19. நாடு கரந்துறை சருக்கம்

'நாடு கரந்து உறைதற்கு உரிய இடம் எது?' எனத்
துணைவரைத் தருமன் வினாவ, விசயன், 'விராடன்
நகரமே அதற்கு ஏற்றது' எனல்

அரவ வெங் கொடியோன் ஏவலின்படியே, ஐவரும்
                          ஆறு-இரண்டு ஆண்டு,
துருபதன் அளித்த பாவையும் தாமும், சுருதி
                           மா முனிகணம் பலவும்,
பரிவுடன், மலரும், பலங்களும், கிழங்கும், பாசடைகளும்,
                           இனிது அருந்தி,
ஒரு பகல் போலக் கழித்தனர், அறிவும் ஒடுங்கிய
                           புலன்களும் உடையோர்.

1
உரை
   


தொல் அறக் கடவுள் அருளுடன் அளித்த தோன்றல்
                           தன் துணைவரை நோக்கி,
'கல் அமர் கிரியும், கானமும், இடமாக் கழித்தனம்;
                           ஒழிந்தன, காலம்;
எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு
                               ஆம் இடம் யாதோ?
சொல்லுமின்' என்றான்; என்றலும், தொழுது, சுரபதி
                           மகன் இவை சொல்வான்;

2
உரை
   


'நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து, நிதிகள்
                           மற்று யாவையும் நெருங்கி,
ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை,
                           மனு குலத்து அரசன்;
மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது;
                           அமரரும், வேள்வி
வேதியர் பலரும், உறைவதும் அவணே;-விராடர் கோன்
                           மச்ச நாடு, ஐயா!

3
உரை
   


தருமன் பாங்கில் உறைந்த அரசர்களை அவரவர்
பதிகளுக்கு அனுப்பி, முனிவரை வணங்கி, துணைவர்களுடன்
விராடன் நாட்டை அடைதல்

'ஆங்கு அவன் நகரி எய்தி, மற்று இன்றே ஐவரும்
                           அணி உருக் கரந்து,
தீங்கு அற உறைவது அல்லது, வேறு ஓர் சேர்வு
                           இடம் இலது' எனச் செப்ப,
தேங்கிய அருளுக்கு இருப்பிடம் ஆன சிந்தையான்,
                           சிந்தையால் துணிந்து,
பாங்கு உறை அரசர் யாரையும், 'தம்தம் பதிகளே
                           செல்க!' எனப் பகர்ந்தான்.

4
உரை
   


முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உறத்
                           தனித்தனி வணங்கி,
கனிவுறும் அன்பால், 'என்று நான் உம்மைக் காண்பது!'
                           என்று, அவர் மனம் களிப்ப,
இனியன உரைகள் பயிற்றி, யாவரையும் ஏகுவித்து,
                           'இற்றை நாள் இரவில்
தினகரன் எழுமுன் செல்வம், அச் செல்வம் திகழ்தரு
                           நகர்க்கு' எனச் செப்பா,

5
உரை
   


கல்கெழு குறும்பும், சாரல் அம் கிரியும், கடி கமழ்
                           முல்லை அம் புறவும்,
மல்கு நீர்ப் பண்ணை மருதமும், கடந்து, வன்னியில்
                           பிறந்த மா மயிலும்,
வில் கெழு தடக் கை இளைஞரும் தானும் விராடர் கோன்
                           தனிக் குடை நிழலில்,
பல் குல மாக்கள் வாழ்வு கூர் வளநாடு அடைந்தனன்,
                           பாண்டவர் தலைவன்.

6
உரை
   


தராதலம் முழுதும் உடைய கோமகனும், தம்பியர்
                           நால்வரும், திருவும்,
இராவிடை, விரைவின், ஆறு இடைக் கடந்து, ஓர்
                       எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப,
கராம் உலாவரு பைந் தடமும் வண் காவும் கனக
                           வான் புரிசையும் சூழ்ந்த
விராடன் மா நகரி எல்லை புக்கு, ஒரு பால், மயான
                           பூமியினிடை விரவா,

7
உரை
   


மயான பூமியில் காளி கோயிலின் முன்னே உள்ள
வன்னி மரத்தில், பாண்டவர் தம் படைக்கலங்களை
மறைத்து வைத்தல்

யாமள மறையால் யாவரும் பணிவாள், எழு வகைத்
                           தாயரில் ஒருத்தி,
சாமள வடிவோடு அந் நகர் வாழ்வாள், சங்கு தண்டு
                           அங்கையில் தரிப்பாள்,
கோமள வல்லிக் கொடி நிகர் காளி கோயிலின் முன்னர்,
                           ஓர் வன்னி,
நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் நலம் பெறு,
                           பாதவம் நண்ணா,

8
உரை
   


தத்தம படையும், கவசமும், அனைத்தும், தனித்தனி
                           ஐவரும் தரித்த
மெய்த் திறலுடைய யாவும், அத் தருவின் கோடரத்து
                           ஒளித்து, ஒரு விரகால்,
வைத்தனர் ஆகி, யாவரும் உணரா-வகை அரு
                           மறைகளும் பயிற்றி,
முத் தலை வடி வேல் காளியை வணங்கி, முன்னினார்,
                           புரி தொழில் முற்றும்.

