அத்துறவியின் வாழ்த்துப்பெற்று பயாபதி அமர்தல்

1915. ஆற்றி லமைந்த வருந்தவத் தால்வினை
ஊற்றுச் செறித்த வொருபெயர் மாதவன்
மாற்றரு மந்திர வாய்மொழி யாயிடை
ஏற்றன கொண்டாங் கிறைவ னிருந்தான்.
     (இ - ள்.) ஆற்றில் அமைந்த அருந்தவத்தால் - துறவறத்தார்க்குரிய நெறியென
மெய்ந்நூல்களால் வரையறை செய்யப்பட்ட வழியிலே நின்றியற்றிய செயற்கரிய
தவவொழுக்கத்தாலே, வினை ஊற்றுச் செறித்த - வினைகள் தோன்றும் வழிகளை
அடைத்தொழித்த, ஒரு பெயர் மாதவன் - ஒப்பற்ற புகழ் உடைய
அப்பெருந்துறவியினுடைய, மாற்று அருமந்திர வாய்மொழி - அருளிக்கூறினும் வெகுண்டு
கூறினும் தம் பயனைப் பயந்தே விடுதலை ஒருவரானும் மாற்றற்கு இயலாத ஆற்றலுடைய
மறைமொழியாகிய மெய்ம்மொழியை, ஆயிடை - அப்பொழுது, ஏற்பனகொண்டு - தன்
தகுதிக்கேற்ப, அம்முனிவரன் மொழிந்தவற்றை மேற்கொண்டு, ஆங்கு - அவ்விடத்தே,
இறைவன் இருந்தான் - பயாபதி மன்னன் அமர்ந்தான், (எ - று.)

தவமும் தவமுடையார்க்காகும் என்பவாகலின் ஆற்றிலமைந்த தவம் என்றார்
எனினுமாம். வினையூற்றுச் செறித்தலாவது இருள் சேர் இருவினையும் சேராவகை ஒழுகுதல்.
மாற்றரு மந்திர வாய்மொழி - அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் தம் பயனைப்
பயங்குங்கால் மாற்றற்கரிய மொழி.

     ஊற்று - வினைகள் உயிரோடு பொருந்துதற்கு வரும் வழி.

     செறிப்பு - அவ்வினைவரும் வழியை அடைத்தல்.இவற்றை, ஆஸ்ரவ, ஸம்வர
தத்துவங்கள் என்ப.

(805)