பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்11

வந்தியாதவர் - வணங்காதவர், மண்ணின்உம் - இந்தநிலவுலகத்திலும்,
வானின்உம் -மேலுலகத்திலும், இல்லை-: (இப்படிப்பட்டசந்திரன்),- புந்தியால்
உயர் -புத்தியினான்மேம்பட்ட, புதன்எனும் புதல்வனை - புதனென்னும்
பேரையுடையபுத்திரனை, மகிழ்வால் தந்து - மகிழ்ச்சியோடு (தாரையினிடமாகப்)
பெற்று, யாவர்உம்களிப்புஉற - (அந்தப் புதனுடைய நுண்ணறிவைக்கண்டு)
எல்லாரும் மகிழ்ச்சியடைய, இருக்கும் நாள் தன்னில்-, -(எ-று.)-
மநுவருண்மைந்தன்... ... இளையெனும் பெயர்மடவரலாயினனென்ப" என்று
அடுத்த கவியோடு தொடர்ந்துமுடியும்.

     வியாழனென்னுந் தேவகுருவின் பத்தினியான தாரையைச் சந்திரன் கண்டு
காதல்கொண்டு அன்னாளோடுகூடிப் புதனென்ற புதல்வனைப் பெற்றானென்க.
தந்தியாவரும் - குற்றியலிகரம்." உந்தியாரழகுடைய பேருரோகிணிவயிற்றிற்,
புந்தியாலுயர் புதனையப் புண்ணியன் பயந்தான்" என்று சிறுபான்மையாகக்
காணப்படும் பாடம், புராணகதையோடு மாறுபடுதலாற் கொள்ளத்தக்கதன்று.
மாலைச்சந்தியைத்தொழுவதைச் சந்திரனைத்தொழுவதாகக்கொண்டு கூறினார்
போலும்.                                                  (14)

7.- மநுவின் புதல்வன், சாபத்தால் இளையென்னும் பெண்ணாதல்.

வளைநெடுஞ்சிலைக்கரத்தினன் மநுவருண்மைந்தன்
உளையெழும்பரித்தேரின னுறுவதொன்றுணரான்
விளையருந்தவவிபினமுற் றம்பிகைவிதியால்
இளையெனும்பெயர் மடவரலாயினனென்ப.

     (இ - ள்.) வளை நெடுஞ் சிலை கரத்தினன் - வளைந்துள்ள
நீண்டவில்லைக்கையிலேந்தியவனான, மநு - மனுவென்றஅரசன், அருள் -
பெற்ற, மைந்தன் -புதல்வனான இளனென்பவன், உளை எழும் பரி தேரினன் -
பிடரிமயிர்ஓங்கிவளரப்பெற்ற குதிரையைப்பூட்டிய தேரின்மீது ஏறிச்செல்பவனாய்,
உறுவது-(அங்குச் சென்றால் தனக்கு) நேரிடக் கூடிய தீங்கை, ஒன்று - சிறிதும்,
உணரான் -அறியாதவனாகி,- விளை அரு தவம் விபினம் உற்று - முதிர்ந்த
அருமையானதவத்திற்குரிய காட்டையடைந்து, அம்பிகை விதியால் - உமாதேவி
கட்டளையிட்டிருந்ததனால், இளை எனும் பெயர் மடவரல் - இளையென்று
பெயர்கொண்ட ஒருபெண்ணாக, ஆயினன்-, என்ப - என்று கூறுவார்; (எ - று.)

     மநுபுத்திரனான இளனென்பான் ஒருகால் தேரின்மீது ஏறிக்கொண்டு
காடுசென்றவன், 'இங்குவருபவர் பெண்ணாய்விடுக' என்று பார்வதிதேவி
ஏற்படுத்தியிருந்த ஓரிடத்து அதனை யறியாமையாற் சென்றுசார, அந்தப்
பார்வதிதேவியின் ஏற்பாட்டின்படியே பெண்ணுருவம் அந்த இளனைச் சேர,
அவன்இளையென்று யாவரும் பேரிட்டழைக்கும் பெண்ணாயினனென்பதாம்.
அம்பிகை=அம்பிகா.மடவரல் - மடமைக்குணம் வருதலையுடையவள். இளையை
வைவஸ்வதமநுவின் மகவாக மகாபாரதத்திற் கூறியிருக்கின்றது. (பாலபாரதத்திலோ
கர்த்தமரிஷியின் மகவாகக் கூறியுள்ளது.)                             (15)