39. பதினோராம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

காயமும் புலனும் அந்தக்கரணமும் ஆகி, எல்லாத்
தேயமும் பரந்து நின்று, மீளவும் சித்தும் சுத்த
மாயமும் ஆகி, நீங்கி, வரு பெரு ஞானானந்தம்
ஆய எம்பெருமான், என்னை ஆண்டருள் ஆழியானே.
1
உரை
   


தோற்றுவாய்

பகிரதி மைந்தன் சேனாபதி எனப் பத்து நாளும்
இகல் புரி இயற்கை எல்லாம் இயம்பினம்; இனிமேல், அந்தத்
துகள் அறு கேள்வி வேள்வித் துரோண ஆசிரியன் செய்த
புகல் அரும் ஐந்து நாளைப் பூசலும் புகலலுற்றாம்: .

2
உரை
   


ஐவரும் சேனையும், துரியோதனாதியரும்
படைகளும் களத்திற்கு வருதல்

'சென்றனன், கங்கை மைந்தன்; தினகரன்
              மைந்தன் செல்வான்
நின்றனன்; துரோணன் மைந்தன் நீடு அமர்
              முனைந்து செய்யான்;
வென்றனம் இனி நாம்!' என்று மெய்ம் முகில்
              வண்ணன் சொல்ல,
குன்று அன குவவுத் தோளார் வெங் களம்
              குறுகினாரே.

3
உரை
   


மா தனத்து அளகை ஆளும் மன் என, வானில் பாக-
சாதனக் கடவுள் என்ன, தகும் பெருந் தரணி வேந்தன்,
சேதனப் படைஞரோடும், சேனையின் காவல் ஆன
வேத நல் குருவினோடும், வெங் களம் வந்து சேர்ந்தான்.

4
உரை
   


வீடுமன் இல்லாத சேனையின் தோற்றம்

மதி இலா விசும்பும், செவ்வி மணம் இலா மலரும்,
              தெண்ணீர்
நதி இலா நாடும், தக்க நரம்பு இலா நாத யாழும்,
நிதி இலா வாழ்வும், மிக்க நினைவு இலா நெஞ்சும், வேத
விதி இலா மகமும் போன்ற,-வீடுமன் இலாத சேனை.

5
உரை
   


துரோணன் சகட வியூகம் வகுக்க, திட்டத்துய்மன்
கிரவுஞ்ச வியூகம் வகுத்தல்

பகடு, தேர், புரவி, காலாள், பல வகைப் பட்ட சேனை
சகட மா வியூகமாக வகுத்தனன், தனுநூல் வல்லான்;
திகழ் தரு கவுஞ்ச யூகமாகவே திட்டத்துய்மன்
துகள் தரு சாதுரங்கம் யாவையும் தொகுத்து நின்றான்.

6
உரை
   


சேனாபதியர் இருவரும் அம்பு மழை பொழிதல்

படையுடை இருவர் சேனாபதிகளும், பனி வெண் திங்கள்-
குடையுடை நிருபர் சூழ, வரூதினிக் குழாங்கள் சூழ,
நடையுடைத் தடந் தேர் உந்தி, நாகரும் பனிக்கும் வண்ணம்
தொடையுடை வாளி மாரி சோனை அம் புயலின் பெய்தார்.

7
உரை
   


சகாதேவன் சகுனியை வில்லாலும்
கதையாலும் வெல்லுதல்

மருத்துவர் மைந்தர்தம்மில் இளவலும், வலிய சூது
கருத்துடன் பொருது வென்ற மாமனும், கலந்து, தம்மில்
ஒருத்தரை ஒருத்தர் வேறல் அரிது என உடன்று, வேக
சரத்தொடு சரங்கள் பாய, சராசனம் வாங்கினாரே.

8
உரை
   

ஒரு கணை தொடுத்துப் பாகன் உயிர் கவர்ந்து,
              உயர்த்த கேது
இரு கணை தொடுத்து வீழ்த்தி, இரத மாத்
              தொலைய நான்கு
பொரு கணை தொடுத்து, வஞ்சன் பொரு அரு
              மார்பில் ஆறு
வரு கணை தொடுத்து, வாகை மிலைந்தனன்,
              வஞ்சம் இல்லான்.
9
உரை
   


உகு நிணச் சேற்றில் ஊன்றி ஓடுதற்கு உன்னுவான்போல்,
சகுனி அத் தேரினின்றும் இழிந்து, கைத் தண்டம் ஏந்த,
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலயத் தோள்மேல்
மிகு திறல் தண்டுகொண்டே வென்னிடப் பொருது மீண்டான்.

