுத்தருள்!' என்றான்.

58
உரை
   


வீமனுக்கு அனுமன் அருள் செய்தல்

திருவடிதன் இரு சேவடியில் போய்
மரு வடி தார் புனை மாருதி தொழவே,
அருள் வடிவாகி, அகண்டமும் எங்கும்
ஒரு வடிவு ஆனவன் உற்று, உரைசெய்வான்:

59
உரை
   


'உன் அருகே பயில் உம்பியரோடும்,
மின் அருகே பயில் வேந்தொடும், வாழ்வுற்று,
என் அருகே வருக!' என்றனன்-என்றும்
தன் அருகு ஏதம் உறாத தவத்தோன்.

60
உரை
   


அளகைக்குச் செல்லும் வழியை வீமன் கேட்க,
அனுமன்வழி கூறி, மலர் பெறுதற்குரிய
உபாயத்தையும் தெரிவித்தல்

அங்கு அவன் அம் மொழி கூறலும், 'ஐயா!
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே;
பங்கய மா நிதி வாழ் பதி எய்த,
சங்கை இல் நல் நெறி சாற்றுக!' என்றான்.

61
உரை
   


என்றலும், 'இந்த வனத்தினது எல்லை
ஒன்றிய யோசனை ஓர் இரு நூறு
சென்றபின், யோசனை சிற்சில சென்றால்,
மன்றல் மலர்ப் பொழில் வாவியில் மன்னும்;

62
உரை
   


'அப் பொழில் காவல் அரக்கர் அநேகர்;
எப் பொழிலும் திறை கொள்ளும் எயிற்றார்;
துப்புடனே அவர் ஆவி தொலைத்தால்,
செப்பிய மா மலர் சென்று, உறலாகும்.

63
உரை
   


'அல்லது, நீடு அளகாபதிதானும்
மெல்லியலும் பொழில் மேவிய போது,
நல் உறவு ஆகி நயத்தொடு சென்றால்,
மல்லல் மலர் தருவோடு வழங்கும்.'

64
உரை
   


அனுமன் விடை கொடுக்க, வீமன் செல்லுதல்

உறுதியும், ஒன்னலர் ஊக்கமும், ஏகும்
நெறியினது எல்லையின் நீர்மையும், நெறியில்
குறிகளும், யாவையும், அன்பொடு கூறி,
அறிவுடையான் விடை அன்பொடு அளித்தான்.

65
உரை
   


மொய்ம்புடை மாருதி தாள் இணை முன்னா,
'வெம்பிய கானிடை மேவிய பயன், இங்கு,
எம்பெருமான்! உனை எய்தினன்' என்னா,
நம்பியும் நாழிகை ஒன்றில் நடந்தான்.

66
உரை
   


சக்கரமலை கடந்து, திவாகரமலையைச் சேர்ந்தபோது,
புண்டரீகன் என்னும் அரக்கன் வீமனுடன்
மாறு கொண்டு எழுதல்

அக்கணம் ஆசுவின் ஆசுகன் மைந்தன்
மிக்கு உயர் விஞ்சையர் நாட்டிடை விட்டு,
திக்கு உறை நாகர் திரண்டு துதிக்கும்
சக்கர நாகம் அதன் புடை சார்ந்தான்.

67
உரை
   


தவா மறைவாணர் தவம் புரியும் தண்
கவானுடை நீள் குகரத்து உயர் கலை சேர்
உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு ஒக்கும்
திவாகர மால் வரை சேர்ந்திடும் எல்லை,

68
உரை
   


அஞ்சன மேகமொடு ஆலம் அளாவி,
வஞ்சனை கொண்டு, வகுத்தன மெய்யான்;
குஞ்சிகள் வானினிடைக் கொடி ஓடி,
செஞ் சுடர் கால்தருகின்ற சிரத்தான்;

69
உரை
   


குளிர் வரை ஒன்றிய நீள் குகரம்போல்
அளவு இல் பெரும் பகு வாய் அதில், மதியின்
பிளவு எனலா வளையும், பிறழும், தண்
இள நிலவு என்ன இலங்கும், எயிற்றான்;

70
உரை
   


ஆறு-இரு காதம் அகன்று உயர் தோளான்;
நூறு-இரு காதம் நொடிக்குள் நடப்பான்;
ஏறு உடையான் முதல் யாவர்கள் எனினும்,
மாறொடு காதி மலைந்திட வல்லான்;

71
உரை
   


எண் திசையும் திறை கொண்டு, இகலோடும்
புண்டரிகப் பெயர் நாடு பொறித்தோன்;-
திண் திறல் மாருதி, சேய் வருவானைக்
கண்டனன், அங்கு அழல் கான்றிடு கண்ணான்.

