23. வெளிப்பாட்டுச் சருக்கம்

எக் கடலும், எக் கிரியு, எவ் உலகும், உலகில்
தக்க பல யோனிகள் சராசரம் அனைத்தும்,
மிக்க விதியால் விதிசெய் விதியினை விதிக்கும்
செக் கமல நாபி முகில் சேவடி துதிப்பாம்.

1
உரை
   


தருமன் திரௌபதியோடும், துணைவர்களோடும் வீற்றிருத்தல்

அருக்கன் அடி கைதொழுது, அனந்தரம், அருக்கன்
உருக் கருகவே அருண உரு அழகு எறிப்ப,
திருக் கிளர் நலம் பெறு செழுந் தெரிவையோடும்,
குருக் குலம் விளங்க வரு கோமகன் இருந்தான்.

2
உரை
   


காற்றின் மகனும், கடவுள் ஆதி திரு மகனும்,
மாற்றம் முதிர் ஆயுள் மறை வானவர் மகாரும்,
ஏற்ற முறையால் அடி இறைஞ்சி, இசையோடும்
தோற்றம் உறுமாறு, அருகு சூழ்தர, இருந்தார்.

3
உரை
   


தருமனது நெற்றி வடுவின் காரணத்தைத் திரௌபதி கூற
உணர்ந்து, விசயன் விராடனை அழிக்க வில்
எடுக்க, வீமன் விழி சிவத்தல்

தன்னை நிகர்கிற்பவர் இலாத தனு வல்லோன்,
'என்னை, திருநெற்றியில் இருந்த வடு?' என்றான்;
மின்னையும் வெறுத்து ஒளிரும் மேதகு நிறத்தாள்,
பின்னை, அவனுக்கு நிகழ் பெற்றி உரைசெய்தாள்.

4
உரை
   


உரைத்த பொழுது, 'இப்பொழுது இவ் ஊர் எரி கொளுத்தி,
தரைத் தலைவனைத் தலை தடிந்திடுவல்!' என்னா,
விரைத் தட வரைப் புயன் வெகுண்டு வில் எடுத்தான்;
இரைத்து வரு கால்மகனும் எரி விழி சிவந்தான்.

5
உரை
   


தம்பியரின் சினத்தைத் தருமன் அடக்குதல்

'ஒன்று உதவி செய்யினும், அவ் உதவி மறவாமல்,
பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர், பெரியோர்;
நன்றி பல ஆக ஒரு நவை புரிவரேனும்,
கன்றிடுவது அன்றி, முது கயவர் நினையாரே.

6
உரை
   


'அனலும் முது கானகம் அகன்று, நெடு நாள் நம்
நினைவு வழுவாமல் இவன் நீழலில் இருந்தோம்;
சினம் மிகுதலின், 'தவறு செய்தனன்' எனப் போய்,
முனிதல் பழுதாகும்' என, முன்னவன் மொழிந்தான்.

7
உரை
   


விராடன் மைந்தனோடு சென்று, திறைப் பொருள்களை வைத்து,
பாண்டவரை வணங்க, தருமன் அவனைத் தழுவிப் பாராட்டுதல்

குந்திவயின் வந்து, தம குருகுலம் விளக்கும்
ஐந்து அரசும் அன்று தன் அகன் கடை இருக்க,
சிந்தனையொடும், திறைகொள் செல்வ நிதியோடும்,
மைந்தனொடும், எய்தி, அவர் மலர் அடியின் வீழ்ந்தான்.

8
உரை
   


விராடனை நறுங் குவளை மாலை வியல் மார்பில்,
தராபதி எழுந்து எதிர், தழீஇயினன் இருத்தி,
'பராவரு பெரும் புகழ் படைத்தவர், உனைப்போல்,
அராவின் முடிமேல் உலகில் ஆர்கொல் உளர்?' என்றான்.

9
உரை
   


'நான் செய்த குறையைப் பொறுக்கவேண்டும்!' என விராடன் தருமனை வேண்டுதல்

அறை முரசு உயர்த்தவனை, அவனும், 'நனி, ஐயா!
பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ?
இறை அமுத நற்குணம் இலாதவரிடத்தில்
குறை திருஉளத்தினிடை கொண்டருளல்!' என்றான்.

10
உரை
   


தருமன் முகமன் கூறி, 'போரில் எனக்குப் படைத்துணையாக வேண்டும்' எனல்

'இந் நகரில் எய்திய பின் எத் துயரும் எய்தாது,
எம் நகரி என்ன நெடு நாள் இனிது இருந்தேம்;
செந்நெல் வயலூடு முது சேல் உகளும் நாடா!
நின்னிலும் உயர்ந்த தமர் நீ அறிய உண்டோ?

