88. வியாசர்வார்த்தையால் துருபதன் மனந்தெளிதல்.
ஓதாதுணர்ந்துமறைநாலு முருவுசெய்த வேதாவுமொவ்வாவியாதன்மொழி வெள்ளநீரால் கோதானநெஞ்சைக்குளிப்பாட்டினன் கோடிகோடி தோதானவண்டுதுதைமாலைகொள் சோமகேசன். |
(இ-ள்.) ஓதாது உணர்ந்து-(எவரிடத்தும்) கற்காமலே(எல்லாநூல்களையும்)
தானாகஅறிந்து, மறைநால்உம்-நான்குவேதங்களையும், உருவுசெய்த-(வகுத்து)
ஒழுங்குபடுத்திய, வேதாஉம் ஒவ்வாவியாதன்-பிரமனும் உவமையாகமாட்டாத
வியாசமுனிவனுடைய, மொழி-வார்த்தையாகிய, வெள்ளம் நீரால் -
நீர்ப்பெருக்கினால்,- தோது ஆன கோடிகோடி வண்டு துதை மாலைகொள்
சோமகேசன் - வரிசையாகவருகின்ற பலகோடிக்கணக்கான வண்டுகள் நெருங்கிய
பூமாலையைத் தரித்த சோமககுலத்தார்க்குத் தலைவனாகிய துருபதன், கோது ஆன
நெஞ்சை குளிப்புஆட்டினன் - களங்கங்கொண்ட (தன்) மனத்தை
நன்றாகக்கழுவினான்; ( எ- று.)
மாசுபடிந்த உடம்பை நீரினாற்குளிப்பாட்டித் தூயதாக்குதல் போல,
கலக்கங்கொண்ட தன்மனத்தை வியாசர்வார்த்தையாற் சீர்ப்படுத்தி் அக்களங்கத்தை
யொழித்தன னென்பதாம்; உருவகவணி, வியாதன் வகுத்த மறைவகுப்புக்களின் பெயர்
- இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்என்றும், இவன்வகுத்தற்கு முன் தைத்திரியம்,
பௌடியம், தலவகாரம், சாமம்என வேதம் நான்காகவழங்கிய தென்றும் கூறுப.
உலகோருணரும்படி வேதத்தைப்பகுத்துக் கொடுத்ததனால், வியாதனுக்கு வேதாவும்
ஒவ்வானென்க, 'தூதானவண்டு' எனப் பாடமோதி-இவனிடத்துக் காதல்கொண்ட
மகளிர் தூதாக அனுப்பிய வண்டுகளெனப் பொருள் உரைத்தலும் ஒன்று.
89.- துருபதன் தன்மகளை ஐவர்க்கும்மணம்புரிவிக்கத்
தொடங்கல்.
வியப்போடுதொல்லைமுனிசொற்றலை மீதுகொண்டு பயப்போன்மகண்மேற்புரிகின்ற பரிவினுக்கும் வயப்போர்நிருபர்பெருமைக்கும் வலிக்குமீடா நயப்போடுமன்றலயர்வித்தன னன்கொர்நாளில். |
(இ-ள்.) பயப்போன் - (திரௌபதியைப்) பெற்றவனான யாகசேனன்,
தொல்லைமுனிசொல்-பழமையான வியாசமுனிவனுடைய வார்த்தையை, வியப்போடு
தலைமீதுகொண்டு-ஆச்சரியத்தோடு (தனது) முடியின் மேற்கொண்டு [நன்குமதித்து],
மகள்மேல்புரிகின்ற பரிவினுக்குஉம் - (தனது) பெண்ணாகிய அத்திரௌபதியினிடம்
(தான்)வைத்திருக்கிற அன்புக்கும், வயம் போர் நிருபர் பெருமைக்குஉம்-
வெற்றியையுடையபோர்செய்யவல்ல அரசர்களாகிய அப்பாண்டவர்களுடைய
பெருமைக்கும்,வலிக்குஉம் - (தனது) சக்திக்கும், ஈடு ஆ-தகுதியாக, நன்கு ஒர்
நாளில் - நல்ல ஒருசுபதினத்தில், நயப்போடு மன்றல் அயர்வித்தனன் -
விருப்பத்தோடுவிவாகஞ்செய்விப்பவனானான்; (எ-று.) (564)