9
உரை
   


தருமன் கங்கன் என்னும் பெயருடைத் துறவியாய்
விராடனை அடுக்க, மன்னன் அவனை மனமுவந்து
ஏற்றுக்கொள்ளுதல்

தம்பியர் வணங்கித் தனது தாள் இணையில் தங்க,
                           ஓர் தாபத வடிவும்,
உம்பரும் வியப்பக் கங்கன் என்று உரைக்கும் ஒரு
                           திரு நாமமும், தரித்து,
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி
                           நூலொடு விளங்க
ஐம் புலன் மகிழச் சென்று கண்டு, இறை வந்து அடி தொழ,
                           ஆசியும் உரைத்தான்.

10
உரை
   


'யார் ஐயா நீவிர்? எங்கு நின்று இவண் மற்று
                           எழுந்தருளியது?' என வினவ,
'பாரை ஆளுடைய உதிட்டிரன் பாங்காய்ப் பயின்றனன்;
                           அவன் பெரு வனத்தில்
சேரு நாள் உடன் போய்த் திரிந்தனன்; நின்பால் சில பகல்
                           வைகுமாறு எண்ணி,
வீர வார் கழலாய்! வந்தனன்' என்றான்-வேள்வியால்,
                           கேள்வியால், மிக்கோன்.

11
உரை
   


மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு, அந்த மனுகுல
                           மன்னனும் மகிழ்ந்து,
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும், உணர்வும், தகைமையும்,
                           உவகையில் தோன்ற,
'என் மனைவயின் இன்று எய்திய பயன் யான் ஏழ்-எழு
                           பிறப்பினும் புரிந்த
நன்மையின் விளைவே; வேண்டுநாள் ஈண்டு நண்ணுதிர்!'
                           என நனி நவின்றான்.

12
உரை
   


வீமன் பலாயனன் என்னும் பெயருடன் விராடனது
தலைமை மடையனாய் வந்து பொருந்துதல

தண்டினுக்கு ஒருவன், புய வலிக்கு ஒருவன், தனுவினுக்கு
                           ஒருவன், என்று உரைக்கும்
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்றபின்,
                           தெள் அமுது அனைய
உண்டியைக் குறித்துக் கற்ற தன் கல்வி உரிமையைக்
                           குறித்து, 'அடு தொழிற்கு
மண்டலத்து அரசே! ஒருவன் யான், வீமன் மடையன்'
                           என்று, அரசவை வந்தான்.

13
உரை
   


வந்து, தன் தம்முன் மலரடி முன்னி, மலர்க்கையால்
                           முடியின்மேல் வணங்கி,
'ஐந்து பல் வகையில் கறிகளும், வெவ்வேறு அறு சுவை
                           மாறுமாறு அமைப்பேன்;
வெந் திறல் மல்லும் புரி தொழில் உடையேன்; விருதுடைப்
                           பலாயனன், என் பேர்;
இந்திரன் உலகுதன்னிலும் எண்ணில், என் தொழிற்கு
                           எதிர் இலை' என்றான்.

14
உரை
   


என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று, இரு கையும்
                           சென்னிமேல் இருத்தி,
பொன் திகழ் மணிப் பூண், மென் துகில், பலவும், புரவி
                           போதகங்களும், வழங்கி,
'இன்றுதொட்டு எமக்கு மெய்ப் பெருஞ் சுற்றத்து ஒருவன் நீ'
                           என்று, அடு தொழிற்கு
நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற
                           வழங்கினன் மாதோ.

15
உரை
   


விசயன் பிருகந்நளை என்ற பேடியாய் விராடன்
மகள் உத்தரைக்குப் பாங்கி ஆதல்

நீடிய சிலைக் கைத் தேவர்கோன் மதலை-நிருத்த நல்
                           அரங்கினில், முன் நாள்,
வாடிய மருங்குல், பணைத்த பூண் கொங்கை, வாள்
                       தடங் கண்கள் வார் குழைமேல்
ஓடிய வதனத்து, உருப்பசி பணியால் உறுவதற்கு ஓர்
                           யாண்டு அமைந்த
பேடியின் வடிவம் தரித்தனன்,-ஆண்மைக்கு இமையவர்
                           எவரினும் பெரியோன்!

