16. நச்சுப் பொய்கைச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

சேய பங்கயச் சிறு விரல் அங்கையில் திரட்டிய நறு வெண்ணெய்
ஆயர் மங்கையர் இட இட, அமுது செய்து, ஆடிய திருக்கூத்தும்,
நேயமும், குறு முறுவலும், புரிந்து பார்த்தருளிய நெடுங் கண்ணும்,
மாயவன் திருவடிவமும், அழகும், என் மனத்தை விட்டு அகலாவே.

1
உரை
   


விண்டுசிந்த முனிவன் வாழும் காட்டை அடைந்து,
பாண்டவர் இனிது இருத்தல்

வண்டு சிந்திய மதுத் துளி முகில் பொழி மழைத் துளியொடும் சேர்ந்து,
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைங் கானிடை, கழி கேள்வி
விண்டுசிந்தன் என்று ஒரு முனி அருந் தவ விபினம் மேவினராகி,
கொண்டு சிந்தனை அற இருந்தனர், குலக் குந்தி முன் பயந்தோரே.

2
உரை
   


பாண்டவரைக் கொல்லுதற்குத் துரியோதனன் முதலிய
நால்வரும் சூழ்ச்சி செய்தல்

ஆண்டு, மற்று அவர் உறைதருகாலையில், அரவ வெங் கொடியோனும்,
மூண்டு அழற் பொறி கன்றிய மனத்தினர் மூவரும், உடன் முன்னி,
'மீண்டும் இப் புவி வேண்டுவர், இருக்கின்; நாம் விரகுடன் முற்கோலிப்
பாண்டு புத்திரர்க் கோறும்' என்று, அருள் இலாப் பாவியர் துணிந்தாரே.

3
உரை
   


துரியோதனன் ஒரு முனிவனை அனுப்பி, காளமாமுனியை
வரவழைத்து, அவனை வணங்கி, 'என்னை
ஈடேற்றவேண்டும்' எனல்

'காளமாமுனிதனைக் கொடு வருக!' என, கலந்த நீற்று ஒளி கூரும்
தூள மா முனி ஒருவனோடு, அறிவு இலாச் சுயோதனன் உரைசெய்ய,
வாள மா நிலம் முழுதுடை மன்னன்இல் வந்தனன், விரைவில் போய்,
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும், விடுத்த மா முனி அம்மா.

4
உரை
   

ஒரு முனிக் கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம்
பெரு முனிக்கு அளித்து, இறைஞ்சி, 'நீ புரி தவப் பெருமையால் வளர்கின்றது,
இரு நிலப் பரப்பு எங்கும், என் ஆணையே; என்னை நீ ஈடேற்றத்
திருவுளத்து அருள்செய்குக!' என, அவன் சேவடிகளில் வீழ்ந்தான்.
5
உரை
   


'அழைத்தது ஏன்?' என்ற முனிவனுக்குத் துரியோதனனது
குறிப்பால், சகுனி, 'இவன் பகை களைக!' எனல்

நன் கலா விதம் அனைத்தையும் தெரிக்கும் நல் நாவுடை முனி, 'என்னை
என்கொலாம் இவண் அழைத்தது இன்று?' என, அவன் இருந்த மாமனை நோக்க,
தன் கல் ஆம் மனம் தோன்ற, அச் சகுனி, அத் தவ முனிவனைப் போற்றி,
'மின் குலாவரு வேணியாய்! நீ இவன் வெம் பகை களைக!' என்றான்.

6
உரை
   


'பாண்டவரை அழிக்க வஞ்சக வேள்வி இயற்ற வேண்டும்' என,
முனிவன் வருந்தி, அதன் விளைவு பற்றிக் கூறுதல்

கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அக் கொடிய பாவியும, 'ஐவர்
விடுத்த பார் இனம் வேண்டுவர், இருக்கின்; அவ் வேந்தரை விண் ஏற்றற்கு
அடுத்த ஓமம் வஞ்சகங்களால் இயற்றுதிஆயின், இவ் எழு பாரும்
கொடுத்தி நீ, நிலை பெற, அரவு எழுதிய கொடியவன்தனக்கு' என்றான்.