72
உரை
   


உருத்து, முகில் குலம் உருமுடன் மட்க,
சிரித்து, இதழ் கவ்வி, எயிற்று இணை தின்று, ஆங்கு
அரித் துவசன்தனை நோக்கி, அரக்கன்
கருத்துடன் நின்று, இவை கட்டுரை செய்வான்:

73
உரை
   


'யான் உறை கானகம் என்று, இமையோரும்,
தானவர்தாமும், இதற்கிடை சாரார்;
மானுடன் நீ! இவண் வந்தது, சுவையாம்
ஊன் இடவோ? இஃது உரைத்திடுக!' என்றான்.

74
உரை
   


வென்றி அரக்கன் விளம்புதல் கேளா,
குன்றன தோள்கள் குலுங்க நகைத்து, ஆங்கு,
'உன்தனது ஆவியும் உண்டிட வந்தேன்'
என்றனன், முன்னம் இடிம்பனை வென்றோன்.

75
உரை
   


வீமன் புண்டரீகனுடன் பொர, அசரீரி எழுதல்

மற்று அது கூற, மறத்தொடு அரக்கன்
உற்று, எதிர் ஓடி, உறுக்கிய போது, அக்
கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டிப்
பற்றினன், வந்தவன் ஆவி பறிப்பான்.

76
உரை
   


குன்றொடு குன்று அமர் கூடுவதேபோல்
நின்று, நெடும் பொழுதாக மலைந்தும்,
வன் திறலும், தம வாகுவின் வலியும்,
ஒன்றும் இளைத்திலர்,-ஒத்த உரத்தார்.

77
உரை
   


எல்லை இலா அமர் இங்கு இவர் இவ்வாறு
ஒல்லையின் மோதி உடன்றிடு போழ்தில்,
தொல்லையில் ஓர் முனி சொல்லிய சாபம்
மல்லல் அரூபி வழங்கியது அன்றே;

78
உரை
   


'ஒன்றினும் ஆவி உனக்கு இவன் ஒல்கான்;
துன்றிடு தோள்மிசை தோமரம் ஏவி,
கொன்றிடுவாய், இனி; வாயு குமாரா!'
என்றது, வானினிடத்து அசரீரி.

79
உரை
   


அசரீரி வாக்குப்படி, வீமன் கதையை
அவன் தோளில் எறிந்து வீழ்த்துதல்

அங்கு அசரீரி அரற்றிய மாற்றம்
சங்கை உறாது சமீரணி கேட்டு,
பங்கய நாம நிசாசர பதிதன்
துங்க வயப் புயமேல் கதை தொட்டான்.

80
உரை
   


தொட்ட கொடுங் கதை தோள் உறும் முன்னர்ப்
பட்டு, உளம் நொந்து பதைத்து, அடல் வஞ்சன்
வட்ட நெடுங் கடலூடு மருத்து அன்று
இட்ட பெருங் கிரி என்ன, விழுந்தான்.

81
உரை
   


ஏற்றத்தோடு இகலி, இவ்வாறு இடை வழிஅதனில் வந்து,
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர்த் திண் திறல்
                அரக்கன்தன்னை,
பாற்றுக்கும், பகு வாய்ப் பேய்க்கும், பருந்துக்கும், 
                வருந்துகின்ற கூற்றுக்கும்,
விருந்து செய்து, அக் கொற்ற வேல் குரிசில் போனான்.

82
உரை
   


வீமன் அளகாபுரியில், தான் நாடி வந்த மலர்
இருக்கும் பொழிலைக் காணுதல்

எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி,
புண்டரீகன்தன் நாடு பொருக்கென நோக்கி, அப்பால்
தெண் திரை அளித்த தெய்வச் செல்வ மா நிதிகள் ஓங்கும்,
அண்டர் மா நகரும் ஒவ்வா, அளகை மா நகரம் கண்டான்.