16
உரை
   


வாயுவின் மதலை சென்று கண்டதற்பின், மற்றை நாள்
                           ஒற்றை வெண் கவிகைச்
சேயொளி மகுடச் சென்னியான் இருந்த பேர் அவை
                           சிறப்புறச் சென்று,
தூய வெண் புரி நூல் முனி திருக் கழலில் ஒரு புடை
                         தோய்தரத் தலை சாய்த்து,
'ஏய வெஞ் சிலைக் கை அருச்சுனன் கோயில் இருப்பது
                         ஓர் பேடி நான்' என்றான்.

17
உரை
   


'நாதமும், இயலும், மேதகு நட நூல் நவில்தரும்
                           அரங்கினுக்கு உரியேன்;
பேதையர் தமக்கு நடம் பயிற்றுவிப்பேன்; பெயர்
                           "பிருகந்நளை" என்ப;
ஆதிப! நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி
                           வந்து அடைந்தேன்;
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக,
                           நின் மரபு!' என்றான்.

18
உரை
   


வித்தகன் என எக் கலைகளும் பயின்ற விராடனும்,
                           பேடிதன் மொழி கேட்டு,
'இத் திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை'
                           என்று, இனிது உரைத்தருளி,
அத் தகவு உடையாள் மகிழ்வுறக் கலனும், ஆடையும்,
                           வேண்டுவ வழங்கி,
'உத்தரைதனக்குப் பாங்கி, நீ!' என்று ஆங்கு, உரிய தன்
                           மகளுழை விடுத்தான்.

19
உரை
   


சில நாளின் பின் நகுலன் தாமக்கிரந்தி என்னும் பெயருடன்
விராடனை அடுத்து, அவனது குதிரைகளுக்கு அதிபதி ஆதல்

பின்னரும் சில்நாள் அகன்றபின், நகுலன், பேர் அழகினுக்கு
                           வேள் அனையான்,
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி
                           ஏறு முன்றிலின்வாய்,
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன்
                           கரத்து ஏந்தி
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ்
                           தருக்கொடு சென்றான்.

20
உரை
   


சென்றவன்தன்மேல் புரவிமேல் இருந்தோன், செழுந்
                           தடங் கண் மலர் பரப்பி,
'வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய்! எவ் வயின்
                           நின்று வந்தனை நீ?'
என்றலும், அவனும் இயம்பினன்: 'விசயற்கு இளையவன்,
                           நகுலன், என்று எல்லாக்
குன்றினும் தன் பேர் எழுதினோன்; அவன்தன் கொற்றம்
                           யார் கூறுதற்கு உரியார்?

21
உரை
   


'மற்று அவன்தனது வாசி மந்துரைக்குத் தலைவராய் வாழும்
                           மாக்களில் யான்
உற்றவன் ஒருவன்; வாம் பரி வடிவும், உரை தகு
                           சுழிகளும், ஒளியும்,
பற்றிய நிறனும், கந்தமும், குரலும், பல் வகைக் கதிகளும்,
                           பிறந்த
சொல் தகு நிலனும், ஆயுவும், உணர்வேன்; துயர் உறு
                           பிணிகளும் தவிர்ப்பேன்;

22
உரை
   


'மண்டலம், வீதி, கோணமே, முதலாம் வாசிகள் ஊர்
                           தொழில் வல்லேன்;
திண் திறல் தடந் தேர் பூண்பதற்கு உரிய செயலுடைப்
                           பரிகளும் தெரிவேன்;
வண்டு இமிர் அலங்கல் மாலையாய்! பாண்டு மைந்தர்
                           போய் வனம் புகுந்ததற்பின்,
உண்டியும் இழந்தேன்; உறுதியும் இழந்தேன்; உன் புகழ்
                           கேட்டு வந்து உற்றேன்.'

23
உரை
   


என்ன, அப் புரவி ஏற்று நாயகன் வந்து, இயம்பிய இன்
                           மொழி கேட்டு,
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா
                           மதிக்குடை மன்னன்
முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும், மும் மடங்கு
                           ஆகவே வழங்கி,
அந் நகர்த் துரங்கம் அவை அனைத்தினுக்கும் அதிபதி
                           எனும் பதம் கொடுத்தான்.

24
உரை
   


சகாதேவன் தந்திரிபாலன் என்னும் பெயரோடு இடையனாய்
வந்து, விராடன் ஆநிரை காப்போர்க்கு அதிபதி ஆதல்

கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர்
                           புனை நகுலற்கு
இளையவன், நந்தகோபன் மைந்தனைப்போல், இடையர்தம்
                           கோலமது எய்தி,
துளை படு குழையில் ஒரு குழை அணிந்து, தோளில் ஓர்
                           தொடித் தடி தழுவி,
விளை புகழ் விராடன் வேத்தவைஅதனை வேறு ஒரு
                           நாளையின் அடைந்தான்.

