விச்சுவனை விலக்கிக் கூறுதல்

349.

சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர காந்த மாளும்
தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன்
போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் 1குரிமைசெய்வ
2தாழ்கதிர் விலங்க லாளு 3மரசவஃ தரிது கண்டாய்
 

      (இ - ள்.) ஆழ்கதிர் விலங்கல் ஆளும் அரச - மிகுந்த ஒளியினையுடைய
வெள்ளிமலையினை அரசாட்சிபுரியும் மன்ன! சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர காந்தம்
ஆளும் - சுற்றிலும் ஒளிகள்சூழ்ந்த மதிலை வேலியாகக்கொண்ட சுரேந்திர காந்தத்தினை
அரசாட்சிபுரியும், தாழ் கதிர் ஆரம் மார்பில் தமனியக் குழையினான்தன் - தாழ்ந்து
ஒளிவீசும் முத்து மாலையையணிந்த மார்பினையும் பொன்னினானாகிய குண்டலத்தை
யணிந்த காதுகளையுமுடைய மேகவாகனனின், போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக்கு
- இருளைப் பிளக்கின்ற ஞாயிற்றைப் போன்ற விச்சுவனுக்கு, உரிமைசெய்வது - உரிமை
செய்தலென்னும் செயலான, அஃது அரிது கண்டாய் - அஃது அருமையான தாகுமென்பதை
உணர்ந்து கொள்வாயாக! (எ - று.)
சுயம்பிரபையை விச்சுவனுக்குக் கொடுத்தல் அருமை என்றபடி விச்சுவன் திருமணஞ்செய்து
கொள்ள இசையான் என்பது பட உரிமை செய்வது அரிது என்றான்.

( 111 )