பக்கம் எண் :


16 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
முதலாவது

திருமலைச் சருக்கம்

திருமலைச் சிறப்பு

11. பொன்னின் வெண்டிரு நீறு புனைந்தெனப்
 
  பன்னு நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கு மறிவரி யானென்றும்
மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை.
1

     திருமலைச் சருக்கம் : முதற் காண்டத்திலே, இப்புராண அடியார்
திறங்கள் உலகத்திலே தெரிதற் கேதுவாய்த் திருமலையில் நிகழ்ந்த
வரலாற்றை உரைக்கும் பகுதி. சருக்கம் சிறுபிரிவு. சுந்தரமூர்த்திகள்
திருவாரூரிலே பாடியருளிய திருத்தொண்டத் தொகையே
இப்புராணத்துமூலமாம். அவர் திருக்கயிலைமலையிலிருந்து இவ்வுலகிலே
அவதரிக்க நேர்ந்ததும், திருவாரூரிலே போந்து திருத்தொண்டத் தொகை
பாட நிகழ்ந்ததும் ஆகிய வரலாறு இச்சருக்கத்திலே பேசப் பெறும்.
திருமலை -
திருக்கயிலைமலை. திருத்தொண்டத் தொகை பாடியபின் இறுதியில்சுந்தரமூர்த்திகள் திருமலைக்குத் திரும்பி அணைந்த வரலாறு
இறுதிச் சருக்கமாகிய வெள்ளானைச் சருக்கத்திற் பேசப்பெறும். இவற்றிடையே
திருத்தொண்டத் தொகையின் ஒவ்வோர் திருப்பாட்டின் முதற்
சொற்றொடரையே பெயராகக் கொண்டு “தில்லைவாழ் அந்தணர் சருக்கம்
முதல் “மன்னிய சீர்ச்சருக்கம” வரைப் பதினொரு சருக்கமும் கூடி ஆகப்
பதின்மூன்று சருக்கங்களில் நிறைந்து முடிவுபெற்றது இப்புராணம். அவற்றுள்
திருமலைச் சருக்கம், தில்லைவாழ் அந்தணர் சருக்கம், இலைமலிந்த சருக்கம்,
மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்தும்
முதற்காண்டத்தில் அடங்கியன. இவற்றுள்ளே முதலாவது, திருமலைச்
சருக்கம் :- திருமலைச் சிறப்பு - திருநாட்டுச் சிறப்பு - திருவாரூர்த் திருநகரச்
சிறப்பு - திருக்கூட்டச் சிறப்பு - தடுத்தாட் கொண்ட புராணம் - என ஐந்து
உட்பகுதிளை யுடையது.

     திருமலைச் சிறப்பு - திருமலையின் பெருமையைச் சொல்லும்பகுதி.
திருமலை - முழுமுதற் கடவுளாகிய இறைவன் எழுந்தருளிய தலைமைபற்றி
வேறு அடைமொழியும் தனிப்பெயரும் இல்லாமலே திரு என்ற உயர்வு
காட்டும் அடையுடன் சொல்லப்பட்டது. திருக்கோயில் என்பது கோயில்களிற்
சிறந்து தலைமைபெற்ற தில்லையை உணர்த்துவதுபோலத் திருமலை என்பது
மலைகளிற் சிறந்து தலைமை பெற்ற கயிலைமலையை உணர்த்திற்று.
திருவளர் தாமரை” என்ற திருக்கோவையாருக்குப் பேராசிரியர்
உரைத்தவற்றைக் காண்க. திரு - கண்டாரால் விரும்பப்படுந் தன்மை
நோக்கம். இஃது இம்மலைக்கு மிகப் பெரிதும் பொருத்த முடைத்தாம் என்பது
இதனைக் கண்டார்க்கு இனிது விளங்கும். திருமலை என்பதற்கு வெள்ளிமலை
எனத் தக்க யாகப் பரணி உரையில் கண்டவாறு மறிக.

     (இ-ள்.) பொன்னின்........புனைந்து என - பொன்னின் மேலே
வெள்ளிய திருநீற்றை அணிந்தாற்போல; பன்னும்....பாலது - எடுத்துச்
சொல்லற்குரிய நீண்ட இமயமலையின் பகுதியில் உள்ளது;
தன்னை...........அறிவரியான் - யாவர்க்கும் தனது