| பக்கம் : 1051 | | | | போர் முதலிய செய்திகள் அரசன் தேவியோடிருக்கும்போது உணர்த்தற்பாலன அல்ல, இது திருமணச் செய்தியாகலின், அரசன் தேவியரோடு இருக்கும் அமயமே சாலச் சிறந்தது என்று தூதன் கருதினான் என்க. உரிமை - அரசன் தேவியராகிய உரிமைச் சுற்றம். நம்பி உரிமையோடிருந்தபோது இச்செய்தி உணர்த்தற்குரியதே எனத் தூதன் கருதி ஓலையை நம்பிக்குக் கொடுக்க, அதனைத் தேவிமருங்கு நின்ற உழைக்கலமகள் ஓத யுணர்த்த, நம்பி மகிழ்ந்து எல்லா அணிகளும் தூதனுக்கீந்தான் என்க. | | (566) | | | | தூதன் திருமுகம் ஓதுதல் | | 1697. | கனிவளர் கிளவி யாருங் கதிர்மணிக் கலங்கள் வாங்கிப் பனிமதி விசும்பின் வந்தான் 1பல்வரப் பணித்த பின்னை இனியிது பெயர்த்து 2நீயே யுரையென வெடுத்துக் கொண்டு துனிவள ரிலங்கு வேலான் கழலடி தொழுது சொன்னான். | (இ - ள்.) கனிவளர் கிளவியாரும் - அன்புடைமையாலே கனிவுமிக்க மொழிகளை உடையவராய தேவிமாரும், கதிர் மணிக்கலங்கள் வாங்கி - ஒளிமிக்க மணியணிகலன்களைக் களைந்து, பனிமதி விசும்பின் வந்தான் பால்வரப் பணித்த பின்னை - குளிர்ந்த திங்களையுடைய வான்வழியாக வந்த தூதனிடத்தே அவைகள் சேருமாறு செய்த பின்னர், இனி இது பெயர்த்து நீயே உரையென - நம்பி தூதனை நோக்கி இனி இம் மங்கல ஓலைச் செய்தியை ஈண்டுள்ளார் யாவரும் உணரும்படி நீயே ஓதக் கடவாய் என்று பணிக்க, எடுத்துக்கொண்டு - அத்தூதன் அத்திருமுகத்தைத் தன் கையிலே ஏந்திக்கொண்டு, துனிவளர் இலங்கு வேலான் - பகைவர்க்கு அச்சத்தை வளர்க்கின்ற ஒளிரும் வேலையுடைய நம்பியின், கழல்அடி தொழுது - வீரக்கழல் யாத்த திருவடிகளைத்தொழுது, சொன்னான் - ஓதுவானாயினான், (எ - று.) முன்னர் உழைக்கலமகள் ஒருசிலரே அறியும்படி மெல்ல ஓதி அரசற்குணர்த்தினாள்; அது நற்செய்தி என்றறிந்த பின்னர் நம்பி அனைவருக்கும் ஓதி உணர்த்தப் பணித்தான் என்க. தேவிமாரும் மகிழ்ந்து தூதனுக்கு அணிகலன்களை அருளாநிற்ப, நம்பி தூதனை நோக்கி, நீயே உரையென, அவனும் எடுத்துக்கொண்டு அடி தொழுது ஓதினான், என்க. | | (567) | | |
| | (பாடம்) 1 பாலவர். 2 நல்ல. | | |
|
|