7
உரை
   


கன்னன் வாசகம் கேட்டபோது, இரண்டு தன் கன்னமும் நெருப்புற்றது
என்ன வேவ, ஐம் புலன்களும் நெஞ்சமும் இடியின்வாய் அரவு ஒத்தான்;
பின்னை யாது அவன் உரைப்பது? 'தவங்களும் பெருந் தகைமையும் பொன்றி,
முன்னர் ஏழ்-எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த, இன்று' என முன்னி,

8
உரை
   

'எண் வகைப் பெருந் திசையினும் நினது பேர் இசை இலாத் திசை இல்லை;
மண் அனைத்தும் நின் தனிக் குடை நிழலிலே மனு முறைமையின் வாழும்;
கண்ணல் உற்றது இக் கருமம், நீ எக் குறை கண்டு? வெங் கழற் காலாய்!
விண்ணகத்து நான் ஏற்றுதல் புரியினும் வீவரோ, வீவு இல்லார்?
9
உரை
   

'தொடங்கி யான் புரி தீவினை, என்னையே சுடுவது அல்லது, கொற்ற
மடங்கல் போல்பவர் தங்கள்மேல் செல்லுமோ? மாயவன் இருக்கின்றான்;
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி,
விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து, நான் வீவதே மெய்' என்றான்.
10
`
உரை
   

யாவரும் வணங்கி வேண்டவே, முனிவன் இசைந்து, வேள்வி
இயற்ற மலைப் புறத்தைச் சார்தல்

அசைவு இலா மனத்து அருந் தவ முனிவனை அனைவரும் பணிந்து, ஏத்தி,
இசையுமாறு செய்து, ஓம வான் பொருள்களுக்கு யாவும் வேண்டுவ நல்க,
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவச் செல்வனும் சென்றான்; வெவ்
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து, தன் மனை புக்கான்.

11
உரை
   


போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை, மிடை நெடுங் கள்ளிக்
கானமானது புகுந்து, பாரிடங்களும் கழுகு இனங்களும் துன்றி,
யானை ஓடிட நரி துரந்திடும் நிலத்து, எரி வெயில் கழை முத்தம்
வான் எலாம் நெடுந் தாரகைபோல் எழும், மால் வரைப் புறம் சார்ந்தான்.

12
உரை
   


முனிவன் ஓமம் புரிய, அதினின்றும் எழுந்த பூதத்தைக்
கண்டு முனிவன் நடுங்குதல்

அண்டர் யாவரும், மானுட முனிவரும், அகலிடந்தனில் மற்றும்
கண்ட கண்டவர் யாவரும், வெருவர, கடும் பலி பல நல்கி,
உண்டியால் வளர்ந்து, ஆர் அழல் கோளகையூடு உறும்படி, ஓம
குண்டம் எவ்வளவு அவ்வளவு இந்தனம் கொடுந் தருக்களில் சேர்த்தான்.

13
உரை
   


மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்தம்மில்,
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு, ஆசு அறு சடங்கமும் தப்பாமல்,
தொக்க மந்திரம் ஒன்றினுக்கு ஓர் எழு சுருவையின் நறு நெய் வார்த்து,
ஒக்கமந்திரம் அனைத்தினும் கொடுமை கூர் ஓமமும் புரிந்தானே.

14
உரை
   

தன் தன் இச்சையின் அன்றி, ஏழ் கடலுடைத் தராதலம்தனை ஆளும்
மன்தன் இச்சையின் புரியும் அவ் வேள்வியில், வந்துறு பெரும் பூதம்
சென்று, எயிற்று இள நிலவு எழ, துணை விழி தீ எழ, வெயில் வாய் கார்க்
குன்று எனப் பொலிந்து எழுந்தது; முனிவனும் கூசி, மெய் குலைந்திட்டான்.
15
உரை
   