10
உரை
   


துரியோதனன் வீமனோடு பொர வந்து,
விரைவில் பின்னிடுதல்

மதாசலம், மகுட மான் தேர், வாம் பரி, வயவர், வெள்ளப்
பதாதி, எம் மருங்கும் போத, பார்த்திவர் நிழலின் போத,
பிதாமகன் இறந்தான் என்று பேதுறு நிருபன் போந்து,
சதாகதி மைந்தனோடும் தாக்கினன், தபனன் போல்வான்.

11
உரை
   

அரிக் கொடி அரிஏறு அன்னான், அரவ வெங்
              கொடியும் அற்று,
வெருக் கொள் பேர் அரவம் அன்னான் வில்லும்
              முன் அற்று வீழ,
எரிக் கணை ஏவி, சூழ்ந்த தரணிபர், எதிர்ந்த வேந்தர்,
கரிக் குலம், இவுளி, திண் தேர், மடிய, வெங்
              கணைகள் தொட்டான்.
12
உரை
   


அப்பொழுது சல்லியன் வீமன்மேல்
அம்பு துரந்து வருதல்

மபல் இயம் முழங்க, மன்னர் படப் பட,
              பரித் தேரோடும்
வில் இயல் தானை வேந்தன் வென்னிடும்
              விரைவு காணா,
சொல்லிய விற் கை வாயு சுதனுடன் உரும்ஏறு என்ன,
சல்லியன் முனைந்து, வீர சாயகம் ஏவினானே.

13
உரை
   


சல்லியன் நகுலனோடு பொருது பின்னிடுதல்

துருபதேயர், மகத நாடர், வெங் குலிங்கர், சோனகர்,
கருநடேசர், சிங்களர், கடார பூபர், கௌசலர்,
தருமராசன் மதலை சேனை முதுகிட, சரங்கள் போய்
ஒருவர் போல அனைவர்மேலும் உருவ,
              எய்து உறுக்கினான்.

14
உரை
   

மோகரித்து, ஒன்று, இரண்டு, மூன்று, நால், ஐந்து,
              அம்பு ஏவி,
பாகனை, சிலையை, பொன்-தேர்ப் பதாகையை,
              பரியை, வீழ்த்தி,
ஆகம் உற்று உருவ எய்தான், அருச்சுனன்
              இளவல்; மாறாப்
போக மத்திரத்தார் கோவும் புறந்தந்து போகலுற்றான்.
15
உரை
   


கன்னனும் விராடனும் விற்போர் செய்தல்

சையம் ஓர் இரண்டு தம்மில் பொருதெனத் தடந்
              தேர் உந்தி,
வெய்யவன் மகனும், வீர விராடனும், எதிர்ந்த வேலை,
வையகம், கம்பமுற்று, மாசுணம் நடுங்க, மேன்மேல்
எய்யும் வெங் கணையால், வானத்து எல்லையும்
              மறைந்தது அன்றே.

16
உரை
   


துருபத யாகசேனனும் பகதத்தனும்,
யானைப் போர் புரிதல்

துருபத யாகசேன நிருபனும், தும்பை சூடி
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும்,
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும், உரனும், தேசும்,
பொரு படை வலியும் காட்டி, போதகப் பூசல் செய்தார்.

17
உரை
   


சிகண்டி வாட்போரில் சோமதத்தன் முதலியோரைப்
புறங்காட்டி ஓடச் செய்தல்

துன்று வெங் கழற்கால் சோமதத்தனும், சூழ்ந்து நின்ற
வன் திறல் வேந்தர்தாமும், வாள் அமர் புறம் தந்து ஓட,
அன்று வீடுமனை வென்ற ஆண்தகை சிகண்டி என்பான்
இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு
              இயம்பல் ஆமோ?