83
உரை
   


அந்த மா நகரின் தென்பால் அகல் விசும்பு உற
                நின்று ஓங்கும்
விந்தமாம் என்ன நின்று, விளங்கு தோள் வீமசேனன்,
முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி, அந்தக்
கந்த வான் பொழிலும், நல் நீர்க் கடி மலர்த்
                தடமும், கண்டான்.

84
உரை
   


பொழில் காவலாளர் மானுட நாற்றம் அறிந்து திரண்டு
எழுந்து, வீமனைச் சூழ்ந்து, அதட்டி வினாவுதல்

ஆயிடைக் குறுகும் எல்லை,-அப் பொழில் துப்பின் காப்போர்;
சேயிடைப் பரந்த மார்பர்; சேணிடைக் கடந்த தோளர்;
வாயிடைப் பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர்; வஞ்சத்
தீயிடைச் சோரி தோய்ந்து திரண்டெனச் சுழல் செங் கண்ணர்;

85
உரை
   


சூழ் இருட் பிழம்பு நஞ்சு தோய்ந்தன்ன துவக்கர்; உன்னின்
நாழிகை ஒன்றின் எல்லா உலகையும் நலியும் ஈட்டார்;
வாழி மந்தரம் மத்தாக, வாசுகி கயிறா, மாயோன்
ஆழி நீர் கடைந்த நாளும் அமுது எழக் கடைந்த வீரர்;

86
உரை
   


மறத்தொடு வஞ்சம் மானம் நண்பு என வளர்த்து, நாளும்,
அறத்தொடு பகைக்கும் நெஞ்சர்; பிலத்தினும் அகன்ற வாயர்;
புறத்தினில் முகத்தர்; மார்பில் புழை முழை மூக்கர்; இன்ன
திறத்தினர்; குஞ்சிச் செந் தீச் சிரத்தினர்;
                வரத்தின் மிக்கோர்;

87
உரை
   


கரங்கள் ஆயிரத்தர்; நண்ணும் கால்கள்
                ஆயிரத்தர்; குஞ்சிச்
சிரங்கள் ஆயிரத்தர்; பூழைச் செவிகள் ஆயிரத்தர்; வென்றி
உரங்கள் ஆயிரத்தர்; ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற
வரங்கள் ஆயிரத்தர்; மிக்க மறைகள் ஆயிரத்தர் மன்னோ;

88
உரை
   


வைத் தாரை வாளம், வில், வேல், மழு, எழு, திகிரி, சூலம்,
கைத் தாரைபடக் கொண்டு, என்றும், கண்
                இமையாது காப்போர்;
மைத் தாரை மாரி ஒப்பார்;-மானுட நாற்றம் கேட்டு,
மொய்த்தார், அக் கடவுள் வாச மொய்ம் மலர்ச்
                சோலை எல்லாம்.

89
உரை
   


மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல்
                முகக்கும் நீலக்
கொண்டலின் குமுறி ஆர்த்து, குறுகிய, கொடிய நீசர்,
சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி-தனயன் தன்னைக்
கண்டனர், சூல பாசக் காலனைக் கண்டது அன்னார்.

90
உரை
   


'எற்ற!' என்பாரும், 'சூலத்து எறிய!' என்பாரும், 'எய்திப்
பற்ற!' என்பாரும், 'ஆவி பறிக்க!' என்பாரும், 'யாக்கை
சுற்ற!' என்பாரும், 'சென்னி துணிக்க!' என்பாரும், ஆகி,
உற்றனர், அரக்கர் நூறாயிரர், உருத்து, உரைக்கலுற்றார்:

91
உரை
   


'இந்திரன் முதலா உள்ள இமையவர் தாமும், இந்தக்
கந்த வான் சோலை கண்ணால் காணவும் கருதி நைவார்;
வந்தது என், மதி இலாத மானுடா? உன்தன் ஆவி
சிந்து முன் செப்புக!' என்னாத் தெழித்தனர்,
                தீயோர் எல்லாம்.

