பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்229

     குணபவல்சி யென்பது - பண்புத்தொகையன்மொழியாய், அரக்கனுக்கு
ஒருகாரணக்குறியாயிற்று; குணபம் - வடசொல்,வல்சி - சோறு. அம்புதம் -
நீரைக் கொடுப்பது, மேகம்: வடசொல்.                         (424)

15.- வீமன் இடிம்பனை வதைத்தல்.

வளர்ந்த திண்கருங் குன்று காந்தளை மலர்வ தென்னவே
                                   வானகம்படக்,
கிளர்ந்தசெம்புணீர்பொசியுமெய்யினன்கேதநெஞ்சினன்
                                கோதவாய்மையன்,
தளர்ந்துவீழ்நிசாசரனுமாடகன் றன்னையொத்தனன்
                              பின்னைமுன்னுறப்,
பிளந்த கோளரிதன்னை யொத்தனன் பிரதையென்னுமின்
                               பெற்ற காளையே.

     (இ-ள்.) வளர்ந்த திண் கருங் குன்று - ஓங்கிவளர்ந்த வலிய கரிய
ஒருமலை, காந்தளை மலர்வது என்ன - செங்காந்தட்பூப் பூக்கப் பெற்றது
போலவே, செம் புண் நீர் பொசியும் - சிவந்த இரத்தநீர் வழியப்பெற்ற, வானகம்
பட கிளர்ந்த மெய்யினன் - ஆகாயத்தை அளாவ ஓங்கிவளர்ந்த
உடம்பையுடையவனுமாம், கேதம் நெஞ்சினன் - துன்பமுற்ற மனத்தை
யுடையவனும், கோத வாய்மையன் - பழுதுபட்ட சபதத்தையுடையவனுமாய்,
தளர்ந்து வீழ் - சோர்ந்து கீழ் விழுந்த, நிசாசரன்உம் - இராக்கதனாகிய
இடிம்பனும், ஆடகன் தன்னை ஒத்தனன் - இரணியாசுரனைப் போன்றான்:
பின்னை - பின்பு, பிரதை என்னும் மின் பெற்ற காளை - பிரதையென்னும்
பெண் [குந்தி] பெற்ற சிறந்தவீரனான வீமன், முன் உற பிளந்த கோள் அரி
தன்னை ஒத்தனன் - முற்காலத்தில் (அவ்விரணியனை) நன்றாகப் பிளந்த வலிய
நரசிங்கமூர்த்தியைப் போன்றான்; (எ-று.)

     பாலபாரதத்தில் மதுவைக்கொன்ற திருமாலை வீமனுக்கு உவமையாகக்
கூறியுள்ளது. வீமனைக்கொல்வே னென்று கூறிய இடிம்பன் வார்த்தை
வீண்பட்டதனால், 'கோதவாய்மையன்' என்றார். குன்று (செங்) காந்தளை
மலர்வது - ஒன்றன்வினை மற்றொன்றன்மேல் ஏற்றப்பட்டது; உபசார வழக்கு,
புண் நீர் - தசையின் சம்பந்தமான நீர்.கோத - கோது என்னும்
பகுதியின்மேற்பிறந்தகுறிப்புப் பெயரெச்சம். இரணியன் என்ற பெயர் -
பொன்னிறமானவ னென்னும் பொருளதாதலால், ஆடகனென்றது - அதன்
பரியாயநாமமாய் நின்றது. 'பிளந்தளைந்த கோளரியையொத்தனன்' என்றும்
பாடமுண்டு. மின் - உவமவாகுபெயர்.                          (425)

வேறு.

16.-அத்தகைய வீமனது ஆற்றலைக் குந்தி மகிழ்ச்சியோடு
காண்டல்.

வன்றிற லிடிம்பனை வயக்கை யாலுடல்
ஒன்றிரண் டாகுமா றுடன்ற மைந்தனை
அன்றுகண் டனளியா யரியின் பேடுதன்
கன்றுதிண் கரிபொரக் கண்ட தென்னவே.

     (இ-ள்.) வல் திறல் இடிம்பனை - மிக்கவலிமையையுடைய இடிம்பனை, வய
கையால் - வலிய (தனதுவெறுங்) கைகளால், உடல் ஒன்று இரண்டு ஆகும் ஆறு
உடன்ற - ஓருடம்பு இரண்டு துண்டாம் படி போர்செய்துபிளந்த, மைந்தனை -
வீரனான வீமனை,- அன்று-