பக்கம் எண் :


1190 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

வந்தனர். மனைப் படப்பையில் உள்ள கீரை வகைகள் தீரவே, வடமீன்
அனைய மனைவியார் தண்ணீரை வார்க்க, அதனை அன்பனார் அமுது
செய்து முன்போலப் பணிசெய்து வந்தனர்.

     ஒரு நாள் இறைவர்க்கு ஊட்ட அவரது அன்புபோன்ற
தூயசெந்நெல்லரிசியும், பசிய மாவடுவும், மென் கீரையும் தொண்டனார்
கூடையிற் சுமந்துசெல்ல, அவர் பின்பு மனைவியார் மட்கலத்தில் ஆனைந்து
ஏந்திச் சென்றனர். இவ்வாறு செல்லும்போது திருமேனி வாடியதனால்
கால்தளர்ந்து தப்பித் தாயனார் வீழ்வாராக, மட்கலம் மூடும் கையினால்
காதலால் மனைவியார் அணைத்தும், கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற்
சிந்தின. அதுகண்டு, தாயனார், "இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?"
என்று வருந்தி, "இவற்றை இங்கே அமுதுசெய்தருளாவிடில் நான் உயிர் வாழ
மாட்டேன்; என் ஊட்டியை அறுத்துத் தலையை வேறாகத் தள்ளுவேன்"
என்று இறைவரை வேண்டினர். இறைவர் அமுதுசெய்யத் தாழ்த்தமை கண்டு,
"அளவில்லாத தீமையுடையேன், இறைவர் அமுது செய்யும் பேறு
பெற்றிலேன்" என்று, உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள்கொண்டு
உள்ளந் தண்டு அறும்படி கழுத்தினை அரியத் தொடங்கினர்.

     கமரினின்றும், அம்பலத்தாடும் ஐயரது வீசிய கையும், மாவடு "விடேல்
விடேல்" என்ற ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை
அன்பரது கழுத்தரியும் திண்ணிய கையினைப்பிடித்துக் கொள்ளவே, அவரும்
அச் செயல் தவிர்ந்தனர். அரிந்த ஊறும் நீங்கியது.

     அன்பனார், அஞ்சலிகூப்பி நின்று, "அடியேனது அறிவில்லாமையைக்
கண்டும் என் அடிமை வேண்டிக் கமரில் வந்து இங்கு அமுது செய்தருளும்
பரனே போற்றி!" என்று பலவாறு வணங்கினர். இறைவர் இடப வாகனராய்த்
தோன்றி "நீ புரிந்த செய்கை நன்று!; உன் மனைவியுடன் கூடி நம்முலகில்
என்றும் வாழ்வாயாக!" என்று அருளிச் செய்து, அவர் உடனே நண்ணத்
திருவம்பலத்தில் எழுந்தருளினர்.

     "இறைவர் அமுது செய்யும் பேறு பெற்றிலேன்" என்று கழுத்தினை
அரிவாளினால் அரிதலால் அரிவாட்டாயர் என்ற தூய
நாமத்தையுடையராயினார்.


     தலவிசேடம் :- கணமங்கலம் - இத்தலம் சோழநாட்டில் உள்ளது.
இது திருத்துறைப்பூண்டி இருப்புப் பாதை நிலயத்துக்கு வடக்கே இரண்டு
நாழிகையளவில் திருவாரூருக்குச் செல்லும் பெருவழியில் உள்ள,
திருத்தண்டலை நீணெறிக்குக் (காவிரிக்குத் தென்கரை - 110வது தலம்)
கீழ்பால் 1/4 நாழிகை யளவில் உள்ளது ஊர் இப்போது அழிந்துபட்டது.
ஊரிருந்த (நத்தம்) இடத்துக்குக் கணமங்கலத்திடல் என்று பெயர்
வழங்குகின்றது. தொன்றுதொட்டு வரும் இப்பெயர் வழக்கைத் தவிர வேறு
கல்வெட்டு முதலிய ஆதரவுகள் கிடைக்கவில்லை. தண்டலை நீணெறி,
தாயனார் செந்நெல்லரிசி முதலியன கொண்டு இறைவரை ஊட்டி, நாடோறும்
வழிபட்ட தலம். இது ஊட்டித் தண்டலை எனவும் வழங்கப் பெறுகின்றது.
ஊட்டித் தண்டை என வரலாற்றாற் பெற்ற பெயர் இங்ஙனம் வழங்குவது
போலும். தண்டலை நீணெறிக் கோயிலில் நாயனார் திருவுருவம்
பத்தினியாருடன் வைத்து வழிபடப் பெறுகின்றது.


     கற்பனை :- 1. அறநெறிகளில் மனைவாழ்க்கைகொண்ட அறம் தகுதி
பெற்றது.

     2. ஞாயிற்றின் ஒளி மிகுதி கொண்டு விளைவதால் செந்நெல் குணத்தில்
உயர்ந்தது. அது இறைவரது திருவமுதுக்கும், பெரியோர் அமுதுக்கும்
சிறந்தது. அவ்வாறன்றிக் கார்நெல் ஞாயிற்றின் ஒளி குறைந்த காலத்தில்
விளைவதால் குணத்திற் குறைந்தது.