17. துருவாச முனிச் சருக்கம்

துருவாச முனிவன் பாண்டவர் இருப்பிடம் வருதலும்,
அவர்கள் முனிவனை வணங்கி, உபசரித்தலும்

சாபத்தாலும், சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும்,
கோபத்தாலும், பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன்,
தீபத்தால் மெய் வகுத்தனையான், திகழ் பல் முனிவர் புடை சூழ,
ஆபத்தால் வந்து அடைந்தவர்போல், அடைந்தான்,
                           அந்த அடவியின்வாய்.

1
உரை
   


'அரு மா தவப் பேறு ஆனது எமக்கு அம்மா!'
                           என்னச் செம்மாந்து,
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சித் தலைமேல்
                           அடி வைத்து, 'எம்
பெருமான்! இங்கே எழுந்தருளப் பெற்றேம்' என்னப்
                           பெரிது உவந்து, அங்கு,
அரு மா முனியைப் பூசித்தார்; அவனும் புகன்றான்,
                           ஆசிஅரோ.

2
உரை
   


'உண்ணும் காலம் இது' என முனிவன் கூற, நீராடி வருமாறு
அனுப்பி, தம்பியரையும் திரௌபதியையும் உசாவுதல்

இட்ட தவிசின்மிசை இருத்தி, எரி கான் வந்த
                           இளைப்பு ஆற்றி,
தொட்ட கழற் கால் உதிட்டிரன் கைதொழுது துதிப்ப,
                           துருவாசன்,
வட்ட மணித் தேரவன் உச்ச வானத்து அடைந்தான்;
                           யாம் அருந்தப்
பட்ட உணவு இங்கு அமுது செயப் பருவம் இது'
                           என்று உரைசெய்தான்.

3
உரை
   

மூத்தோன், 'குளித்து வருக!' என, முனிவருடன்
                           அம் முனி தடத்துப்
போய்த் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள, புரசைக் களிற்று
                           முரசு உயர்த்தோன்,
'வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம்?மதிப்பீர்!' எனத்
                           தன் தம்பியர்க்கும்,
வேய்த்தோள் வேள்வி மடந்தைக்கும், உரைத்து, ஆங்கு
                           அவரை வினவினனால்.
4
உரை
   


'முனிவன் சாபம் மொழியும் முன் பகை முடித்து
இறப்போம்' என வீமன் உரைத்தல்

'மேவார் உரைக்க இவன் வந்தது அல்லால், பிறிது வேறு இல்லை;
ஆ, ஆ! இதற்கு இன்று என் செய்வேம்? ஆமாறு ஆக! நாம் எழுந்து,
கோ ஆனவனும் பல படையும் குன்றச் சென்று, பொருது, இமைப்பில்
சாவா நிற்பது உறுதி, இனி' என்றான்-வன் தாள் சமீரணியே.

5
உரை
   


நகுல சகாதேவர்கள், 'கண்ணனைச் சிந்தித்து அழைத்தால்,
கவலை நீங்கும்' என, தருமனும் இசைதல்

'சுருதிக் கடவுள் அனையானைச் சுனை நீர் படிந்து
                           வரச் சொல்லி,
கருதிப் பிற நாம் புரியும் அது கடனோ?' என்றான்,
                           கழல் விசயன்;
'மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழைமின்'
                           என மொழிந்தான்-
ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா
                           உரவோனே.

6
உரை
   


'யாதே ஆக, இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு
                           இசை அளிகள்
தேதே என்னும் பசுந் துளபத் திருமால்தன்னைச் சிந்தியும்; இப்
போதே வரும், இங்கு அவன்; வந்தால், போம் இக் கவலை'
                           எனப் புகன்றான்,
சாதேவனும்; அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு
                           இசைந்தான் தருமனுமே.

7
உரை
   


'துருவாசன் வரின் என் செய்வது?' எனத்
திரௌபதி பயந்து நடுங்குதல்

'என்னே, என்னே! ஆதவன் வான் இடையும் கடந்தான்;
                           முனிவன் வரும்
முன்னே நுகர்ந்தாம் சாக பல மூலம், பல பேர்
                           முனிவரொடும்;
கொன்னே முனியும் முனிக்கு இனி என்கொல்லோ
                           புரிவது?' என நின்ற
மின் நேர் இடையாள் நடுநடுங்கி, 'விளைவது என்னோ?'
                           எனப் பயந்தாள்.

