பக்கம் எண் :


தடுத்தாட்கொண்ட புராணம் 181

Periya Puranam
145. வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்  
  தாண்ட வப்பெரு மான்றனித் தொண்டர்கள்
நீண்ட தொல்புக ழார்தந் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகே னென்னறிந் தேத்துகேன்.
10

     (இ-ள்.) வேண்டும்............வேடத்தர் - (மேலே கூறிய
திருவேடப்பொலிவுகளேயன்றித்) தாம் வேண்டினபடியே மேற் கொள்வனவும்,
(ஆயினும்) கண்டாரும் கேட்டாரும் விரும்பத்தக்கனவுமாகிய பற்பல
வேடங்களில் விளங்குவார்கள்; தாண்டவம்........தொண்டர்கள் - (வேடத்தாற்
பல பல காட்சியராயினும்) கூத்துடையானுக்கு ஆளாம் தனிப் பெருமையில்
ஒன்று போலவே விளங்குபவர்கள்; நீண்ட தொல்புகழார் - (ஆதலின்) மிக
நீண்ட - அளவுபடாத - புகழை யுடைய வர்களாவர்கள் இத்
திருக்கூட்டத்திலுள்ளவர்கள்; (அவர்) தம் நிலைமையை.......ஏத்துகேன் -
இவர்களது தொண்டின் நிலைமைகளை இங்கு இப்புராணத்திலே
எடுத்துச்சொல்லி வாழ்த்தப் புகுகின்றேனாகிய யான் என்என்று அறிந்து
துதிப்பேன்.

     (வி-ரை.) வேண்டுமாறு விருப்புறும் வேடம் - மேலே நீறு
கண்டிகை கந்தை முதலிய சில திருச்சிறப்புக்களைக் குறித்துக் கூறினார்.
ஆயினும் தொண்டர் வேடங்கள் இவற்றோடு அமைந்துவிடுமோ என்று
சந்தேகிப்பார்க்கு அவ்வாறு அல்லாது அவர் வேண்டியவாறே வேடம்
கொள்வர் என்று விளக்கினாராகும்.

“எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்றாள் மறவாமை பொருளென்றே
துன்னியவே டந்தன்னைத் துறவாதே......“

     சிலத்திருப்பணி செய்தனர் சாக்கிய நாயனார். கந்தை ஆடை தரிக்கும்
அடியார்களே அன்றித் தனி முடி கவித்தாளும் புகழ்ச்சோழ நாயனார்,
கழறிற்றறிவார் நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார் முதலியோரும்
வீற்றிருப்பர். வேண்டுமாறு வேடத்தராயினும் விருப்பு உறும் என்று மாற்றி,
வேண்டுமாறு மேற்கொள்ளும் வேடத்தை உடையவராயினும்
அவர்களுக்குள்ளே விருப்பம் உறும் - அதாவது இறைவனிடத்து விருப்பம் -
அன்பு - ஒன்றுபோலவே உறும் - பொருந்தும் - என்று முடித்துக்
கொள்ளுதலுமாம்.

     வேண்டுமாறு விருப்புறு வேடத்தர் என்பதற்கு மேலே
சொல்லியவாறன்றிக் கால தேச வர்த்தமானங்களுக்கேற்பப் பல தேசங்களில்
பல வேடங்களுங் கொண்டு உலகைக் காக்கும் பெரியார் எனக்
கூறுவாருமுண்டு. தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்களாகும்
வேடத்தாரைக் குறித்ததே யன்றி அங்ஙனம் தொண்டராகாத
வேடத்தாரைப்பபற்றி இங்குப் பேச்சில்லாமையால் அது பொருளன்று.
அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணத்திலே தமிழ் நாட்டுக்கப்பாலுள்ளாரையும்
திருத்தொண்டத்தொகையில் கூறப்பெற்ற தனித்தொண்டர்களுக்கு முன்னும்
பின்னும் உள்ளாரையும் குறித்ததாய்ப் பொருள் விளக்கிய ஆசிரியர்
“அவர்கள் சேவேந்து வெல்கொடியான் அடியார்கள்“ என்று கூறியதினாலும்
அறிக. ஆதலின் சிவபெருமானது சார்பினை விடுத்து இப்பாட்டிற்கு
உரைசெய்வார் உயிரையின்றி உடலுக்கு உரையிட்டவராவர்.

     தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள் - தனி - என்பதனை
இடைநிலைத் தீபகமாக அமைத்துள்ளார். இதனைப் பெருமானுடனும்
தொண்டர்களுடனும் தனித்தனிச் சேர்க்க. தனிப்பெருமான் -
தனித்தொண்டர்- என்க. தனக்குவமையில்லாத தாண்டவப் பெருமான்
போலவே இவர்களும் ஒப்பற்றவர்கள் ஆவார்கள். தனித்தொண்டர்
என்றதனால் மேலே கூறிய 3 முதல் 9 வரை ஏழுபாட்டுக்களில்
சொல்லப்பெற்றவர்கள் தனியடியார்கள் என்று குறிப்புப் பொருள்
உரைப்பார்களும் உண்டு.