15. சடாசுரன் வதைச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

அழுதும், வாள் முறுவல் அரும்பியும், களித்தும்,
                                        ஆடியும், பாடியும், மகிழ்ந்தும்,
தொழுதும், ஆதரித்தும், விழுந்தும், மேல் எழுந்தும், துதித்திட,
                                        தன் பதம் தருவான்-
முழுதும் ஆய், ஓங்கும் முச்சுடர் ஆகி, மூலம் ஆய், ஞாலம்
                                        ஆய், விண் ஆய்,
எழுத ஒணா மறைக்கும், எட்ட ஒணா வடிவத்து எம்பிரான்,
                                        உம்பர் நாயகனே.

1
உரை
   


முனிவர் விலங்குகளினால் துன்புற்று, தருமனிடம் அபயம் புக,
அவன் அவர்களது குறை

இந்த நீள் வனத்தில் மன்னவர் இவ்வாறு இன்பம் உற்று
                                    இருந்த அந் நாளில்,
அந்த மா வனத்தின் சூழலில் பயிலும் அருந்தவ
                                    முனிவரர் பலரும்,
தந்தி, பேர் உழுவை, ஆளி, எண்கு, இவற்றால் தாம்
                                    இடர் உழந்து, மெய் தளர்ந்து,
வந்து, 'மா மகிபர்க்கு அபயம்!' என்று, அவர் வாழ்
                                    வனத்திடைப் புகுந்து மன்னினரால்.

2
உரை
   


அருந் தவ முனிவர் எனைப் பலர், இவ்வாறு, 'அபயம்!'
                                    என்று அழுங்கு சொல் கேட்டு,
பெருந் திறல் அரசன் அவர் பதம் வணங்கி, '
                                    பேசுக நும் குறை!' என்ன,
பொருந்திய கொடிய விலங்கினால் தமக்குப் புகுந்துள
                                    யாவையும் புகன்றே,'
வருந்திய துயரம் தவிர்த்தி, நீ!' என்றார்; மன்னனும்,
                                    அக் குறை நேர்ந்தான்.

3
உரை
   


முனிவர் துயர் தீர்க்க வீமனை அனுப்பி, தருமன் இருந்த
பொழுது, சடாசுரன் அங்கு வந்து வஞ்சனை புரிதல்

மறத்துடன் தொழுது, வணங்கி முன் நின்ற வாயுவின்
                                    மதலையை நோக்கி,'
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ, ஐய! சென்று தீர்த்திடுக'
                                    என்று ஏவி,
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன்
                                    ஆங்கு இருந்துழி, வந்து,
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும், புரிந்ததும்,
                                    புகலலாம் அளவோ?

4
உரை
   


சடாசுரனின் தோற்றம்

தோள் இரண்டினும் நாள்தொறும் இரண்டு அம் தண்
                                    சுரும்பினை விரும்பினன் சுமந்து,
தாள் இரண்டு உடையது ஒரு கருங் குன்றம் சரிப்பபோல்,
                                    அகண்டமும் சரிப்பான்;
கோள் இரண்டு அஞ்சி, பிறை இரண்டு, அகல் வான்
                                    குகையிடைப் புகுவதே போல,
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா
                                    வழங்கிய வாயான்;

5
உரை
   


முருக்கின் நாள்மலரும் கறுத்திடச் சிவக்கும் மொய் அழல்
                                    பெய் செழுங் கண்ணன்;
அரக்கினால் உருக்கிக் கம்பி செய்தென்ன அவிர் பொலம்
                                    குஞ்சியன்; வஞ்சத்
திருக்கினால், அறங்கள் யாவையும் செகுக்கும் தீயவன்;
                                    தீமையே புரிந்து,
தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன்
                                    எனும் பெயர்ச் சழக்கன்-

6
உரை
   


சடாசுரன் திரௌபதியை வஞ்சமாய் வானத்தில் கொண்டு
செல்ல, நகுல சகாதேவர் வில்லேந்தி
அவனைத் தொடர்தல்

அந்தணர் வடிவம் கொண்டு, இலங்கையில் வாழ் ஆதி வாள்
                                    அரக்கனைப் போல,
செந் தழல் அளித்த மட மயில் இருந்த சிற்ப வண்
                                    சாலையின் எய்தி,
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியா-வகை
                                    ஒரு கோள் மறை பிதற்றி,
பைந்தொடிதனைக் கொண்டு, அந்தரம் தன்னில் பறந்தனன்,
                                    பழி உணராதான்.