18
உரை
   


அபிமனும் இலக்கணகுமரனும் பொருதல்

தேர்த் திரள், பரித் திரள், கரித் திரள், சேனையின்
கோத் திரள், புடை வர, குடை வர, கொடி வர,
பார்த்திவன் மதலையும், பார்த்தன் மா மதலையும்,
தூர்த்தனர் விசும்பையும், தொடுத்தன தொடைகளால்.

19
உரை
   

மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும்,
பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும்,
எய் கணை அபிமனும், இலக்கணகுமரனும்,
கை கணை தர, நெடுங் கார்முகம் வாங்கினார்.
20
உரை
   


இலக்கணகுமரன் அபிமனின் வில்லையும் நாணையும்
துணிக்க, அவன் தேரில் சென்று இலக்கணகுமரனைப்

பற்றிக் கொண்டு போதல்

இன் சிலை மதன வேள் என வரும் குமரன், அவ்
வன் சிலை வில்லிதான் மகிழ்வுறும் குமரனை
நன் சிலை நடு அற நாணொடும் துணியவே,
தன் சிலை கொண்டு, வெஞ் சாயகம் ஏவினான்.

21
உரை
   

அற்ற வில் துணிகளால் அரியையும் பாகையும்
செற்றனன்; சென்றனன், தேரொடும் தேர் உக;
கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அக் குமரனைப்
பற்றினன், உயிரொடும்-பாண்டவர் குமரனே.
22
உரை
   


வீயினால் வென்ற போர் வில்லியைக் கண் நுதல்
தீயினால் வென்றவன் திகழ்தரும் சிந்தையோன்,
காயினான் வார் குழல் கைப்படுத்து, எதிர் உறப்
போயினான் அவனொடும், பொன் நெடுந் தேரின்மேல்.

23
உரை
   


சயத்திரதன் அபிமனைத் தடுத்தல்

முந்து வாள் அபிமன் அம் மூரி விற் குமரனை
உந்து தேர்மீது கொண்டு ஓடலும், ஒரு புடைச்
சிந்து பூபதி செயத்திரதன் வெஞ் சினம் உற,
வந்து, வெங் குனி சிலை வாளியின் தகையவே,

24
உரை
   


சயத்திரதன் வலி தொலைய, கன்னன் முதலிய வேந்தர் வர,
பொர வந்த யாரையும் விற்போரில் அபிமன் புறங்காணுதல்

மடங்கலை வளைவது ஓர் சிலம்பி நூல் வலை எனத்
தொடங்கிய மன்னவன் தோள் உரம் தொலைந்த பின்,
திடம் கொள் தோள் அங்கர்கோன் முதலிய தேர் மனர்
அடங்க வந்து, அபிமனாம் ஒருவனோடு அமர் செய்தார்.

25
உரை
   


வந்தவர் வந்தவர் வாள் நுதல் நிலைதொறும்
சிந்துரத் தூளியால் திலகம் இட்டனன் என,
கொந்து உறு கணை முனைக் குருதி நீர் மல்கவே,
வெந் திறல் வில்லின் வென் கண்டனன், வீரனே.

26
உரை
   


அப்பொழுது சல்லியன் வந்து அபிமனைத் தடுத்தல்

சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால்
வென்று, மா மன்னவன் மகனையும் மீது கொண்டு,
அன்று போம் வெஞ் சிலை ஆண்மை
              கண்டு, அபிமனை
வன் திறல் சல்லியன் வந்து முன் வளையவே,

27
உரை
   

சித்திரபானுவின் சீறி முன் செல்லும் அம்
மத்திரராசனை, 'வருக, நீ வருக!' என்று,
அத்திரம் நால்-இரண்டு அவன் முகத்து
              அடைசினான்,
மித்திரர் செல்வமாம் விசயன் மா மதலையே.
28
உரை
   


சல்லியன் அவனது தேர்ப்பாகனை வேலால் வீழ்த்த,
சல்லியன் கதையுடன் தேர் விட்டு இறங்குதல்

தோள் இரண்டினும் நடுத் துளை பட, பாகன்மேல்
மீளவும் கொடியது ஓர் வீர வேல் ஏவினான்;
நீள வெங் கதையுடன் நீள் வரை இழிதரும்
யாளிபோல் சல்லியன் இரதம் விட்டு இழியவே,

29
உரை
   


வீமன் அங்கு வந்து, சல்லியனைத் தண்டினால்
மோத, சல்லியன் தரையில் விழுதல்

வன்புடன் அபிமன்மேல் மற்று அவன் வருதலும்,
அன்புடன் கண்டு, பேர் அனிலன் மா மதலை போய்,
என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும்
முன்புடன் சாயவே, தண்டினால் மொத்தினான்.

