32. நான்காம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

தேடிய அகலிகை சாபம் தீர்த்த தாள்,
நீடிய உலகு எலாம் அளந்து நீண்ட தாள்,
ஓடிய சகடு இற உதைத்து, பாம்பின்மேல்
ஆடியும் சிவந்த தாள்,-என்னை ஆண்ட தாள்.
1
உரை
   


இருவர் சேனையும் பொங்கிப்
போருக்கு எழுதல்

நற் பகலிடை வரு நளின நாயகன்
பொற்பு அகலுற ஒளி புரியும் நேமியான்
பிற் பகல் அணியையும், பிறங்கு சேனையால்,
முற் பகல் வியூகமே ஆக மூட்டினான்.

2
உரை
   

கார் முகில் வண்ணனைக் கண்டு, காணலார்-
தாமும் அவ் வியூகமே சமைத்து முந்தினார்;
ஏமமோடு எதிர் முனைந்து இருவர் சேனையும்,
போர் முரசு எழ எழ, பொங்கி ஆர்த்தவே.
3
உரை
   

ஏழ்-இரு புவனமும் ஏந்து மேருவைச்
சூழ்வன கிரிக் குழாம் சுற்றுமாறுபோல்,
பாழி அம் புய கிரிப் பவனன் மைந்தனை
வேழ வெம் படையுடை வேந்தர் சூழவே.
4
உரை
   


யானைப் படைகளை வீமன் அழித்த வகை

ஆலாலம் எனக் கதுவா, அதிரா,
மேல் ஆள் விழ, வீமன் வெறுங் கைகளால்,
ஏலா உடல் என்பு உக, மோத, வெறுந்
தோல் ஆயின-சிற்சில தோல்இனமே.

5
உரை
   

மேல் வாய் தம கையொடு மேல் எழவும்,
தோல் வாய் அவை கீழ் விழவும், துணியா,
மால் வாரணம் வாய்கள் கழன்றன, முன்
நால்வாய் எனும் நாமம் நலம் பெறவே.
6
உரை
   

மதி வெண்குடை மாருதி வன்புடனே
குதிகொண்டு ஒரு கைகொடு குத்துதலால்,
அதிர் சிந்துர வல் உரம் அத்தனையும்
எதிர் சிந்துரம் ஆகி, இளைத்தனவே.
7
உரை
   

உடலில் தசை யாவும் உடைந்து, நெடுங்
குடல் அற்று விழும்படி குத்துதலான்,
மிடல் பற்றிய வீமன் வெறுங் கைகளால்
அடல் அத்திகள் அத்திகள் ஆயினவே.
8
உரை
   

கந்தாவகன் மொய்ம்பு உறு காளை, புயக்
கந்தால், அமர் செய்து கலக்குதலின்,
தந்தாவள சேனை தரிப்பு அறவே
தம் தாவளம் உற்றன, சாயுறவே.
9
உரை
   

வெவ் வாயுவின் மைந்தன் வெகுண்டு, ஒரு தோல்
மொய் வாகுவில் வைத்து, எதிர் மோதுதலால்,
கை, வாலதி, மெய், தலை, கால்கள், கரந்து,
அவ் வாரணம் வாரணம் ஆகியதே.
10
உரை
   

கம்பித்தன கார் உடல், பேர் உயிரும்
கும்பித்தன,-வாயு குமாரன் இவன்
அம் பொற் கர பங்கயம் அள்ளுதலின்,-
தும்பிக் குலம் ஆயின, தும்பிகளே.
11
உரை
   

மின் நாக மணிப் புயன் வெங் கதையால்
முன்னாக மலைந்து முருக்குதலால்,
எந் நாகமும் நாகம் எனும்படியே
மன் ஆகவம் எங்கும் மடிந்தனவே.
12
உரை
   

கோடும் கரமும் பறிய, குதிகொண்டு
ஓடும் குருதிப் புனலூடு, உடலம்
மூடும்படி யாவரும் மூழ்குதலால்,
ஆடும் கயம் ஆயின, அக் கயமே.
13
உரை
   

