பக்கம் எண் :

10

தமிழ் மொழி வரலாறு

268

10.இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்

முன்னுரை

இருபதாம் நூற்றாண்டில் வானொலி, செய்தித் தாள்கள், அனைவர்க்கும் கல்வி தருவதை நோக்கமாகக் கொண்ட பாட நூல்கள் ஆகியவற்றின் மூலம் ‘பொது மொழி’ (Standard Dialect) எங்கும் பரவுகிறது. இப் பொது மொழி எந்தக் குறிப்பிட்ட வட்டாரத்திற்கோ சமூகப் பிரிவிற்கோ உரியதன்று; எனினும் இப் பொது மொழிக்கிடையில் கிளைமொழிகளும் கிளைத்து வளர்கின்றன. திரைப்படங்களில்கூட இவை நன்கு பயன்படுத்தப் படுகின்றன. பேச்சு மொழியில் ஆர்வமுடைய நமக்கு இவை முக்கியமானவை. இலக்கியத்தில் கிளைமொழிச் சொற்கள் இடம் பெறுவதை தொல்காப்பியர் உணர்ந்துள்ளார். இக்கிளை மொழிகளின் வழக்கு குறிப்பிட்ட வட்டார அளவில் மட்டுமே வழக்கிலிருப்பினும் இலக்கியத்தில் இடம் பெறும் இக் கிளைமொழிச் சொற்களைத் தொல்காப்பியர் ‘திசைச் சொல்’ என்கிறார்.1 உரையாசிரியர்கள் கிளை மொழிச் சொற்கள் வருமிடங்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.2

கிளைமொழிகள்

தொல்காப்பியர் தமிழகத்தின் பன்னிரு நிலப்பிரிவுகள் பற்றிப் பேசுகிறார். ஒவ்வொரு நிலப்பிரிவும் ஒரு கிளைமொழியை உடையதாகும்.3 அப்பன்னிரு பிரிவுகளின் பட்டியல் முன்பக்கத்தில் தரப்பட்டுள்ளது; அவற்றுக்கு இணையான இக்கால வட்டாரப் பகுப்புக்களும், உரையாசிரியர்கள் குறிப்பிடும் அவ்வட்டார வழக்குகளின் சிறப்புச் சொல்லும் குறிக்கப்பட்டுள்ளன.4



1. தொல்காப்பியம், 880, 883

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே”.
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”.

2. தொல்காப்பியம், 880, 883, நச்சினார்க்கினயர் உரை,

சேனா வரையர் உரை,நன்னூல், 272, மயிலைநாதர் உரை.
3. தொல்காப்பியம், 883.
4. நன்னூல், 272, மயிலைநாதர் உரை.