(இ - ள்,) பூபர் - அரசர்கள், தங்கள் - தங்களுடைய, புயங்கள்உம் - தோள்களிலும், மார்பம்உம் - மார்பிலும், சாபம் வெம்கணை - (பகைவர்) வில்லால்எய்த கொடிய அம்புகள். தைத்து - பாய்ந்து, உகு - (அவ்வழியே) பெருகுகிற, சோரியால் - இரத்தத்தால், தீபம் என்னஉம் - சோதி விருட்சங்கள்போலவும், செம் மலர் கோடுஉடை நீபம் என்னஉம் - செந்நிறமான பூக்களைக்கொண்ட கிளைகளையுடைய (செங்) கடம்பமரம்போலவும், ஆண்மையால் நின்றனர் - வீரத்தன்மையோடு நின்றார்கள்; (எ-று.) செந்நிறம்பற்றிய உவமை. போரிற் பின்வாங்காமல் எதிர்நின்று முகத்தினும் மார்பினும் விழுப்புண்படுதலே ஆண்மைவிளங்கும் வழியாதலால், 'ஆண்மையால் நின்றனர்' என்றார். தீபம்- தீபமரம்; சோதி விருக்ஷம்: இது, பகலில் தன்னொளி தோன்றாமல் இரவில் தோன்றப் பெறுகின்றதொருமரம்; இரவெரி எனவும் படும். 'செந்தழலொளியிற் பொங்குந் தீபமாமரங்கள்' என்றது பெரிய புராணம். பூபர் - பூமியைக்காப்பவர்; வடசொல். மார்பம்-அம் - சாரியை. சொரிவது, சோரி. தீபம், நீபம்- வடசொற்கள். மரம் - வீரர்க்கும், கிளைகள் - அவர் அவயவங்களுக்கும், மலர்கள்- செந்நீருக்கும் ஒப்பாம். தைத்து = தைக்க : எச்சத்திரிபு. (26) 27.-நான்குகவிகள் - போர்வீரர்களின் பெருவீரம் புலப்படுத்தும். கையில்வாளிதொலைந்தபின்காய்ந்துதம் மெய்யில்வாளிகள்வாங்கிவில்வாங்கினார் பொய்யிலாமொழிப்பூபதிசேனையின் மையிலாண்மையினார்சிலமன்னரே. |
(இ-ள்.) பொய் இலா மொழி-(சிறிதும்) அசத்தியமில்லாத வார்த்தைகளையுடைய,பூபதி - யுதிட்டிரமகாராசனது, சேனையில்- சேனையிலே, மை இல் ஆண்மையினார்- குற்றமில்லாத பராக்கிரமத்தையுடையவர்களான, சில மன்னர் - சில அரசர்கள்,கையில் வாளி தொலைந்த பின்-(தங்கள்) கையிலிருந்த அம்புகளெல்லாம்(பகைவர்மேலெய்து) ஒழிந்துபோனபின்பு, காய்ந்து - (பகைவர்மேற்) கோபங்கொண்டு,தம் மெய்யில் வாளிகள் வாங்கி-தமது உடம்பில் (பகைவரால் எய்யப்பட்டுத்தைத்துஉள்ள) அம்புகளைப் பறித்தெடுத்து, வில் வாங்கினார்-வில்லைவளைத்துஎய்தார்கள்; (எ - று.) இதனால், அவர்களது கலங்காதஉறுதிநிலை விளங்கும். இது, நூழிலாட்டு; அதாவது உடலிற்புதைந்த படையைப்பறித்துப் பகைவர்மேல் விடுதல். இது - புறப்பொருளின் பகுதியாகிய தும்பைத் திணைக்குரிய துறைகளில் ஒன்று; புறப்பொருள் வெண்பாமாலையில் "களங்கழுமிய படையிரிய, வுளங்கிழித்த வேல் பறித்தோச்சின்று" எனக் கூறிய இலக்கணத்தையும், 'மொய்யகத்து மன்னர் முரணினி யென்னாங்கொல், கையகத்துக் கொண்டான் கழல் விடலை-வெய்ய, விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த, படுசுட ரெஃகம் பறித்து" எனக் காட்டிய இலக்கியத்தையும், "கைவேல்களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்" என்ற திருக்குறளையுங் காண்க. எய்தலாகிய காரியத்தை வில்வாங்குத |