11
உரை
   


'நின் புதல்வரும், திறல் வரூதினியும், நீயும்
என் புயம் எனச் சமரில் என் அருகு நின்றால்,
வன்பினொடு வஞ்சனை செய் மன்னர் படை யாவும்,
தென்புலம் அடைந்திட மலைப்பல்! இது திண்ணம்.'

12
உரை
   


தருமன் உரையால் விராடன் மனத்துன்பம் நீங்க, உத்தரன்,
'எங்கள் படையும் நினதே; உத்தரையும் விசயனுக்கு உரியளே' எனல்

என முரசு உயர்த்தவன் இயம்புதலும் மகிழா,
மனன் இடர் அகற்றினன், அம் மச்ச வள நாடன்;
தனயனும், 'நமக்கு உறுதி தக்கது' என எண்ணா,
இனிமையொடு அறத்தின் மகனுக்கு இவை இசைப்பான்:

13
உரை
   

'எத் தரையும் நீழல் செய் தனிக் கவிகை எந்தாய்!
இத் தரையும் நின்னது; நின் ஏவலினர் யாமும்;
பத்து-அரையொடு ஈர்-அரை கொள் பல் படையும் நினவே;
உத்தரையும் வில் விசயனுக்கு உரியள்' என்றான்.
14
உரை
   


விசயன், 'எனது மகன் அபிமனுக்கே உத்தரை
உரியளாதல் வேண்டும்' எனல்

வில் விசயன், உத்தரன் விளம்புதலும், 'வீரம்,
கல்வி, செய் கலைத் திறன், வனப்பு, உடைய காளாய்!
இல் விசய மெய்க்குணனில் மிக்க இளையாள், என்
தொல் விசயம் உற்ற சுதனுக்கு உரியள்' என்றான்.

15
உரை
   


பாண்டவர் தாம் வெளிப்பட்டமையைத் தமராய மன்னர்க்குத்
தூதர் மூலம் சொல்லி அனுப்புதல்

விசயன் தொகுத்து, நயமாக விராடன் நெஞ்சுக்கு
இசையும்படி சொற்று, அவரோடும் இருந்த பின்னர்,
வசை இன்றி வாழும் தமர் ஆகிய மன்னர்க்கு, எல்லாத்
திசையும், தமது செயல் தூதரின் செப்பி விட்டார்.

16
உரை
   


செய்தி தெரிந்து, அபிமன் முதலியவரோடு கண்ணன்
பாண்டவரை அடைந்து, அளவளாவி இருத்தல்

வெளிநின்ற மாற்றம் வெளியானபின், வெண் தயிர்த் தண்
துளி நின்ற மேனித் துளவோன், தன் துணைவரோடும்
அளிநின்ற மாலை புனை தங்கை, அபிமனோடும்,
தெளிநின்ற வேற் கைச் சிவேதன்னொடும், வந்து சேர்ந்தான்.

17
உரை
   

கண்டான், மகிழ்ந்தான்; அறன் மைந்தனைக் கை தழீஇயும்
கொண்டான்; அவன்தன் இளையோர் கை குவித்து வீழ்ந்தார்;
எண்தான் அவரோடு இயைந்து எண்ணி, புவனம் ஏழும்
உண்டான் உரைத்தான், உரைத்தக்க உரைகள் எல்லாம்.
18
உரை
   


கண்ணன் தன்னுடன் வந்த சிவேதனைக்
குறித்து விராடனுக்குக் கூறி, அவன்
கவலையைத் தீர்த்தல்

சிவன்தன்னை நோக்கிச் சிவேதன் தவம் செய்தவாறும்,
அவன்தன் அருளால் பல ஆயுதம் பெற்றவாறும்,
இவன்தன் பகை செற்றதும், யாவும் இயம்பி, உள்ளம்
கவன்று, அன்பு உறா மன் விராடன்தன் கவற்சி தீர்த்தான்.

19
உரை
   

தெவ் மைந்தர் என்னும் களபங்களைச் சிங்க சாப
வெம் மைந்தின் வேறற்கு அமைந்தான் ஒரு வீரன் ஆன
தன் மைந்தனைக் கண்டு, உருகும் திறல் தந்தை தாளில்
அம் மைந்தனும் வீழ்ந்து, உடன் வைகினன், ஆர்வம் மிக்கே.

