பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 20
20

கொச்சை வழக்கென்றும் வேறுபாடில்லையென்றும், கொச்சை வழக்கு எவ்வளவு கேடாய்த் திரிந்திருப்பினும் அதெல்லாங் கொள்ளத் தக்கதேயென்றும், வண்ணனை மொழிநூலார் ஏனைத் திரிபுடை மொழிகட்குக் கூறுவது போன்றே இயன்மொழியும் இலக்கணச் செம்மொழியுமாகிய தமிழிற்கும் கூறுகின்றனர்.

பிற மொழிகட்கில்லாத செம்மையென்னும் வரம்பு தமிழுக்குண்மையையும், இடைக்காலத்தில் தமிழ் ஆரியத்தால் அழிப்புண்டதையும், இக் காலத்தும் தமிழ் வளர்ச்சி பகைவரால் தடுப்புண்டு வருவதையும், அவர் அறியார்.

தமிழில் ஒருவன் எங்ஙனம் பிழைபடப் பேசினும், மேடையேறிப் பேசுங்காலும் ஏடெடுத்தெழுதும் போதும் இலக்கண நடையைக் கையாள வேண்டுமென்பது தொன்றுதொட்டு வரும் மரபு.

  எப்படி எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே

தமிழ்நாட்டில் மிகக் கொச்சையாய்ப் பேசப்படும் மாவட்டம் வடார்க்காடு. அங்கும் அங்கத்து நடையில் மேடையேறிப் பேசுவாரும் நூலெழுதுவாரும் ஒருவருமிலர். இத்தகைய வரம்புண்மையாலேயே தமிழ் இன்றுவரை இருந்து வருகின்றது.

இடைக்காலத்தில், தமிழ் சிதைக்கப்பட்டமையாலும், தமிழ்க்காவலரான புலவர் பிழைப்பற்றுப் போனமையாலும், நூற்றுக்கணக்கான அருந்தமிழ்ச் சொற்கள் மறைந்து வேற்றுமொழிச் சொற்கள் வேண்டாது புகுந்துவிட்டன. இதனால், முகில், எழிலி, மஞ்சு, கார், மால், வான் எனப் பலசொற்கள் இருப்பவும், மேகம் என்னும் வடசொல்லே வழங்கவும், முகில் என்னும் தன் சொற்கு மேகம் என்னும் அயற் சொல்லாற் பொருள் கூறவும் நேர்ந்துவிட்டது. இது தமிழர் விரும்பி மேற்கொண்ட நிலைமையன்று. ஆண்கள் பெண்கள் என்னும் வழங்கு தமிழ்ச்சொற்கட்குப் பதிலாகப் புருஷர் ஸ்திரீகள் என்னும் வழங்கா வடசொற்களைப் புகைவண்டி நிலையங்களிற் புகுத்தியிருப்பதும், வானொலி என்பதை ஆகாசவாணி என்று மாற்றியிருப்பதும், தமிழைக் கெடுத்தற்கும் அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாம்.

தமிழர் தக்க வழிகாட்டியின்றித் தாய்மொழி யுணர்ச்சியற்றுப் போய், ஏற்கனவே காற்பங்கு வடசொற்களைக் கலந்ததொடு இன்று அரைப்பங்கு ஆங்கிலச் சொற்களையும் கலந்து, இடையிடை பாரசீகம் அரபி முதலிய பிற மொழிச் சொற்களையும் பெய்து, கலவை நடையாக வழங்கும் கசட்டு மொழி. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண்படுத்திச் சீரியோர் வளர்த்த செந்தமிழாகுமோ!

வேலையில்லாத் திண்டாட்டம் மிக்க இக்காலத்தில், இளைஞர் சிலர் தம் தகுதியைப் பெருக்கி வருவாயை யுயர்த்த வையாபுரிகளை வழிபட்டு வடஅமெரிக்கா சென்று ஈராண்டிருந்து மீண்டு, ஆராய்ச்சியென்னும் பெயரால் அருந்தமிழைக் குலைத்துவருவது எத்துணை இரங்கத்தக்க செய்தி!