வீசும் தம கைம் முதல் மெய்ம் முழுதும்
கூசும்படி சிற்சில் குழம்புகளாய்,
மூசும் களபக் குலம், மொய்ம்பன் உடல்
பூசும் களபக் களி போன்றனவே.
14
உரை
   

கிரியே என வந்து எதிர் கிட்டின, புன்
பொரியே என, வானிடை புக்கன; போர்
அரிஏறு அனையான் வலிமைக்கு அவர்தம்
கரியே கரி அல்லது, கண்டவர் யார்?
15
உரை
   

இவ்வாறு வெகுண்டு, இவன் எற்றுதலும்,
கை வாரண வேலை கலக்கம் உற,
தெவ் ஆகிய மன்னவர் தேர்களொடும்
வெவ் வாசிகள்தம்மொடும் வென்னிடவே,
16
உரை
   


அது கண்டு துரியோதனன் தம்பியர்
முதலியோருடன் சென்று எதிர்த்தல்

உடைகின்றமை கண்டு, உரகத் துவசன்,
குடையும், கொடியும், குளிர் மா முரசும்,
படையும், சில தம்பியரும், பலரும்,
புடைகொண்டு வர, போனான் அவன்மேல்.

17
உரை
   

வீமற்கு எதிர் நின்று, அவன் வில் அறவும்,
சேமக் கவசம் சிதைவுற்றிடவும்,
நாமக் கணை ஏவினன்-நாயகனாம்
மா முத்த மதிக் குடை மன்னவனே.
18
உரை
   

ஆறு அம்பினில் அற்று அரவத் துவசம்,
நூறு அம்பு அகல் மார்பில் நுழைந்தன; பின்,
வேறு அம்பு தொடுத்திலன், வீமன்; அவன்
மாறு அம்பு தொடுத்தனன், மற்று இவன்மேல்.
19
உரை
   

சிங்கக் கொடி அற்று, அணி தேர் சிதைவுற்று,
அங்கத்தில் நுழைந்தன அம்புகளும்;
துங்கக் கடகத் திரள் தோள் புடையா,
வெங் கண் கனல் வீமன் வெகுண்டனனே.
20
உரை
   

வீமன் வெகுண்டு பொர, அவனுக்குத்
துணையாகத் தம்பியர் முதலியோர் வருதல்

'நொந்தான் இவன்!' என்று, நுதிக் கதிர் வேல்
அம் தார் முடி மன்னர் அநேகருடன்
வந்தார், பலர் தம்பியர், மைத்துனரும்,
கொந்து ஆர் தொடை வீர குமாரருமே.

21
உரை
   

மலரும் குடை மன்னவர் வந்தமை கண்டு,
அலரும் கொடி வாள் அரவோன் அருகே,
பலரும் கரி தேர் பரி ஆளுடனே
சிலரும் புவிபாலர் திரண்டனரே.
22
உரை
   


வீமன் கணையால் துரியோதனன் தளர, சகுனி சல்லியன்
முதலியோர் வந்து, அவனை எடுத்து அணைத்தல்

எதிர்ந்தார், மன்னர் இரு திறத்தும், ஒருவர்க்கு ஒருவர்;
                  இடை இடை நின்று
அதிர்ந்தார், சிறு நாண்; பேர் ஒலியால் உடையா
                  அல்ல, அகிலாண்டம்;
முதிர்ந்தார் போரில் தொடு கணையால், முரண் தோள்
                  துணிந்தும், முடி துணிந்தும்;
உதிர்ந்தார், தம்தம் உடல் நிலத்தில்; உயர்ந்தார்,
                  ஆவி உயர் வானில்.