20
உரை
   


பாஞ்சாலர் முதலிய பல மன்னர்கள் தம் தானைகளோடு
வந்து பாண்டவரைக் கண்டு, அவர் உற்ற
துன்பத்திற்கு இரங்கிக் கூறுதல்

பாஞ்சாலர், போச குல மன்னவர், பாண்டி வேந்தர்,
வாஞ்சா மனத்தின் வய மத்திரர், மாகதேயர்,
பூஞ் சாப வெற்றிக் கொடிக் கேரளர், பொன்னி நாடர்,
தாம் சால்புடன் அப் பதி வந்தனர், தானையோடும்.

21
உரை
   


வந்து, ஓகையோடும், இரு பாதம் வணங்கி, வைகும்
கந்தோடு அடர் கைக் கடுங் கோபக் களிற்று வேந்தர்,
'அந்தோ நெடு நாள் அகன் கானில் அடைந்திர்!' என்று
நொந்தோரை ஆற்றி, நுவல்வான், அந் நுதி கொள் வேலான்.

22
உரை
   


'விராடன் நகரிற்கு வந்த அன்றே என் துன்பம் நீங்கியது'
எனத் தருமன் மொழிந்து, துரியோதனனால் நேர்ந்த
அழிவைப் பற்றியும் உரைத்தல்

'தேனில் குளித்த சிறை அம்புயச் சேர்க்கை அன்னம்
வானில் பறந்து புலர்த்தும் புனல் மச்ச நாடன்,
வேனில் சிலை வேள், விராடன், புரம் மேய அன்றே,
கானில் திரிந்த பரிதாபம் கழிந்தது' என்றான்.

23
உரை
   

'பண்ணுக்கு உருகிப் பறையால் அகப்பட்ட மான்போல்,
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி, மகன் செய் வஞ்ச
எண்ணுக்கு அழிந்தேன்; இனிச் செய்வது என்? யாரும் நீவிர்,
கண்ணுக்கு இமைபோல் இருந்தீர், களைகண்கள் ஆக.'
24
உரை
   


சல்லியன் துரியோதனன் வஞ்சமாகத் தன்னைத்
துணைவனாக்கியது உரைத்து, மீளுதல்

அரசர்க்கு அடைவே அவையின்கண் அவை அனைத்தும்
முரசக் கொடியோன் நயமாக மொழிந்த போது,
விரை துற்று தார்ச் சல்லியன், முன்பு விளைந்த எல்லாம்
பரசுற்று அகன்றான், பிழை கொன்ற பகடு போல்வான்.

25
உரை
   


கரடக் கட வெங் களி யானை, கவன மான் தேர்,
துரகப் பதாதிப் படைதம்மொடும் சூழ்ச்சியாக
விரகின் புகுந்து, நெறியின்கண் விருந்து செய்த
உரகக் கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான்.

26
உரை
   

'நஞ்சோடு சாலும் அமரின்கண் நமர்கள் என்றும்,
நெஞ்சோடு இயைந்த துணை என்றும், நினைத்தல் செய்யார்;
செஞ்சோறு சால வலிது' என்று, மண் செப்பும் வார்த்தை
வெஞ் சோரி வேலான் நிலை இட்டனன், மீண்டும், ஈண்டும்.

27
உரை
   


விராடன் உத்தரையை அபிமனுக்குத் திருமணம் செய்வித்தல்

ஓமம் செய் தீயில் பொரி சிந்தலின், உற்ற வாசத்
தூமம் புடை சூழ் புவிவேந்தர் தொடையல் சூழக்
காமன் திருமைத்துனற்கு அன்பொடு அக் கன்னிதன்னை
மா மன்றல் அங்கே புரிவித்தனன், மச்சர் கோமான்.

28
உரை
   


பாண்டவர்கள் காளிக்குப் பலி கொடுத்து, வன்னி மரத்து
வைத்த படைகளை மீட்டும் கொள்ளுதல

முன்னி, சமருக்கு ஒருப்பட்ட முடி மகீபர்,
கன்னிக்கு வேண்டும் கடன் ஆன பலிகள் நல்கி,
வன்னிப் பொதும்பர்வயின் வைத்த வயங்கு சோதி
மின்னின் திகழ் வெம் படை யாவையும் மீண்டு கொண்டார்.

29
உரை
   


திருமணம் முடிந்தபின் பாண்டவரும், கண்ணன் முதலிய
பிற அரசர்களும் உபப்பிலாவிய நகர் சென்று, போர் பற்றி ஆராய்தல்

சேயோன் விழவு விழைவோடு சிறந்த பின்னர்,
மாயோனும், மற்று அக் குருமைந்தரும், மன்னர் யாரும்,
போய், ஓதை வீதி உபலாவி புகுந்து, தங்கள்
ஆயோதனத்துக்கு உறு நீர்மைகள் ஆயல் உற்றார்.

30
உரை