35.- வீடுமன் துரோணனை எதிர்கொண்டு உபசரித்தல். வந்தான்வரதனெனலு மந்தாகினியாண்மைந்தன் பைந்தாரசையவெதிர்போய்ப் பணிந்துபூசைபண்ணிச் சிந்தாசனத்தோடொக்குஞ் சிங்காசனத்தினேற்றி எந்தாய்வரநீயடியே னென்னதவத்தேனென்றான். |
(இ-ள்.) வரதன் வந்தான் எனலும் - துரோணாசாரியன் வந்தா னென்று (தூதர்) சொல்ல அறிந்தவுடனே,- மந்தாகினியாள் மைந்தன் - கங்காதேவியினது குமாரனான வீடுமன், பைந் தார் அசைய எதிர்போய் - பசுமையான (தனது) பூமாலை அசைய எதிர் கொண்டு சென்று, பணிந்து - வணங்கி, சிந்தாசனத்தோடு ஒக்கும் சிங்காசனத்தின் ஏற்றி - (தனது) மனமாகிய ஆசனத்தோடு ஒத்ததொரு சிங்காசனத்திலே (அவனை) எழுந்தருளப்பண்ணி, பூசை பண்ணி - பூசித்து,- எந்தாய் - சுவாமி! நீ வர -நீ (இங்கே) எழுந்தருளுதற்கு, அடியேன் என்ன தவத்தேன் - நான் என்ன தவஞ் செய்திருந்தேனோ!' என்றான் - என்று (உபசாரமொழி) கூறினான்; (எ-று.) வீடுமன் துரோணனை வில்வித்தையில் மிகச்சிறந்தவனென்று நன்கு மதித்துஎப்பொழுதுஞ் தனதுமனத்தில் நீங்காது வைத்திருந்தனன் என்பதுபற்றி, அவ்வீடுமன் துரோணனுக்குச் சமர்ப்பித்த சிங்காதனத்துக்கு அவன் மனமாகிய ஆசனத்தை உவமைகூறினார். இதுவரையிலுந் தன்மனத்தில் வைத்திருந்தது போல, அப்பொழுது சிங்காசனத்தில் வைத்தன னென்க. தேவலோகத்திலுள்ள கங்கைக்கு மந்தாகினியென்றும், பூலோகத்தில் வந்ததற்குக் கங்கையென்றும், கீழுலகத்திற் பாய்வதற்குப் போகவதி யென்றும் பெயரென அறிக. (309) 36.-துரோணன் வீடுமனுக்கு வாழ்த்துக் கூறல். மூசிவண்டுமொய்க்கும் முருகார்செவ்விமாலை வாசிமான்றேர்வெம்போர் மன்னர்மன்னன்றன்னை ஏசில்கடவுள்வாய்மை யிருக்காலெண்ணில்கோடி ஆசியன்பாலோதி யருள்செய்திருந்தபின்னர். |
இதுவும் அடுத்த கவியும்-குளகம்.
(இ-ள்.) வண்டு மூசி மொய்க்கும் - வண்டுகள் நெருங்கி மொய்க்கப்பெற்ற, முருகு ஆர் செவ்வி மாலை - தேன்நிறைந்த அழகிய பூமாலையைத்தரித்த, வாசி மான் தேர் வெம் போர் மன்னர்மன்னன் தன்னை - குதிரையாகிய விலங்குபூண்ட தேரையுடையவனும் கொடிய போரைச் செய்யவல்லவனும் அரசர்கட்கு அரசனாகிய வீடுமனை, ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் - குற்றமில்லாத தெய்வத்தன்மையையுடைய சத்தியமானவேதமந்திரங்களைக் கொண்டு, எண் இல் கோடி ஆசி அன்பால் ஓதி அருள் செய்து - அளவற்ற கோடிக்கணக்கான ஆசீர்வாதங்களை அன்போடு சொல்லி அனுக்கிரகித்து, இருந்தபின்னர் - வீற்றிருந்தபின்பு,- (எ-று.)-"வேதமுனிவன் . . . புன்மை மொழியென்றுரைப்பான்" என வருங் கவியோடு முடியும். வாஜிஎன்ற வடசொல் திரிந்துவந்தது. வாசிமான் - இருபெயரொட்டு. ஆசிஸ் என்ற வடசொல், ஆசியென விகாரப்பட்டது. (310) |