பக்கம் எண் :


1256 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

ஆகிய தமிழ்மொழி என்பதுமாம். "மதுரையினிற் றிருந்தியநூற் சங்கத்துள்
அன்றிருந்து தமிழாராய்ந் தருளிய வங்கணர்" (திருநா - புரா - 403),
"தலைச்சங்கப் புலவனார் தம்முன்" (திருஞான - புரா - 667) என்று பின்னர்க்
கூறுபவையும் காண்க. "கண்ணுதற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து,
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ்" என்றதும், "நிழற்பொலி
கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண், தழற்பொலி சுடர்க்கடவுள் தந்ததமிழ்"
என்ற கம்பர் பாட்டும், பிறவும் காண்க.

     மலயந்தர வந்த தென்றல் வெப்பம்மாற்றி உடலுக்குக் குளிர்ச்சி
தருவதுபோல, அத்திருமலையில் வாழும் தமிழ் முனிவர் தரவரும் தமிழ்,
உயிர்களுக்குப் பிறவி வெப்பம் போக்கி அருணிழல் தருவதாம் என இந்த
இரண்டினையும் தொடர்பு படுத்திக் கூறிய நயமும் காண்க.

     இத்திருப்பாட்டினால் மலையும் மலையின் வளனும், மொழியும்
மொழியின் வளனும் இணைபிரியா வகையில் ஒருங்கே கூறிய திறமும்
காண்க. 3

971.



சூழும்மிதழ்ப் பங்கய மாகவத் தோட்டின் மேலாள்
தாழ்வின்றியென் றுந்தனி வாழ்வதத் தைய லொப்பார்
யாழின்மொழி யிற்குழ லின்னிசை யுஞ்சு ரும்பும்
வாழுந்நக ரம்மது ராபுரி யென்ப தாகும்.         4

     (இ-ள்.) சூழும் ... ஆக - இதழ்கள் சூழ்ந்த தாமரை மலர்போல;
அத்தோட்டின் வாழ்வது - அத்தாமரை மலர்மேல் தங்கும் இலக்குமி
தாழ்வில்லாமல் என்றும் சிறந்து வாழப்பெறுவது; அத்தையல் ஒப்பார் -
அந்த இலக்குமியைப் போன்ற பெண்களுடைய; யாழின்மொழியில் ...
வாழும் - யாழின் மொழியிலும் கூந்தலிலும் முறையே இன்னிசையும்
வண்டும் வாழ்கின்ற; நகரம் மதுராபுரி என்பது ஆகும் - நகரமானது
மதுராபுரி என்ற பெயராற் சொல்லப்படுவது ஆகும்.

     (வி-ரை.) இதழ்சூழ் பங்கயம் என்க. ஆக - போல என்ற
பொருளில் வந்தது. இதழ்சூழ் என்று சிறப்பித்தது புறஇதழ் - அகஇதழ் -
கேசரம் - முதலிய மலரின் உறுப்புக்கள் முற்றும் வெளிப்படக் காணுமாறு
அமைந்து காணப்படுவது பங்கயமேயாம் என்ற சிறப்பு நோக்கி.

     அத் தோடு - அந்தப் பங்கயமாகிய மலர். பங்கயமும் தோடும்
ஆகுபெயர். மேலாள் - மேல் உறைபவள் - திருமகள். பங்கயம் -
வெண்டாமரை என்றும், மேலாள் - கலைமகள் என்றும் கொண்டு அதற்குத்
தக்கபடி உரைப்பாருமுண்டு.

     என்றும் தாழ்வின்றி - ஒருகாலத்துப் பெருத்தும், ஒரு காலம்
சிறுத்தும் காணப்படாமல் எக்காலத்தும் குறைவின்றி. தனிவாழ்வது -
தனிமை
- இங்குப்போல வேறெங்குமில்லையாம் தன்மையாகிய சிறப்பு.
மேலாள் - வாழ்வது - வாழும் - நகரம் என்று முடிக்க. செயப்படு
பொருளைச் செய்ததுபோலக் கூறினார். இயல்பாக வந்த காலமயக்கம்.

     அத்தையல் - முன்சொன்ன அந்தத் தோட்டின் மேலாள்
என்ற பெண்தெய்வம். மேலாள் என்று ஒருமையிலும் ஒப்பார் என்று
பன்மையிலும் கூறியவாற்றால், மேலாள் ஒருத்தியாக, அவளை ஒப்பார்
பலர் அங்குள்ளார் என்றது குறிப்பு. தனிவாழ்வது என்ற குறிப்பும் அது.

     யாழின் மொழியில் இசையும், குழலிற் சுரும்பும் என்று
நிரனிறையாக்கி உரைத்துக் கொள்க. யாழின் மொழி என்றது பெண்களின்
மொழியில் இயல்பாயமைந்த பண்ணமைதி. இசை - இன்னிசை. இது
பயிற்சியின் அமைவது. யாழ் - யாழோசை குறித்து நின்றது. ஆகுபெயர்.
யாழினோசைபோன்ற மொழி என்க "யாழைப்பழித் தன்னமொழி
மங்கையொரு பங்கன்" (காந்தாரம் - திருமறைக்காடு.