92
உரை
   


வீமன் அவர் உரை கேட்டுச் சிரித்து, 'உம்மை எல்லாம்
கொன்று, மலர் கொய்து போக வந்தேன்' எனல்

அருள் இலா அரக்கர், இவ்வாறு, அகங்கரித்து,
                அரற்றும் இந்தப்
பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம்
                புகலான் ஆகி,
இருள் இலா முத்தம் அன்ன எயிற்று அரும்பு
                இலங்க நக்கான்-
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும்
                சிவனைப் போல்வான்.

93
உரை
   


'தனித மேகம்போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின்
                          சாய்த்து, இப்
புனித வான் பொழிலில் வாசப் புது மலர் கொய்ய வந்தேன்;
குனி தவர் கொண்டு, முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன்
மனிதனோ, வான் உளானோ? மறத்திரோ?' வஞ்சர்!' என்றான்.

94
உரை
   


அரக்கர் வீமனைச் சூழ்ந்து பொர, அவன் அவர்களை
எல்லாம் தண்டினால் அழித்தல்

மா விந்தம் அனைய பொன்-தோள் மாருதி
                வாய்மை கேட்டு,
' பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி!' என்று
                அழன்று, பொங்கி,
'நா, இந்த உரை தந்து, இன்னும் இருப்பதோ,
                நரனுக்கு?' என்னா,
கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின்
                குழாத்தின் சூழ்ந்தார்.

95
உரை
   


வானகம் மறைய வீசி, வான் படைக் கலங்கள், வால-
சேனனே முதலா உள்ள சேனையின் தலைவர் ஆர்த்தார்;
கானுடைத் தொடையலானும் காலனுக்கு ஆவி அன்ன
தானுடைத் தண்டம் ஏந்திப் புகுந்தனன், சலிப்பு இலாதான்.

96
உரை
   


தண்டினால், அவர்கள் விட்ட படை எலாம் தகர்த்து, மீள
மண்டினான், உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான்;
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்றக்
கிண்டினான்; மூளைச் சேற்றில் கிடத்தினான்,
                படுத்து மன்னோ.

97
உரை
   


தாக்கினான், சிலரைத் தண்டால்; தடக் கையால் சிலரை வானில்
தூக்கினான்; கறங்கின் நின்று சுழற்றினான், சிலரை; எற்றி
நூக்கினான், சிலரை; தாளால் நொறுக்கினான், சிலரை; வாளால்
வீக்கினான், சிலரை; ஆவி வேறு இட்டான், சிலரை;-வீமன்.

98
உரை
   


பிடித்தனன், சிலரை; அள்ளிப் பிசைந்தனன், சிலரை; மண்ணில்
அடித்தனன், சிலரை; அங்கம் அகைத்தனன், சிலரை; எண்ணம்
முடித்தனன், சிலரை; போக முகிழ்த்தனன், சிலரை; கண்டம்
ஒடித்தனன், சிலரை; அஞ்ச உறுக்கினன், சிலரை மன்னோ.

99
உரை
   


கரக் கழுந்து அதனினானும், கன வரைத் தோளினானும்,
வரக் கொடுங் கதையினானும், மராமரப் பணையினானும்,
உரக் கடுங் காலினானும், ஒருக்கினான்; உரைப்பது என்னோ?-
அரக்கரை என்றால், பின்னை விடுங்கொலோ,
                அனுமன் பின்னோன்?

100
உரை
   


பின்னர் எதிர்ந்த நூறாயிர அரக்க வீரரை வீமன்
வில்லினால் பொருது அழித்தல்

இப்படி எதிர்ந்த சேனை யாவையும், இமைக்கும் முன்னம்,
துப்புடன் தொலைத்து, வாயு சுதன் நின்ற உறுதி நோக்கி,
மைப் படி வரைகள் போல்வார், வாள் எயிற்று
                அரக்கர், பின்னும்,
கைப் படை கொண்டு, நூறாயிரர் ஒரு கணத்தில் சூழ்ந்தார்.

101
உரை
   


அவர் வெகுண்டு, அழன்று, மேன்மேல்
                அலை கடல் போல ஆர்த்து,
பவர் கொண்ட பனகம் என்ன, சூழ்வரும் பரிசு பாரா,
கவர் கொண்ட தொடையலானும் கதை ஒழிந்து,
                இலங்கு செங் கைத்
தவர் கொண்டு, நெடு நாண் அண்டம் தகர்தரத் தழங்க
                ஆர்த்தான்.