7
உரை
   


'அபயம்!' என்று அவள் அந்தரத்தின்மீது அரற்றும்
                                    அவ் உரை கேட்டு, மாத்திரிதன்
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி, உருத்து எழுந்து,
                                    உரும் என ஓடி,
இபம் நடுங்கிட, முன் வளைத்திடும் கொற்றத்து யாளிபோல்
                                    இரு புறம் சூழ்ந்து,
நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர்
                                    நின்று, இவை நவில்வார்:

8
உரை
   


நகுல சகாதேவர் நிருதனைப் பழித்துக் கூறி, சரமாரி ஏவ,
அரக்கனும் கனன்று எதிர்கின்ற எல்லையில், மீண்டு
வரும் வீமன் காணுதல்

'மறையவர் வடிவம் கொண்டு வந்து, அருள் இல் வஞ்ச!
                                    நீ வஞ்சனையாக,
பிறர் பெருந் தாரம் வௌவி, அந்தரத்தில் பெயர்வது,
                                    பெருமையோ? பித்தா!
நெறி அலா நெறி செய்து, உன் குலத்து ஒரு போர் நிருதன்
                                    முன் பட்டது நினையாய்;
முறை அலாது இயன்று, உன் உயிரினை முடிக்கும்
                                    முரணுடைத் தறுகண் மா மூர்க்கா!'

9
உரை
   

என்று இவ்வாறு உரைத்து, சரத்தின் மா மாரி
                              இருவரும் விரைவுடன் ஏவ,
கன்றி, வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து,
                              கண் சிவந்து உருத்து எழும் எல்லை
ஒன்றி வாழ் மறையோர் அருந் துயர் ஒழித்து, ஆங்கு ஒரு
                              நொடிப் பொழுதினில் மீளும்
வென்றி வாள் வீமன், உற்றதும், நிருதன் வெகுள்வதும்,
                              விசும்பிடைக் கண்டான்.
10
உரை
   


வீமன் சினம் மிக்கு, சடாசுரனை நெருங்கி அடர்த்தல்

கண்டனன், இரண்டு கண்களும் கருத்தும் கனன்று,
                                  செந் தீச் சுடர் கால,
கொண்ட வெஞ் சினத் தீக் கதுவி, எண் திசையும் குலைகுலைந்து
                                  உடன் வெரூஉக் கொள்ள,
அண்டமும் குலுங்க நகைத்து, எதிர்ந்து, உரப்பி, ஆர்த்தனன்;
                                 அழன்று, தோள் கொட்டி,
மண்டி, மேல் நடந்தான்; உகாந்த காலத்து மருத்தென,
                                  மருத்தின் மா மைந்தன்.

11
உரை
   


'பகன், விறல் இடிம்பன், பண்பு இல் புண்டரீகன்,
                                  இவர் உயிர் பறித்து, அளகேசன்
நகரிடை அரக்கர் யாரையும் சேர, நல் உயிர்
                                  ஒல்லையில் செகுத்து,
வகைபட மறலியுடன் உறவு ஆக்கி, வான் உலகு
                                  அளித்தனன்; நின்ற
சிகை உனது உயிரும் இக் கணத்து அளிப்பன்,
                                  தென்புலக் கிழவனுக்கு!' என்னா,

12
உரை
   


அழன்ற அசுரன் திரௌபதியை விடுத்து, வீமனுடன் பொருது அழிதல்

நெடும் பணைப் பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை
                                  நேர்ந்தது; அங்கு அதனைப்
பிடுங்கினன்; விசும்பில் எறிந்து, அவன்தன்னைப் பிளந்தனன்;
                                  பிளந்த அப் பொழுதில்,
அடும் படைத் தடக் கை அரக்கனும் திருகி, அணங்கை விட்டு,
                                  அக் கணத்து அழன்று,
படும் பணைக் குன்றம் ஒன்று வேரோடும் பறித்து,
                                  அவன்மேல் பட எறிந்தான்.

13
உரை
   


விட்ட குன்றினைத் தன்மேல் படாவண்ணம்
                                  விசும்பிடைப் பொடிபடக் கதையால்
தொட்டனன்; பின்னும், விசும்பில் நின்றவன்தன் தோள்
                                  இணை ஒசிதரத் தாவி,
கட்டினன், குறங்கைக் குறங்கினால் வீசி, கம்பம் உற்று,
                                  அகிலமும் கலங்கக்
கிட்டினன்; தலத்தின்மிசை அடல் அரக்கன் கீழ்ப்பட,
                                  மேற்பட விழுந்தான்.

14
உரை
   


முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை, வெள்ளி மால் வரை
                                  முனிந்தது என்று, அதற்குப்
பொன்னின் மால்வரை ஓர் அரக்கனைத் தானும் புவிப்படுத்து,
                                  அரைப்பதே போல,
கன்னம் வாய் நெரியக் கரங்களால் மலக்கி, கழுத்தையும்
                                  புறத்தினில் திருப்பி,
துன்னு தோள் இணையும் தாளும் வன் நெஞ்சும்
                                  சுளிதரத் தாளினால் துகைத்தான்.

15
உரை
   


விழுந்த வாள் அரக்கன் தருக்கு நெஞ்சு ஒடிந்து, வெகுண்டு,
                                  இவன்தனைத் தளி, மீண்டும்,
எழுந்து, தோள் கொட்டி, ஆர்த்து, அழன்று, உரும்ஏறு
                                  எனக் கொதித்திடுதலும், வீமன்,
அழுந்த வெவ் விரலால் பிடித்து, அவன் அகலத்து அடிகொடு
                                  மிதித்து, வெண் பிறையின்
கொழுந்துபோல் எயிறு ஓர் இரண்டையும், கஞ்சன் குஞ்சரம்
                                  எனப் பிடுங்கினனால்.

