மின்னினுண்ணிடை யாளும்வெருவுறா மன்னவன்பதம் வந்துவணங்கினாள். |
(இ-ள்.) சுரஈசன் - தேவேந்திரன், சுரரோடுஉம்-தேவர்களுடனே, போய் - சென்று, அன்னம் மெல் நடை ஆய்இழை தன் உழை - அன்னப்பறவையின் நடைபோன்ற மென்மையான நடையையும் ஆராய்ந்து செய்யப்பட்ட ஆபரணங்களையுமுடையஊர்வசியினிடத்து, துன்னினன் - சேர்ந்தான்;(அப்பொழுது), மின்னின் நுண் இடையாள்உம் - மின்னலைக்காட்டிலும்நுட்பமான இடையையுடைய ஊர்வசியும், வெருவுறா- அச்சமடைந்து, வந்து-(எதிரில்) வந்து, மன்னவன் பதம் வணங்கினாள்- இந்திரனது பாதங்களைநமஸ்கரித்தாள்;(எ-று.) அன்னம்=ஹம்ஸம்:வடமொழித் திரிபு. மென்னடை - மந்தகதி: கண்ணுக்கு இனிய நடையுமாம். ஆயிழை - வினைத்தொகையன்மொழி. இழை சினையாகுபெயராய்,ஆடையுமாம். (172) 173.-மூன்றுகவிகள் -இந்திரனுடன் சென்ற தேவர்கள் உருப்பசியைத்துதித்து 'நீஅருச்சுனனுக்கு இட்ட சாபத்தை அவன்வேண்டும்போது பெறுமாறுஅருள்புரிக' என்று வேண்டுதலைக்கூறும். வணங்குமுன்ன மடநடையோதிமக் கணங்கொலென்னக் கவின்பெறுகோதையைச் சுணங்கறாமுலைத்தோகையைவார்குழல் அணங்கையண்ட ரனைவரும்போற்றியே. |
நான்குகவிகள் - ஒருதொடர். (இ - ள்.)வணங்கும் முன்னம் - (இந்திரனை)நமஸ்கரித்தற்கு முன்பே [மிகவிரைவில் என்றபடி],மடம் நடை ஓதிமம் கணம் கொல் என்ன கவின் பெறு கோதையை - அழகிய நடையில் அன்னத்தின் இனமோ என்று சொல்லும்படி அழகைப்பெற்ற பூமாலைபோன்றவளும், சுணங்கு அறா முலைதோகையை - தேமல்நீங்காத தனங்களையுடையமயில்போன்றவளும், வார் குழல் அணங்கை - நீண்ட கூந்தலையுடையதெய்வப் பெண்ணுமாகிய அவ்வூர்வசியை,-அண்டர் அனைவர்உம்- தேவர்கள் எல்லாரும், போற்றி - துதித்து,-(எ - று.)-'கூறி'என மேலே தொடரும். மடநடை -இளமையாகிய நடை:மந்தகதியென்னவுமாம். கணம் - வடசொல். கொல் - வினா. கோதை, தோகை - உவமவாகுபெயர்கள். மாலை- மென்மை யழகுகளுக்கும், மயில் சாயற்கும் உவமை. கோதை - மாலையையுடையாளெனச் சினையாகுபெயருமாம். சுணங்கு - பருவமகளிர்க்குக் கொங்கைகளிற் சிறியவும் பெரியவுமாகப் பொற்கொடியைப் பரப்பினாற்போலத்தோன்றுகின்ற சிலவடுக்கள். (173) |