102
உரை
   


அன்ன நாண் ஓதை, எங்கும், அண்டமும்,
                பொதுளத் தாக்க,
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து
                உயங்கி வீழ,
துன்னும் வாய் நஞ்சு கக்கி, சுழன்று, மண்
                சுமக்கும், கொற்றப்,
பன்னகாதிபனும், உள்ளம் பதைத்து, வெம்
                படங்கள் சோர்ந்தான்.

103
உரை
   


உரம் படச் சரங்கள் மேன்மேல் உறுக்கி,
                வெல் வீமன் உந்த,
சிரங்களில், தோளில், மார்பில், கண்களில்,
                செருகச் சென்று,-
கரன் படைக் குழாத்து, முன்னம் காகுத்தன்
                திர் கொள் கூர் வாய்ச்
சரம் பட, தளர்ந்தது என்ன,-தளர்ந்தது, அத் தளர்வு
                இல் சேனை.

104
உரை
   


சக்கரம், சூலம், பாசம், தண்டம், வேல், கப்பணம், வாள்,
முற்கரம், கணையம், விட்டேறு, எழு, கொழு,
                முசுண்டி, குந்தம்,
எக் கரங்களினும் ஏந்தி, யாவரும் இவன்மேல் ஏவி,
அக் கணம்தன்னில், மீண்டும் அகங்கரித்து,
                ஆர்த்த காலை,

105
உரை
   


அப் படைத் தொகைகள் எல்லாம் அறுத்து அறுத்து,
                          அவர்கள் தம்தம்
மெய்ப் படச் சரங்கள் சிந்தி, சிரங்கள் வெவ்வேறது ஆக்கி,
இப்படிக்கு அரக்கர் சேனை யாவையும் துணித்து, மீண்டும்
செப்படிப்பவரின் நின்று, சிரித்தனன்,-சிங்கம் போல்வான்.

106
உரை
   


காவலாளர் குபேரனிடம் ஓடி நிகழ்ந்தன தெரிவிக்க, அவன்
வெகுண்டு, வீமனைக் கட்டிக் கொணருமாறு
சங்கோடணனை ஏவுதல

அந்த வயப் படை அவ்வாறு ஆதல் கண்டு,
கந்த மலர்ப் பொழில் காக்கும் காவலாளர்,
புந்தி மயக்கு உற நொந்து, புகுந்த எல்லாம்
முந்தி, இயக்கர் பிரானுக்கு, ஓடி, மொழிந்தார்:

107
உரை
   


'எம் பெருமான்! இது கேட்டி!' என்று இறைஞ்சி,
'வம்பு அவிழ் சோலையிடத்து ஒர் மனிதன் வந்து,
பம்பிய சேனையிடத்து, ஏழ் மதமும் பாயும்
உம்பலின், வாவி புகுந்து, உழக்குகின்றான்.'

108
உரை
   


என்று, அவர் வாய் கை புதைத்து, இசைத்தல் கேட்டு,
குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு,
கன்றிய சிந்தையன், அங்கி கால் செங் கண்ணான்,
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து, உரைத்தான்:

109
உரை
   


தன் துணை நின்ற சங்கோடணனை நோக்கி,
வன் திறல் கூர் அடல் வேக மனிதன்தன்னை,
சென்று, அவன் ஆவி செகுத்தல் செய்யாது, இன்னே
துன்று புயங்கள் துவக்கி, எய்தச் சொன்னான்.

110
உரை
   


சங்கோடணன் சேனைகளுடன் சென்று வீமனை வளைத்தல்

அந்த இயக்கர் பிரானும் அக் கணத்தில்
வந்து, நிதிக் கிழவன்தன் பாதம் மன்னி,
துந்துபி கொட்ட, அளப்பு இல் சேனை சூழ,
உந்தி, இமைப்பில் மலர்த் தண் சோலை உற்றான்.

111
உரை
   


மன்னு குருக்கள் குலத்து மன்னர் மன்னன்
தன்னை, இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர்,-
துன்னு படைக் கடலோடும், பொங்கிச் சூழ்ந்தார்-
மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார்.

