கால்நாழிகையளவில்
வடதளியும், அதற்குத் தென்கிழக்கில் ஒரு
நாழிகையளவில் ஆற்றின்றென்கரையில் திருப்பழையாறையும்
உள்ளன.
ஆற்றுக்குப் பரிசல் உண்டு.
(2) திருநல்லூர் -
இங்குச் சிவலிங்கத் திருமேனி பொன்மேனியாய்ப்
பஞ்ச வருணங்களோடு விளங்குகின்றது. பிருங்கி இருடி வண்டுருவமெடுத்துத்
துளைத்துப் பூசித்த காரணத்தால் இவ்விலிங்கத் திருமேனியில் துளைகள்
உள்ளன. அகத்தியருக்குக் காட்டிய திருக்கல்யாணக் கோலத் திருவுருவமும்,
அவர் பூசித்த அகத்தியலிங்கமும் கருப்பக்கிருகத்தில் உள்ளன.
இக்காரணங்களால் சுவாமி பஞ்சவர்ணேசுவரர், கல்யாண சுந்தரேசுவரர்
எனவும், அம்பிகை கல்யாணசுந்தரி எனவும்
பெயர் பெறுவர். அப்பர்
சுவாமிகள் இத்தலத் திருவிருத்தத்தில் வடபாற் கயிலையுந் தென்பா
னல்லூருந் தம் வாழ்பதியே, தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே
சிவனிருந்தான் எனப் பலவாறும் இத்தலத் சிறப்பைத் தேற்றம்பெற
எடுத்துக்காட்டி யருளினர். இது அப்பர் சுவாமிகளுக்கு இறைவன் திருவடி
தீட்சை செய்த தலம். விரிவு அவர் புராணம் 194 முதல் 198 வரையுள்ள
திருப்பாட்டுக்களுள்ளும், அவரது இத்தலத் தேவாரங்களுள்ளும் காண்க.
அமர்நீதி நாயனார் தமது தலமாகிய பழையாறையினின்றும் இங்குக்
குடிபுகுந்து திருமடஞ் சமைத்து அடியார்களுக்கு அமுதூட்டியும், திருவிழாச்
சேவித்தும் வாழ்ந்தனர். அவரது திருமடம் கோவிலுக்கு வெளியே குளத்தின்
தென்மேலைக்கரையில் கிலமான நிலையில் இப்போதும் காணப்படுகின்றது.
இதனைச் செப்பனிட்டுக் காத்துப் போற்றல் சைவர்களின் முக்கிய கடமையாம்.
இக்கோயில் மாடக்கோயில்களிலொன்று. இதற்குப் பதிகங்கள் ஐந்து.
தென்னிந்திய இருப்புப் பாதையிற் சுந்தரப்பெருமாள்
கோயில்
நிலயத்தினின்றும் தெற்கே மட்சாலையில் இரண்டு நாழிகையளவிலும்,
மழைக்காலமல்லாத காலங்களில் குறுக்கு வழியாய்ச் சென்றால் மூன்று
ஆறுகளைக் கடந்து ஒரு நாழிகை யளவிலும் இதனை அடையலாம்.
கும்பகோணத்திலிருந்து மேற்குக் கற்சாலை வழியால் 6 நாழிகையளவிலும்
அடையலாம். இவ்வழியில் மோட்டார் பஸ் வசதி உண்டு.
கற்பனை
:- 1. அடியார்க் கமுதளித்தலும், அவர் கருத்தறிந்து கந்தை,
கீள், உடை, கோவணம் உதவுதலும் செல்வத்தால் வரும் பெரும் பயன்களாம்.
2. சிவபெருமானுடைய திருவிழா அணி சேவித்தலும்,
அடியார்க்
கமுதளித்தலும் சிறந்த சிவபுண்ணியங்களாய்ப் பெரும்பயன் தருவன.
3. பொருளை நல்வழியில் ஈட்டும்வகை ஒன்று; அவ்வாறீட்டிய
செல்வத்தின் பயனை அடையும்வகை மற்றொன்று. அமர்நீதியார்,
பழையாறையிலே, சிவனடி மறவாத் தொண்டு செய்துகொண்டு நல்வழியிற்
பெரும்பொருள் ஈட்டினார். பின்னர் அவ்வூரை விட்டுத் திருநல்லுரிற்
குடிபுகுந்து திருவிழாச் சேவித்தும் அடியார்க்களித்தும் அப்பொருள் பெற்ற
பயனையடைந்தனர். ஆனால் இந்நாள் இவ்வுலகத்து மக்கள்
பெரும்பாலோரும் நல்வழி யிது - தீவழி யிது என்னாது எவ்வாற்றானும்
பொருளீட்டலே கருத்தாய்க் காலங்கழித்து இறந்தொழிகின்றனர். தாம் ஈட்டும்
அச்செல்வப் பயனையடைய ஒரு சிறிதும் முயல்கின்றார்களில்லை. செல்வம்
பெறுவார் அதன் உண்மைப் பயன்பெறாது கழிகின்றார்களே! இஃது என்ன
அறியாமை! என்ன பாவம்!
4. இறைவனது திருவடிமலர்களைத் தம்முள் நீங்கா மனத்தினையுடைய
அடியார்கள், வஞ்ச வல்வினைக் கறுப்பறுப்பார்.
5. கங்கையும் காவிரியும் ஆடுதலினும் அன்பர்களது
அன்பென்னும்
தூய நீரில் ஆடுதலில் மிக்க விருப்புடையவர் சிவபெருமான்.
6. அன்பர்தம் அன்புக்கு முதல்வர்தம் அருள் தாழ்வுறும்.
|