30
உரை
   


அபிமன் வீமனோடு, 'என் ஆண்மை என் ஆம்?' என்று பேசி
நின்றபோது, இலக்கணகுமரன் தப்பி, தனது தேருக்கு மீளுதல்

தலக்கணே சல்லியன் வீழ்தலும், தந்தையோடு
அலக்கணுற்று, 'அடியனேன் ஆண்மை என்
              ஆம்?' என,
குலக்கு அணி ஆன வில் குமரன் நின்று
              அயர்தலும்,
இலக்கணகுமரனும் தனது தேர் ஏறினான்.

31
உரை
   


தரையில் வீழ்ந்த சல்லியனையும், தப்பிய இலக்கணகுமரனையும்
கிருதவன்மா காப்பாற்றிக் கொண்டு செல்லுதல்

தரையில் வீழ் சல்லியன்தன்னையும் தனது பேர்
இரதமேல் ஏற்றி, அவ் இலக்கணகுமரனாம்
குரிசிலை அன்று உயக் கொண்டு போயினன்அரோ-
கிருதவன்மா எனும் கிளர் முடி நிருபனே.

32
உரை
   


துரியோதனனும் போர் செய்யமாட்டாது
சேனையுடன் திரும்புதல்

பொரும் பொரும் முனைதொறும் புண்ணியன்
              சேனையில்
பெரும் பெருந் தரணிபர் பேறுடன் வேறலால்,
அடும் பெருங் கொடியின்மேல் அரவ ஏறு
              எழுதினான்
திரும்பினன், பல் வகைச் சேனையும் தானுமே.

33
உரை
   


அருக்கன் குடபால் மறைதல்

தண்டே கொண்டு வீமன் எனும் சண்ட பவனம்
              தாக்குதலால்
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு,
              இதயம் வெரீஇ,
பண்டே உள்ள ஓர் ஆழித் தேரோடு ஒளித்துப்
              பரிகள் உடன்
கொண்டே அருக்கன் அவ்வளவில் குடபால்
              முந்நீர் குளித்திட்டான்.

34
உரை
   


பாண்டவர் பக்கத்தார் பாடி வீட்டில் இனிது
துயில, துரியோதனன் பக்கத்தார் துயிலின்றி
வருந்தியிருத்தல

சென்ற நிருபர் புறம் நாண, திண் தோள்
              அபிமன் முதலான,
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு, விறல் ஆர்
              சேனை வேந்தனுடன்
மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும், தாமும்,
              பாடி மனை
ஒன்றி, இனிதின் கண் துயின்றார், உரனும் திறலும்
              உடையோரே.

35
உரை
   


பால் நாள் அளவும் துயிலாமல், பாந்தள்-துவசன்தனக்கு
                      உயிர் நண்பு
ஆனார் பலரும், வாள் வேந்தர் அமைச்சர் பலரும்,
                      இளையோரும்,
சேனாபதியும் சூழ இருந்து, அபிமன் கையில்
                      திருமைந்தன்
தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி,
                      உளம் நொந்தார்.

36
உரை
   


'தருமனை நாளை அகப்படுத்தினால்தான் இன்று
புதல்வனைப் பற்றிச் சென்ற செற்றம் நீங்கும்' என்ற
துரியோதனனுக்குத் துரோணனின் மறுமொழி்

'தனுவேதத்தின் கேள்விக்கும், சதுர்வேதத்தின்
              வேள்விக்கும்,
செனுவே! உன்னை அல்லது இனிச் செய்து முடிக்க
              வல்லவர் யார்?
மனுவே அனைய உதிட்டிரனை நாளைச் சமரில்
              மற்று இதற்கு ஓர்
அனுவே என்ன அகப்படுத்தின் அல்லால், செற்றம்
              அறாது' என்றான்.

