பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்151

11.-மற்றொருநாள் துரியோதனன் வீமனுக்குவிஷமூட்டுதல்.

பின்னருமொருபகற் பெற்றம்பெற்றவன்
தன்னையம்மகீபதி தனயனாதரித்து
இன்னமுதருத்துவான் போலயாவையும்
துன்னியவிடங்களாற் றுய்ப்பித்தானரோ.

     (இ-ள்.) பின்னர்உம் - பின்பும், ஒரு பகல் - ஒருநாள், அ மகீபதி தனயன்
- திருதராட்டிரமகாராசனுக்குக்குமாரனான அத்துரியோதனன், பெற்றம் பெற்றவன்
தன்னை - வாயுதேவனாற் பெறப்பட்ட குமாரனான வீமனை, ஆதரித்து இன்
அமுது அருத்துவான்போல - அன்புகொண்டு இனியநல்லுணவை
உண்பிப்பவன்போல, துன்னிய விடங்களால் யாவைஉம் துய்ப்பித்தான் - செறிந்த
நஞ்சுகளோடு எல்லாவுணவுகளையும் உண்பித்தான்; (எ-று.)

     உண்பன தின்பன பருகுவன நக்குவன எனப் பலவகைப்படுகிற சோறு கறி
பாயசம்முதலிய உணவுகளிலெல்லாம் வீமனுக்குத் தெரியாதபடி மிக்க
விஷங்கலந்து உண்பித்தனனென்பார், 'யாவையுந் துன்னியவிடங்களால்
துய்ப்பித்தான்' என்றார். கருப்பம் ஆடவர்வயிற்றில் இரண்டுமாதம் தங்கிப்
பின்னர் பெண்டிர் வயிற்றில் சேர்கிறதென்னும் நூல்வழக்குப்பற்றியும், ஒருவனது
மனைவியின் வயிற்றில்தோன்றியவரை அவன்வயிற்றில் தோன்றியவரென்னும்
வழக்குப்பற்றியும் 'பெற்றம்பெற்றவன்' என்றார் 'அரோ - ஈற்றசை.       (285)

12.-துரியோதனன் வீமனைக்கயிற்றாற்கட்டிக்
கங்கையில் அமிழ்த்துதல்.

விடத்திலேயழிந்தறி வொழிந்தவீமனை
வடத்திலேபிணித்தனன் கங்கைவாரியின்
இடத்திலேயமிழ்த்தின னிதயமொத்தவர்
திடத்திலேமுதிர்ந்தகிங் கரர்திறங்களால்.

     (இ - ள்.) விடத்தில் அழிந்து அறிவு ஒழிந்த வீமனை - நஞ்சுண்டதனால்
நிலைகுலைந்து அறிவழிந்த வீமசேனனை, (துரியோதனன்),- இதயம் ஒத்தவர் -
(தன்) கருத்துக்கு ஒத்தகருத்துடையவர்களான, திடத்தில் முதிர்ந்த கிங்கரர்
திறங்களால் - வலிமையில் மிக்க வேலைக்காரர்களுடைய
கூட்டங்களைக்கொண்டு, வடத்தில் பிணித்தனன் - கயிற்றாற்கட்டி.
கங்கைவாரியின் இடத்தில் அமிழ்த்தினன் - கங்கை நீரிலே அமிழப்பண்ணினான்;
(எ-று.)

     துரியோதனன் நூற்றுக்கணக்கான சூலங்களைநாட்டிய கங்கையின் நீரிலே
விஷவேகத்தால் மயங்கியுள்ள வீமனைக் கயிற்றாற்கட்டிக் கிங்கரரைக்கொண்டு
வீழ்த்தினனாக, ஊழ்வினையின்   வலியால்  சூலமுனையாற் புண்படாமல்
பாதாளஞ்சேர்ந்தானென்று பாலபாரத்திலுள்ளது: வியாசபாரதம் இங்ஙனே கூறும்.
தனது அந்தரங்கமான செயல்களைப் பிறர்க்கு வெளியிடாதவரென்பது,
'இதயமொத்தவர்' என்பதனாற் பெறப்படும். 'திடத்திலே முதிர்ந்த' என்ற
அடைமொழி, உடல்வலிமைமிகுதியோடு நெஞ்சுறுதியின் மிகுதியையுங்
காட்டும்.                                                     (286)