8
உரை
   


தருமன் கண்ணனை நினைத்தலும், அவன் வந்து, அவர்களைத்
தேற்றி, திரௌபதியை, 'அட்சயபாத்திரத்தில்
அன்னம் உளதோ?' என்ன, அவள் ஒரு
பருக்கையைக் கண்டு எடுத்து வந்து கொடுத்தல்

தப்பு ஓதாமல், தம்பியர்க்கும் தருமக் கொடிக்கும் இதமாக,
அப்போது உணரும்படி உணர்ந்தான், அசோதை மகனை
                           அறத்தின் மகன்;
'எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்'
                           என நின்ற
ஒப்பு ஓத அரியான், உதிட்டிரன்தன் உளப்போதிடை
                           வந்து உதித்தானே.

9
உரை
   

திருக் கண் கருணை பொழிய வரும் திருமால் அவரைத்
                           தேற்றி, 'முதல்
அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ''
                           என வினவ,
முருக்கின் இதழைக் கருக்குவிக்கும் முறுவல் செவ் வாய்த்
                           திரௌபதியும்
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டெடுத்தாள்; கொடுத்தாள்,
                           இறைவன் கை.
10
உரை
   


கண்ணன் அந்தப் பருக்கையை உண்ண, நீராடிய
முனிவரர் உண்டவர்போல் களி கூர, துருவாசன்
தருமனிடம் மீண்டு வருதல்

அந்த அன்னம் சதுர் மறையும் அன்னம் ஆகி
                           அருள் செய்தோன்,
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை
                           வைத்தான்;
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும்,
                           வாரிதி முன்
தந்த அமுது உண்டவர் போலத் தாபம் தணிந்து 
                          தண்ணென்றார்.

11
உரை
   


உதரம் குளிர்ந்து, வடிவு குளிர்ந்து, உள்ளம் குளிர்ந்து,
                           மறை நாறும்
அதரம் குளிர்ந்து, கண் குளிர்ந்து, ஆங்கு அரு
                           மா முனிவன் அதிசயித்து,
'மதர் அஞ்சனக் கண் திரு வாழும் மார்போன்
                           மாயா வல்லபத்தால்,
இதரம் கடந்தான் உதிட்டிரன்' என்று இவன்பால்,
                           மீண்டும், எய்தினனால்.

12
உரை
   


முனிவன் தருமனைப் பாராட்டி, தான்
வந்த காரணத்தை உரைத்தல்

'உண்டோம், உண்டோம், உம்பருக்கும் உதவா
                           ஓதக் கடல் அமுதம்;
கண்டோம் உன்னால், எவ் உலகும் காணா முகுந்தன்
                           கழல் இணைகள்!
வண்டு ஓலிடும் தார்ப் பேர் அறத்தின் மகனே! உன்னை
                           அரசு என்று
கொண்டோர் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார்,
                           குவலயத்தில்?

13
உரை
   

'நென்னல் புயங்க கேதனன்தன் நிலயம்தன்னில்
                           தீம் பாலும்
கன்னல் கட்டி முதல் பல தீம் கனி நெய்யுடனே
                           இனிது அருந்தி,
இன்னல் பசி தீர் பொழுதத்தில், "என்பால் வரம்
                           கொள்க!" என உரைப்ப'
முன்னர்ப் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான்,
                           முடி வேந்தன்:
14
உரை
   


"எம் இல் துய்த்த ஓதனம்போல் எம்மோடு இகலி
                           வனம் புகுந்தோர்
தம் இல் சென்று நாளை நுகர்; இதுவே எனக்குத் தரும்
                           வரம்" என்று,
உம்மின் செல்வம் உடையவன்போல் உரைத்தான்; அதனால்
                           உயர்ந்தோர்கள்-
தம்மில் சிறந்தோய்! வந்தனம் யாம்' என்றான், அந்தத்
                           தவ முனியே.

15
உரை
   


முனிவன் விருப்பப்படி, தருமன் வரம் வேண்டுதல்

பரம் கொண்டு உலகம் முழுதும் இசை பரப்பிப் புரப்பான்
                           பாண்டு எனும்
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய்! நீ
                           இங்கு உனக்கு ஆன
வரம் கொண்டிடுக' என, முனியை வணங்கி, 'பகைத்தோர்
                           மாற்றங்கள்
திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி!' என்றான், வளையாச்
                           செங்கோலான்.

16
உரை
   


முனிவன் தான் உறையும் காடு செல்ல,
தருமன் கவலை நீங்கி, மகிழ்ந்திருத்தல்

அன்னோன் மொழி கேட்டு, அம் முனியும் அடைந்தான்,
                           தன் பேர் அருந் தவக் கான்;
முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர்த் துவரை
                          நகர் புக்கான்;
பின்னோர் வணங்க, பேர் அழலில் பிறந்தாள் மகிழ,
                           பேர்அருட்குத்
தன்னோடு ஒருவர் நிகர் இல்லான் இருந்தான் அந்தத் தனிவனத்தே.

17
உரை