பக்கம் எண் :


62 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

இறைவனைப் பூசித்துப் பேறு பெறத்தக்க பல சிவதலங்களையும் உடையது
என்று அதன் பெருமையையும் கூறியருளினார். அன்று அம்முனிவர் அங்குச்
சொன்னபடி இங்கு இப்புராணம் சொல்லப் பெறுகின்றது. இதற்குப்
பதிகமாவது அத்திருத்தொண்டத் தொகையேயாம். அந்தப் பதிகத்திற் கண்ட
அடியார்களை நம்பியாண்டார்நம்பிகள் அருளிய திருவந்தாதியிற் றுதித்த
வகையின்படி அச்சரிதங்களை விரித்துக் கூறுகின்றோம்.

     கற்பனை :- இப்பகுதியிலிருந்து சிவபெருமானே பரம்பொருளாவார்
என்பதும், திருத்தொண்டர் சரிதவரலாறு இன்னதென்பதும், சிவபுண்ணியம்
செய்யும்போது வேறு நினைவுகள் வரலாகாதென்பதும்,
தெரிந்துகொள்ளத்தக்கன என்று ஆறுமுக நாவலரவர்கள் தமது பெரியபுராண
சூசனத்துட் காட்டியுள்ளார்கள்.

     முன்னே செய்த பல கருமங்களுக்கு ஈடாக இப்பிறவி பெற்ற நாம்
எதற்காக இப்பிறவி எடுத்தோமோ அதை மறந்து, மயங்கி, மேன்மேலும்
கருமங்களையும் செய்து பெருக்கி, மேன்மேலும் பிறவிகளுக்கு இடஞ்
செய்துகொண்டே போகிறோம். ஆனால் நாம் அனுபவிக்க வந்த கருமம்
எது? புதிதாகத் தேடிக் கொள்ள நின்ற கருமம் எது? என்று நமக்குத்
தெரிந்துகொள்ள முடியாது. ஆதலின், நாமும், சுந்தரர் கயிலையில்
இறைவனை வேண்டிக் கொண்டதுபோல, வராத புதுக்கருமத்தை நாம் தேட
உள்ள சமயத்தில் தடுத்து ஆட்கொள்ளும்படி வேண்டிக் கொள்வோமாயின்,
வேண்டுவார் வேண்டுவதே ஈயும் இறைவன் அவ்வாறே அருளுவன். நாமும்
வந்த காரியம் பார்த்துக்கொண்டு வீடு சேர்வோம். இது இப்பகுதியாற் பெறும்
முக்கிய கற்பனைகளில் ஒன்றாகும்.

     (தினமுறையிற் பாராணயம் செய்வோர் 12 - 29 - பாட்டுக்கள் வாசித்து
நிறுத்தக்கூடிய இடங்களாம்.)

     படம் :- திருமலையின் படம், இமயமலை யாத்திரை செய்துவந்த
சுவாமி சிவானந்தர் எழுதிய புத்தகத்திற் கண்டுள்ளது. மைசூர்க் கருத்தர்
செய்த யாத்திரையைப் பற்றிய வரலாறுகளிலும் அது காணப்படுகிறது.

                 திருமலைச் சிறப்பு முற்றிற்று

திருநாட்டுச் சிறப்பு

51. பாட்டியற் றமிழுரை பயின்ற வெல்லையுட்  
  கோட்டுயர் பனிவரைக் குன்றி னுச்சியிற்
சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி
நாட்டியல் பதனையா னவில லுற்றனன்.
1

     (இ-ள்.) பாட்டியற்........எல்லையுள் - (தமிழ் இலக்கணத்துள்
வகுத்துக்கூறிய) பாட்டாகிய இயற்றமிழுக்குப் பொருளாகப் பரந்த
எல்லைக்குள்ளே (காணும் பல நாடுகளுக்குள்); கோட்டுயர்.....இயல்பதனை -
மலைகளிற் பெரிய இமயமலையினது உயர்ந்த சிகரத்தின் உச்சியிலே,
புலிக்கொடியை நாட்டிய வளர்கின்ற சோழர்களால் அரசாளப்பெற்ற காவிரி
நாட்டினது சிறப்புக்களை; யான் நவிலல் உற்றனன் - நான் சொல்லத்
தொடங்குகின்றேன்.