பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 23
23

உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூவகைப் பொருட் பெயர்களையே, மூவகை யெழுத்துக்களுக்கும் அவற்றோடொப்புமை கருதியிட்டனர் இலக்கணிகள் என்க.

மூவகைப் பொருள்களிலும் உயிரும் உயிர்மெய்யும் இயங்குதிணையும்  மெய் நிலைத்திணையுமாகும்.

உயிர்மெய்யைச் சுருக்கம்பற்றி உயிரி என்று கூறலாம். பிற்காலத்தில் மத நூலார் பொருள்களெல்லாவற்றையும் கடவுள் ஆன்மா கட்டு என மூவகையாகப் பகுத்தனர்.

(3) அறுவகை யுயிர்

எல்லா வுயிரிகளையும், ஐம்புலனும் பகுத்தறிவுமாகிய ஆறறிவு பற்றி, ஓரறியுயிர் முதல் ஆறறிவுயிர் வரை ஆறாகப் பகுத்திருந்தார்கள்.

 
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப் படுத்தினரே
(572)

 
புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(573)

 
நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(574)

நந்து = நத்தை, முரள் = சங்கு.

 
சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(575)

சிதல் = கறையான்

 
நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(576)

 
மாவு மாக்களும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(577)

 
மக்கள் தாமே ஆறறி யுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(578)

 இவை தொல்காப்பிய நூற்பாக்(சூத்திரம்)கள். தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 2000 ஆதலாலும், அது ஒரு வழிநூலாதலாலும், "நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே" என்று கூறியிருப்பதாலும், மேற்கூறிய செய்திகள் தொன்று