83.-தேவகணங்களுடன்குபேரன் போர்க்குஎழுதல். வென்றகோச்சித்தரும் விஞ்சைவேந்தரும் நின்றகின்னரரும்வா ணிருதரும்புடை துன்றுசாரணர்களுஞ் சூழ்மின்மொய்ம்பனை என்றுகொண்டெழுந்தன னியக்கர்தம்பிரான். | (இ-ள்.)வென்ற-(இதுவரையிற் பலபோர்களிற் பகைவரை) வெற்றிகொண்ட, கோ சித்தர்உம்-மேன்மையையுடைய சித்தசிரேஷ்டர்களும், விஞ்சை வேந்தர்உம் - வித்தியாதரத்தலைவர்களும்,நின்ற கின்னரர்உம் - மேம்பட்டுநின்ற கின்னரர்களும், வாள் நிருதர்உம்-(எப்பொழுதும்) படைக்கலமேந்துந்தன்மையுள்ள அரக்கர்களும், புடை துன்று சாரணர்கள்உம் - பக்கங்களிற்பொருந்தின சாரணர்களும்,(ஆகிய நீங்கள் எல்லோரும்),மொய்ம்பனை-வலிமையையுடையஅம்மனிதனை,சூழ்மின்- வளைந்துகொள்ளுங்கள், என்றுகொண்டு - என்று சொல்லிக்கொண்டே, இயக்கர் தம் பிரான்-யக்ஷர்களது அரசனானகுபேரன், எழுந்தனன்- (போருக்குப்) புறப்பட்டான்;(எ - று.) இக்கவியில்சித்தர்முதல் இயக்கரீறாகச்சொல்லப்பட்ட அறுவகையோரும், பதினெண்தேவகணத்துட்பட்டவ ரென்க. வென்ற கோச்சித்தரும்........சூழ்மின் - முன்னிலைப்படர்க்கை: இடவழுவமைதி. 84.-உருத்திரசேனனென்ற குபேரகுமாரன் குபேரனைநோக்கிக் கூறத்தொடங்குதல். உருத்திரசேனனப் பொழுதுணர்ந்துதன் கருத்தொடுதாதைபொற் கழல்வணங்கியே மருத்தருள்பவன்வர லாறுமற்றவன் திருத்தகுதுணைவர்தஞ்செயலுங்கூறுவான். |
(இ - ள்.)அப்பொழுது-, உருத்திரசேனன் - உருத்திரசேனனென்னுங் குபேரகுமாரன், உணர்ந்து - (தன்தாதையின்கருத்தை) அறிந்து, தன் கருத்தொடு-தனதுவிருப்பத்துடனே, தாதை பொன்கழல் வணங்கி - (தன்) தந்தையானகுபேரனது அழகியபாதங்களைநமஸ்கரித்து, மருத்து அருள்பவன் வரலாறுஉம் - வாயுபெற்றமகனானவீமனது செய்திகளையும், அவன்திரு தகு துணைவர்தம்செயல் உம் - அவ்வீமனது மேன்மைபொருந்தின உடன்பிறந்தவர்களது செய்கைகளையும்,கூறுவான் - சொல்பவனானான்; (எ - று.) - அவை மேல் ஆறுகவிகளிற் கூறப்படும். மற்று - அசை. (586) 85.-ஆறுகவிகள்-உருத்திரசேனன் கூறிய பாண்டவர் வரலாறு முதலியன. எந்தைகேளிவனைமானுடனென்றெண்ணலை முந்தைமுப்புரம்பொடி படுத்தமூர்த்திதன் சிந்தையாலைவரிந்திரரைச்சென்மென வந்தனர்நிலமகள் வருத்தமாற்றுவான். |
|