சிவனதுவில்லுக்குப் பினாகமென்றுபெயர். கொடுவரி - வளைவான உடற்கோட்டையுடைய தெனப் புலிக்கு அன்மொழித் தொகை, ஆயிரந்தலைகளையுடையஆதிசேஷனுக்கு நா இரண்டாயிர மாதலால், இச்செய்யுளில், ஆயிரம்-பல என்னும் பொருளது. (84) வேறு. 85.-இதுவும் அது. குறைந்த சந்திரகிரணமும் பீலியுங் கொன்றையந் திருத்தாரும் புறந்தயங்கிடவிழுந்தசெந்தனிச்சடைப்பொலிவையார்புகல்கிற்பார் சிறந்தபைம்பொலங்கிரிமுடியடியுறத்தேவர்கோன்றிருச்செங்கை நிறந்தருஞ்சிலைவளைவறவழகுற நிமிர்ந்துநின் றதுபோலும். |
(இ-ள்.) குறைந்த சந்திரகிரணம்உம் - கலைகள்குறைந்த பிறைச் சந்திரனது வெண்மையான ஒளியும், பீலிஉம் - பலநிறமுள்ள மயிலிறகும், கொன்றை அம் திரு தார்உம் - (பொன்னிறமாகிய) கொன்றைப்பூக்களினாலாகிய அழகிய மேலான மாலையும், புறம் தயங்கிட- தன்மேல் விளங்கும்படி, விழுந்த-(சிவபிரானது உடம்பில்) விழுந்துள்ள, செம் தனி சடை பொலிவை-சிவந்த ஒப்பற்ற சடையினது அழகை, யார் புகல்கிற்பார் - யார் சொல்லவல்லவர்? [எவருஞ் சொல்லவல்லவரல்லர்]: (அத்திருச்சடை),- சிறந்த பைம் பொலம் கிரி முடி அடிஉற-(மலைகளிற்) சிறந்த பசும் பொன்மயமான மேருமலையினது சிகரத்தினின்றும் அடியைப் பொருந்தும்படி, தேவர்கோன் திரு செம் கை நிறம் தரு சிலை - தேவர்களுக்கு அரசனான இந்திரனது அழகிய சிறந்த கையில் தரிக்கின்ற பலநிறங்களைக்காட்டுகின்ற வானவில்லானது, வளைவு அற-வளைவில்லாமல், அழகுஉற-அழகுபொருந்த, நிமிர்ந்து நின்றது-நேராய்நின்றதை, போலும்- ஒக்கும்; (எ-று.) சிவபெருமானதுபுறத்திலே பீலி முதலியவற்றைக் கொண்ட சடை தொங்கிக்கிடப்பது, மேருமலையிலேஇந்திரவில் வளைவற்றுக் கிடப்பதுபோலுமென்றார்:தன்மைத் தற்குறிப்பேற்றவணி. இது-முதற்சீர்புளிமாச்சீரும், ஈற்றுச்சீர் புளிமாங்காய்ச்சீரும், இடையில்நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டு அறுசீராசிரிய விருத்தங்கள். (85) வேறு.
86.-பார்வதிதேவிகொண்ட வேட்டுவிச்சி வடிவவருணனை. வரையரசன்றிருமடந்தை வனமுலைமேன்மணிக்குன்றி வடமுஞ்செங்கை, நிரைவளையும்புலிப்பல்லா னிறந்திகழ்மங் கலப்பூணு நீல மேனி, விரையகிலி னறுஞ்சாந்தும் விரித்ததழைப் பூந்துகிலும் வேட மாதர், நிரைநிரையே தனைச்சூழநின்றவடி வழகினுக்கு நிகர்வே றுண்டோ. |
|