112
உரை
   


மான அரக்கர் குலத்தை வானில் ஏற்றி,
ஊனொடு இரத்தம் உகுக்கும் சோலையூடே,
தானை வளைத்திட, நின்ற சாப வீரன்,
யானைஇனங்கள் வளைக்கும் யாளி போன்றான்.

113
உரை
   


வீமன் சரங்களைப் போக்கி, சேனைகளை நிலைகெட்டோடச்
செய்ய, சங்கோடணனும் புறங்கொடுத்தல்

விண்ணில் இயக்கர் படைக் கலங்கள் வீசி,
எண் இலர் சுற்றும் வளைத்து எதிர்ந்த போதில்,
வண்ண வரிச் சிலை கோலி, வாயு மைந்தன்,
துண்ணென உட்க, வடிச் சரங்கள் தொட்டான்.

114
உரை
   


தொட்ட சரங்கள் துளைத்து, மார்பும் தோளும்
முட்ட, விசும்பினது எல்லை எங்கும் மூட,
பட்டது ஒழிந்து, படாத சேனை எல்லாம்
கெட்டன; பட்டது உரைக்க உண்டோ, கேட்கின்?

115
உரை
   


மன் அளகாபதி சேனை நாதன் மார்பில்
தன் அடையாளம் உற, தண்டாலே தாக்க,
மின் இடை நாகம் வெருக் கொண்டென்ன மீண்டான்,
தன் எதிர் வீரர் இலாத சங்கோடணன்தான்.

116
உரை
   


'வீமனுடன் சமாதானம் செய்யவேண்டும்'
எனச் சங்கோடணன் குபேரனுக்குக் கூறுதல

கருத்தொடு சென்று, அளகேசன் பாத கமலம்
சிரத்தினில் வைத்து, இவை நின்று செப்பலுற்றான்-
'உருத்திரன் மானுட உருவம் கொண்டது; அன்றேல்,
வரத்து இவன் மானுடன் அல்லன்; மன்ன!' என்றே.

117
உரை
   


'பண்புடன், இக் கணம், வேண்டும் நிதிகள் பலவும்
நண்பொடு அவற்கு எதிர் சென்று நல்காய் என்னின்,
விண் புகும் இப் புரம்; வேந்த!' என்றான்-மெய்யில்
புண் புக, உட்கி, உழைக்கும் வேழம் போல்வான்.

118
உரை
   


வீமன் விருப்பம் அறிய, குபேரன் தன் மகன்
உருத்திரசேனனை அனுப்புதல்

கோதில் இயக்கன் யாவும் கூறக் கேட்டு,
தாதை, உருத்திரசேனன் தன்னை நோக்கி,
'மாதர் மலர்ப் பொழிலூடு வந்த மனித்தன்
ஏதில் அருத்தியன் என்னக் கேட்டி!' என்றான்.

119
உரை
   


உருத்திரசேனன் வீமனைக் கண்டு வினாவி, அவன்
வந்த காரியம் அறிந்துகொள்ளுதல்

தந்தை உரைத்தருள் வாய்மை தலைமேல் கொள்ளா,
மைந்தனும், அப் பொழிலூடு சென்று மன்னி,
சிந்தி, அரக்கர் சிரங்கள் குன்றம் செய்து,
கந்தனின் நிற்கும் மறத்தினானைக் கண்டான்.

120
உரை
   


கண்டு, மருத்து அருள் காளைதன்னை நோக்கி,
'வண்டும் இடைப் பயிலாத காவில் வந்து,
மிண்டும் அரக்கர் குலத்தை வீணே ஆவி
கொண்டு படுத்தனை; யார் நீ? கூறுக!' என்றான்.

121
உரை
   


'நின் அளகாபதி மைந்தர் சாபம் நீக்க,
முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு
இன் அருள் மைத்துனன்; மண்ணில் யாரும் போற்றும்
மன்னவன்; வீமன்; மருத்தின் மைந்தன்' என்றான்.

122
உரை
   


'மாயவன், அற்புதன், நாதன், கண்ணன், வையம்
தாயவன், மைத்துனன் ஆகின், ஐய! தனி நீ
ஏய வனத்தினில் வந்தது என்கொல்?' என்றான்;
தூயவன், உற்றன யாவும் தோன்றச் சொன்னான்.

