15. | எம்மிற்றுய்த்தவோ தனம்போலெம்மோடிகலிவனம்புகுந்தோர் தம்மிற்சென்றுநாளைநுகரிதுவேயெனக்குத்தரும்வரமென்று உம்மிற்செல்வமுடையான்போலுரைத்தானதனாலுயர்ந்தோர்கள் தம்மிற்சிறந்தோய்வந்தனம்யா மென்றானந்தத்தவமுனியே. | (இ - ள்.)'எம்மில்- எம்மிடத்து, துய்த்த - நுகர்ந்த, ஓ தனம் போல் - உணவுபோல, எம்மோடு - எம்முடனே, இகலி - மாறுபட்டு, வனம் புகுந்தோர்தம்மில் - வனம்புகுந்த பாண்டவரிடத்தில், நாளைசென்று- நாளைக்குப்போய்,நுகர் - உண்பாய்:இதுஏ எனக்கு தரும் வரம் - இதுவே எனக்குக் கொடுக்கவேண்டிய வரமாகும்',என்று-, உம்மில்- (எல்லாச்செல்வமுந் தரவல்ல திருமாலினருட்செல்வத்தைப் பெற்ற) உம்மைக்காட்டிலும், செல்வம்உடையான்போல் - மிக்க பொருள் படைத்தவன்போல, உரைத்தான் - (துரியோதனன் அறியாமையாற்) கூறினான்:அதனால்-,உயர்ந்தோர்கள் தம்மில் சிறந்தோய் - உயர்ந்தவர்களிற் சிறந்தவனே! யாம் வந்தனம் - யாம் (உன்னிடத்து விருந்தாக)வந்தோம், என்றான்-என்று(தான் வந்த காரணத்தைத்) தெரிவித்தான்:(யாவனென்னில்),-அந்த தவம் முனி - அந்தத்தவமுள்ள துருவாசமுனிவன்;(எ-று.) ஒருகால்துருவாசமுனிவன்பதினாயிரவர்சீடர்களுடனே துரியோதனனனிருக்குமிடத்துச் சேர்ந்தானாக,துரியோதனன் அம்முனிவரிடத்து அச்சத்தினால்தானே இரவும்பகலும் சோர்வின்றி உபசரிக்க, முனிவன் அங்குத்தானே வசிப்பவனாய்அகாலத்தில் உணவுவேண்டுவதும் நீராடிஉண்ணவருகிறேனென்றுசொல்லி எமக்குப்பசியில்லையென்பதுமாகி இவ்வாறெல்லாம் நிகழ்த்தவும் துரியோதனன் அம்முனிவனைஉபசரிக்க, அதனால்முனிவன்மகிழ்ந்து 'வேண்டும்வரம்கேட்பாய்'என்ன, 'வனத்தில்வசிக்கும்எமது தமையனாரிடத்தும்யாவரும்உண்டு திரௌபதிஇளைப்பாறும்போது எம்மிடத்துவிருந்தினராக இருந்ததுபோலவே விருந்தினராக வேணுமென்பதுவே யான் வேண்டும்வரம்'என்று துரியோதனன்கேட்டுக்கொள்ள, 'அப்படியே'என்று இசைந்து தருமபுத்திரனிடம் யாவரும் உண்டு திரௌபதி இளைப்பாறும்போது துருவாசமுனிவன் சீடரோடும் விருந்தினனாகவந்தா னென்ற விவரத்தை முதனூலினாலறிக. யாவரும்உண்டு இளைப்பாறும்போதுவிருந்தினனாகச் சீடரோடும் துருவாசமுனிவன் சென்றால்அப்போது இம்முனிவனைப் பாண்டவரால் உபசரிக்க முடியா தாகையால் பாண்டவர்கள் இம்முனிவன்சாபத்திற்குஇலக்காகி நாசமாய்விடுவார்களென்பது துரியோதனன் கர்ணாதியருடன்சேர்ந்து செய்திருந்த துராலோசனையாகும். (629) 16.-தருமனைவரங்கேட்குமாறு துருவாசமுனிவன் வேண்ட, தருமன்வரங்கேட்டல். பரங்கொண்டுலகமுழுதுமிசை பரப்பிப்புரப்பான்பாண்டுவெனும், உரங்கொண்டுயர்ந்தோனளித்தருளு முரவோய்நீயிங்குனக்கான, வரங்கொண்டிடுகவெனமுனியைவணங்கிப்பகைத்தோர்மாற்றங்கள், திரங்கொண்டடொன்றுங்கொள்ளாதி யென்றான்வளையாச்செங் கோலான். |
|