பாண்டவரைத் தப்புவிக்க அறக்கடவுள் அந்தணச்
சிறுவனாய் வந்து, மான் கொண்டு ஓடிய தன் மான் தோலை
மீட்டுத் தர வேண்ட, அவர்கள் மானைத் தொடர்தல்

இப் பால் இவ்வாறு ஓமம் செய்து, இவன் இப் பூதம் இனிது எழுப்ப,
அப் பால் இருந்த வன சரிதர் ஐவர்க்கு அமைந்தவாறு உரைப்பாம்:
முப் பாலினுக்கும் முதற் பாலாய், மும்மைப் புவனங்களும் காக்கும்,
தப்பா வாய்மை அறக் கடவுள் அறிந்தான், எண்ணம் தப்புவிப்பான்.

16
உரை
   


தன் மைந்தனும் அத் தம்பியரும் சரியாநின்ற தபோவனத்து,
நன் மைந்தரில் ஓர் முனி மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை
வில் மைந்தரையும் மதியாமல், விரைந்து, உள் புகுந்து, விசைத்து, அகல் வான்
தொல் மைந்தனைப்போல், ஓர் உழைகொண்டு ஓடிற்று; என்னால் சொல உண்டோ?

17
உரை
   


மறை வாய்ச் சிறுவன், 'கலைத்தோலை மான் கொண்டு ஓடி, வான் இடையில்
பொறைவாய்ப் புகுந்தது; அபயம்!' எனப் புகுந்து, ஆங்கு அமுது, புலம்புதலும்,
நறைவாய்த் தொடையல் அறன் மகனும், இளைய வீரர் நால்வரும், தம்
துறைவாய்ச் சிலையோடு அம்பு ஏந்தித் தொடர்ந்தார் அதனை, சூழ் புலிபோல்,

18
உரை
   


மானைத் தொடர்ந்த பாண்டவர், அதனைப் பற்ற இயலாது,
மாயம் என்று ஆசை ஒழிதல்

அகப்பட்டதுபோல் முன் நிற்கும்; அருகு எய்தலும், கூர் ஆசுகம்போல்
மிகப்பட்டு ஓடும்; தோன்றாமல், வெளிக்கே ஒளிக்கும்; விழி இணைக்கு
முகப்பட்டிடும்; ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும்
தகைப்பட்டு ஒழிந்தார்; அதில் ஆசை ஒழிந்தார், இந்த்ரசாலம் எனா.

19
உரை
   

தடங் கானகமும், வானகமும், சாரல் பொருப்பும், தாழ் வரையும்,
மடங்கா வரும், போம், சூழ் போதும்,அப்போது அந்த மான் கன்று;
தொடங்கா, இவரை இளைப்பித்த தொழிலைச் சொல்லின், ஒரு நாவுக்கு அடங்காது! இன்னும், ஆயிரம் உண்டானால், அதற்கும் அடங்காதே!
20
உரை
   


அறக்கடவுள் கானில் நச்சுப் பொய்கையாய் விளங்குதல

'கான் ஈது இவர்க்குத் தலை தெரியாக் கானம்; கருத்து மிகக் கலங்கிப்
பானீயத்துக்கு ஐவரும் மெய் பதையாநிற்பர்' என அறிந்து,
தூ நீர் நச்சுச் சுனையாய், அச் சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய்,
யான் நீ அவன் என்று எண்ணாமல், எல்லாம் ஆனோன், இருந்தானே.

21
உரை
   


தருமன் நீர் கொணருமாறு சகாதேவனைப் பணிக்க, அவன் செல்லுதல்

தருமனும் தம்பிமாரும், தாலுவும் புலர்ந்து, தாகத்து
உருகிய மனத்தர் ஆகி, உடல் தளர்ந்து அயரும் ஆங்கண்,
எரியுறு கானம் போல்வான் இளவலை நோக்கி, 'இன்னே
மரு வரும் புனல் கொண்டு, ஓடி வருதி நீ, விரைவின்!' என்றான்.

