(இ-ள்.) பாழி- வலிமையையுடைய, ஆடகம் வெற்பில் - பொன்மலையாகியமகாமேருவிலே, பட - பொருந்த, சிரம் கீழது ஆக - தலைகீழாக,நின்று-,கிளர் மூச்சு அடக்கி - மேன்மேல் இடைவிடாது வருகின்ற சுவாசத்தைப் (பிராணாயாமத்தாற்)பந்தனஞ்செய்து, ஊழிநாள்உம் - கற்பகாலம் வரையிலும், தவம் முயன்று - தவத்தைச் செய்து, ஓங்குவார் - (தாந்தாம் வேண்டிய வரங்களைப்பெற்று)உயர்ச்சிபெறுபவர்;ஆழி நீர்உம் அளவிடும் தாளினார்- கடலின் நீரையும் அளவிட்டுத் தாண்டவல்ல (நீண்ட) கால்களையுடையவர்;(எ-று.) ஆடகம் -ஹாடகம்;இது - நால்வகைப் பொன்களுள் ஒன்று. அவை - ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம் என்பன. கீழது - கீழுள்ளது;குறிப்பு வினையாலணையும்பெயர்; அ-சாரியை. படர் சிரம் என்றும் பாடம். (211) 36. | ஏதிசூல மெழுமழுவீட்டியின் சாதிசக்கரந் தாங்குந்தடக்கையார் மோதுபோரெனின் மொய்ம்புடன்முந்துவோர் ஓதமேழு முடனுண்டுமிழுவோர். |
(இ-ள்.) ஏதி- வாளும், சூலம் - சூலமும், எழு - வளைதடியும், மழு - பரசுவும், ஈட்டியின் சாதி - ஈட்டியின் வகைகளும், சக்கரம் - சக்கரமும், (ஆகிய ஆயுதங்களை),தாங்கும் - தரிக்கின்ற, தட கையார் - பெரிய கைகளையுடையவர்;மோது போர் எனின் - (பகைவர்களைத்)தாக்குகின்ற யுத்தமென்று பேர்சொன்ன மாத்திரத்தில், மொய்ம்புடன் - வலிமையுடனே, முந்துவோர் - முற்பட்டு வருபவர்;ஓதம் ஏழ்உம் - ஏழு கடல்களையும், உடன் - ஒருசேர, உண்டு - குடித்து, உமிழுவோர் - மீண்டும் வெளியிற்காலும் ஆற்றலுடையவர்; (எ-று.) ஏதி - ஹேதி: இவ்வாயுதப் பொதுப்பெயர், சிறப்பாய் வாளையுணர்த்திற்று. சூலம் - முத்தலைவேல். எழு - இருப்புத்தூணுமாம். மழு - ஒருவகைக் கோடாலி, எரியிரும்புப்படையுமாம். ஈட்டி - ஒருவகைவேல். ஈட்டியின் சாதி என்றது - பேரீட்டி, சிற்றீட்டி, எறியீட்டி என்னும் அதன் வகைகளை. சாதி - ஜாதி. உண் என்னும் பகுதி-உண்பன தின்பன பருகுவன நக்குவன எனத் தனித்தனி எடுத்துப் பகுத்துக் கூறுமிடத்துச் சிறப்புவினையும், அங்ஙனங் கூறாதவிடத்துவாயால் நுகரப்படும் பொருளெல்லாம் உணவு எனப்படுமாகலின் பொதுவினையுமாமாதலால், இங்கே, 'ஓதமேழும்பருகி' என்னாமல் 'உண்டு' எனப்பட்டது. உமிழுவோர், உ-சாரியை. (212) 37. | கூருநல்லுரை கூறினுங்கூற்றுடன் கார்தொறும்மிடி சேர்ந்தன்னகாட்சியார் தேர்தொறுஞ்செருச் செய்யுமத்தேவரைப் போர்தொறும்புறங் கண்டன்றிப்போகலார். |
|