23
உரை
   

தாமத் தெரியல் வலம்புரியோன் தடந் தாமரைக்
                  கைத் தனுத் தறிய,
சேமக் கவனப் பவன கதிப் பரிமா நான்கும்
                  சிரம் துணிய,
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர்
                  சிதைய, மார்பு உருவ,
நாமக் கணைகள் பல பட வில் உகைத்தான்,
                  நின்று நகைத்தானே.
24
உரை
   

'முன் நாள் அமரில் கடோற்கசன்தான் முனை வெஞ்
                  சரத்தால் மூழ்குவித்தான்;
பின் நாள், மீளப் பிறைக்கணையால் பிளந்தான், அவனைப்
                  பெற்று எடுத்தோன்'
என்னா, இரங்கா, மெய்ந் நடுங்கா, எடுத்தார் அணைத்தார்,
                  சகுனியும், அப்
பொன் ஆர் தடந் தேர்ச் சல்லியனும், முதலா
                  உள்ள பூபாலர்.
25
உரை
   


தமையன் நிலை கண்டு தம்பியர்
முனைந்து பொருதல்

தம்முன் தளர்ந்த நிலை கண்டு, தரியார் ஆகி,
                  தம்பியர்கள்,
'எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர்!'
                  என்று என்று, இகல் கூறி,
தெவ் முன், செவிகள் செவிடுபடச் சிறு நாண்
                  எறிந்து, தேர் கடவி,
முன் முன் கடிதின் கணை பொழிந்தார், முகுந்தன்
                  தடுத்த முகில் போல்வார்.

26
உரை
   


துரியோதனன் தம்பியரில் ஐவர் வீமன்
கணையால் மாளுதல்

வில்மேல் விசையின் கடும் பாணம் மேன்மேல் நிறுத்தி,
                  வேந்தரைப்பார்த்து,
'என் மேல் நினைவு?' என்று, அவர் அவர் பேர் இரதம்
                  துணித்து, சிலை துணித்து,
தன்மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு
மன்மேல் எய்த வாளி எனத் தொடுத்தான், ஐந்து
                  வய வாளி.

27
உரை
   

சேனாவிந்து, சுதக்கணன், பொன்-தேர்ப்
                  பிங்கலசன், சலாசந்தன்,
ஆனா வீமவாகு, எனும் அடல் வாள்
                  நிருபர் ஐவரையும்,
வான் நாடு ஆளும்படி விடுத்தான்-வன்பால்
                  தம்மை ஐவரையும்
'கான் ஆள்க!' என்ற காவலனைப் போல்வான்,
                  வீரக் கழல் வீமன்.
28
உரை
   


துரியோதனன் சேனைகள் சிதற, பகதத்தன்,
'அஞ்சல்!' என்று அவர் எதிர் சென்று பொருதல்

ஒருபால் வீமன், சிலை விசயன் ஒருபால்,
                  ஒருபால் அபிமன்னு,
ஒருபால் நகுலன், சாதேவன் ஒருபால்,
                  ஒருபால் உரகேசன்,
ஒருபால் அரக்கன், பாஞ்சாலன் ஒருபால்,
                  அடல் உத்தமபானு
ஒருபால், உடன்று பொரப் பொரவே, உடைந்தது,
                  அரசன் பெருஞ் சேனை,

29
உரை
   

விண் நாடருக்கா வெஞ் சமத்தில் அசுராதிபரை
                  வென் கண்டோன்,
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான்,
                  மா மரபால்
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர்ப் பகலோன்
                  அன்ன பகதத்தன்,
எண்ணார் துரக்க வரும் படையை, 'அஞ்சல்!' என்று
                  என்று, எதிர் சென்றான்.
30
உரை
   

அலை கால் வெள்ளக் கருங் கடல்போல் அதிரா
                  நின்ற ஆகவத்தில்,
மலை கால் பெற்று வருவதுபோல், வரு திண் பனைக்
                  கை மா மிசையான்
சிலை கால் வளைத்து, தீ வாய் வெஞ் சரம் கொண்டு,
                  அடையார் சிரம் கொண்டான்,
கொலை கால் செங் கண் கரிய நிறக் கூற்றம்தனக்கும்
                  கூற்று அன்னான்.
31
உரை
   

தார் ஆர் ஓடைத் திலக நுதல் சயிலம்
                  பதினாயிரம் சூழ
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும்,
                  மன வலியும்,
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள்
                  வலியும், சிலை வலியும்,
பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும்
                  பார்த்தானே.
32
உரை
   


பகதத்தன் வரவால் சேனை தளர்தல் கண்டு, கடோற்கசன்
பல வேறு மாய வடிவம் கொண்டு மலைதல்

ஆய போதில், ஆயிர நூறு மத மாவும்,
மேய தீய காலனை ஒக்கும் மேலாளும்,
சாயகம்மும், சாபமும், யாவும், தானே ஆம்
மாய வேடம் கொண்டு, அவனோடு மலைவுற்றான்.