22
உரை
   


சகாதேவன் நச்சு நீரைப் பருகி இறந்து விழுந்தது தெரியாது,
தருமன் ஏனையோரையும் ஒருவர் பின் ஒருவராக அனுப்புதல்

அக் கணத்தினில், சாதேவன் அடவிகள்தோறும் தேடி,
எக்கணும் காணான் ஆகி, என்று தோய் குன்று ஒன்று ஏறி,
மிக்க வண் சீத வாச விரி சுனை ஒன்று காணா,
புக்கனன்; பருகலுற்றான், பொலிவு அறப் புலர்ந்த நாவான்.

23
உரை
   


செழும் புனல் உதரம்தன்னில் சேரும் முன், ஆவி பொன்றி,
விழுந்தமை அறிவுறாது, மீளவும் நகுலன்தன்னை
அழுங்கினன் ஏவ, சென்று, ஆங்கு, அவனும் அப் பரிசின் மாய்ந்தான்;
எழும் படை விசயன்தன்னை ஏவினன்; அவனும் போனான்.

24
உரை
   

தம்பியர் கிடந்த தன்மை கண்டும், அத் தலைவன், மேன்மேல்
வெம்புறு கொடிய தாக மிகுதியால் விரைந்து, வாரி,
பைம் புனல் அருந்தி, அவ்வாறு இறந்தனன்; பரிதாபத்தோடு,
'எம்பியர் என் செய்தார்?' என்று இறைவனும் இனைந்து சோர்ந்தான்.
25
உரை
   


இறுதியில் சென்ற வீமன் நச்சு நீரால் நேர்ந்த
விளைவு என்று எண்ணி வருந்தி, தருமன் அறியும்
பொருட்டு, மணலில் எழுதி, தானும்
நீரைப் பருகி, உயிர் துறத்தல்

வீமன் அங்கு அவனைத் தேற்றி, மெலிவுறு சோகத்தோடும்
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து, அங்கு எய்தி,
சாம் முறைத் தம்பிமாரைக் கண்டு, அருந் தடத்து நீரை
ஆம் எனக் கருதாது, 'ஆலம் ஆகும்' என்று அகத்தில் கொண்டான்.

26
உரை
   


பின்னவர் மூவர் சேரப் பிணங்களாய்க் கிடத்தல் கண்ட
மன்னவன்தனக்குத் தாகம் மாறுமோ? வளர்ந்து மேன்மேல்,
என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ? முன்
சொன்னவன்தானும், இந்தச் சோகமோ தொகுக்க மாட்டான்!

27
உரை
   


குசையுடைப் புரவித் திண் தேர்க் குரக்கு வெம் பதாகையானை,
அசைவு இல் பொன் சயிலம் அன்ன ஆண்தகை மனத்தினானை,
திசை அனைத்தினும் தன் நாமம் தீட்டிய சிலையின் வெம் போர்
விசையனை, தன் கண்ணீரால் மெய் குளிப்பாட்டினானே.

28
உரை
   


நல் துணைச் சிறுவனோடு நகுலனை நோக்கி, 'அந்தோ!
என் துணை இழந்தேன்!' என்னும்; 'என் செய்வது இனி நான்!' என்னும்;
'முன் துணைவனும் அக் கானில் முடிந்திடும்; மொழிய வேறு ஓர்
பின் துணை காண்கலாதேன், யாரொடு பேசுவேனே!

29
உரை
   

'மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும்; வந்தால்,
அணிதரு நச்சுத் தோயம் அருந்தவும் கூடும்!' என்னா,
பணி உடன் செய்வான் போலப் பரு மணல் ஏட்டில், கையால்,
துணிவுற எழுதி, அந்தத் தோயமே தானும் துய்த்தான்.
30
உரை
   


பொருப்பினும் வலிய கொற்றப் புயமுடை வீமன் என்றால்,
அருப்புடை அறலின் நஞ்சம் அஞ்சுமோ? ஆலம் என்னும்
உருப்பினை அறிந்தும், வாரி உண்டு, தன் உயிரும் வீந்தான்;
நெருப்பினும், சொல்லின், நா வேம்; நினைப்பினும், நெஞ்சம் வேமால்.

