முன்னொருகாலத்தில் இந்திரன் அசுரர்கள் நலிதலால் வருந்தித் திருமாலைச் சரணமடைய, ஸ்ரீமாகவிஷ்ணு, அதிதிதேவியின் வயிற்றில் அவ்விந்திரனக்குத் தம்பியாய்ஓர் அவதாரமெடுத்து உபேந்திரனெனப் பெயர்கொண்டு அவனது துயரைத்தீர்க்கலாயின னென்பதை அறிக. பாவம், ரஸம், தாளம் இம்மூன்றையுமுடைமைபற்றி இம் மூன்றுசொற்களின் முதலெழுத்துக் குறிப்பினால், பரதம் என்று நாட்டியத்திற்குப் பெயராயிற்றென்பர். 'பரதமேற்கொண்டு நடிப்பது' என்றது, எழுந்தெழுந்து கிளர்ந்து எரிதலை. சரதம் மேற்கொண்டு என்பதற்கு - விளையாட்டைமேற்கொண்டு என்றலுமொன்று. தாவம், தாவகம் என்பன - காட்டுத்தீயென்ற பொருளன: அவ்வடசொற்கள், சிறுபான்மை காடுஎன்ற பொருளிலும் வரும். இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் - பெரும்பாலும்இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும்விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள். (766) 46.- இந்திரன் பார்த்தபொழுது அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி. முந்திவார்சிலைக்கைப்பற்குனன்றொடுத்த முரணுடைமூரிவெங் கணைகள், உந்திவாளுரகர்சூடிகாமகுட கோடிகளுடைத்தலினுடைந்து, சிந்திமீதெழுந்தமணிகளுமனலின் சிகைகளிற்றெறித்தெழு பொறியும், இந்திராலயத்துக்கேற்றியதீப மென்னநின்றிலங்கினவெங்கும். |
(இ-ள்.) வார் சிலை கை பற்குனன் - நீண்ட வில்லை யேந்திய கையையுடையஅருச்சுனன், முந்திதொடுத்த - விரைவாகச்செலுத்திய, முரண் உடை மூரி வெம்கணைகள் - வலிமையையுடைய பெரிய கொடிய அம்புகள், உந்தி -வலிமையோடுசென்று, வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் - ஒளியையுடையநாகர்களின் உச்சிக்கொண்டையையுடைய முடிகளின் நுனிகளை, உடைத்தலின் - உடைத்தலினால், உடைந்து சிந்தி மீது எழுந்த - உடைப்பட்டுச் சிதறிமேலேயெழுந்த, மணிகள்உம் - (அம்முடிகளிலுள்ள) மாணிக்கங்களும், அனலின்சிகைகளின் தெறித்து எழு பொறிஉம் - அக்கினியின் சுவாலைகளினின்று தெறித்துமேலெழுந்த பொறிகளும், இந்திர ஆலயத்துக்கு ஏற்றிய தீபம் என்ன - அவ்விந்திரனுடைய இருப்பிடத்துக்குஏற்றிய விளக்குக்கள்போல, எங்குஉம் நின்று இலங்கின - (வானத்தில்) எவ்விடங்களிலும் பிரகாசித்துநின்றன; இந்திரன் கருத்தோடு பார்த்தபொழுது, தப்பிவெளியேயோட முயல்கிற நாகர்களை அருச்சுனன் அம்புகொண்டு ஊறுபடுத்தி அத்தீயினுள்ளேயே விழுத்துதல்இலக்காயிற் றென்பது, இப்பாட்டின் உட்கோள். அருச்சுனனது அம்புகள் வலியத்தாக்க, உரகரின் முடிமணிகளும் தீப்பொறிகளும் வானத்திலெழுந்து தேவலோகத்துக்குவைத்த தீபங்கள்போன்றன என்றார்; தற்குறிப்பேற்றவணி. சூடிகாமகுடகோடி, இந்த்ராலயம் - வடமொழித்தொடர்கள். சூடிகா - உச்சிக்கொண்டை. (767) |