அகக்கண்ணால்தரிசிக்கப்படுகிறவனும் ஆகிய சிவபெருமான், எழுந்தான்- இருக்கைவிட்டு எழுந்தான்;(எ-று.) மற்று-அசை. வாஸவன் - அஷ்டவசுக்களுக்குத் தலைவன்;அல்லது, எல்லாஐசுவரியமு முடையவன். கேட்டன-இயல்புபற்றி எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி. கருத்து-மனம்;அதனாற் காணுதல்-தியானித்தல். கற்றவர் என்பது ஓரடியில்தானே வெவ்வேறு பொருளில் வந்தது-மடக்கு என்னுஞ் சொல்லணி. (80) 81.-பரமசிவனும்பார்வதியும் வேடவடிவங்கொள்ளுதல். நனைமலர்சிதறித்தொழுதுமுன்னின்றநந்திமேனயனம்வைத்தருளி வினைபடுகேழல்வேட்டைநாமின்றேவேடராயாடுதல்வேண்டும் நினைவுறவெமதுகணத்தொடிக்கணத்தேநீயுமவ்வுருக்கொளுகென்று மனைவியுந்தானுங்கிராதர்தங்குலத்துமகிழ்நனும்வனிதையுமானார். |
(இ-ள்.)(பரமசிவன்),நனைமலர்-(தேனினால்)நனைந்தபூக்களை, சிதறி - (தம்முடையதிருவடிகளில்)இட்டு அருச்சித்து, தொழுது-வணங்கி, முன் நின்ற - (தமது)எதிரில் நின்ற, நந்திமேல் - நந்திகேசுவரர் மேலே, நயனம் வைத்து அருளி - கண்களைவைத்து நோக்கியருளி, 'நாம்-, இன்றே - இப்பொழுதே, வேடர் ஆய்-வேடராகி, வினைபடு கேழல் வேட்டை - தீத்தொழிலிற் பொருந்திய பன்றியைக்கொல்லும் வேட்டையை, ஆடுதல் வேண்டும் - ஆடவேண்டும்;(ஆதலால்),நினைவுஉற - அவ்வெண்ணத்திற்கு ஏற்க, இ கணத்தே - இந்த க்ஷணத்தில்தானே, எமது கணத்தொடு-எம்முடைய கணத்துடனே, நீயும்-,அ உரு கொளுக-அவ்வேட வடிவத்தை எடுத்துக்கொள்வாயாக',என்று - என்று கட்டளையிட்டு, (உடனே),மனைவிஉம்தான்உம்-தன்மனைவியும்தாமுமாக, கிராதர் தம் குலத்து மகிழ்நன்உம் வனிதைஉம் ஆனார்-வேடர்குலத்திற்பிறந்தஒரு கணவனும் மனைவியுமாகவடிவங்கொண்டார்;(எ-று.) சிவபெருமான்எழுந்தருள இருப்பதை உணர்ந்த நந்திகேசுவரன் 'யாது கட்டளை?'என்று வினாவுதற்குறிப்பாகப் புஷ்பங்களைஅப்பெருமான் திருவடிகளில் அருச்சித்துத்தொழுது முன்னே நிற்க, அந்த நந்திதேவனைக் கடாக்ஷித்து அப்பெருமான் 'எமதுகருத்துக்கு இசைய நீ பிரமதகணங்களோடு வேட்டுவவுருக் கொண்டு வருக'என்று கட்டளையிட்டு, தமது மனைவியோடுவேட்டுவவடிவுகொண்டனரென்பதாம். நனைமலர்- வினைத்தொகை: வேற்றுமைத் தொகையாய், அரும்புகளோடு கூடிய பூக்களென்றுமாம். நந்தியென்பவர் - பரமசிவனருகிருந்து பலவகை உபசாரங்களைச்செய்கின்றபக்தர்களாகிய பிரமதகணங்களுக்குத் தலைவரும் சில சமயங்களிற் சிவபெருமானுக்கு வாகனமும் ஆகி நிற்கும் ஒரு மெய்யடியவர். வேடுஎன்னுந் தொழிலின் பெயராகிய நெடிற்றொடர்க் குற்றியலுகரம், டகரவொற்றிரட்டி ஐகாரச்சாரியை பெற்று 'வேட்டை'என நின்றது;அத்தொழிலுடையவர், |