31
உரை
   


தம்பியர் வரவு காணாது, சோகமும் தாகமும் விஞ்ச,
தருமன் மயங்கி விழுதல்

'ஆர் உயிர் பொன்றும்காலை, அமுதமும் விடமாம்!' என்று
பார் உளோர் உரைக்கும் மாற்றம் பழுது அறப் பலித்த காலை,
மாருதி முதலா உள்ள மன்னவர் நால்வர்தம்மோடு
ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான்.

32
உரை
   


கட்புலனாக வேறு ஓர் யோனியும் காண்கலாத
வெட்புலம்தன்னில் சோகம் மிஞ்சவே, தாகம் விஞ்சி,
உள் புலன் அழிந்து, பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான்-
நட்பு உலந்தவரால் முன்னம் கானகம் நண்ணினானே.

33
உரை
   


இங்கு இவ்வாறு இவர் இருக்க, ஐவரைக் கொல்லுமாறு,
ஓமத்தில் தோன்றிய பூதத்தை முனிவன் ஏவுதல்

ஈங்கு இவர் உயங்கி வீந்த எல்லையில், எரி செய் ஓமத்து
ஆங்கு அவண் எழுந்த பூதம், அம் முனிதன்னை நோக்கி,
'பாங்குடன் புரியும் ஏவல் பணித்தருள்!' என்ன, நெஞ்சில்
தீங்கு இலா முனியும் பூத அரசுடன் செப்புவானே:

34
உரை
   

'நின்றிடாது, இமைப்பில், குந்தி மைந்தராய் நெடிய கானில்
துன்றிடா வைகும் வேந்தும் துணைவரும் இருந்த சூழல்
சென்றிடா, ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலைச் சேரக்
கொன்றிடா, வருதி!' என்று கூறிய உறுதி கேளா,
35
உரை
   


'பாண்டவர் இன்று எனக்கு இலக்காகாவிடின், நின்னையே
கொல்வேன்' என்று சொல்லி, பூதம் ஏகுதல்

ஐம் பெரும் பூதம் ஒக்கும் அப் பெரும் பூதம் சாதிச்
செம் பொனின் ஒளிரும் மேனித் தெய்வ மா முனியை நோக்கி,
'வெம்பு கான் உறைவோர், இன்று, என் விழிக்கு இலக்கு அல்லர்ஆனால்,
எம்பிரான்! நினையே கொல்வன்' எனத் தொழுது ஏகிற்று அன்றே.

36
உரை
   


ஐவரின் நிலை கண்டு, பூதம் வருந்துதல்

காட்டுறு கோடை வெப்பம் களைகுவான், கரிய மேகம்
மோட்டு உருக்கொண்டு, மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி,
தோள் துணை புடை கொண்டு, எங்கும் சூறைபோல் மரங்கள் வீழ்த்தி,
காட்டுறை வாழ்க்கையானைக் கண்ணுறக் கண்டது அன்றே.

37
உரை
   


'அந்தணன் சொன்ன வேந்தர் ஐவரில், அறனால் வந்த
மைந்தன் மற்று இவனே, ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி,
சந்தன தருவில் சார்ந்து, சாய் முடித் தலையன் ஆகி,
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான்.

38
உரை
   


'சிறந்த மெய்ந் நிழல்போல் சூழும் துணைவரும் சேர விட்டுத்
துறந்தனர் போலும்; யாண்டும் துப்பு இலா வெப்பம்தன்னால்
இறந்தனன் இவனும்; மற்று இங்கு என் செய்வேன்?' என்று என்று எண்ணி,
நிறைந்த நீர்ச் சுனையில் மற்றை நிருபர் நால்வரையும் காணா,

39
உரை
   

'பச்செனும் புனலால் மிக்க பங்கயச் சுனையும், கொல்லும்
நச்சு வெஞ் சுனையே போலும்! நால்வரும் சேர மாண்டார்,
இச் சுனை அருந்திப் போலும்! என் நினைந்து ஏது செய்தார்!
நிச்சயம்; கொடிது; கெட்டேன்! இந்த நிட்டூரம் என்னோ!
40
உரை
   


