அள்ளினரமுதென வகநனிமகிழாத் துள்ளினரிமையவர் சுரபதிமுதலோர். |
(இ-ள்.) சுரபதி முதலோர் - தேவராசனானஇந்திரன் முதலியவராகிய, இமையவர் - தேவர்கள், தமது உயர் சலம்-தங்களது மிக்க பகை, இனி இலது என்று - இனிமேல் இல்லையென்னும்படி,தள்ளினர் - ஒழித்தவர்களாய், விசயனது உறுதிஉம் உரன்உம் - அருச்சுனனது பராக்கிரமத்தையும் பலத்தையும், உள்ளினர் - நினைத்து,அமுது அள்ளினர் என - அமிருதத்தைப் பானஞ் செய்தவர்போல, அகம் நனி மகிழா - மனம் மிகவும் மகிழ்ந்து, துள்ளினர் - ஆனந்தக்கூத்தாடினர்;(எ-று.) சுரபதிமுதலோர் இமையவர் 'இனி,சலம் [பகை]இலது'என்று உள்ளினராய், தம - தம்முடைய, துயர் - துயரத்தை, தள்ளினர்-போக்கி,- விசயனதுஉறுதியும் உரனும் அகத்தால் அமுது என அள்ளினராய் நனிமகிழாத் துள்ளின ரென்றலும் ஒன்று. (319) வேறு. 144.-அவ்வுணரின்இரணியபுரம் கரத்தல். தேனமர்கமலத் தோங்குந் திசைமுகன் வரத்தி னாலோ மானவன்விசய னுய்த்த வடிநெடுஞ் சரத்தி னாலோ தானவர்தானையெல்லா மடிந்தவத் தளர்வி னாலோ போனது கரந்து வஞ்ச ரிரணிய புரமு மன்னோ. |
(இ-ள்.) தேன்அமர்-தேன் பொருந்திய, கமலத்து-(திருமாலினது நாபித்) தாமரை மலரிலே, ஒங்கும்-சிறப்பாக வீற்றிருக்கின்ற, திசைமுகன் - பிரமன், (அசுரர்களுக்குக் கொடுத்திருந்த), வரத்தினால்ஓ-வரம்முடிந்து விட்டதனாலோ? (அல்லது), மானவன் விசயன் உய்த்த - மனிதனாகிய அருச்சுனன் உபயோகித்த, வடி நெடு சரத்தினால்ஓ- கூர்மையான நீண்ட அம்பின் தன்மையாலோ? தானவர் தானைஎல்லாம் - (தன்னிடத்தில் பல நாளாய் வாசஞ்செய்து கொண்டிருந்த) அசுரர்களது கூட்டம் யாவும், மடிந்த - இறந்ததனாலாகிய,அ தளர்வினால்ஓ- அந்த வருத்தத்தாலோ? வஞ்சர் இரணியபுரம்உம் - வஞ்சகர்களாகிய அவ்வசுரர்களது இரணியபுரமென்னும் அந்நகரமும், கரந்துபோனது-மறைந்து போய்விட்டது, (எ-று.);மன், ஓ - ஈற்றசைகள். ஆதியிற்பிரமன் கொடுத்திருந்த வரத்தின்படியே அருச்சுனனெய்த அம்பால் அசுரர்கள் அழிந்தமாத்திரத்தில் தானும் மறைந்து போன அவ்விரணியபுரமானது, தன்னில் நெடுங்காலமாக வசித்திருந்த அசுரர்கள் வேரோடு அழிந்தார்களென்னுந் தளர்ச்சியால் தானும் உடனழிந்தது போன்றது என்றவாறு. ஒரு காரியத்துக்குப் பலகாரணங்களைக்கூறி இன்னதென்று துணியாமல் ஐயத்தோடு நிறுத்தியதனால், ஐயவேதுத்தற்குறிப்பேற்றவணி. மானவன் என்பதற்கு-மானத்தையே முக்கியகுணமாகவுடையவ னென்றும் பொருள் கொள்ளலாம். மடிந்த தளர்வு-பெயரெச்சம் காரணப் பொருளது. |