123
உரை
   


உருத்திரசேனன் வீமன் விரும்பிய மலரை வழங்கி,
தந்தையிடம் சென்று, செய்தி தெரிவித்து இருத்தல்

மற்று அவன் அவ் உரை கூற, மகிழ்வொடு அம் தண்
பொன்தரு நண்பின் வழங்கி, 'போக!' என்று அருளி,
வெற்றி உருத்திரசேனன் மீண்டு வந்து, ஆங்கு
உற்றது, தாதைதனக்கு உரைத்து, இருந்தான்.

124
உரை
   


மலர் பெற்ற வீமன் பொய்கையில் நீராடி, இளைப்பாறுதல்

அண்ணல்-தருப் பெற்ற பின், அந்த வய
               
மீளி,-அக் காவினில்,
தண் நித்திலப் பொய்கை படிவுற்று, இன் அமுது அன்ன
                
தண்ணீர் குடித்து,
எண் அற்ற கழுது ஆடல் அது கண்டு, இருந்து,
                
அங்கு இளைப்பாறினான்-
மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கும் உறவான
               
வடி வாளினான்.

125
உரை
   


தருமன் வீமனைக் காணாது, திரௌபதியிடம் வினவி,
நிகழ்ந்தன அறிதல

இவ்வாறு இவன் செய்கை; இவன் வந்தது அறியாமல்,
                எழில் கூர் வனத்து
அவ்வாறு பயில்கின்ற அருள்வாரிதான் உற்ற அது கூறுவாம்:
கை வார் கதைக் காளையைக் கண்ணுறச் சூழல் காணாது, முன்
செவ் வாய் மடப் பாவை நின்றாளை, 'நீ கூறு'
                எனச் செப்பினான்.

126
உரை
   


வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின்
                போல வந்துற்றதும்,
தான் நின்று, 'இம் மலர் போல மலர் தேடி நீ
                இன்று தருக!' என்றதும்,
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர்
                மீது தனி சென்றதும்,
கான் நின்ற குழலாளும், மன்னற்கு முன்
                கட்டுரைத்தாள்அரோ.

127
உரை
   


விசயன் பிரிவால் உளம் நொந்திருந்த தருமன், வீமன்
பிரிவு கேட்டு மேலும் வருந்துதல

கருமத்தின் வடிவான மட மங்கை இவ்வாறு கழறாத முன்,
உருமுத் துவசன் மைந்தன் முன் போக, அன்போடும்
                உளம் நொந்துளான்,
மருமத்து வேல் தைத்த புண்மீது கனல் உற்றது
                என, மாழ்கினான்-
தருமத்தின் உரு ஆகி, எழு பாரும் நிலையிட்ட
                தனி ஆண்மையான்.

128
உரை
   


கடோற்கசனைத் தருமன் நினைந்த அளவில், அவன் வந்து
தருமனை வணங்க, வீமனைத் தேடி அவனுடன்
அளகை நோக்கிப் புறப்படுதல்

வாளிப் பரித் தேர் மன் இவ்வாறு துயர் எய்தி,
                மனனம் செய,
கூளிக் குழாம் வானின்மிசை உய்த்தது என்ன,
                கொடித் தேரின்மேல்
காளக் கருங் கொண்டல்போல் வந்து, வீமன்
                தரும் காளை, முன்,
ஆளிப் பெருங் கொற்ற வெற்றித் திருத்தாதை
                அடி மன்னினான்.

129
உரை
   


மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்கொல் என
                வந்து, முன்
நின்றானை முகம் நோக்கி, நீதிக்கு ஒர் வடிவாம் மன்
                இவை கூறுவான்:
'உன் தாதை தமியேனொடு உயவாமல், ஒரு வாச
                மலர் கொண்டிடச்
சென்றான்' என, சிந்தை நொந்து, அன்புடன் பின்னும்
                இவை செப்புவான்:

130
உரை
   


'எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன்,
                யாம் இயக்கேசன் ஊர்
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி, விரைவோடு
                வருவோம்' எனா,
வெம்புற்ற பைங் கானினிடை, மின்னும், இளையோரும்,
                உடன் மேவவே,
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின்மீது அக்
                கணத்து ஏறினான்.

