கவரி - கவரிமான்; சாமரை. மா - ஈண்டுக் குதிரையும் யானையும் பரவை - பரப்புடையது. மணிகள் பரந்து பூ வுதிர்ந்து, கொடிமிடைந்து, இருண்டு, கவரியும் மாவும் கலந்து அப்படை கானகம் ஒத்த தென்க. |
(இ - ள்.) சுடர்நந்திய மணி நாகம் மீமிசை - ஒளிமிக்க மணிகளான் ஒப்பனை செய்யப்பட்ட யானைகளின் பிடரின்மேல் நடப்பட்டு, வைந்துகில் கதலிகை பரந்து தோன்றுவ - பச்சை வண்ணத் துணிகளாலே இயற்றிய கொடிகள் பரவித் தோன்றும் காட்சி, நந்திய சுடர்மணி நாகம் மீமிசை - விளக்கமுடைய ஒளி மிக்க மணிகளையுடைய மலைகளின் உச்சியில், கதலி - உள்ள வாழைக்காடுகள், பைந்துகில் கைபரந்த போலும் - தம் இலைகளாகிய பச்சைத்துகில்களைப் பக்கத்தே பரப்பிநின்ற காட்சியை ஒக்கும், (எ - று.) கை - பக்கம். பைந்துகிலை ஒத்த இலைகள் என்க. யானைகளின் மேற் பச்சைக்கொடிகள் ஆடுவன மலைகளின்மேல் வாழையின் இலைகள் ஆடுவன போன்றன, என்க. |
(இ - ள்.) கணங்கெழு கவரிகள் கலந்து - கூட்டமாகக் கூடிய கவரிமயிர்க்கற்றைகள் கலந்துண்மையாலும், காழ்அகில் - நிறமுடைய அகிலும், அணங்குஇவர் நாவிகால் அளைந்து - அழகு படர்ந்த கத்தூரியும் அளவி, நாறலால் - மணத்தலாலும், இணங்கிய கடற்படைப் பரவை - பொருந்திய கடல்போன்ற பெரிய படையினது பரப்பு, இவ்வழி - இவ்விடத்தே, மணங்கமழ் இமகிரி - மணங்கமழ்தலையுடைய இமயமலை, வருவது ஒக்கும்-புடை பெயர்ந்து வருதலையும் ஒப்பதாம், ஏ: அசை, (எ-று.) கவரி கலந்து அகிலும், கத்தூரியும், நாறி படை இமயமலை புடை பெயர்ந்து வருவது போன்றது, என்க. கவரி - மான்; சாமரை, கத்தூரி - மான்; கத்தூரிக்குழம்பு, அகில் - மரம்; புகை. |