பக்கம் எண் :

30பாரதம்ஆரணிய பருவம்

லால், நரனென்று அருச்சுனனுக்கு ஒரு பெயர்: இதனை மேலே கீதையிற்
கண்ணன் "உன்னையான் பிரிவதில்லை யொருமுறை பிரிந்து மேல்நாள்,
நன்னிலா வெறிக்கும் பூணாய் நரனு நாரணனுமானோம்" , "இந்நெடும்
பிறப்பில் நீயும் யானுமாயீண்டு நின்றோம்" என்றதனாலும் அறிக.  (39)

40.-சிவத்தியானத்தால் அருச்சுனன் உடம்புஎங்கும்
புளகங்கொண்டு நிற்றல்.

வலப்பாகஞ்செழும்பவளச்சோதியென்ன வாணீலச்சோதியென்ன
                                      மற்றப்பாகங்,
கலப்பானதிருமேனியணிந்தநீற்றாற் கதிர்முத்தின்
                             சோதியெனமேனையீன்ற,
குலப்பாவையுடன்கயிலைக் குன்றில் வாழ்விற்குன்றுடை
                    யோன்றிருக்கோலங்குறிப்பாலுன்னிப்,
புலப்பாடுபுறம்பொசியமார்புந்தோளும்பூரித்தானுடல்
                                 புளகம்பாரித்தானே.

     (இ - ள்.) வலம் பாகம் - (சிவரூபமான) வலப்பக்கம், செழுபவளம்
சோதி என்ன-அழகான பவழத்தினது ஒளிபோலச் சிவந்திருக்கவும், மற்ற
பாகம் - (பார்வதீ ரூபமான) மற்றொரு [இடப்] பக்கம், வாள் நீலம் சோதி
என்ன - பிரகாசமான நீல ரத்தினத்தினது ஒளிபோலக் கறுத்திருக்கவும்,
கலப்பு ஆன - (ஆண்வடிவமும் பெண்வடிவமுங்) கலந்ததான, திருமேனி-
திவ்வியசொரூபம், அணிந்த நீற்றால் - சாத்திக்கொண்டுள்ள விபூதியினால்,
கதிர் முத்தின் சோதி என - பிரகாசமான முத்தினது ஒளிபோல
வெளுத்திருக்கவும், மேனை ஈன்ற குலம் பாவையுடன்-மேனகையென்பவள்
[இமய பருவத்தின் மனைவி] பெற்ற சிறந்த சித்திரப்பிரதிமை போல மிக
அழகிய உமாதேவியுடனே, கயிலை குன்றில்-ஸ்ரீகைலாசகிரியிலே, வாழ் -
எழுந்தருளியிருக்கின்ற, வில் குன்று உடையோன் - மேருமலையை
வில்லாகவுடைய பரமசிவனது, திருக்கோலம் - திருவுருவத்தை, குறிப்பால்
உன்னி - மனத்தால் தியானஞ் செய்துகொண்டு, (அருச்சுனன்), புலப்பாடு
புறம் பொசிய - (உள்ளே) விளங்குகின்றசிவத்தியானம் (ஆனந்தக்
கண்ணீரொழுகுதல் முதலியவற்றால்) வெளியே தோன்றாநிற்க, மார்புஉம்
தோளஉம் பூரித்தான்-டதனது) மார்பும் தோள்களும் (சிவனாந்தத்தால்)
பெருகப்பெற்றான்;உடல் புளகம் பாரித்தான்-உடம்பு புளக
முண்டாகப்பெற்று நின்றான்; (எ- று.)-அர்த்தநாரீசுவரமூர்த்தியாதலால்,
இவ்வாறு வருணித்தார்.

     குலப்பாவை - உயர்குலத்துத் தோன்றிய மகளுமாம்.  மனத்திற்குத்
திருப்தியுண்டாகுமளவும் கலைத்துக் கலைத்து மிகச் சீர்திருத்தமாக
எழுதக்கூடு மாதலால், சித்திரப்பாவை மிக அழகியதாம்.  புலப்பாடு -
ஒருவரது உள்ள நிகழ்ச்சி ஆங்கு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப்
புலப்படுவதோர் வகையால் வெளிப்படுதல்; என்றது - கண்ணீரரும்பலும்
மெய்ம்மயிர்சிலர்த்தலும் முதலாக உடம்பில்வரும் வேறுபாடுகளை: இவை
சாத்துவிகபாவம் எனப்படும்.  மார்புந்தோளும் பூரித்தான், உடல் புளகம்
பாரித்தான் - மார்பு முதலிய அஃறிணைச் சினைப்பெயர்கள் உயர்திணை
முதற்