37
உரை
   


'பெற்றோன்தனினும் சத மடங்கு வலியோன் வீமன்
              பின் நிற்க,
பொன்-தோள் விசயன் முன் நிற்க, பொரும் போர்
              முனையில் போர் உதவி
அற்றோர் போல, வில் வலியால், அறத்தோன்தன்னை
              அகப்படுத்தல்,
மற்று ஓர் பிறப்பில் தெரியாது, இப் பிறப்பில் முடிக்க
              மாட்டேமால்!

38
உரை
   


'செவ் வாய் வைக்கும் வலம்புரிக் கைத் திருமால்
              செம்பொன் தேர் ஊர,
வெவ் வாய் வாளி வில் விசயன், மெய்ம்மைத்
              தருமன் அணி நின்ற
அவ் வாய் இமைப்போது, அணுகாமல் காப்பார்
              சிலர் உண்டு ஆம் ஆகில்,
இவ் வாய் நாளை அகப்படுத்தித் தரலாம்' என்றான்
              எழில் மறையோன்.

39
உரை
   


திகத்தராசன் முதலியோர், 'தருமனுக்கு உதவியாக
வாராதபடி விசயன் வீமன் முதலியோரை
வளைப்போம்!' என வஞ்சினம் மொழிதல்

திகத்த ராசன் முதலாகச் சஞ்சத்தகரில் சில மன்னர்,
உகத்தின் கடையில் கனல் போல்வார், ஒருவர்க்கு
              ஒருவர் உரை முந்தி,
'சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி
              செய்யாமல்
மகத்தில் சனிபோல் வளைக்குவம் யாம்!' என வஞ்சினமும்
              பல சொன்னார்;

40
உரை
   


'அருளே வடிவு கொண்டனையோன் அருகு அங்கு
              அமரில் அணுகாமல்,
உருள் ஏர் இரதத்து அருச்சுனனை, ஒரு நாள் முழுதும்
              தகைந்திலமேல்,
மருளே கொண்டு, குடி வருந்த, மனு நூல் குன்றி,
              வழக்கு அழிய,
பொருளே வெஃகும் அரசரைப்போல் புகுவேம் யாமும்
              நரகு!' என்றார்.

41
உரை
   


'மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன்
              மைந்தன் எனப்
புறன் நிற்பானைத் தம்முனிடை போகாவண்ணம்
              தகைந்திலமேல்,
அறனின் கொண்ட தன் மனையாள் அமளித் தலத்தின்
              அழுது இரங்க,
பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும்
              பேறு!' என்றார்.

42
உரை
   


'கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண்
              தேரவன் ஆக,
வன் தாள் தடக் கை மாருதியே ஆக, அமரில்
              மறித்திலமேல்,
என்று ஆம் நாளை, முனி போரின், எந் நன்றியினும்
              செய்ந்நன்றி
கொன்றார் தமக்கு, குருகுலத்தார் கோவே! யாமும்
              கூட்டு' என்றார்.

43
உரை
   

வேந்தர்களையும் துரோணனையும் அனுப்பிவிட்டு,
துரியோதனன் தன் இருப்பிடம் சேர்தல்

இவ்வாறு உரைத்த வேந்தர்தமக்கு எய்தும் சிறப்புச்
              செய்து, அகற்றி,
கை வார் சாப முனிவரன்தன் கழற் கால் வணங்கி,
              'ஏகுக!' எனச்
செவ் வாய் மலர்ந்து, மானத்தால், திறலால், வாழ்வால்,
              செகத்து
ஒருவர்ஒவ்வா அரசன், தன் கோயில் அடைந்தான்,
              விபுதர்க்கு ஒப்பானே.

44
உரை
   


சூரியன் குணபால் தோற்றம் செய்தல்

கங்குல், சிலை நூல் முனிவனுடன் கழற் கால் அரசன்
              பணித்தமை கேட்டு,
அங்குத் தரியாது, 'இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன்
              அகப்படும்' என்று,
இங்குத் துயில்வார் யாவரையும் இரு பாளையத்தின்
              இடந்தோறும்
சங்கக் குரலால் துயில் எழுப்பி, தபனன் குணபால்
              தான் சேர்ந்தான்.

45
உரை