16
உரை
   


புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும்
                                  போன வாள் நிருதன்,
நிலவு இலா நிசியும், மின் இலா இடிகொள் நீல மா முகிலையும்,
                                  நிகர்த்தான்;
குலவு தோள் வாயுகுமரன்மேல் மீளக் கொதித்து எழுந்து,
                                  இரு கரம் கொண்டு,
மலையின்மேல் உரும் உற்றென்ன, மற்று அவன்தன் மார்பகம்
                                  சுழிதரப் புடைத்தான்.

17
உரை
   


முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும்,
                                  முறை முறை ஆக,
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன
                                  வல்லன புரிந்து,
கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப, கரம் கரத்தொடு
                                  நனி பிணங்க,
ஒட்டியே முடுகி, ஒருவருக்கு ஒருவர் உரத்துடன்
                                  மோதினார், உரவோர்.

18
உரை
   


முருக்கி, வெஞ் சமரம் இவ்வகை வெம் போர் மொய்ம்பன்
                                  நீடு உயர் முழந்தாளால்,
அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு, அவன்தன் அவயவம்
                                  யாவையும் ஒன்றாச்
சுருக்கி, அந்தரத்தில் சுழற்றினன், எறிந்தான்-தொடு கழல்
                                  இராகவன் தம்பி
குரக்கு நாயகன்முன் விரலினால் தெறித்த குன்று எனச் சிந்தி
                                  வீழ்ந்திடவே.

19
உரை
   

எறிந்த வாள் அரக்கன் விசும்பினது எல்லை எவ்வளவு,
                                  அவ்வளவும் போய்,
மறிந்த மால் வரைபோல் மீளவும் புவிமேல் மாசுணம்
                                  நடுங்குற வீழ்ந்து,
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த, தென் புலத்து
                                  இமைப்பினில் சென்றான்;-
அறம் துறந்து என்றும் அடாதன செய்தால், ஆர்கொலோ,
                                  படாதன படாதார்?
20
உரை
   


திரௌபதியையும் தம்பியரையும் கொண்டு, தமது
இருப்பிடத்தை வீமன் அடைதல்

வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும், வஞ்சக்
கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா
நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும், நிகர்த்தாள்-
காள விடம் உண்டு, அமுது அடக்கும் இரு கண்ணாள்.

21
உரை
   


அடாது செய் சடாசுரனது ஆவியையும், அம் பொன்
படா முலைகள் தாமுடைய பைந்தொடியையும், போய்த்
தடா, அமர் விடாதுடைய தம்பியரையும், கொண்டு-
இடா,-விறல் கொள் மாருதி-இருக்கும் வனம் உற்றான்.

22
உரை
   


வீமன் தருமனைத் தொழுது நிகழ்ந்தன கூற, தருமன்
எல்லோருடனும் பதரிகாச்சிரமத்தை அடைதல்

உற்றபடி தம்முன் இரு தாள் தொழுது உரைத்தான்;
மற்று அவனும் அங்கு உறையும் மா முனிவரோடும்
கொற்றம் மிகு தம்பியரொடும் குழுமி, அன்றே
நல் தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி,

23
உரை
   


அங்குச் சில நாள் தங்கிய பின், அஷ்டகோண முனிவன்
வைகும் வனத்தை அடைதல்

அங்கு அவன் மலர்ப்பதம் வணங்கி, அருள் பெற்று,
கங்கை வள நாடர் கலை தேர் முனிவரோடும்
தங்கினர்கள், சிற்சில் பகல்; தங்கியபின், அப்பால்,
சிங்கம்என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார்.

24
உரை
   


ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டுக்
கோண் உடைய மா முனி வனம் குறுகி, அன்னான்
மாணுடை மலர்ப்பதம் வணங்கினர், துதித்தார்;
தாணு அனையானும் அவர்தம்மை எதிர்கொண்டான்.

25
உரை
   


அப்பொழுது, வானுலகம் அதனினிடைநின்றும்
மைப் பொலியும் மேனி விசயன் வனம் அடைந்தான்;
செப்ப அரிய ஐவர்களும், தேவியுடனே அவ்
ஒப்பு அரிய தெய்வ வனம் ஒன்றினர், உறைந்தார்.

26
உரை
   


அன்பொடு ஒரு நாள் என, அனந்த நெடு நாள், அங்கு
இன்பமொடு இருந்தனர்கள், எக் கதையும் கேட்டு; ஆண்டு
ஒன்பது கழித்தனர்கள், இவ்வகை ஒருங்கே;
பின்பு, அவண் நிகழ்ந்தது ஒரு பெற்றி உரைசெய்வாம்:

27
உரை