131
உரை
   


கரக் கும்ப கம்பக் கடா யானை மன்னன்
                கருத்தோடு சென்று,
அரக்கன் தடந் தேரில் அவனோடும் நீடு
                அந்தரத்து ஏகினான்-
பரக்கும் பெரும் புண்யமும் பாவமும், தாவில்
                பகிரண்டமும்
புரக்கும் பரஞ்சோதியும் பொங்கும் மா
                மாயையும், போலவே.

132
உரை
   


கடோற்கசன் தேரில் வான் வழியாக நாலு நாழிகைக்குள்
வீமன் இருந்த சோலையைத் தருமன் அடைதல்

கான் எல்லை செல்லாது, கதிரோன் நெடுந் தேர்
                என, கங்கை சேர்
வான் எல்லை உற ஓடி, ஒரு நாலு கடிகைக்குள்,
                வயம் மன்னு தேர்
ஊன் எல்லை இல்லாது புக மண்ட, மிக
                மண்டும் உதிரத்துடன்,
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெருஞ் சூழல்
                சென்று உற்றதே.

133
உரை
   


தருமனும் கடோற்கசனும் வீமனைக் கண்டு இன்புறுதல்

ஆனைக் குழாம் நூறும் அரி ஏறு எனப் பொங்கி,
                அளகேசன் வெஞ்
சேனைக் குழாம் நூறி, அதனூடு பயில்
                வாயு-சிறுவன்தனை,
தானைப் பெருங் கொற்ற மன் கண்டு, தான்
                உற்ற தளர்வு ஆறினான்;
ஏனைத் திருத் தாதையைக் கண்டு, தேர் நின்று
                இழிந்து, இன்புறா,

134
உரை
   


மலர் கொண்டு பாதம் வணங்கிய வீமனைத் தருமன் தன்
ஏவலின்றி வந்தமை குறித்துச் சினத்தல்

மைக் காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன,
                வய வீமனும்
கைக் கானின் நறை வாச மலர் கொண்டு, அறன் காளை
                கழல் நல்கியே,
முக் காலும் வலம் வந்து, முறையோடு தொழுவானை,
                முகம் நோக்கி நின்று,
எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும்
                இவை கூறுவான்:

135
உரை
   


'என் ஏவலால் அன்றி, இமையோரும் எய்தாத
                இக் காவில், நீ
மின் ஏவலால் வந்து, விரகாக வினை செய்த
                இது மேன்மையோ?
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார்' என்று
                உருத்தான்அரோ-
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த
                தனி ஆழியான்.

136
உரை
   


சினம் ஆறி, தருமன் வீமனுடன் கடோற்கசன் தேரில் ஏறி,
தம்பியர் இருக்கும் வனத்தை அடைதல்

என்று இந்த உரை கூறி, முனிவு ஆறி,
                இறையோனும், இகலோனுடன்
சென்று, அம் தண் மலர் வாவி படிவுற்று,
                வாசத் திருத் தார் புனைந்து,
அன்று அந்த இடம் விட்டு, இமைப்போதில்,
                அத் தேரின்மிசை ஏறியே,
மின் தந்த இடையாளும் இளையோரும் உறை
                கானினிடை மேவினான்.

137
உரை
   


உரோமச முனிவனை வணங்கி, திரௌபதி மகிழ மலர் அளித்து,
கடோற்கசனுக்கு விடை கொடுத்து அனுப்புதல

மேவி, பெருந் தெய்வமுனி பாதமலர் சென்னிமிசை
                வைத்து, மென்
காவிக் கயல் கண் இணைச் சேயிதழ்ப் பாவை
                களி கூரவே,
வாவிச் செழுந் தாம மலர் நல்கி, ஒல்காது வலி
                கூரும் நல்
ஆவிக்கு இன் அமுதான நிருதற்கு விடை அன்று
                அளித்தான்அரோ.

138
உரை
   


திரௌபதியும் தருமன் முதலியோரும் வனத்தில் வாழ்ந்த வகை

மின் புரை மருங்குல் மின்னும், வேந்தரும், அந்தக் கானில்
அன்புடை முனிவன் கூற, அவன் மலர்ப்பாதம் போற்றி,
துன்பமும் துனியும் மாறி, நாள்தொறும் தோகைபாகன்
தன் பெருங் கதையும் கேட்டு, தங்கினர் என்ப மாதோ.

139
உரை