சூரியனைமொய்த்த பனி-இடையூறொன்றுஞ்செய்யமாட்டாமைக்கும் விரைவிலழிதற்கும் உவமை. இது முதல்இருபத்து மூன்று கவிகள்-இச்சருக்கத்தின் முதற் கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள். (251) 76. | எங்கெங்கேயெங்கேவல்வின்மனிதனென்றெதிர்ந்தோர்யார்க் அங்கங்கேயங்கேயாகி யவரொடுமடுபோர்செய்தான் [கும் சங்கங்கேய்செங்கைநல்லார் விடுத்தனசுரும்பின்சாலம் கொங்கெங்கேயெங்கேயென்று தனித்தனிகுடையுந்தாரான். |
(இ-ள்.)'வல்வில் மனிதன் - வலிய வில்லையுடையமனுஷ்யன், எங்கு எங்கே எங்கே - எவ்விடத்துள்ளான் எவ்விடத்துள்ளான்?'என்று சொல்லி, (தனித்தனி தேடிக்கொண்டு, எதிர்ந்தோர் யார்க்குஉம் - எதிர்த்துவந்த அசுரர்களனைவர்க்கும்,அங்கு அங்கே அங்கே ஆகி - அவரவர் கருதிய அந்தந்த முன்னிடத்திலே சென்று, அவரொடுஉம் - அவர்களுடனே, அடு போர் செய்தான் - கொல்லுகின்ற யுத்தத்தைப் பண்ணினான்;(யாரென்னில்), சங்கு-சங்கவளையல்கள்,அங்கு- முன்னிடத்தில், ஏய் - பொருந்தப்பெற்றுள்ள, செம் கை - சிவந்தகைகளையுடைய,நல்லார் - அழகிய பெண்கள், விடுத்தன- தூதனுப்பியவையாகிய, சுரும்பின் சாலம் - வண்டுகளின் கூட்டம், கொங்கு எங்கே எங்கே என்று - தேன் எவ்விடத்தே (உள்ளது) எவ்விடத்தே (உள்ளது) என்று, தனி தனி - தனியேதனியே, குடையும் - ஆராய்ந்து உண்கின்ற, தாரான் - பூமாலையையுடையஅருச்சுனன்;(எ-று.) பின்னிரண்டடிகளால், கண்ட மகளிர் யாவராலுங் காதலிக்கப்படுகின்ற அருச்சுனனது கட்டழகு கூறப்பட்டது. தேனெங்கேயெங்கேயென்று தேடிவருகின்ற வண்டுகளுக்கெல்லாம் திருப்தியாகத் தேனைக் கொடுக்கின்ற மாலையையுடையவன் போரெங்கே யெங்கேயென்று தேடிவருகின்ற அசுரர்க்கெல்லாம் திருப்தியுண்டாம்படி போரைக் கொடுத்தான் என ஒருவகைச் சாதுரியந் தோன்றக் கவி கூறினார். சங்கு - அதனாலாகிய வளைக்குக்கருவியாகுபெயர். நல்லாள் என்று இலக்குமிக்குப் பெயராதலால், நல்லார் என்பது - பெரும்பாலும் மகளிரையே யுணர்த்தும். குடையுந் தார்- பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது: குடைதற்கிடமான மாலையென்க. (252) 77. | கார்முகக்கொண்டலன்னான்மிசைக்கடுங்கணைகளேவித் தேர்முகத்தியக்கமாற்றித் திதிமைந்தர்வெம்போர்செய்யப் போர்முகத்தொருவரொவ்வாப் புரிசிலைவீரன்றானும் கூர்முகப்பகுவாய்மாயோன் கொடுங்கடும்பகழிகோத்தான். |
(இ-ள்.) திதிமைந்தர்-திதி என்னும் காசியப முனிவர் மனைவியது புத்திரர்களாகிய அசுரர்கள், கார்முகம் கொண்டல் அன்னான்மிசை- வில்லையுடையமேகம்போன்ற அருச்சுனன் |