பூதம் முனிவனிடம் மீண்டு வந்து, தான் முன் உரைத்தபடி
அவனைச் சூலத்தால் எறிந்து கொல்லுதல்

'காவலன் வார்த்தை கேட்டுக் காளமாமுனிவன் என்னும்
நாவலன், ஓமத் தீயில் நம்மை உற்பவித்து விட்டான்;
மேவலர் கொல்லும் முன்னே வீந்தனர்; இந்தப் பாவம்
கேவலம் அல்ல' என்று கிளர் சினம் மூண்டு, மீண்டே,

41
உரை
   


'காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள்! நீ கலக்கம் எய்தி,
ஞாலம் கொள் நசையின், இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு,
சீலம் கொள் வாய்மையாய்! செந் தீ எழு கானில் சில் நீர்
ஆலம்கொல் பான்மையாரை யார் கொல்வான் அருளிச் செய்தாய்?

42
உரை
   


'பூண்ட வெள் அரவத்தோடு புனை மதி வேணியார்க்குத்
தாண்டவ நடனம் செய்யத் தக்கது ஓர் தழல் வெங் கானில்
பாண்டவர் தம்மைக் கொல்லப் பணித்தனை; ஒருகால் ஆவி
மாண்டவர், பின்னும் பின்னும் மாள்வரோ? மதி இலாதாய்!

43
உரை
   


'நீ இதற்கு இலக்கம் ஆகி நின்றனை!' என்று, கோபத்
தீ எழப் பொடிக்கும் கண்ணும், சிரிப்பு எழும் எயிறும் ஆகி,
மூஇலைச் சூலம்தன்னால் முனிதலை துணிந்து வீழ,
ஏவலில் பழுது இல் பூதம் இவனையே எறிந்தது அன்றே!

44
உரை
   

எறிந்து, அது மீண்டும் ஓம எரி இடை ஒளிக்க, கானில்
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப,
அறிந்தவர் அவனி ஆளும் அரசனை வெறுக்க, தம்மில்
பிறிந்தவர் மீண்டும் ஆவி பெற்றவா பேசக் கேண்மோ:
45
உரை
   


தருமன் உணர்வு பெற்று, தம்பியர் சென்ற சுவடு நோக்கிச்
சென்று, பொய்கைக்கரையில் துணைவரைக் காணுதல்

மூச்சு அறப் புலர்ந்து உயங்கிய முரச வெங் கொடியோன்
மாச் சினைத் தடஞ் சந்தன மகீருக நிழலில்,
வீச்சுறப் பயில் தென்றலால், மெய் உயிர் எய்தி,
நாச் சுவைப் படு ஞான நல் மந்திரம் நவிலா,

46
உரை
   


தனைப் பயந்த நல் தரும தேவதை திருவருளால்
வினைப் பயன்களால் உறு துயர் யாவையும் வீட்டி,
சுனைப் பெரும் புனல் தாகமும் அடிக்கடி தோன்ற,
நினைப்பும் எய்தி, அத் தம்பியர் தம்மையும் நினைந்தான்.

47
உரை
   


ஆன தன் மன வலியுடன், ஆண்டு நின்று எழுந்து,
கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை
போன தம்பியர் சேவடிச் சுவட்டினில் போய், அத்
தூ நிறப் புனல் உண்டு வீழ் துணைவரைக் கண்டான்.

48
உரை
   


தம்பியர் இறந்தது எதனால் என்று எண்ணிய தருமன்,
மணலில் வீமன் எழுதிய குறிப்புக் கண்டு, தானும்
அந் நீரைப் பருகச் செல்லுதல்

ஊறு இலாமை கண்டு, 'உடற்றினர் இல்' என உணர்ந்து,
'மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார்?
சேறு இலாத வெஞ் சுரத்திடைச் செழும் புனல் நுகரும்
பேறு இலாமையின், இறந்தனர் போலும், இப் பெரியோர்!'