25
உரை
   


'ஆர்கொல், நீ?' என்ன, அறன் மகனுடன் ஓர் ஆசனத்து
                           இருந்த பதியைச்
சீருற வேறோர் விரகினால் வணங்கி, செப்பினன்,
                           அன்ன சாதேவன்:
'பார் கொள நினைந்து, சுயோதனன் விடுப்ப, படர் வனம்
                           புகுந்த பாண்டவரில்,
தார் கொள் வேல் இளையோன்தனது கோபாலன்,
                       தந்திரிபாலன் யான்' என்றான்.

26
உரை
   


ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும், அவனை, 'அருகுற
                           வருக!' என அழைத்து,
பாங்குறத் தக்க வழக்கமும் வழங்கி, 'பல்வகை
                           நிரைகளும், நீயே
ஈங்கும் அப்படியே புரத்தி!' என்று உரைத்தான்; இவனும்
                           அவ் அரசன் ஏவலினால்,
தீங்கு அறக் கைக்கொண்டு, அவ்வவர்க்கு எல்லாம் தகை
                        பெறும் செம்மல் ஆயினனே.

27
உரை
   


திரௌபதி விரதசாரிணி என்னும் பெயருடன் விராடன்
தேவியை அடுத்து, அவளுக்கு வண்ண மகள் ஆதல்

ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும்
மா மயில் திரௌபதியும், வண்ண மகள் ஆகி,
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர்
கோமகளை நாடி, அவள் கோயிலிடை புக்காள்.

28
உரை
   


'மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள்,
நொதுமலினள் ஆகி, ஒரு நுண்ணிடை நடந்தாள்;
பதும விழியாய்!' எனலும், வாயிலவர், பால்போல்
மதுர மொழியாள், 'அழைமின், வாணுதலை!' என்றாள்.

29
உரை
   


வந்தவள் இருந்தவள் மருங்கு அணையும் வேலை,
அந் தண் உபசாரமுடன் அருகுற இருத்தி,
சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி,
'எந்த நகரீர்? உரைமின், யாம் உணர!' என்றாள்.

30
உரை
   


'தான் விரத மாயை புரி சகுனி பொரு சூதால்,
கான் விரதமாக உறை காவலர்கள் கோயில்,
மான் விரத நோக்கியர் மருங்குற இருந்தேன்;
யான் விரதசாரிணி எனும் பெயரினாளே.

31
உரை
   


'பூசுவன, சுற்றுவன, பூண்பன, முடிப்ப,
தேசொடு வனப்பு நனி திகழும்வகை அணிவேன்;
வாசவனொடு ஒத்த மனுகுல அரசன் மனைவி!
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம்.

32
உரை
   


'எந்தை மனையில் பயில் இளம் பருவ நாளில்,
கந்தருவர் காவல் புரி கற்புடையள் ஆனேன்;
இந்துநுதலாய்! மனிதர் யார் முகமும் நோக்கேன்;
வந்தனன், நின் மாளிகையின் வைகும் வகை' என்றாள்.

33
உரை
   


வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு,
துண்ணென வெரீஇயினள், சுதேட்டிணை விரும்பி,
'விண்ணவர்கள் பாவையரின் மேவுதி; எனக்குக்
கண் இணையும் நீ! உனது காவல் எனது உயிரும்.'

34
உரை
   


அன்னை எனுமாறு நெறியான முறை கூறி,
'என் அருகு இருத்தி' என, எரியின் வரு மின்னும்,
மின் அனைய நுண் இடை விராட பதி தேவிக்கு
எந் நலமும் நாள்தொறும் இயற்றினள், இருந்தாள்.

35
உரை
   


பாண்டவர் மறைந்து உறைந்த நாளில், விராடனது நாடு
எல்லா வகையாலும் சிறந்து ஓங்குதல்

மை வரு தடங் கண் மட மானும், மதி மரபோர்
ஐவரும் மறைந்தனர்கள்ஆய் உறையும் நாளில்,
மெய்வரு வழாமொழி விராடபதி திரு நாடு
உய்வு அரு பெருந் திருவொடு ஓங்கியதை அன்றே.

36
உரை
   


குருக்கள் அவன் ஊரினிடை குருநிலனொடு ஒப்புற்று
இருக்கும் வழி, மா மழையும் எவ் விளைவும் விஞ்சி,
தருக்கினுடன் யானை முதல் தானைகளும் விஞ்சி,
செருக்கும் உடன் விஞ்சியது; செப்ப அரிது, அம்மா!

37
உரை