33
உரை
   

சங்கம் ஊத, தார் முரசு ஆர்ப்ப, முழவு ஆர்ப்ப,
பொங்கும் பூழி ஆழி வறக்கும்படி போத,
சிங்கம் குன்றில் செல்வது போல, சிலையோடும்,
எங்கும் தானும் வேழமும் ஆகி, எதிர் சென்றான்.
34
உரை
   

மைபோல் ஆர்த்து, மும் முறை தான மழை சிந்தி,
கை போய் முட்டி, கையொடு தம்தம் கால் வீசி,
மெய்போல் வெம் போர் செய்தன, வீரன்
                  விறல் வேழம்;
பொய்போல் நின்ற, வரு பகதத்தன் போர் வேழம்.
35
உரை
   


கடோற்கசன் வெற்றிபெற, பகதத்தன் தப்பி
ஓடுதலும் சூரியன் மறைதலும்

நின்றார்; நின்றபடி கடிதாக நெடிது ஓடிச்
சென்றார்; கண்ட சிந்துரம் யாவும் தீ அம்பின்
கொன்றார்; மற்று அக் கொற்றவர் யாரும்
                  கொலையுண்டார்;
வென்றார் அன்றோ, வீமன் மகன் சேனையில் வீரர்?

36
உரை
   

'ஆனது ஆனது ஆகவம் எங்கும் ஆனைப் போர்;
போன போன மைந்தர் பிழைப்பீர், போம்!' என்று என்று,
ஊனம் எய்தாது, அவ் இறை போனான், உயிரோடும்;
போன கண்ட காய் கதிரோனும் புறமிட்டான்.
37
உரை
   


இரு திறத்தாரும் தத்தம் பாசறை புகுதல்

பூந் தண் மாலைப் பஞ்சவர் ஆனைப் போர் வென்று,
சேர்ந்த சேர்ந்த மன்னவரோடும், திறலோடும்,
தாம் தம் பாடி வீடு புகுந்தார்; தரை ஆளும்
வேந்தனோடும் பாசறை புக்கான், வீடும்மன்.

38
உரை
   


மைந்தர் ஐவரின் மறைவு தெரிந்து காந்தாரி அழுது சோர்தல்

'பூண் பாய் மார்பின் புத்திரர்#தம்மைப் பொலிவோடும்
காண்பாள் ஐவர்க் கண்டிலள், பெற்ற காந்தாரி;
'சேண்பால் எய்தச் சென்றனரோ?' என்று, இரு கண் நீர்
தூண்பால் ஆகிச் சோர்தர, உள்ளம் சோர்வுற்றாள்.

39
உரை
   

'கொன்னே குந்தி மைந்தர் இருக்கக் கொலையுண்டீர்;
முன்னே முன்னும் முன்னம் முடிந்தது' என முன்னா,
மின்னே என்ன மெய் குலையா, மண்மிசை வீழ்ந்தாள்;
'என்னே! என்னே!' என்று இனையா நின்று, என் செய்தாள்!
40
உரை
   

வீறு ஆர் கற்பின் மின் அனையாளை விறல் மைந்தர்
ஏறா மன்றில் ஏற்றவும், 'ஆம், அன்று' என்னாதாள்,
ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி,
ஆறா வெள்ளத் துன்புற அன்றே அடியிட்டாள்.
41
உரை
   


இருள் அகல, இரவி தோன்றுதல்

ஆளாய் மாய்ந்த வேந்தர் இடம்தோறு அழும் ஓசை
கேளா, 'எப்போது ஏகுவம்?' என்று, அக் கிளர் கங்குல்
மீளா, ஓடிற்று; அத் திசை வானோன் மிளிர் சென்னிச்
சூளாமணிபோல் வந்தது காலைச் சுடர் அம்மா!

42
உரை