49
உரை
   

அண்டகோளகை அனையது ஓர் ஆதபத்திரத்தால்
மண்டலங்கள் ஈர்-ஒன்பதும் புரந்திட வல்லான்,
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தைக்
கண்டு, 'நஞ்சம், இக் கயத்து அறல்' என்பது கண்டான்.
50
உரை
   


' 'வெஞ் சமம் செய வருவர்கொல், மீண்டும்?'' என்று அருள் இல்
வஞ்சகன் செய்த வஞ்சனை இது' என மதித்து,
நஞ்ச நீர்கொடு தானும் தன் நாவினை நனைக்கும்
நெஞ்சன் ஆகி, அந் நிறை புனல் கயத்திடை நேர்ந்தான்.

51
உரை
   


அப்பொழுது, அசரீரி அவனைத் தடுத்து மொழிதல்

திருந்து நல் வரைச் செங் கையால் அள்ளிய நீரை
அருந்தும் அவ் வயின், அகல் விசும்பிடை, அசரீரி,
'கருந் தடம் புனல் நஞ்சு; இது நுகர்வது கருதேல்!
விருந்தர் நால்வரும் என் மொழி கேட்டிலர்; வெய்யோர்!

52
உரை
   


'உன்னை யான் வினவு உரைதனக்கு உத்தரம் உரைத்து,
பின்னை நீ நுகர், பெறாது பெற்றனைய இப் புனலை;
அன்னைபோல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே!
என்னையோ, பெருந் தாகம் விஞ்சிடினும், இன்று?' எனவே,

53
உரை
   


பெரு நலம் பெறு மகனை அப் பேர் அறக் கடவுள்
இரு விசும்பினில் அருவமாய் இயம்பிய மாற்றம்,
திரு உளம்தனில் கொண்டு, தன் செங் கை நீர் வீழ்த்தி,
பொருவு இலா மகன், 'புகலுவ புகறி, நீ!' என்றான்.

54
உரை
   


தருமனும் தரும தேவதையும் உரையாடல்

'சொல்லும் நூல்களில் பெரியது ஏது''-'அரிய மெய்ச் சுருதி.'
'இல்லறத்தினுக்கு உரியது ஏது?'-'எண்ணுடை இல்லாள்.'
'மல்லல் மாலையில் மணம் உளது ஏது?'-'வண் சாதி.'
'நல்ல மா தவம் ஏது?'-'தம் குலம் புரி நடையே.'

55
உரை
   


'முனி குலம் தொழு கடவுள் யார்?'-'மொய் துழாய் முகுந்தன்.'
'நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது?'-'உயர் நாண்.'
'தனம் மிகுந்தவர்க்கு ஏது, அரண்?'-'தகை பெறு தானம்.'
'இனியது ஏது, இரு செவிக்கு?'-'இளங் குதலையர் இன்சொல்.'

56
உரை
   


'நிற்பது ஏதுகொல்?'-'நீடு இசை ஒன்றுமே, நிற்கும்.'
'கற்பது ஏதுகொல்?'-'கசடு அறக் கற்பதே கல்வி.'
'அற்பம் ஆவது ஏது, அனைத்தினும்?'-'அயல் கரத்து ஏற்றல்.'
'சிற்பம் ஆம் இவை செப்பு' என, செப்பினன் சிறுவன்.

57
உரை
   


தருமன் விடைகளால் உவப்புற்ற தருமதேவதை
அவன் முன் தோன்றி, மேற் கொள்ளவேண்டும்
உபாயங்களைத் தெரிவித்தல்

இவ் வகைப் பல வினவலும், இயம்பிய மகனை
அவ் வயின் பெரிது உவந்து, கண்ணினுக்கு இலக்கு ஆகி,
செவ்வயின் பொலஞ் சிலம்பு எனச் சேர்ந்து, மெய் தழுவி,
வெவ் வயின், புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ.

58
உரை
   


தேவதை, 'மிக்க அன்புடைய ஒருவனை இம் மறையால்
எழுப்புக!' என, தருமன் சகாதேவனை எழுப்புதல்

அறப் பெருங் கடவுள் என்று அறிந்து, தாதையைச்
சிறப்புடன் சேவடி சென்னி சேர்த்திய
மறப் பெரும் புதல்வனை, மகிழ்ந்து, 'நும்பியர்
இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டு' எனா,

59
உரை
   

'நச்சு நீர் குடித்து உயிர் நீத்த நால்வரில்
உச்சம் ஆம் அன்புடை ஒருவன்தன்னை, நீ
இச்சையால், இம் மறை இயம்பி, எண்ணி ஓர்
அச்சம் அற்று அழை!' என அருள் செய்தான்அரோ.
60
உரை
   


தாதை கூறிய மறைதனைக் கொண்டே, சுதன்
ஏதம் உற்றிடாவகை, இளைய தம்பியை
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான்-
வேதமும் நிகர் இலா விரத வாய்மையான்.

61
உரை
   


சகாதேவனை எழுப்பியதற்குக் காரணத்தைத் தருமன்
கூறக் கேட்டு மகிழ்ந்து, யாவரையும் எழுப்பி, பல
படை முதலியன அளித்தல்

கண்டு நின்று, அறப் பெருங் கடவுள், 'வாயுவின்
திண் திறல் மா மகன், தேவர் கோ மகன்,
மண்டு அழல் விடத்தினால் மடிய, மா மருத்து
அண்டர் நல்கு இளவலை அழைத்தது என்?' என்றான்.

62
உரை
   


'குத்திரம் இலா மொழிக் குந்திக்கு யான் ஒரு
புத்திரன் உளன் எனப் புரிந்து நல்கினாய்;
மத்திரிக்கு ஒரு மகவு இல்லை;-வல்லவர்
சித்திரம் வகுத்தெனத் திகழும் மேனியாய்!'

63
உரை
   


என்று தன் தந்தையோடு இயம்ப, தந்தையும்,
மன்றல் அம் தொடை முடி மைந்தனுக்கு, அமர்
வென்றிடு மறைகளும், வில்லொடு, ஏவு, வேல்,
என்ற பல் படைகளும், யாவும், நல்கினான்.

64
உரை
   


தேவதை நிகழ்ந்தவற்றைக் கூறி, 'கானில் வாழ் நாள்
கழிந்தது; ஒருவரும் அறிவுறாது இனிது வாழ்திர்' என்று
அறிவுறுத்திச் செல்லுதல்

கருதலன் அழைத்ததும், காளமாமுனி
புரி தழல் வளர்த்ததும், பூதம் வந்ததும்,
அருகு இவர் நச்சு நீர் அருந்தி மாய்ந்ததும்,
விரி சினத்துடன் அது மீண்டு போனதும்,

65
உரை
   


முனிவனைக் கொன்றதும், முனிவன் வாய்மையில்
துனி வனத்து உழையினைத் தொடர்ந்து போயதும்,
தனி வனத்திடை விடத் தடாகம் செய்ததும்,
இனிமையின், புத்திரற்கு, யாவும் கூறினான்.

66
உரை
   


'நன் பெரு வனம் செறி நாள் அகன்றன;
பின் பிறர் அறிவுறாப் பெற்றி பெற்று, நீர்
துன்புறாது இரும்' எனச் சொல்லி, ஏகினான்;-
அன்பினால் அருள் புரிந்து, அரிய தாதையே.

67
உரை
   


பாண்டவர் தம் இருப்பிடம் சேர்ந்து, திரௌபதிக்கு யாவற்றையும் கூறியிருத்தல்

தம்பியர் அனைவரும் தத்தம் ஆவி பெற்று,
உம்பரில் தலைவனாம் உரிய தந்தையை
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி, நெஞ்சுடன்
அம்பகம் மலர்ந்து, தம் அடவி எய்தினார்.

68
உரை
   


தீது அறக் கானிடைச் செறிந்த ஐவரும்
பேதுறத் தொடர்ந்து, ஒரு பிணைபின் போனதும்,
ஏதம் உற்று இறந்ததும், எழுந்து மீண்டதும்,
ஆழ் துயர்த் திரௌபதிக்கு அறியக் கூறினார்.

69
உரை